நூல் :  பாம்புகள் குளிக்கும் நதி
நூல் ஆசிரியர்
பொத்துவில் அஸ்மின்
நூல் ஆய்வு:
 
உடுவை எஸ் தில்லைநடராஜா

பொத்துவில் அஸ்மினின் கவித்துவமும் கருத்தாழமும் பொதிந்த கவிதைத்தொகுப்பு  “பாம்புகள் குளிக்கும் நதி”

டந்த பத்தாண்டு காலப்பகுதியில் பொத்துவில் அஸ்மின் எழுதி பல்வேறு பத்திரிகைகள் சஞ்சிகைகள் வானொலி தொலைக்காட்சி மற்றும் இணையத் தளங்களில் இடம் பிடித்துக்கொண்ட நாற்பத்தொரு கவிதைகளும் கவிப் பேரரசு வைரமுத்து வித்தக கவிஞர் பா.விஜய்  ஆகியோரின் வாழ்த்துரைகளும் பல கவிஞர்கள் கலைஞர்களின் ரசனைக்குறிப்புகளும் அஸ்மினின் ஆக்கங்களுக்கு  அழகூட்டும் அணிகலன்களாக இந்நூலில் பதிவாகியுள்ளது

சிந்தனையை தூண்டும் வித்தியாசமான முகப்புப்படத்துடன்அமீரகத்தின் பிளின்ட்  பதிப்பகம்  இந்நூலை வெகு நேர்த்தியாகவும் அடக்கமாவும் அமைத்து வெளியிட்டுள்ளது 

புத்தகத்தை திறந்ததும்  பார்வை மெதுவாக  வரிகளில் வழுக்கிச்சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்ட  தன்பால் கவர்ந்திழுக்கும் எழுத்துருவும் தொடர்ந்து வாசிக்க வசதியான வரிகளின் அமைப்பும் அழகாக இருக்கிறது

பாம்புகள் குளிக்கும் நதி தொகுப்பில் மரபிலும் இசைபாடல் வடிவிலும் புதுக்கவிதை நடையிலும் அஸ்மின் யாத்துள்ள கவிதைகளில் ஒரு தேர்ந்த கவிஞனுக்குரிய திறன் தெரிகிறது என கவிஞர் வைரமுத்துவும் –‘யதார்த்த உணர்வுகளை ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் சொல்லிச்சொக்க வைத்துள்ளார் என வித்தக கவிஞர் பா. விஜய்யும் பாராட்டியுள்ளார்கள்

கவிதைகளுக்கு வைக்கப்பட்ட தலைப்புகளும் படிக்கத்தான் வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது . அவற்றுள் சில :-

கும்பிட்ட கைகளால் குண்டு வைப்போம்
ஒரு
ராத்திரியும் சில ரகசியங்களும்
விருது பெறும் எருதுகள்
மாட்டுக்கு
மாலை போடு
காசிருந்தால்
வாங்கிடலாம் பட்டம்
சறுக்
! சறுக் ! சறுக் !

கிராமத்தின் புழுதியைக் குடித்து வளர்பவர்களுக்கு கவிதை நன்றாக வரும்’ என தன் பின் புலத்தைக் குறிப்பிடும் கவிஞன் மனித வாழ்கையின் அழகை யையும்  அவலத்தையும்  கவிதைகளில் அற்புதமாக சித்தரித்துள்ளார்.

இடையறாத வாசிப்பு தன்னை வளப்படுத்தியுள்ளதாக கூறும் இவர்  எட்ட யபுரத்துக் கவிஞன் தொடக்கம் எங்கள் தேசத்தின் மூத்த கவிஞர்கள் வரை மரபு தெரியாமல் புதுமைக்குள் புகுந்தவர்கள் அல்லர் என்று சொல்லி தன்னைப் பொறுத்த வரையில் மரபு என்பது கவிதையின் ஆணி வேர் ...புதுக்கவிதை என்பது அதில் தோன்றும் பூக்கள்தான் . ஆணி வேர் இல்லாமல் பூக்கள் என்றும்’ புகழ் பெறப்போவதில்லை எனவும்   ‘அதற்காக விழுதுகள் பல பரப்பி விருட்ஷமாய் வியாபித்து விரிந்திருக்கும் தமிழ் மொழியின் மரபை வெறும் விருதுகளுக்காக விட்டுக்கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை’ எனவும் எழுதியிருப்பது   மனம் கொள்ளத்தக்கது

பாம்புகள் குளிக்கும் நதி’ என்னும் தலைப்புக் கவிதையில் ---   ‘அன்பைக் கொடுப்பதற்கு அழகிய கைகள் தேவையில்லை’ என்றும் .’பாம்புகள் குளிப்ப தனால் நதிநீர் விஷமாய்ப் போனதில்லை’ என்றும் சொல்லியவை சொற் களை சுருக்கமாக கையாளும் நுட்பமும் விடயத்தை  சொல்ல வேண்டிய வாறு சுலபமாக விளக்குவதும் வாசிப்போருக்கு சுகமாகத்தான் இருக்கிறது.

பாசம் நேசம் பந்தம் எல்லாம் பழைய பொய்யப்பா வேசம் போடும் மனிதர் கூட்டம் விளங்கிக்கொள்ளப்பா’ என பாடுவது அவரது அனுபவமாகவும் ஏனையோருக்கு அறிவுறுத்தலாகவும் இருக்கலாம் .,

சுவையான காதல் பொய்யானால் தோன்றும் வலியைகாதலிக்கும் வேளையில் கனவிலும் தேன் கொட்டும்அத்தனையும் கனவானால் அடிநெஞ்சில் தேள் கொட்டும் என்ற கவிதை  அற்புதமாக அமைந்துள்ளது

தண்ணீரை வாசிப்போம்  என்ற கவிதையில் ‘எதிர் காலத்தில் தங்கத்தை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டி வரலாம்’ எனவும்-‘நாளை எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்’ எனவும்  எச்சரிக்கிறார் ... இந்தியாவில் காவேரி இலங்கையில் மாவிலாறு தொடர்பான செய்திகளை படித்ததும் நினைவில் வந்து போகிறது

சுற்றுலா வரும் உல்லாசப்பிரையாணிகளின் சொர்க்கம் அறுகம்பை கவிஞனின் பொத்துவிலில் அமைந்துள்ளது .அதனை காடு மலை ஆறு வயல் கடலும் சூழக் கட்டழகுக் குமரியெனச்சிரிக்கும்  ஊரில் அறுகம்பையாள வளின் அழகைக் காண அகிலமெல்லாம் இருந்தென்றும் ஆட்கள் கூடும் எனப் பாடி மகிழ்கின்றார் 

இன்னொரு கவிதையில் காணும் -துணிவை உனக்குள் வளர்த்துப் பாரு’ .....’பயந்து வாயைப் பொத்தி இருந்தால் பழைய சோறும் கிடையாது ‘—‘உறுதி நெஞ்சில் இருந்தால் உந்தன் உயர்வைத் தடுக்க முடியாது’ வரிகள் இளைஞருக்கு விழிப்பூட்டுவதாகவும் வீரமூட்டுவதாகவும் உள்ளது

ஆழிப்பேரலை ‘சுனாமி’ ஏற்படுத்திய அனர்த்தங்களை பாடும்போது-   கடவுளில்லை என்ற வாயும் கடவுள் நாமம் கூறின காடுகரை எங்கும் பிணங்கள் அழுகிப் புழுத்து நாறின- நாடு எட்டாம் நரகம் போன்று இமைக்கும் பொழுதில் மாறினஎன எழுதியவை அருமை

அழுவதற்காக உதடுகளைத் திறக்க முயன்றேன் ஆமைபூட்டுக் கொண்டு யாரோ பூட்டியிருக்கின்றார்கள்’ என பாடியவன், காதல் கல்யாணத்தையும் கவிதையில் காட்டுகின்றான் –“தையிலே விழியில் தைத்த தையலே”  என காதலை ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருபடி முன்னேறி  மார்கழியில் மாலை மாற்றிட அழைக்கும் அஸ்மினையும் ஒரு கவிதை யில் காணலாம்

இளைஞான அவனது பார்வையில் ஆயுதங்களும் யுத்தமும் வேறு படுகின்றது இப்படிஅழகிய ஆட்லெறி’  என்றொரு கவிதை அதில் உன் விழிகள் வீசும் கொத்துக் குண்டுகள்” .....உன் மௌனக் கிளைமோர்”.. ...”உன் அழகின் ஆட்லெறித் தாக்குதாலால்... என ஆயுதபட்டியலால் விரிகிறது கவி வரிகள்

 ஒரு கவிதையில் மனிதனோ இறந்தான்- மிருகமாய் இருந்தான் என சிந்திக்க வைத்து மறு கவிதையில் - மற்றவரின் கால் பிடித்து மண்டியிட்டு மலம் தின்னும் மனசுக்கு மருந்து செய்வோம்  கற்பனையில் யதார்த்தத்தை கலந்து நல்ல கவிதைகளால் உலகுக்கே விருந்து செய்வோம்’  என செய்யபோவதையும் கவிதையாகச் சொல்லும் அழகு அலாதியானது

தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்த்   தலையிடி தான் எங்களுக்குப் பரிசு ....

அழுக்குதான் அன்று  அரியணையில் இருந்ததால் சாணமே அங்கு சந்தனமாயிருந்தது ...

நரிகளும் நாய்களுமே நாற்காலியை நிறைத்திருந்தது  எதுமே தெரியாத எருமைகளுக்கு பல்லிளிப்புடன் கூடிய படங்களும் விளம்பரமாய் நாளை வரலாம் ...

என வகை வகையான பாடல்கள்  ஒவ்வொன்றிலும் அவரின் பக்குவ முதிர்ச்சி பளிச்சிட்டு “அபாரம்! அருமை !! என்ற பாராட்டைப் பெறுகின்றது

நான் முந்தி நீ முந்தி  என வரும் சொற்கள் ...ஓசை நயம் தருவனவாகவும் பொருள் உள்ளதாகவும் இருப்பது தனிச்சிறப்பு ...உதாரணமாக மந்தி  மந்திரியாகும் மாமரம் வாக்களிக்கும் எலி எம்பியாகும்  எருமை பிரதமராகும் என்பதையும் -கூட இருந்தே குழி பறிப்போம் கும்பிட்ட கைகளால் குண்டு வைப்போம்  கொஞ்சிப் பேசியே கொள்ளி வைப்போம்

என்பதையும் குறிப்பிடலாம்

சில சொற்களை நுட்பமாக விரசம் தோன்றாத வகையில் கையாண்டு கவிதையாகியுள்ளார்-அவற்றில் சில

மாரழகி மனம் திறந்து பேசு   ...கனிமொழியே காதலுடன் சேரு   நிதம் கனிந்துடலால் பெற்றிடுவாய் பேறு
எங்கோ
மலர்ந்திருந்து எனக்குள்ளே  மணப்பவளே..
நான்
தின்ன நீ தின்ன நம்மிதழ தேன் தின்ன
விழிகளில்
மீன்புடிச்சி விரல்களில் சுளுகெடுத்து ராத்திரியில் நாம் செய்த ரகசியங்கள் .....

கவிதைகளை எழுதவேண்டும் என்பதற்காக கழிவுகளை படைக்க விரும்பாத கவிஞனாக தன்னை அடையாளப் படுத்தும் அவன்நான் நனைந்தாலும் உனக்கு குடை பிடிப்பேன்’ ...என  தொடர்ந்துநான் அழுதாலும் உன்னை சிரிக்க வைப்பேன்’ என்பதும்  ரசிக்கும்படி உள்ளது

கவிஞனின் பஸ் வண்டிப் பயணம் சிரிப்பு எச்சரிக்கையாக இருந்தாலும் முடிவில் காசு போனாலும் கவிதை கிடைத்த திருப்தியை அடைவதைக் காட்டுகின்றது

பஸ் வண்டியில் ஏறும் போது அதிக பணம் நிறைந்த money purse சை கன்னிப் பெண்ணின் மார்பினைபோல் விம்மி நிற்கும் என வர்ணித்து ,பஸ்ஸில் கண்ட பெண்ணை கண்ணருகில் காந்தம் பூட்டிநின்ற பெண்ணோ என்று எண்ணி

..பெண்ணவள் சுவருலுள்ள  பல்லி போன்று பெரு மூச்சு  விட்டவாறு ஓட்டிக்கொண்டேன் என்று மேலும்

என்ன சுகம் ‘திக் திக் திக் ‘நெஞ்சடிக்க குருதிஎன்கும் எரிமலையின் குழம்பு பொங்கி ஓடலாச்சு என்பதும், பின்

கன்னம் வீங்கும் என்றுணர்ந்து கவலையோடு காற்று போக இடம் கொடுத்து தள்ளி நின்றேன் என கவிஞன் தள்ளி நின்றாலும் அவள் விடுவதாக இல்லை

ஏக்கமுடன் சலனமற்ற அந்தப் பெண்ணோ ஏக்கமுடன் பார்வைகளால் ...இப்படியே பணத்தை பறி  கொடுத்தாலும் கவிதை யொன்றை வாங்கிக் கொண்டு  வீடு வந்த கதையும் கவிதையாகிறது

நிகழ்கால பல்வேறு கள நிகழ்வுகளை காட்டும்  ஒவ்வொரு கவிதையும் இன்பம் தரும் ஒவ்வொரு வண்ணச்சித்திரம்.

நூலின் பெயர்: பாம்புகள் குளிக்கும் நதி
நூலாசிரியர்: பொத்துவில் அஸ்மின்

முகவரி: மத்திய வீதி பொத்துவில்-07,இலங்கை
தொலைபேசி இல: 0771600795
மின்னஞ்சல்:vtvasmin@gmail.com

வெளியீடு: பிளின்ட் பதிப்பகம். அமீரகம்

விலை:Rs.500