நூல் : வதிரி சி. ரவீந்திரன் கவிதைகள்!
நூல் ஆசிரியர் :வதிரி சி. ரவீந்திரன்
நூல் ஆய்வு: ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா

களம் பல கண்ட தழும்புகள்!
இவரின் கவிதைகளில்...
துன்பங்களும் துயரங்களும்
இவரைத் துரத்தி வந்த போதும்
புறமுதுகு காட்டாத
புறநானூற்றுப் பண்போடு
நேர்நின்று பொருதுகிறார்!

சங்கத் தமிழனின்
போர்க் குணங்களையும்
அவனது ஆசா பாசங்களையும்
ஆங்காங்கே காணமுடிகிறது!

இவரின் கோபங்கள்
நியாயமானதாகவே தெரிகின்றன!

இவர் வீசும் சாட்டைகள்
சமுதாயத்தின் முதுகில்
காயங்களை ஏற்ப்படுத்துகின்றன.

அறம் பாடும் புலவராகவோ
அல்லது  ஒரு அகிம்சை வாதியாகவோ
இவர் வேடம் தரிக்கவில்லை.

மாறாக, மனுடத்தையும்
மானுட நேசத்தையும் நோக்கியே
இவரது கவிதைகள் யாவும்
நடை பயில்கின்றன!

இவர் பட்ட பிரசவ வேதனைகளையும்
அறுவைச் சிகிச்சைகளையும்
அடையாளம் காண முடிகிறது!

இழிசெயல்கள் கண்டு
பொறுக்காது மனம்
குமுறுகிறார்!

கடந்து வந்த தடைகளையும்
நடந்து வந்த பாதச் சுவடுகளையும்
இந்த கவிதை நூலில் மிக அழகாக
பதிவு செய்துள்ளார்.

இயற்கையின் அழகையும்
இளமையின் எழிலையும்
தனது வளமான மொழியோடும்
அழகான உவமை அணியோடும்
மிகவும் அற்புதமாகக் கூறுகிறார்!

வண்டுகள் பறந்து வந்துன்
வாயமுதத் தேனுண்டு
வாச நறு மிதழில்
வட்டமிட்டு வட்டமிட்டே
நின்று நினைவிழந்து
நெஞ்சமதில் மயக்கமுற்று
நித்திரையாய்  போனதையும்
நானறிவேன் நானறிவேன்!
     

அந்த மண் வாசனையில்
ஒரு மகிமை இருக்கத்தான்
செய்கிறது!.

இது அந்த மண்ணுக்கு மட்டுமல்ல
மக்களுக்கும் இது ஒரு சாபக் கேடு!
சொல்லாமல் சொல்லுகிறார்!

கொலை அரக்கனின் கோரக் கரங்கள்
ஷேல்லாக விழுகிறது!
வண்டு துளைக்காத மாம்பழங்கள்
குண்டுகள் விழுந்து சிதறினவே!

ஒரு முதிர் கன்னியின்
ஏக்கப் பெருமூச்சு
எப்படி இருக்கும்?
எப்படி இருக்கக் கூடாது
என்பதனை ஒரு சில வரிகளில்
மிகவும் அற்புதமாக காட்டுகிறார்

வரன்கள் வந்து வந்து
என்னைப் பார்த்துச் சென்றனர்.
தரகரும் வெளிநாட்டுக்காரரும்
என் புகைப் படங்களை
கேட்டுப் பெற்றனர்.
தந்து போனதில்
எனது ஆல்பம்
நிறைமாதக் கர்ப்பிணியாக
நிறைந்து கனக்கிறது
ஆனால் அதில்
இல்லாதது எனது புகைப்படம்
ஒன்றுதானும்!

சமூகத்திற்கும்
தமிழனின் இன மானத்திற்கும்
இது ஒரு சாட்டை அடி..
இன்றைய நிலைமைகளுக்கும்
இதுதான் காரணம் போலும்...

வடக்கத்தையாள்
போடி வெளியிலை

.......

இவள்
கண்டியில் வாழ்ந்த
இந்திய வம்சம்
இனக்கலவரம்
அகதிகளாக்க
இனத்துடன் சேர்ந்து
உழைத்து வயிறு
கழுவ வந்தவள்!

சந்தைச் சுவரில்
தமிழினமே ஒன்று படு

.......

தன்னிலை மாறினாலும்
தான் மாறக்கூடாது

வெளிநாடு தந்த வாய்ப்புகளும்
வசதிகளும்
இன்று எம்மை எவ்வளவுக்கு மாற்றி விடுகின்றன..

............

இன்று நீ வெளிநாட்டுப் பிரசை
அதனாலோ பெயரையே மாற்றிவிட்டாய்
இந்தநாடு இன்றுனக்கு
சரியான
“Hot” என்கிறாய்!
வீடோ
டேட்டி என்கிறாய்!
இந்த நாடும் இந்த கிளைமேற்றும்
உனக்கு நினைவிலிக்கிறதா?
நினைவை மீட்டிப்பார் மகளே
இது நீ பிறந்தமண்!

போலி வாழ்வுதனைக் கண்டு
ஏளனம் செய்கிறார்.
இது தவிர்க்க முடியாதது என்பது 
எமக்கு மட்டுமல்ல
கவிஞருக்கும் நன்கு தெரியும்..

பட்டு வேட்டி
சால்வை கட்டி
பதக்கம் சங்கிலி
கழுத்தில் மாட்டி
இடுப்பினுள்ளே

ரோச் லைற்
செருகி வைத்து
திருவிழா
திறமகாச் செய்கிறார்
திருநாமம்!

அவரின் மனைவி
வெளுறல் சேலைகட்டி
நகைகள் எதுவுமற்று
வயல்வெளியில்

ஒதுங்கி நின்று
திருவிழா
பார்க்கிறாள்
      

உடைந்த நாற்காலி
ஒன்றிற்காக இவரது
மென்மையான உள்ளம்
மெளனமாக அழுகிறது!
உண்மையில் நாம் நேசிப்பது
மனிதர்களாகவும் இருக்கலாம்
அல்லது பொருட்களாகவும்
இருக்கலாம். ஆனாலும்
அந்த நேசத்தில் வேறுபாடு
இல்லை போலும்...

.............

எனது கல்வி வாசிப்பு எல்லாமே
அந்த நாற்காலியில் தான்!
நான் படிக்கும் போது
சில சமயம் ஆடிக்கொண்டிருக்கும்.
ஓசைகள் கூட எழுப்பும்
அப்பா அந்த நாற்காலியை
சரி செய்து என்னைப் படிக்கவைப்பதில்
மிக அக்கறையோடு இருப்பார்.

........

இப்போ எனது வீட்டில்
வசதியான தளபாடங்கள் காட்சிதருகின்றன.
ஆடும் என் மகனின் தொட்டிலின்
கீழே சமப்படுத்த
என் உடைந்த நாற்காலியின்
துண்டங்கள்  தொட்டிலோடு
துணையாகின்றன

இவர் ஒரு கவிஞராக மட்டுமல்ல...
சிறந்த மெல்லிசைப் பாடலாசிரியராகவும்
தன்னை இனம் காட்டுகிறார்.
இவரது பாடல்கள் இலங்கை வானொலியில்
அடிக்கடி ஒலிக்கின்றன..

இதோ மிகவும் அற்புதமான பாடல் ஒன்று...

கலையின் அரங்கில் தாரகையாள்
கானத்தில் இவளே கலைக்குயிளால்
அலையென அவளின் நர்த்தனங்கள்
ஆயிரம் பாவங்கள் காட்டுது பார்!
சிலையென நின்று சிரிக்கின்றாள்
சிந்தையில் நடம் பயில்கின்றாள்!

தமிழனின்
உரிமைகள் உடைமைகள் மட்டுமல்ல
தன்மானமும்
இந்த மண்ணில் தான் மாண்டு கிடக்கிறது!

அவன் நிமிர்ந்து நின்றால்
நிச்சயம் உடையும் தளைகள் எல்லாம்!

ஆயிரம் வார்த்தைகளை
தன்னுள் அடக்கி வைத்திருக்கிறதே
இந்த அட்டைப்படம்!
மிகவும் அற்புதமான தெரிவு!

இவ்வாறாக மிகவும்
காத்திரமான கவிதைகளையும்
காதுக்கினிய பாடல்களையும்
அழகு தமிழில் எழில் கொஞ்ச
தந்து கொண்டிருக்கும் இந்த கவிஞர்
இன்னும் பல படைப்புக்களைத் தந்து
தமிழ்த்தாயின் அங்கங்களை
அணிசெய்வார் என்பதில் சந்தேகமில்லை!

இவரது களமும் புலமையும்
மேலும் மேலும் வளர்ச்சியடைய
வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்!

 

ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்
ரியாத், சவூதி அரபியா