மட்டுவில் ஞானக்குமாரன் கவிதைகள்

ஒரு காதலனின் கடிதம் ....!

 என் காதலையும்
கவலையையும்
சொல்லிவிட முடியாத அளவுக்கு
காவல் அதிகம்
என்பதால் 
என் கவிதைகள் கூட
பர்தா அணிகின்றன.....

உனது மணம்
நம்மிலிருந்து உன்னை பிரித்துவிட்டதால்
உன்னை நான்
காணமுடியாது என்பது உறுதியாகிவிட்டது.

 உன் பெயரை
நான் உச்சரிக்கும் போதெல்லாம்
யானையின் பிழிறல் கேட்ட
நாகம் போலவே
நடுங்குகிறார்கள் ....!

 நெருப்பை
விழுங்கிவிட்டவளின் நிலையில்
நான்
மெல்லவும் முடியாமல் வெளியே
தள்ளவும் முடியாமல் .....

தாஜ்மகால்  தகர்ந்தாலும் கூட
காதல் அழியாது...?

 கவலையைப்
புனைய உதடுகள் காத்திருக்கிறது
ஆனால்
வார்த்தைகளுக்குத்தான் நடுக்கம்....

 கூனிக்குறுகி
தலை கவிழ்ந்து
கை காட்டுபவனுக்கெல்லாம்
கழுத்து நீட்ட
முடியாமல்
தன்மானம் தடுக்கிறது..   

 இருந்த போதும்
வார்த்தைகளுக்குத்தான் நடுக்கம்
ஆதலால் தான்
அவை
பர்தாவை அணிந்து கொள்கின்றன...


 
நிர்வாணம் ...!

பெரும் அரசே .!
நீ ஒரு வல்லரசென்பது
மெத்தச் சரிதான்
மண்டை ஓடுகளின் மீது தானே
வல்லூறுகள் கொடி நாட்டும்...?

 உனக்கோ
கிழித்துப்படிக்க
உடல் இல்லை என்ற கவலை
எமக்கோ
வெற்றுடலை 
புதைத்து மறக்க
திடலில்லை எனும் கவலை...

 கஞ்சனுக்கு
கர்ணன் என்ற பெயர் போலவே
உனக்கும் சனநாயகம் என்ற பெயர்
காந்தி சிலை போலவே நடுத் தெருவிலே
கிடக்கிறது உனது சனநாயகம் ...

 பூசணிகளைக் கூட சோறு மூடலாம்
ஆனால்
உன் ஆக்கிரமிப்பு
நிர்வாணத்தை
நிவாரண ஆடைகள் மூடவே மூடாது

 உன்னிடம்
நாம் கேட்ட தஞ்சம் கூட
கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகுந்த
ஆட்டின் கதைதானே ....?

 கோவணத்தை
எடுத்து
தலைப்பாகை கட்டுவது போலிருக்கிறதுன் செய்தி ....?
நீ வலிசெய்தால் மனிதநேயமென்றும்
உனக்கு வலிசெய்கில்
மனு குல விரோதமென்பதும்

 அதுவும் சரிதான்
.............. தால் .................. கை
கட்டியவர் செய்தி தானே.