நூல் : மனவெளியின் பிரதி
நூல் ஆசிரியர் நாச்சியாதீவு பர்வீன்
நூல் ஆய்வு:
ராஜ் சுகா ( .எலிசபத்)

ஈழத்து இலக்கிய பரப்பில் 'புதுக்கவிதை' என்ற மகுடத்தோடு களமிறங்கியிருக்கின்றது 'மனவெளியின் பிரதி'. அநுராதபுர மாவட்டத்தைச்சேர்ந்த நாச்சியாதீவு பர்வீன் அவர்களின் 2வது தொகுதியாக வெளிவந்திருக்கும் இக்கவிதை தொகுதியானது வாசித்தலுக்கும் யோசித்தலுக்கும் உகந்த மிகச்சிறந்த நூலெனலாம். முற்ரிய கரும்பை நுனியிலிருந்து அடிவரை சுவைக்கும் அநுபவத்தை பெற்றுத்தரும் மனவெளியின் பிரதியானது மொழியைவிட்டு புரிதலைவிட்டு இலகுவைவிட்டு சிதறிவிடாமல் பக்குவமான தண்டவாளப்பயணமாய் இருப்பது வாசகக்கு அவனது வாசிப்புப்பயணத்தை இலகுவாக்கிவிட்டிருக்கின்றது.

39கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பில் இயற்கையோடும் இதயங்களோடும் சந்திக்கின்ற உணர்வுகளை மிக அழகான கவித்துவத்துடன் வெளிப்படுத்தியுள்ள கவிஞரை நிச்சயமாக தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும்போதே வாழ்த்தத்தோன்றும்அத்தோடு மனிதமனவோட்டங்களை அப்படியே பிரதியிட்டிருக்கும் இத்தொகுதிக்கு, 'மனவெளியின் பிரதி' எனும் நாமம் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.

அட்டைப்படத்துடன் நூலுக்கான முன்னுரையினை கவிஞரும் எழுத்தாளருமான மேமன்கவி தந்துள்ளார். சற்று வித்தியாசமாக 'பின்னுரை' என்ற பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது அதனையும் மேமன்கவி அவர்களே வழங்கியுள்ளார். கவிஞரின் கவிதையினை பரிந்துரை செய்ததுடன் அவரின் வளர்ச்சியில் பங்குகொண்டுள்ளவர்கள் குறிப்பாக மூத்த படைப்பாளி ஷம்ஸ் அவர்களைப்பற்றியும், நாச்சியாதீவு பர்வீன் அவர்களுக்கு நடைபெற்ற சுவாரஸ்யமான ஒரு விடயத்தினையும் நயம்பட குறிப்பிட்டிருப்பது விஷேடமாக காணப்படுகின்றது. இதனை நீங்களே வாசித்து அந்த சிறந்த அநுபவத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்.

'நாளை' என்ற  ஆரம்பத்தோடு தொடங்கும்  இத்தொகுப்பின் முதற்கவிதைநாளை

காலப்புத்தகத்தின்
ஒரு
புதிய பக்கம்... என தொடங்கி
 .......................................................
நாளைக்கே
தெரியாதுநாளை

என்னநடக்குமென்று"       என முடிகின்றது. நாளைய நாளைப்பற்றிய அழகான கனவை கொண்டிருக்கும் இக்கவியானது 'நாளை; என்பதனை நம்பிக்கையின் நதிமூலம் என குறிப்பிட்டிருப்பது மாசுப்படாத அந்நாளைப்பற்றி எங்கள் மனமும்கூட ஒரு நீண்ட எதிர்பார்ப்பினை பெறுகின்றது. அதுபோலஇயற்கையை தொட்டுப்பேசாத கவிஞர்கள் இல்லையெனலாம் அந்த வகையில் கவிஞர் பர்வீன் அவர்களும் இதில் விதிவிலக்கல்ல ஆனால் இவரின் இயற்கை கவிதைகளில் ஒரு விஷேடத்தன்மை காணப்படுவதை அவதானிக்கலாம். வெறும் இயற்கை ரசிப்போடு நின்றுவிடாமல் அதற்குள் சமூகத்தை பிரதிபலித்திருப்பதே அவ்விடயமாகும். இதனை 'நிலவு இராட்சியம்', 'இரவுத்திருடன்', 'பட்டாம்பூச்சியின் பறத்தல்பற்றி','மழைகொறித்த பூமி' போன்ற கவிதைகளினூடாக காணலாம்.

'எதிர்த்த சில நட்சத்திரங்கள்
எரி
நட்சத்திரமாய்உருமாரிப்போக‌......
ஏக்கம்
நிறைந்த மனதுடன்
சில
நட்சத்திரங்கள்பேசிக்கொண்டன

இன்னொருநிலவின் வருகைபற்றி..... என்ற வரிகளில் அரசியல்பற்றிய ஆதங்கங்களை இயற்கை ஆதாரத்தோடு வெளிப்படுத்தியிருப்பது கவிஞரின் கவித்துவத்தை ஆழம்பார்த்திருக்கின்றது எனலாம்.

காதலை விடுத்து கவிஞர்களின் பேனை,கவிவடித்துவிடுவது என்பது அரிதிலும் அரிது ஏன் இல்லையென்றே சொல்லலாம் அந்தளவுக்கு உலகத்தை சூழ்ந்திருக்கும் இக்காதல் இன்பமாகவோ துன்பமாகவோ எவ்வகையிலேனும் இணைந்தே இருக்கின்றது அந்த மனவுணர்வுகளை மிகப்பக்குவமாக செதுக்கிவிட்டிருக்கின்றார் கவிஞர்.

எல்லை கடந்தஎனது ஞானவெளியில்நீ இல்லாதஇந்தப்பொழுதுகள்மிக மிக இனிமையானவை ... 

என்ற வரிகள் 'எல்லை கடந்த ஞானம்' எனும் கவிதையில் இடம்பெற்றுள்ளது. காதலை கடந்துவரும் எமது வாழ்க்கை அத்தியாயத்தில் அதன் வடுக்களும் வலிகளும் மட்டும் எம்மோடு ஒட்டிக்கொண்டே வந்துவிடுகின்றது. ஞாபகங்களை விளக்கிவைக்க எத்தனித்தாலும் அதிலிருந்து விலகிடமுடியாத நிர்ப்பந்தத்தில் ஒவ்வொரு மனங்களும் தவிப்பதை இக்கவிதையில் துல்லியமாக வரிகளாக்கியுள்ளார். அதனை,

நமக்கானஇடைவெளிகள் என்னமோஅதிகம்தான் இருந்தும்இன்னும் துரத்துகின்றதுஉனது ஞாபகம்...'  என்ற வரிகளில் அவதானிக்கலாம்.

இதுபோன்று 'நீ பற்றிய நினைவுகள்', கனவுக்கோடுகள், ரயில் சிநேகம், பழைய டயரி, இந்த நாள் எப்பவரும், நீ இல்லாத சாயங்காலம், போன்ற கவிதைகளையும் சுட்டிக்காட்டலாம். குறிப்பாக 'சம்மதமில்லாத மெளனங்கள்' என்ற தலைப்பில்,

எனதான விட்டுக்கொடுப்புக்களைஉன் பிழையான மொழிபெயர்ப்புக்கள்எத்தனை நாட்கள்என் தூக்கத்தை விழுங்கிஉள்ளது தெரியுமா?

என்ற வரிகள் புரிதல் இல்லாத பிரிவுகளின் வேதனைகளோடும் ஏனைய கவிதைகளில் அன்பும் நேசமும் ஆறாய்ப்பெருகும் அழகிய காதல் வரிகளையும் படைத்திருப்பது வாசிப்பார்வத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றது.

உண்மையில் கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டிருப்பதைப்போல இவரின் கவிதைகளை வாசிக்கும்போது கவிஞர் வைரமுத்துவின் தாக்கம் மிகத்தெளிவாகத்தெரிகின்றது. வாசகர்களுக்கு சிரமமில்லாத மொழிநடை, நூலுக்கு வலுசேர்த்திருப்பதோடு கவிதைகளையும் வளப்படுத்தியுள்ளது

முன்பு கூறியதுபோல சமூகத்தின் பல தளங்களில்நின்று பாடியுள்ள இவரது கவிதைகளில் அழுத்தமான வரிகளை கொண்டு ஆற்றாமைகளையும் ஆளுமைகளையும் விதைத்திருப்பது வேலைக்காக வெளிநாடு செல்பவர்களின் மனநிலை, தேசத்தில் நிகழ்ந்த காயங்கள் கண்ணீராறுகள் அதன் வலிகள் வடுக்கள், முட்டுக்கட்டைபோடும் மூடநம்பிக்கைகள்,நட்பு, பிரிவு ஒரு தந்தையின் மனநிலை என நீள்கின்றது இதனை தொட்டுக்காட்டி செல்வதற்கும் தொடுத்துவிட்டு செல்வதற்கும் இந்நூலில் ஒருசிலவற்றை பொறுக்கியெடுக்க முடியாமல் திகைக்கின்றது என் ரசனைக்கண்கள் ஏனெனில் அத்தனை கவிதைகளும் அத்தனை சுவைமிகுந்தவை.

வாசகனை சந்தத்தோடும் சந்திக்கின்றது 'பாவியாகிக்கிடக்கின்றேன்' 'அழுது வடிக்கிறோம்' போன்ற கவிதைகள். என்னதான் ஒரு விடயம் பிறரிடமிருந்து எம்மை பாதித்திருந்தாலும் அவ்விடயம் எம்மை பாதிக்கும்போதுதான் அதன் உண்மையான வலியையும் அந்த உணர்வினையும் எம்மால் விளங்கிக்கொள்ளமுடியும் அதனை கவிஞரின் 'மரியம் என்ற என் மகளுக்கு' என்ற கவிதையில் இனங்காணலாம்.

'மரியம் என் உயிரே
உனக்கு
நன்றியம்மா
பெற்றோரின்
பெறுமதியை
உணர்த்தியமைக்கு
....

என்ற வரிகள் தான் தந்தையாகிய பிறகுதான் தன்னுடைய பெற்றாரின் மகத்துவத்தை தன்னால் நன்றாக உணரமுடிகின்றது என்பதனை தெளிவுபடுத்துகின்றார் இது எல்லாவிதமான அநுபவங்களுக்கும் பொறுத்தமான உதாரணமாக கொள்ளலாம்.

இத்தொகுப்பின் சில கவிதைகளில் 'நிர்வாணம் கலைந்த இரவு', 'எனது நிர்வாண மனத்தின்', இந்த நிர்வாண வெளியில்' என 'நிர்வாணம்' என்ற வார்த்தையை அடிக்கடி பிரயோகித்திருப்பது கவிஞர், சில உண்மைகளை உயிரோட்டமாக காட்டுவதற்கும் வெளிப்படையாக தெரிவிப்பதற்கும் முயற்சித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் ஒரே வார்த்தையை வாசிப்பது சுவாரஸ்யத்தை குறைத்துவிடுகின்றது.

நாம் சந்திக்கின்ற மனிதர்களின் குணவியல்புகள் எம் வாழ்வியலிலும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும் இதனை எம்மால் தவிர்த்திடவும் முடிவதில்லை அது நல்ல விளைவாகவும் இருக்கலாம் தீய விளைவாகவும் இருக்கலாம் அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தினை கவிஞரின் 'வாழ்க்கைக்குறிப்புக்கள்' எனும் கவிதையில் துரோகம்,வஞ்சனை, ஏமாற்றங்களுக்கெதிரான குரலாகவும் வேதனை ஒலியாகவும் வெளிப்பட்டிருப்பது எமது வாழ்வில் சந்தித்த ஒர் அநுபவமாக எல்லோராலும் உணரமுடியும்.

இவ்வாறு எல்லா கவிதைகளையும் வாழ்வியல் அநுபவத்தினூடாக சமூக அவலங்களோடு அரசியலையும் மூடத்தனங்களையும் வெளிப்படுத்தியுள்ள கவிஞர்  மிகத்தரமான ஒரு கவிதைத்தொகுப்பினை தமிழுலகுக்கு தந்திருப்பது வரவேற்கக்கூடிய விடயமாகும். கவியார்வம் சமூக ஆர்வமுள்ளவர்கள் மட்டுமன்றி வாசிப்பு பிரியர்கள் அனைவருக்கும் மிகப்பெறுமதியான கவிதைகளடங்கிய 'மனவெளியின் பிரதி'யை தந்திருக்கும் கவிஞர் நாச்சியா தீவு பர்வீன் அவர்களை வாழ்த்துவதோடு ஒரு நல்ல நூலை வாசிக்கவேண்டும் என நினைக்கும் உங்களுக்கும் மனவெளியின் பிரதியை பரிந்துரை செய்து கவிஞருக்கு மனப்பூர்வமான வாழ்த்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இதுபோல நல்ல விளைவினை ஏற்படுத்தக்கூடிய இன்னும் பல தொகுப்புக்களை கவிஞரிடமிருந்து எதிர்ப்பார்க்கின்றேன்.

 

armfarveen@gmail.com