நூல் : கூடுகள் சிதைந்தபோது
நூல் ஆசிரியர் :அகில்
நூல் ஆய்வு: கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்

'அகில்' என்று தமிழ் பேசுவோர் நிறைந்த அகிலமெங்கும் அறியப்பட்டிருக்கிற திரு.சாம்பசிவம் அகிலேஸ்வரன் அகதியாக கனடாவில் போயமர்ந்திருக்கின்ற இலங்கைத் தமிழர். தமிழ் இலக்கியத்திற்கு புதிய வரவுகளைத் தருவதில் எந்த வகையிலும் குறையாத கனமான படைப்புகளைத் தரவல்லவர் எனக் காலம் பதிவு செய்துள்ள கதாசிரியர்கள் பலருள் ஒருவர் திரு.அகில் அவர்கள். சிறுகதை வடிவில் தமிழுக்கு மிகவும் தாமதமான இலக்கிய வடிவம் என்றாலும் தரமான படைப்புகளால் உலக அளவு பேசப்படுகிற உன்னதம் பெற்றவை. எல்லோருக்குமே தமக்கு ஏற்படும் அல்லது தாம் பார்க்கும் அனுபவங்களையும் நிகழ்ச்சிகளையும் அடுத்தவரிடம் கூறும் ஆசை வரும்> ஆவல் எழும். கதையாக அதைச் சொல்கிறவர்கள் சற்று மாறுபட்டவர்கள். காரணம் கதைக்கான உத்தி கவிதையிலிருந்தும் கட்டுரையிலிருந்தும் மாறுபட்டவை. கதைகள் ஒரு சிறு சம்பவத்தை> திருப்பத்தை> மின்னலிடும் ஒரு சிந்தனையை உள்ளடக்கியிருக்கும். அகிலுக்கு கதைக்கலை கைவந்திருக்கிறது என்பதற்கு 'கூடுகள் சிதைந்தபோது' கதைத் தொகுதி கட்டியம் கூறுகிறது. பெரும்பாலான சிறுகதைகள் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை சார்ந்தவை. இலங்கைத் தமிழின் இனிமையே தனி. அதை ரசிக்கவும் ருசிக்கவும் இலங்கைத் தமிழர்களோடு பழகியிருக்க வேண்டும். பேசக் கேட்டிருக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாகவே ஈழத் தமிழர்கள் வார்த்த கண்ணீரின் ஈரம் காயாதிருப்பதற்குக் காரணம் நிகழ்வுகளும் தொடரும் நினைவுகளுமே! ஈழத்திலிருந்து எங்கெங்கெல்லாமோ அகதிகளாய்ச் சென்று சேரும் வரை அவர்கள் பட்ட துயரும், படும்பாடும் சொல்லி முடியாது. 'வலி' என்ற முதற்கதையில் மயூரன் என்கிற பாத்திரம் மனைவி சாமினியுடன் யாருக்கும் தெரியாமல் கனடாவுக்குள் நுழைகிற அனுபவம். பன்றிக் குட்டிகளோடு குமட்டும் நாற்றத்தையும் சகித்துக் கொண்டு செல்லும் அனுபவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுகிறபோது அதன் வலியை மயூரன் உணர்ந்து மாமிசம் சாப்பிடுவதை நிறுத்துவதாகக் கதை நிறைகிறது. கதை மட்டுமல்ல நம் மனமும்கூட. 'கிறுக்கன்' கதையிலும் கூட வாயில்லாத ஜீவன்களின் கதை கூறப்படுகிறது. கடைசிவரை அவற்றின் பெயர்களோடு மட்டுமே நகரும் கதையில் நம்மைப் போலவே வேறு யாரோ எனும் எண்ணம் வருமாறு எழுதியுள்ள யுத்தி சிறப்பானது. 'பதவி உயர்வு' சிறுகதை ஒரு இராணுவ அதிகாரியின் கதை. பகைவர்களைக் கொன்று தீர்க்க வேண்டிய பணி அவருக்கு, ஆனால் அவருடைய மகன் கடலில் நீராடி மூழ்கவிருந்த தன் நண்பனைக் காப்பாற்றப்போய் இறக்கும் சோகம் நேர்கிறது. தந்தைக்கு தன்னிலும் தன் மகனே சிறந்தவனாய் தோன்றுகிறான். பிரிகேடியர் சில்லாவின் சோகத்தில் நாமும் சேர்ந்து கொள்கிறோம். பரிசு பெறத் தகுதியான கதை பரிசு பெற்றிருக்கிறது 'கூடுகள் சிதைந்தபோது' என்கிற சிறுகதை தலைப்புச் சிறுகதை. யாருடைய மடியில் தலைசாய்த்துத் தான் இறக்க வேண்மென நினைத்தானோ அந்நாயகன் தன் கர்ப்பிணி மனைவி இலங்கை ராணுவம் வீசிய குண்டுக்குப் பலியாகி இறந்த அந்த பூங்கொத்தைத் தன் மடியில் தாங்கி அரற்றும் போது நாமும் அச்சோகத்தில் சிக்கிய உணர்வு பெறுறோம். முள்ளிவாய்க்கால் நினைவுகள் இன்னமும் தமிழர்தம் மனங்களில் குருதிகசியும் வலியையே தந்துகொண்டிருப்பதை இக்கதை உணர்த்துகிறது. என் உயிர்தான் எனக்குப் பெரிதாகப் போயிற்று. உயிர் சுமந்து நடக்கிறேனே என்கிற கதாநாயகனின் குரலோடு கதை முடிந்தாலும் நாம் அந்தப் பாதிப்பிலேயே தொடர்வோம். இக்கதை ஞானம் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. 'அண்ணாநகரில் கடவுள்' அனுபவத்திற்குப் பிறகு எந்தக் கடவுளும் இனி பூமிக்கு வரமாட்டான். நல்ல நகைச்சுவை. அகில் நிச்சயம் அகிலம் புகழ் பெறுவார்.

வெளியீடு வம்சி திருவண்ணாமலை விலை ரூபாய் 120

நன்றி: கவிதை உறவு (மார்ச் 2012)