இருட்டு

தர்மினி
 
கடிகாரம் பழுதடையவில்லை
ஆயினும் முட்கள் நகரவில்லை
நித்திரை நித்திரை.......
தொலைபேசி ஒலிக்காத நித்திரை.
 
ஆயுதங்கள் அத்தனையும்
பெரும் எரிமலை வாயில் குவிக்கப்பட்டு
சமைக்கப்படுகின்றன.
அவை உருகிக் குழம்பாகி  வழிகின்றன.
திடீரென,
ஆறாக மாறிப்பாய்ந்தோடுகிறது.
 
"வரட்சியில்லை"
"வறுமையில்லை"
"பசியில்லை"
இந்தக் கூவல்கள் மட்டுமே கேட்கின்றன.
 
சித்திரவதைச்சாலைகள்
சிறைக்கூடங்களின் பூட்டுக்கள்
பஞ்சு போலப் பறக்கின்றன.
தவறுமில்லைத் தீர்ப்புமில்லை,
தண்டனைதரக் கொம்பு வைத்தவன் எங்குமில்லை.
 
ஆகா!
பெருஞ் சிரிப்போடு
படுக்கையிலிருந்து உருண்டு விழுந்தேன்
பார்த்துச் சிரித்தது இருட்டு.
 

tharmini@hotmail.fr