நூல் : தமிழாயிரம்
நூல் ஆசிரியர்தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்
நூல் ஆய்வு:
கவிஞர் இரா .இரவி

வெளியீடு: திருவள்ளுவர் தவச்சாலை ,திருவளர்குடி(அல்லூர்) திருச்சிராப்பள்ளி மாவட்டம் .620101 .தொலைப்பேசி 0431-2685328.
விலை ரூபாய் 120.

ழுகின்ற தமிழ் அறிஞர்களில் சிகரமாக விளங்கக் கூடியவர் புலவர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் .அவருக்கு எஸ் .ஆர் .எம் .பல்கலைக் கழகத்தின், தமிழ்ப் பேராயத்தின் சார்பில் வழங்கப்பட்ட  அய்ந்து லட்ச ரூபாயை வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்து அதில் இருந்து வரும் வட்டித் தொகையில் தொடர்ந்து நூல் வெளியிடுவது என்று முடிவு எடுத்து முதலில் வெளி வந்துள்ள நூல் இது .இந்த நூல் வெளியீட்டு விழா பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது . சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் நூல் அறிமுக விழா நடைபெற்றது .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களின் கரங்களால் இந்த நூலைப் பெற்றேன் .நூல் அறிமுக விழாவில் மதுரை தியாகராசர் கல்லூரியின் முன்னாள்  முதல்வரும் ,சைவ சித்தாந்த அறிஞருமான திரு .அருணகிரி இந்நூல பற்றி மிகச் சிறப்பான திறனாய்வுரை நிகழ்த்தினார்கள் .


திருக்குறளில் நன்கு புலமை மிக்க அய்யா தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் திருக்குறள் வடிவத்தில் ஒன்றே முக்கால் அடிகளில் தமிழ் பற்றிய ஆயிரம் குறள்களை உடைய  இந்த நூல் தமிழாயிரம் எனப்பட்டது .
.
முதல் அய்நூறு குறள்கள் ,அடிமுடி ( அந்தாதி ) வடிவிலும் ,பின் அய்நூறு குறள்கள் ,தனித்தனி நிற்பன. குறள் வடிவில்  தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் எழுதிய இந்நூல ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டிய சிறந்த நூல் .பல்லாயிரம் வயதாகியும் இன்றும் தமிழ் அழியாமல் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்  போன்றவர்களே .அடிமுடி ( அந்தாதி )  வடிவில் 500 பாடல்கள் எழுதவது எல்லாராலும் முடியாதுஆனால் இரா .இளங்குமரனார் அவர்களால் முடிந்துள்ளது .

 

ஆயிரக்கணக்கான நூல்களைப் படித்தவர் .திருக்குறளைக்  கரைத்துக் குடித்தவர் .தமிழ் 

இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை மிக்கவர் .அவரது பல்லாண்டு கால பட்டறிவின் வெளிப்பாடாக இந்நூல் வந்துள்ளது .சிலர் புதுக்குறள் என்ற பெயரில் தமிழ்க்கொலை செய்து வரும் காலத்தில் ,காலத்தால் அழியாத திருக்குறளை ஒட்டி மிகச் சிறப்பாக வடித்துள்ளார்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் என்பதால் மொழி அறிவு மிக்கவர் என்பதால் சுவைபட எழுதி உள்ளார்கள் .தமிழ் மொழியின் சிறப்பை பறைசாற்றும் விதமாக உள்ளது .ஒவ்வொரு தமிழனும் தமிழனாகப் பிறந்ததற்காக பெருமை கொள்ளும் விதமாக எழுதி உள்ளார் .

 

"தமிழ் நூறு  "தொடங்கி "தொலைக்காட்சி" வரை 100 அதிகாரத்தில் தலா பத்து வீதம்  1000 உள்ளது.ஒர அதிகாரத்திற்கு பத்துப்பாடல்கள் .குறளுக்கு அருகே சொல் விளக்கமும்  ,விளக்கவுரையும் இருப்பதால் எல்லோருக்கும் மிக எளிதாக விளங்கும் .தமிழ்ச்சொற்களை அறிந்து கொள்ளும் சொற்க்களஞ்சியமாக உள்ளது ..'என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன் கையை ஏந்த வேண்டும் பிற மொழியில் "நன்கு உணர்த்தி  உள்ளார் .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

முதல் நூறு !

தமிழ்ப் பழமை !

1. கதிர்ப்பிறப்புக் காட்டும் கலைத்தமிழைக் கண் போல் 

    மதிக்கும் மதியே மதி

  கதிர்ப்பிறப்பு- கதிரோன் தோன்றிய நாளில் தோன்றிய பிறப்பு ;கலைத்தமிழ் -   கலைமலிதமிழ் ; மதி -அறிவுடைமை .- 

கதிரவன்  தோன்றிய நாளில் தோன்றிய தமிழ் என்கிறார் .ஞாயிறு ,திங்கள் இரண்டும்  முதல் குறளில் வந்துள்ளது  .

சிலப்பதிகாரத்தில் 

திங்கள் போற்றுதும்ஞாயிறுபோற்றுதும் ! என்று ஏன் தொடங்கினார் இளங்கோ ஞாயிறுபோற்றுதும்திங்கள் போற்றுதும் ! என்றுதானே வர வேண்டும் மாற்றி எழுதியதன் காரணம் இது கண்ணகி காதை என்பதால்  திங்கள் போற்றுதும் ! முதலில் எழுதி கோவலனுக்காக ஞாயிறுபோற்றுதும் ! இரண்டாவது எழுதினார் .என்றார் .நூல் ஆசிரியர் இரா .இளங்குமரனார்.சிலப்பதிகாரம படித்த பலருக்கும் புரியாத காரணத்தை புரிந்தவர் இரா .இளங்குமரனார் .

 

தொல்லைக்காட்சியாகி விட்ட  தொலைக்காட்சி பற்றியும் குறள் உள்ளது .கண்டனத்தை உரக்க்க குரல் கொடுக்கும் விதமாக குறள் உள்ளது .இதனைப் படித்தாவது அவர்கள் திருந்த வேண்டும் .

தொலைக்காட்சி பற்றிஇரண்டு அதிகாரத்தில்  20 குறள்கள்  உள்ளது .இரண்டு மட்டும் உங்கள் பார்வைக்கு !

 

பக்கத்துத் தங்கிப் பழி வாங்கும் நோக்கினர் 

கக்கத்தில் வைத்துள்ள கங்கு !

நமக்கு நெருக்கமாக இருந்து பழி வாங்கக் காத்திருக்கும் 

எண்ணத்தினர் கமுக்கூட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ள தீக்கங்கு !

தொலைக்காட்சி நம் வீட்டிற்குள் நம் அருகிலேயே இருப்பதால் தமிழைச் சிதைப்பதால் .தமிழ்ப்பண்பாட்டை சீரழிப்பதால் நம் கை இதுக்குள் வைத்துள்ள கங்கு (தீ ) என்கிறார் .

 

பெண்களே பெண்ணைப் படுத்தும் பெருங்கொடுமை காட்டவே 

கண்டான் கொல் காட்சிக் கதை !

பெண்களைச் சிறுமைப்படுத்தும் கொடுமையைக் 

காட்சியாகக்  காட்டவே தொலைக்காட்சி கண்டானோ ?

பெண்களை மிக கொடூரமாக மோசமாக தொலைக்காட்சியில் காட்டி வரும் அவலத்தை சூடு தரும் விதமாக நன்கு சுட்டி உள்ளார் .பாராட்டுக்கள் .

 

தமிழுக்கு தமிழர்க்கு பெருமை சேர்க்கும் விதமாக வந்துள்ள நூல் .ஆறில் இருந்து அறுபது வரை அனைவரும் படிக்க வேண்டிய நூல் .அற நெறி போதிக்கும் விதமாக, .தமிழ்ப் பகைவர்களுக்கு சாட்டை அடி தரும் விதமாக ,தமிழர்களுக்கு தமிழ் இன உணர்வு ஊட்டும் விதமாக .,உடல் நலம் ,மன நலம் கற்பிக்கும் விதமாக ,தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக, நேர்மறை சிந்தனை கற்றுத் தரும் விதமாக பல்வேறு கருத்துக்கள் உள்ளது .இந்த நூலைப்   படிப்பதோடு நின்று விடாமல் அதன் வழி நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் 

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் தொடர்ந்து இது போன்ற நூல்கள் எழுதி தமிழுக்கு அழகு சேர்க்க வேண்டும் .அணி சேர்க்க வேண்டும் .தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் பிற்காலத்தில் தன்  கண் பார்வை மங்கி விட்டாலும் எழுதுவதை நிறுத்தக் கூ டாது என்பதற்காக வெளிச்சம் இல்லாமலே எழுதும் ஆற்றலை பயின்று வைத்துள்ளார்கள் .தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களுக்கு கண் பார்வை மங்கவே மங்காது தமிழ் காக்கும் என்பது உறுதி .

 

eraeravik@gmail.com