அடையாளம்

வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.                                            


கொடையான இயற்கை,  செயற்கையினால்    
கடையாக்கும் குறிப்பு, அறிகுறியெனும்
அடையாளம், அகிலத்திலொரு அறிமுக ஒளி,
உடையதைக் காட்டும் அங்கீகார வழி.

குடையாகும் பெயர், இலக்கம், முத்திரை
ஆடையாகும் இலச்சினை,கொடி, மொழியால்
விடைவரும் இவர் யார், இது எதுவென.
விடைதரும் ஐம்புலன்களும் தடையின்றி.

அடைமொழி, குறியீடு, சைகையும்
அடையாளம் காட்டுமொரு சங்கேத வழி.
பாடையில் மனிதன் பயணமான பின்பும்
சாடை காட்டும் அடையாளம் கல்வெட்டு.

நாடாள அரசன்,பாவாளக் கவிஞன்,
படையாளத் தளபதி, கோடாள நீதிபதி.
ஏராள அடையாளம் ஏவலிட்டு மனிதனை
ஏற்றம் தாழ்வென ஏகாதிபத்தியம் புரிகிறது.

மேடைகளாண்ட தமிழ் தமிழன் அடையாளம்
குடை சாயாது காத்திட மேற்கிலும் பிரயத்தனம்.
குடையொன்றின் கீழ் இணையாத தமிழன்
அடையாள அங்கீகாரம் கோரும் வறியன்.

நடையாளம் காணாத அரசநிலைச் சமரால்
படையோடு போராடும் போர் நிலைத் தொடர்.
விடை காண முடியாதது மக்கள் இடர்.
அடையாளம் தொலைந்தால் அவன் நாடோடியாகிறான்.


vetha@stofanet.dk