கடலோடு சில நிமிடம்

கதைப்பிரியன்

கடலே
கடலலையே

உன்னை,
சுட்டுவிரல் கொண்டு
தொட்டுப்பார்க்க ஆசை

முழங்கால் தொடும் நீருக்குள்
மூழ்கி எழ ஆசை

கால்களை நனைத்தபடி
கச்சான் கொரிக்க ஆசை

நீண்ட தூரம் சென்று
நீச்சல் அடிக்க ஆசை

கூட்டமாக சேர்ந்து
பந்து விளையாட ஆசை

பொங்கி வரும் அலை நுரையை
கைகளால் ஏந்த ஆசை

அப்பொழுது நாம்
வீட்டுக்குள் இருந்து
கடலுக்கு வந்தோம்
எப்பொழுது நீ
எங்கள் வீட்டுக்குள்
வந்தாயோ
அன்றிலிருந்து உன்னை
தொட்டுப் பார்க்க அல்ல
தூரத்தே நின்று
நினைப்பதற்கு கூட
அச்சப்படுகின்றோம்

ஆண்டு தோறும் - நாங்கள்
எங்கள் ஊர் சாமிகளை
தீர்த்தமாட
கடலுக்குக் கொண்டுவருவோம்
எப்பொழுது நீ
எங்கள் வீட்டு சாமிகளை
கடலுக்குள்
கொண்டு போனாயோ
அன்றிலிருந்து உன்னை
தொட்டுப் பார்க்க அல்ல
தூரத்தே நின்று
நினைப்பதற்கு கூட
அச்சப்படுகின்றோம்.
 

kathaipiriyan@rocketmail.com