சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்

தீபச்செல்வன்

இனி திரும்பாத சூரியனுக்காய்
நீயும் நானும் சாம்பலில் காத்திருக்கிறோம்.
கதிரைகளால் மேலெறியப்படும் குண்டுகள்
தின்று தீர்த்துக்கொண்டிருக்கிற
வலயத்தில் மூளப்போகிற சண்டையில்
அவர்கள் நம்மிடம்
எதை எடுக்கப் போகின்றனர்.

 குண்டுகள் அடக்கிய ஊரில்
துவக்கு மெல்ல புகுந்து
தின்று கொண்டு நிற்கிறது இறப்பர் குடில்களை.

சிறிய ஆயுதங்களால்
போரிட கிடைத்திருக்கிற அனுமதியின்
இடையில் கனகரக ஆயுதங்கள்
அறிவுருத்தியபடி
ஓய்ந்துபோயிருக்கிறதை நாம் அறிவோம்.
அதன் முற்றுகைகளால் நிறைந்திருக்கிறது
சனங்களின் வாழ்நிலம்.

போரிற்கு சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது
பாதுகாப்பு வலயம்.
ஷெல்கள் எந்நேரமும் உலவித்திரிந்து
சனங்கள் அறிந்தபடியிருக்க
இழுத்துக் கொண்டு போகிறது.
ஐ.நாவின் அனுமதி கிடைத்தது
அமைதியாக சனங்களை கொன்றகற்றுவதற்கு.

 மெலிந்து போய்விட்ட சனங்கள்
அனுமதியுடன் ஒழிக்கப்படுகின்றனர்.

 இழந்து போக முடியாத
தேசம் பற்றிய கனவை நீயும் நானும்
மறக்க நிர்பந்திக்கப்படுகிற நடவடிக்கையில்
நீயும் நானும் எல்லாவற்றையும்
பிரிந்து துரத்தி அலைக்கப்டுகிறோம்.

 வாழ்வுக்கான பெருங்கனவை
அதிகாரங்களின் கனவுக்கூட்டங்கள்
கூடிச் சிதைத்தனர்.
நாம் கூடு கலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம்.

போரிட்டு செத்துக்கொண்டிருந்தது
பெருநிலம்.
சடலங்களாய் அள்ளுண்டு போகிறது
வளர்த்தெடுக்கப்பட்ட கனவு.
முடிவு நெருங்குகிற கடைசிக் களத்தில்
தொடங்கக் காத்திருக்கிறது
எல்லை கடந்து பரவுகிற போர்.

 அம்மாவே உன்னைப் போலிருந்த
எனது நகரத்தை நான் பிரிந்தேன்.
தங்கையே உன்னுடன் வளர்த்த
எனது கனவுகளை நான் இழந்தேன்.
அவர்கள் எல்லாவற்றையும் என்னிடமிருந்து
பிரித்தனர்.
தூரத்தே சென்று தொலைகிறது எனது தெரு.

 அதிகாரங்களின் முற்றுகையில்
வழிகளற்று துடித்துக்கிடக்கிறது
நமது வாழ்வின் போராட்டம்
கனவுகளுடன் குண்டேறி விழுந்த பேராளிகளின்
மூடுப்படாத விழிகளுடன்.
நான் எல்லாவற்றையும் இழந்தேன்.

 எப்படி உன்னை பதுக்கி
காத்துக்கொள்ளுவாய்?
அச்சங்களில் ஒளிந்திருக்கிற தங்கையின்
துடிக்கிற மனதை பொத்தி எதற்குள் வைப்பாய்?
நமக்கெதிராக வந்திருக்கிற போர்
பாதுகாப்பு வலயத்தின்
எல்லை கடந்து பரவுகிறதுபோல்
எல்லா இடமிருந்தும் வருகிறது.

 மெலிந்து போய்விட்ட சனங்கள்
அனுமதியுடன் ஒழிக்கப்படுகின்றனர்.