நூல் : சங்கானைச் சண்டியன்
நூல் ஆசிரியர் : வி.ஜீவகுமார
நூல் ஆய்வு: அகில்

புலம்பெயர் இலக்கிய உலகில் புதிது புதிதாக பல எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள். அவர்களில் டென்மார்க்கில் இருந்து எழுதும் எழுத்தாளர் ஜீவகுமாரும் ஒருவர். குறுகிய காலத்தில் இவர் பேசப்படுவதற்குக் காரணம் இவர் அண்மையில் வெளியிட்ட 'யாவும் கற்பனையல்ல', 'மக்கள்.... மக்களால்.... மக்களுக்காக...' என்ற இரண்டு படைப்புக்களும் ஆகும். இவரது மூன்றாவது படைப்பு 'சங்கானைச் சண்டியன்' என்ற இந்த சிறுகதைத் தொகுப்பாகும்.

இத்தொகுப்பை படித்தபோதும் சரி, அல்லது இவருடைய இதற்கு முந்தைய தொகுப்புக்களை படித்தபோதும் சரி நான் ஆச்சரியப்பட்ட விடயம் ஒன்று என்னவென்றால், நீண்ட காலமாக எழுதும் ஒரு எழுத்தாளனின் முதிர்ச்சியை இவரது எழுத்துக்களில் காண முடிகிறது. தங்குதடையற்ற கதையோட்டம், தேர்ந்த மொழிநடை, கதை சொல்லும் உத்தி என்று இவரது கதைகளில் பல சிறப்பம்சங்களைக் காணமுடிகிறது.

தனக்கென ஒரு கதை மொழியை உருவாக்கிக்கொண்டு எழுதிவருகின்றார் ஜீவகுமார். கதை சொல்லும் பாங்கில் கதையோடு நம்மை ஐக்கியப்படுத்தி விடுகிறார். 'மெயில்லோஞ்ச்' கதையில் லோஞ்சிப் பயணத்தில் ஆகட்டும், வேட்டை என்ற கதையில் வரும் வன்னிக் காட்டுப் பிரதேசமாகட்டும் கதையோடு சேர்ந்து எம்மையும் பயணிக்க வைக்கிறார். சொற்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கலைத்துவத்துடன் கதைகள் நகர்த்தப்படுகின்றன.

பத்து சிறுகதைகளும், இரண்டு குறுநாவல்களும் அடங்கியது இந்த படைப்பு. புலம்பெயர் வாழ்வின் அவசங்கள், தாய்மண்ணின் ஏக்கங்கள், சமகால வாழ்வின் அவலங்கள் என்று கதைகள் பேசுகின்ற பொருள் கதைக்கு கதை வித்தியாசமாக இருக்கிறது. ஒரே வரியில் சொல்வதென்றால் அத்தனை கதைகளுமே தேன்துளிகள். மொத்தத்தில் இத்தொகுப்பு ஒரு தேனடை. விருந்தும் ஆகலாம். மருந்தும் ஆகலாம். திகட்டவும் செய்யலாம். தேனியின் கொடுக்குகள் குத்தி கடுக்கவும் செய்யலாம்.

இத்தொகுப்பின் முதலாவது கதை வேட்டை. கதையை ஆசிரியர் இரண்டு உபகதைகள் ஊடாக நகர்த்துகிறார். சாண்டியல்யனின் அரச கதைகளை அச்சொட்டாக நினைவூட்டுகிறது கதையின் ஆரம்பம். விறுவிறுப்பான, சுவையான கதையோட்டம். வன்னி மண்ணை ஆண்ட குறுநில மன்னன் ஒருவனின் கதை சொல்லப்படுகிறது. பின்னர் எண்பதுகளில் நடந்த இனக்கலவரங்களோடு கதை பின்னப்படுகிறது. இரண்டு வௌ;வேறு களங்களில், வௌ;வேறு காலகட்டங்களில் நிகழும் கதைகளாக சொல்லப்பட்ட போதிலும், இரண்டு கதைகளையும் ஒரே புள்ளியில் சங்கமிக்க வைக்கிறார் ஆசிரியர். இந்தப் பாணியை சில புலம்பெயர் எழுத்தாளர்கள் கையாண்டபோதிலும் அந்த உத்தியை சரியான இடத்தில், பொருத்தமாகப் புகுத்தியிருக்கிறார் ஜீவகுமாரன்.

புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பலரும் தாய்மண்ணின் நினைவுகளை தம் கதைகளின் கருவாக்கத் தவறுவதில்லை. அதற்கு ஜீவகுமாரும் விதிவிலக்கல்ல. இத்தொகுப்பில் இடம்பெறும் பெறும்பாலான கதைகள் தாய்மண்ணை கருவாகக் கொண்ட கதைகளே. நானும் ஒரு அகதியாக..., மெயில் லோஞ்ச், கிராமத்து பெரிய வீட்டுக்காரி, வலி, அகால மரணம், செல்வி ஏன் அழுகின்றாள்? என்கின்ற கதைகளெல்லாம் தாய் மண்ணின் நினைவுகளும், போர்ச் சூழலின் தாக்கங்களுமே கதையாக வடிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக 'மெயில்லோஞ்ச்'. இக்கதை நடக்கும் இடம் அனலைதீவு. ஊர்காவற்றுறையில் இருந்து அனலைதீவுக்கு லோஞ்சியில் பயணிக்கும் சுகானுபவத்தை வாசகர்களையும் நுகரச் செய்து விடுகின்றார் ஆசிரியர். பதின்மப் பருவத்தில் ஏற்படும் காதல் கதை மிகவும் நேர்த்தியாகக் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் போராட்டத்தில் இணையும் பிள்ளைகளைப் பற்றியும், அதன் விளைவாய் ஏற்படும் சமூக அவதியையும் கதை உணர்த்தி நிற்கிறது.

வன்னியில் யுத்தம் இறுதிக்கட்டத்தில் இருந்த சமயம் நூலுருப்பெற்ற படைப்பு இது. அந்த வகையில் ஆசிரியரின் மன அழுத்தங்கள் கதைகளினூடு ஆங்காங்கே சித்தரிக்கப்படுகின்றன. 'வலி' 'செல்வி ஏன் அழுகிறாள்?' 'அகால மரணம்' என்ற கதைகள் போரினால் பாதிப்புக்கு உள்ளான சிறுவர்கள் பற்றிய கதைகளாக உள்ளன. போரின் பாதிப்புக்கள் என்பதை விட சிறுவர்கள் மீதான எழுத்தாளரின் அக்கறையே கதைகளில் மேலோங்கியிருப்பதைக் காணமுடிகிறது.

'செல்வி ஏன் அழுகிறாள்?' என்ற கதை ஜீவகுமார் எனக்கு ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் அனுப்பி நான் வாசித்திருந்தேன். அந்தக் கதையை வாசித்து முடித்த பின்னர் இரண்டு, மூன்று நாட்களாக அந்தக் கதையின் தாக்கம் என்னை அழுத்திக்கொண்டிருந்தது உண்மை. ஒரு நல்ல படைப்பிற்கு இதைவிட வேறு இலக்கணம் சொல்ல முடியாது. இருப்பினும் கதையின் இறுதியில் அதே எண்பதுகளில் நடந்த சில சம்பவங்களுடன் இந்த அவல, அகதிவாழ்க்கையை ஒப்பிடுவதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

'நானும் ஒரு அகதியாக...' வித்தியாசமான தலைப்பின் கீழ் சற்றும் எதிர்பார்க்காத பாத்திரம் கதை சொல்கிறது. நாய் கதைசொல்லியாக மாறி, அக்கால கட்டத்து எண்பதுகளின் அல்லது அதற்கு முற்பட்ட, அதாவது ஆயுதக்குழுக்கள் ஈழத்தில் உருப்பெறத் தொடங்கிய காலகட்டத்துக் கதையாக இது அமைந்துள்ளது. அந்த வகையில் இக்கதை மாத்திரமல்லாது இத்தொகுப்பில் இடம்பெறும் இன்னும் பல கதைகளும் இவை பற்றிப் பேசுகின்றன. பேசாப்பொருள்கள் பலவற்றையும் துணிவுடன் பேசுகின்றன.

'சங்கானைச் சண்டியன்' என்ற குறுநாவல் கூட அந்தவகையில் குறிப்பிடத்தக்கது. போராட்ட காலத்திற்கு முந்திய யாழ்ப்பாணத்தை கதையில் தரிசிக்க முடிகிறது. அக்காலத்தில் இருந்த குழுமோதல்களை அடிப்படையாகக் கொண்டு இக்கதை புனையப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. ஆயுதப் போராட்டங்களின் தோற்றப்பாடுகளுக்கு முன்னைய அல்லது அதன் ஆரம்ப கால கட்டங்களில் யாழ்ப்பாணம் எப்படி இருந்தது? அதன் அரசியல், சமூகப் பிரச்சனைகள் எவ்வாறு அரசியல்வாதிகளால் பார்க்கப்பட்டன? என்பது போன்ற விடயங்களை அறிந்துகொள்வதற்கு இக்கதை நல்லதொரு ஆவணமாக இருக்கிறது. கதை ஆரம்பம் முதல் இறுதி வரை எந்தவித தொய்வும் இல்லாமல் சுவை குன்றாமல், தொடர்ந்து வாசிக்கும் ஆவலைத் தூண்டுவதாக கதை எழுதப்பட்டுள்ளது.

'கோமதி' - இத்தொகுப்பில் வரும் இன்னுமொரு குறுநாவல். புலம்பெயர் வாழ்வின் அவலத்தைக் காட்டும் சுவையான படைப்பு. வெளிநாட்டுக் கனவுகளோடு டென்மார்க் வரும் ஒரு பெண்ணின் கதை. மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் டென்மார்க் வரும் அவள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை, மொழி தெரியாமல் அவள் படும் சிரமங்களை கோமதி என்ற கதா பாத்திரத்தின் ஊடாக எடுத்துக்காட்டுகிறார் எழுத்தாளர்.

இப்படி ஒவ்வொரு கதையைப் பற்றியும் நிறையவே சொல்லலாம். வாசகர்கள் பார்வையில் பல பரிணாமங்களைப் பெறத்தக்க கதைகள் இவை. நல்ல தேர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அனுபவம் என்றுதான் கூறவேண்டும். ஒரு கதைக்கு மற்றைய கதை சளைக்காமல் சிறப்பாக அமைந்துள்ளன. ஜீவகுமாருடைய இவ்வெழுத்துப் பணி தொடர்ந்து சிறக்கட்டும்..... .
editor@tamilauthors.com