சுமைகள்

வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.

மனதால், உடலால் சுமக்கும் சுமைகள்
கனத்து அழுத்தக் கவனம் சிதைக்கும்.
அளவான சுமைகளால் ஆரோக்கியம் பூக்கும்.
தளமாகத் தரமாக உடலைக் காக்கும்.
உயரத்திலும் அதிகரித்த உடலின் நிறை
உல்லாசம் தொலைக்கும் தீராத குறை.
உயிரினைச் சிறுகச் சிறுகக் குறைக்கும்.
உவகையைக் களவாடும் தசைச் சுமை.

சுமைகள் என்போம் நாமாக – மனம்
சுகமாய்ச் சுமப்பது, சுமையல்ல.
நினைவு தான் பெரும் சுமையாகும்.
இமைகள் கண்ணிற்குச் சுமையல்ல.
இமைக்குள் பார்வையும் சுமையல்ல.
நகைச்சுவைச் சுமைகள் தினம் சேர்த்து
தொகை நோய்ச் சுமைகள் விரட்டுவோம்.
மிகை மகிழ்வுத் தோகைகள் விரியட்டும்.


vetha@stofanet.dk