நூல் : 'ஒரு யுகத்தின் சோகம்'
நூல் ஆசிரியர் : மன்னூரான்
நூல் ஆய்வு:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

ன்னார் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது மன்னூரான் என்ற புனைப் பெயரில் எழுதி வரும் ஷிஹார் அவர்களின் கவிதைத் தொகுப்பு. ஆங்கில ஆசிரியராக இவர் பணிபுரிந்தாலும் தமிழ் மீது கொண்ட பற்றால் தனது கன்னி நூலை மிக அழகிய முறையில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஒரு யுகத்தின் சோகம் என்ற பெயரைத்தாங்கி மன்னார் எழுத்தாளர் பேரவையின் வெளியீடாக, 82 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 45 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

'இன்று இலக்கிய உலகை புதுக்கவிதைகளே ஆட்சி செய்கின்றன. தமிழில் புதுக்கவிதைகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே மகாகவி பாரதியார் புதுக்கவிதையின் வரவுக்கு கட்டியம் கூறிவிட்டார். 'சுவை புதிது, வளம் புதிது, சோதி மிக்க நவகவிதை. எந்நாளும் அழியாத மகாகவிதை' என்பது பாரதியாரின் வார்த்தைகள். புதுக்கவிதை என்பது எதுகை மோனைகளுக்கோ யாப்பு வரையறைகளுக்கோ கட்டுப்பட்டதல்ல. மாறாக, கண்களால் காண்பதை, உள்ளத்தை உறுத்துகின்ற நிகழ்ச்சிகளை உணர்வுகளோடு வெளிக்கொண்டு வருவதாகும். கவிஞர் மு.மேத்தா புதுக்கவிதை பற்றிக் குறிப்பிடுகின்றபோது, 'இலக்கணச் செங்கோல், யாப்புச் சிம்மாசனம், எதுகைப் பல்லக்கு, மோனைத் தேர்கள், தனி மொழிச் சேனை, பண்டித பவனி இவை எதுவும் இல்லாத கருத்துக்கள் தம்மைத்தாமே ஆழக்கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை' என்கிறார். இந்தப் புதுக்கவிதைப் பாணியைப் பின்பற்றியே மன்னூரான் தனது பெரும்பாலான கவிதைகளை எழுதியுள்ளார்' என்று தனது வாழ்த்துரையில் மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் கூறுகின்றார்.

முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளரான கலைமதி யாஸீன் தனது கருத்துரையில் காலத்தோடு பொருந்துகின்ற கவிஞன் என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

'தான் வாழும் சமூகத்தின் அவல நிலை கண்டு சகித்துக்கொள்ள முடியாது கொதிப்படைந்து தனது சக்திமிகுந்த எழுதுகோலெனும் ஆயுதத்தின் மூலம் எதிர்த்து நின்று உலகுக்கு அவைகளை வெளிச்சம் போட்டுக்காட்டி, சாதகமான சூழ்நிலையையும், மனிதகுல மேம்பாட்டையும் உருவாக்க முயல்கின்ற ஒரு தனித்துவமிக்க போராளியாகவே சமூக சிந்தனைமிக்க ஒவ்வொரு எழுத்தாளனும் எப்போதும் காணப்படுகின்றான். வாசகனின் சிந்தனைக் கிளரலுக்கு வழிவகுப்பதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அநியாயங்கள், அடக்குமுறைகள், அநீதிமிக்க உரிமை மீறல்கள் போன்றவற்றை எதிர்த்துக் குரல்கொடுக்கச் செய்வதே எழுதுகோலை ஏந்தி நிற்பவனின் இலட்சியமாய் இருக்க வேண்டும் என்பதையே எழுத்துலகம் எதிர்பார்த்து நிற்கிறது.

இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்ற முயல்கின்ற ஒரு காலத்துக்கேற்ற கவிஞனாக இவ்விளம் கவிஞர் மன்னூரான் தோற்றமளிக்கிறார். தனது உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அடிக்கடி அதுபற்றிச் சிந்திக்க வைக்கின்ற சமகால நிகழ்வுகளை பாடுபொருளாக்கி வெவ்வேறு கோணங்களில் அவற்றை வெளிப்படுத்துவனவாய் இவரது கவிதைகள் அமைந்துள்ள. தனது படைப்புக்களை அவசரமாய் அச்சுருவில் ஆவணப்படுத்திவிட வேண்டும் என்ற ஆவலை மேலோங்கிடாது நிதானமாகவும், நிதர்சனமாகவும் கவித்துவ இலக்கணங்களைக் கருத்திற்கொண்டும் கவிதைகள் புனையப்பட்டிருப்பதை பாராட்டியே ஆக வேண்டும். ஆர்வம்கொண்டு வாசிக்கும் எந்தவொரு வாசகனையும் திருப்தி கொள்ளச்செய்யும் வகையில் பொருத்தமான தலைப்புக்களுடனும், பொருட்செறிவுடனும் புனையப் பட்டிருக்கும் கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பில் புதுக்கவிதைகள் அதிகமானாலும் மரபு வடிவங்களும் இழையோடியிருப்பது இருவகைப் படைப்புக்களிலும் இவர் கொண்டுள்ள ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

'யுகச் சோகம் சொல்லும் இளைய கவி என்ற தலைப்பிலான தனது அணிந்துரையில் மேமன்கவி அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்கள் எல்லோரும் காதலிக்கிறார்கள். இருக்கலாம். காதலிக்கும் எல்லோரும் கவிதை எழுதுகிறார்கள், இருக்கலாம். ஆனால் நான் அறிய அதிகமான இளைஞர்கள் கவிதையைக் காதலிக்கிறார்கள். காதலிக்கும் கவிதையிலோ இவர்கள் சமூகத்தைக் காதலிக்கிறார்கள். அதே வேளை காதலிக்கும் அதே சமூகத்தின் கன்னத்தில் ஓங்கி அறைபவர்களாகவும் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், அந்த இளைஞர்கள் இந்த யுகத்தின் அனுபவக் கரங்களால் கணிசமான முறையில் அடி வாங்குபவர்களாகவும் இருப்பதே. அப்படியானதோர் இளம் கவிதைப் படைப்பாளியாகவே மன்னூரான் எனக்கு அடையாளமாகிறார்.

மன்னார் மண்ணுக்கும் எனக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை. மன்னாரைச் சார்ந்த கணிசமான கவிதைக்காரர்களுடன் எனக்கு உறவு. அந்த உறவின் இன்னொரு வெளிப்பாடாக 'ஒரு யுகத்தின் சோகம்' எனும் இத்தொகுப்புக்கான இக்குறிப்பு. கைவரப்பெற்ற சுதந்திரத்தில், கவிதைச் சித்திரங்களில் ஒரு யுகத்தின் சோகத்தைத் தன்னுடனான சோகமாய் சொல்ல முயற்சிக்கும் மன்னூரான் இன்னும் அனுபவங்களைத் தேடவேண்டும். அந்தத் தேடலில் தான் ஹைக்கூவைப் பற்றிய, நவீனக் கவிதை பற்றிய மேலும் தெளிவான அனுபவங்களை அவர் அடைவார். அத்தகைய தரிசனம் இவருக்கு கிடைக்கும்பொழுது இவரிலிருந்து இயங்கும் இந்த யுகத்தின் ஓர் இளைய கவியின் முகம் தனித்துவ ஒளிவீசும் முகமாய் நமக்கு கிடைக்கும் என்பது நிச்சயம்.

மன்னூரான் ஷிஹார் தனது உரையில் 'பேனா தான் மனதின் நாக்கு என்ற சேர் வண்டஸ் இன் கருத்தை ஒரு கணம் நினைத்துப் பார்க்கிறேன். மனத்தின் மலர்ச்சியாய் இருக்கட்டும். அன்றேல் அதன் ரணங்களாய் இருக்கட்டும். அனைத்தையும் பேனாவால பிரதிபலிக்கச்செய்ய முடிகிறதல்லவா? பேனாவின் அவதாரங்கள் பல. அதிலும் கவிதைகள் என்பவையோ மிக விசேடமானவை. வித்தியாசமானவையும் கூட. அவை பேனாவுக்கும் பேனா காரனுக்கும் பெருமை சேர்க்கும் ஆற்றல் கொண்டவை. வாசகரின் மனதை வசீகரிக்கும் வல்லமை கொண்டவை. இந்த நம்பிக்கையோடுதான் நானும் எனது வாழ்க்கைப் பாதையின் கசப்பான, இனிப்பான அனுபவங்கள் என்னுள் அவ்வப்போது உண்டாக்கிப்போன உணர்வுகளைக் கவிதையாக்கி அவற்றையொரு தொகுப்பாக்கி இருக்கிறேன்' என்கிறார்.

இவரது பெரும்பாலான கவிதைகள் எமது தாய் தேசத்தை உலுக்கிய கொடூர யுத்தத்தின் கோரத்தையும் அது விளைவித்த சோகத்தையும் சொல்வதாக காணப்படுகிறது. என்று தணியுமிந்த...? என்ற தலைப்பிலான கவிதையில் கவிஞர் தனது ஆழ்மனப் பதிவுகளை இவ்வாறு முன்வைக்கிறார்.

வேர்விட்ட தலைமுறைகள்
போரிட்டு மாண்டதனால்
சீரற்றும் செழிப்பற்றும்
சிதறுண்ட குடும்பங்கள்
ஊர்விட்டு ஊர்சென்று
உறவிழந்து உருக்குலைந்து
பேர்கெட்டுப் போகின்ற
பேரிழப்பு ஏன் எமக்கு?


நாளைய விடியலில், பிரார்த்தனை, கலங்கரை விளக்கம், கருவறை, ஈதுல் பித்ர் - ஈகைத் திருநாள், வெற்றி நிச்சயம் போன்ற ஆன்மீகக் கவிதைகளையும் இந்தக் கவிதைத் தொகுப்பில் இவர் சேர்த்திருக்கிறார். இவற்றிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அரபுப் பதங்களுக்குரிய தமிழ் விளக்கத்தையும் அந்தந்த கவிதைகளுக்குக் கீழே இணைத்திருப்பதேயாகும். தமிழ் விளக்கமின்றி அரபுப் பதங்களில் மாத்திரம் கவிதை தரப்பட்டிருக்குமேயானால் சகோதர இன வாசகர்களினால் அதை புரிந்து கொள்வது சிரமமாகியிருக்கலாம். எனினும் இவ்வாறான விளக்கத்தை இணைத்திருப்பதினூடாக இஸ்லாமிய கொள்கைகளையும் ஐயமின்றி அறிந்து கொள்ள வழி சமைத்திருக்கின்றமை பாராட்டத்தக்கதாகும்.

இதில் கலங்கரை விளக்கம் என்ற கவிதையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றின விடயங்களும், அவர் மக்களுக்கு காட்டிச்சென்ற நல்வழியைப் பற்றியும் எடுத்தியம்பியிருக்கும் ஷிஹாரின் வரிகள் இப்படி விரிகிறது...

மார்க்கம் உரைத்ததையே
மாந்தர்க்கெடுத்துரைத்துத்
தீர்க்கமாய் வழிநடத்தித்
திருத்தூது செய்த நபி
நாதியற்ற ஏழையர்க்கும்
நளினமிகு வார்த்தை சொல்லி
வேதனையைத் தீர்த்து வைத்த
வேந்தரன்றோ எங்கள் நபி.


இயற்கையை வர்ணித்து எழுதாத கவிஞர்கள் இல்லை எனலாம். அந்த வகையில் ஷிஹாரும் அவரது மொழிநடையில் பூக்கள் என்ற கவிதையில் தென்றலோடு சேர்ந்து தெம்மாங்கு பாடும் தேவதைகள் என்று பூக்களை வர்ணிக்கின்றார். வானவில்லிடம் வர்ணம் வாங்கி வாசனையோடு நிற்கும் வசந்த குமாரிகள் என்று பூக்களைப் பற்றி கூறும் இரசனைப்பாங்கு என் மனதை ஈர்த்தது.

பொது(வுடை)மை என்ற கவிதையில் அமெரிக்காக்களின் அராஜகம் அதிகரித்துக்கொண்டே போனால் எத்தியோப்பியாக்களின் நிலை என்னாவது என்று கேட்டு நிற்கிறார். செல்வந்தச் சப்பாத்துக்களால் நித்தமும் வறுமையானவர்களை வாட்டுகின்ற பணத்திமிர் பிடித்தவர்களையும், அதிகாரத்தின் உச்சியில் ஆட்சி செய்பவர்களையும் பற்றி குறிப்பிடும் இவர், அத்தகையவர்கள் ஏழைகளை எட்டி உதைக்கும் யதார்த்தத்தை படம்பிடித்துக்காட்டுவதாக இக்கவிதையை யாத்துள்ளார்.

உலகத்தில் எம்மை உண்மையாக நேசிக்கும் ஒரே ஒரு உறவு தாய் மாத்திரம் தான். தாயைப் பற்றி ஷிஹார் எழுதியிருக்கும் என்னைப் பிரசவித்தவளுக்கு என்ற கவிதையில் வரும் கீழுள்ள வரிகள் லயிக்க வைக்கிறது.

உன் உதிரத்தை நீ
என் அதரம் வழியாய் ஊட்டியபோது
உன் உணர்வுகளையும் சேர்த்தே
உறிஞ்சிக்கொண்டேன்


இந்த ஒரேயொரு காரணத்தால் தான் இந்த இயந்திர உலகின் வாழ்க்கைக்குள்ளும் ஒவ்வொரு கணமும் தாயை நினைக்க முடிவதாக இதன் கரு அமைந்திருக்கிறது.

சமூக கருத்துக்கள், ஆன்மீக விடயங்கள், காதல், போர்ச்சூழல் போன்றவற்றை பெரும்பான்மையான கவிதைகளின் கருப்பொருளாகக் கையாண்டுள்ளார். இது இவரது கன்னி முயற்சியாகும். நிச்சயமாக எதிர்காலங்களில் இவர் கவிதைத்துறையில் இன்னுமின்னும் கால்பதித்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

 

poetrimza@yahoo.com