நூல் : தீ குளிக்கும் ஆண் மரம்
நூல் ஆசிரியர்ஜே. பிரோஸ்கான்
நூல் ஆய்வு:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

லக்கியத்தில் ஆழக் காலூன்றி வருகின்ற கிண்ணியாவில் இருந்து ஜே. பிரோஸ்கான் தனது இரண்டாவது தொகுதியாக தீ குளிக்கும் ஆண்மரத்தை வேரூன்றியிருக்கிறார். பேனா பத்திப்பகத்தின் வெளியீடாக 84 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது இந்தத்தொகுதி. இவர் ஏற்கனவே இதுவும் பிந்திய இரவின் கனவுதான் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

`
தீ குளிக்கும் ஆண் மரம் கவிதைத் தொகுதி பிரோஸ்கானின் மனதைச் சொல்கிறது. பிரோஸ்கானின் கவிதைகள் அவரின் வாழ்க்கைச் சூழலைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. தன்னுடைய வாழ்க்கையின் நெருடல்களையும், அவலங்களையும் சொல்வதன் மூலம் சமூகம் உள்வாங்கியிருக்கின்ற அரசியலைக் காட்சிப்படுத்துகிறார்.'  என இந்தத்தொகுதி பற்றிய தனது உரையில் கவிஞர் நீறோ அவர்கள் குறிப்பிடுகின்றார்.

தான் இந்தத்தொகுதியை வெளியிடுவதற்குக் காரணம் என்ன என்பதை நூலாசிரியர் பிரோஸ்கான் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஷநேற்றைய கவிதை வடிவங்களைத் தாண்டிச் செல்ல வேண்டிய கட்டாய வரம்புக்குள் காலம் என்னை மிக வேகமாக இழுத்துச் சென்றதன் பிரதிபலிப்பே இந்தப் படைப்பு. ஒரு படைப்பாளன் நீண்ட வாசிப்பின் நெருங்குதலால் கவரப்படுதல் என்பது ஆச்சரியமில்லை. அவ்வகையான குறிக்கோளுடன் நவீன படைப்புக்களை முயன்றவரை மேய்ந்ததன் விளைவே இந்தத் தீக்குளிக்கும் ஆண் மரம்| என்கிறார் நூலாசிரியர் பிரோஸ்கான்.

நாம் நினைப்பவை எல்லாம் நினைத்தவாறு நடந்துவிடுவதில்லை. ஆசை ஆசையாக கற்பனை பண்ணுபவை வெறும் கனவுகளாகவே ஆகவிடுகின்ற நிலமை யாவருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும். அத்தகையதொரு நிகழ்வை தனது முதல் கவிதையில் அழகாக வடித்திருக்கிறார் கவிஞர். காய்க்க ஆசைப்பட்டு பூத்த முருங்கைப்பூ (பக்கம் 09)

இரவுத் துயிலின் ராஜ கனவுடன் உறங்கி விழித்த போது
ராத்திரி பெய்த மழையில் உதிர்ந்து மடிந்து போயிருந்தது
எனதான கனவும்
காயாக மாறிவிடுவேன் என்ற கர்வத்தோடு
பூத்த முருங்கைப் பூவும்
!

எந்த ஒரு விடயமும் நமக்கருகில் இருந்தால் அதன் பெறுமதி புரியாது. காலக்கிரமத்தில் அப்பொருளோ, அல்லது மனிதரோ நம்மைவிட்டு தூரமான பின்புதான் அதன் அருமை பெருமை புரிய ஆரம்பிக்கும். ஆனால் காலம் கடந்த நிலையில் அதை மீண்டும் பெறுவது முயற்கொம்பாகவிடும். இழப்பு (பக்கம் 13) என்ற கவிதை வரிகள் இதை நிதர்சனப்படுத்துவதைப் பாருங்கள்.

இப்படித்தானொன்று அருகாமையிலிருக்கும் போது
அதன் இருத்தலின் வலிமை புரியாது
அது இல்லாமல் போகும் போதுதான்
கஷ்டமும் கவலையும் காற்றைப் போல
வீசிக்கொண்டிருக்கும் போல
!

தனக்கு என்ன நடக்க இருக்கிறது என்பதை யாருமே அறிந்திருப்பதில்லை. எனினும் மற்றவர்களின் விடயங்களைப் பற்றி பல அபிப்பிராயங்களை நாம் சொல்லிக்கொண்டிருப்போம். வருத்தம் (பக்கம் 38) என்ற கவிதை கோழிகளுக்கு மட்டுமானதல்ல. அதை குறியிட்டுக் கவிதையாகக் கொண்டால் பல விடங்கள் புலப்படுவதை அவதானிக்கலாம்.

கிணற்றடிப் புழுக்களின் கனவு பற்றியும்
ஈசல்களின் வாழ்க்கைச் சுருக்கம் பற்றியும்
அறியாது போல
பாவம்தான் இன்று கல்யாண வீட்டிற்கு
கறியாகிப் போவது பற்றியும்
தெரிந்திருக்க நியாயமில்லை
பசிக்காகத் தீனி மேய்க்கின்ற கோழிகளுக்கு
!

விபச்சாரிகள் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களிலும் பலர் கண்ணீருக்குச் சொந்தமானவர்கள், விரும்பி வருபவர்கள் சிலர். வற்புறுத்தலில் அகப்பட்டவர்கள் சிலர். எந்த ரகமாயிருந்தாலும் சமூகத்தளத்தில் நின்றுகொண்டு அவர்களால் சுயமாக இயங்க முடியாது. முகமூடி அணிந்து கொண்டு சுதந்திரமாக வாழ இயலாது. ஆணின் முகம் தெரியாமலேயே அவனிச்சைக்கு உடன்படுபவர்கள் எல்லாம் விரும்பித்தான் இத்தொழிலை மேற்கொள்கின்றனரா? இல்லை என்கிறது கீழுள்ள வரிகள். இவ்வரிகள் அவர்களின் வேதனையை கூறுவதைப் போல் இல்லையா? மூன்று (பக்கம் 46)

மலர்ந்த பூக்களெல்லாம்
அவை பிரியப்பட்டு
பறிக்கப்படுவதல்ல,
பறிப்பவர்களெல்லாம் அவற்றைப்
பிரியத்தோடு பறிப்பதுமில்லை
!

மனிதன் தவறு செய்கையில் யாரும் கண்டுவிடவில்லை என்று எண்ணித்தான் அதில் ஈடுபடுகின்றான். படைத்த இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதைக்கூட மறந்து பலர் தவறுகளைச் செய்கின்றனர். இறைவன் தண்டிப்பதற்கு முன்பே மனச்சாட்சி மனிதனைத் தண்டித்துவிடுகிறது. தப்பிப்பதென்பது யாது? (பக்கம் 79) என்ற பின்வரும் கவிதையில் பிரோஸ்கான் அதைத் தெளிவாக எடுத்தியம்புகின்றார்.

நேற்றுச் செய்த தவறிலிருந்து
எவர் கண்களுக்குள்ளும்
மாட்டிக்கொள்ளாமல்
வீடு வந்நதும்
மாட்டிக்கொண்டேன்
மனச்சாட்சியிடம்
!

இரண்டு கவிதைத் தொகுதியை வெளியிட்டு, பேனா சஞ்சிகையையும் வெளியிட்டுவரும் ஜே. பிரோஸ்கான் இன்னும் பல படைப்புக்களை இலக்கிய உலகுக்குத்தர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

நூலின் பெயர் - தீ குளிக்கும் ஆண் மரம்
நூலாசிரியர் - ஜே. பிரோஸ்கான்
வெளியீடு பேனா பப்ளிகேஷன்;
விலை - 250 ரூபாய்poetrimza@gmail.com