நூல் : திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை
நூல்
ஆசிரியர் :
 தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
நூல் அறிமுகம்:
கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல

ச்.எப். ரிஸ்னா வளர்ந்து வரும் ஓர் இளம் படைப்பாளி. ஆனாலும் வளர்ந்த, முதிர்ச்சி அடைந்த படைப்பாளிகளிடம் காணப்படக்கூடிய அறிவு, எதனையும் அணுகி ஆராயும் தன்மை, வாழ்க்கை அனுபவங்கள், அமைதியாகச் சிந்தித்து உணரும் பண்புகள் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு சிறந்த பெண் படைப்பாளி என்று குறிப்பிட்டுச் சொல்லலாம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகுக்கு நன்கு பரிச்சயமானவர். ஆரம்பத்தில் கவிதைகளுடன் கைகோர்த்துக் கொண்ட இவர் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியை இலக்கிய உலகுக்குத் தந்தார். பின்னர் அதனைவிடவும் சற்று ஒருபடி மேலேறி கைவறை என்ற சிறுகதைத் தொகுதியைத் தந்தார். நாளுக்கு நாள் வெற்றிப் படிகளில் தடம் பதித்து சிறுவர் உலகத்தையும் எட்டிப் பார்க்கத் தொடங்கினார். அதன் விளைவு காக்காக் குளிப்பு, வீட்டினுள் வெளிச்சம், இதோ பஞ்சுக் காய், மரத்தில் முள்ளங்கி போன்ற சிறுவர் இலக்கிய நூல்களையும் அவரால் தர முடிந்தது. திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற இந்த நூலானது ரிஸ்னாவின் ஏழாவது நூல் வெளியீடாகும்.

ரிஸ்னா, ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தலை தேர்தல் தொகுதியில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று படைப்புலகுக்குள் நுழைந்தவர். தற்பொழுது கொழும்பில் பணிபுரிவதுடன் இலக்கிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார். 2004 ஆம் ஆண்டு காத்திருப்பு என்ற கவிதையை பத்திரிகையில் எழுதியதன் மூலம் தனக்கு எதிர்காலத்தில் இலக்கிய உலகில் ஓர் இடம் கிடைக்கும் என்று காத்திருந்தார். வழி பார்த்திருந்தார். அவரது காத்திருப்பு வீணாகவில்லை. இன்று பெண் படைப்பாளிகள் வரிசையில் தனக்கென்ற ஓர் இடத்தை பிடித்து நிற்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. அத்துடன் பூங்காவனம் இலக்கிய வட்டத்தின் உப தலைவராகவும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் துணையாசிரிiயாகவும் இருந்து செயல்படுகின்றார்.

இவர் எழுதியிருக்கக் கூடிய பத்திரிகை, சஞ்சிகைகளைப் பார்க்கும் போது அவர் எதில் எழுதவில்லை? என்ற கேள்வியைக் கேட்கத் தோணுகிறது. ஏனென்றால் இலங்கையில் வெளிவரும் அத்தனை முன்னணிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அவர் எழுதியுள்ளார். எழுதிவருகிறார். அது மாத்திரமா? வானொலியிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மட்டுமல்லாமல் வலைப் பூக்களிலும் தனது திறமைகளைக் காட்டி வருகின்றார்.

எச்.எப். ரிஸ்னா கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் என்பவற்றோடு விமர்சனத் துறையிலும் ஈடுபட்டிருப்பதால் இலங்கையின் பத்திரிகைகள், சஞ்சிகைகள், பல்வேறு வலைத்தளங்கள் போன்றவற்றில் தான் எழுதிய நூல் விமர்சனங்களை எல்லாம் ஒன்றாகத் திரட்டி, அவற்றைத் தொகுத்து திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற பெயரில் ஒரு கணதியான நூலாகத் தந்துள்ளார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள நூல் விமர்சனங்களை கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், ஏனையவை என ஆறு பகுதிகளாக வகுத்து ஒவ்வொரு தலைப்பின் கீழும், அவற்றுக்குரிய நூல் தலைப்பு, விமர்சனப் பார்வை, இறுதியில் நூலாசிரியர் பற்றிய குறிப்புக்களைத் தந்திருக்கிறார்.

இத்தொகுப்பில் 40 நூல்களைப் பற்றிய குறிப்புக்களை விமர்சனங்களாகத் தந்திருக்கிறார். 248 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பிற்கு இலக்கிய உலகின் தமிழ், ஆங்கில இலக்கியவாதிகள் மத்தியில் பிரபல்யம் பெற்ற பவளவிழாக் கண்ட பல்துறைக் கலைஞர், திறனாய்வாளரும் விமர்சகருமான திரு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் இந்த நூலைப்பற்றி சிறந்ததொரு அணிந்துரையைத் தந்திருக்கிறார். அதிலே அவர் இலக்கியத் திறனாய்வைப் பற்றிக் குறிப்பிடும் போது டுவைநசயசல ளுவரனநைள அல்லது டுவைநசயசல ஊசவைளைஅள என்ற பெரும் துறைக்குள் வரக்கூடிய இலக்கிய வகைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். பழைய இலக்கியங்களுக்கான உரையாசிரியரின் கருத்துக்களும் ஒரு வகையில் விமர்சனம்தான் என்றும், மொடனிஸம் எனப்படும் மேனாட்டு இலக்கியப் போக்கினால் தமிழுக்கு வந்த புதிய இலக்கிய வடிவங்கiளான புனைகதைகள், கவிதைகள், நாடகங்கள் பற்றிய உள்ளார்ந்த, வெளிப்படையான திறனாய்வுகள் யாவும் அதன் கீழ் வருகின்றது என்று சொல்லியிருக்கிறார்

அதே போன்று விமர்சனம் என்ற சொற்பிரயோகம், ஒன்றைப் பற்றிய கண்டனப் பார்வையுடன் பிழைகளை மாத்திரம் முதன்மைப்படுத்தி ஒரு படைப்பை அணுகும் முறையைக் குறிக்கின்றது. அதே போல திறனாய்வாளர் பெரும்பாலும் வாசகருக்கு விளங்கப்படுத்தும் முறையில் தனது இரசனையைத் தெரிவிப்பார்கள் என்ற ஓர் அழகான விளக்கத்தினையும் அவர் தனது அணிந்துரையிலே தந்திருக்கிறார். அந்த வகையில் எச்.எப். ரிஸ்னாவும் தனது கருத்துக்களை வாசகர்களுடன் பரிமாறிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே வெலிகம ரிம்ஸா முஹம்மத் இத்தகையதொரு முயற்சியை மேற்கொண்டு 'கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை" என்ற திறனாய்வுத் தொகுப்பொன்றை தந்திருக்கிறார் என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துவது பொருத்தம் என்று எண்ணுகின்றேன்

திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற இந்த நூலில் கவிதை நூல்கள் 08, சிறுகதை நூல்கள் 12, நாவல்கள் 05, சிறுவர் இலக்கியம் கவிதை, பாடல்கள், சிறுவர் கதைகள், ஏனையவை 15  என மொத்தம் 40 நூல்களுக்கான திறனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் பிரபல எழுத்தாளர்கள், படைப்பாளிகளின் நூல்களும், வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகள் எனப்பலரது நூல்கள் பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன. இத்தகைய முயற்சியினால் பழம்பெரும் எழுத்தாளர்கள், வளர்ந்துவரும் படைப்பாளிகளின் விபரங்களையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது

இந்த நூலாசிரியர் இதுவரை 300க்கும் மேற்பட்ட கவிதைகள், 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 60க்கும் மேற்பட்ட நூல் விமர்சனங்களையும் எழுதியுள்ளார். தான் இதுவரை எழுதிய நூல் விமர்சனங்களில் 40 விமர்சனங்களையே இந்த நூலில் சேர்த்திருக்கிறார். இந்த நூலை கொடகே நிறுவனம் பதிப்பித்திருக்கிறார்கள்

இந்த நூலில் பழைய புதிய படைப்பாளிகளின் 40 நூல்கள் இடம் பிடித்துள்ளன. அவற்றில் கவிதை நூல்கள் 08 க்கான விமர்சனங்கள் தரப்பட்டுள்ளன. வெலிகம ரிம்ஸா முஹம்மதின் தென்றலின் வேகம், மூதூர் முகைதீனின் ஒரு காலம் இருந்தது, வே. துஷ்யந்தனின் வெறிச்சோடும் மனங்கள், இனியவன் இஸாருதீனின் மழை, நதி, கடல், செல்லிதாசன் என்ற பெயருக்குள் மறைந்திருக்கும் கவிஞர் பேரம்பலம் கனகரத்தினத்தின் செம்மாதுளம் பூ, கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்ற வரலாற்று நாயகனின் புதல்வி சுமதி குகதாசனின் தளிர்களின் சுமைகள், மொழித்துறை விரிவுரையாளரும், முதன்மை ஆசிரியரும், இலங்கை வானொலி ஒலிபரப்பாளருமான முல்லை முஸ்ரிபாவின் அவாவுறும் நிலம், கவிஞர் பி.ரி. அஸீஸின் தாலாட்டுப் பாடல்கள் என அவை பதியப்பட்டுள்ளன.

அதேபோன்று சிறுகதைகள் என்ற வகையில் 12 நூல்களைப் பற்றிய விமர்சனங்கள் காணப்படுகின்றன. அவற்றை ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.பி.எம். நிஸ்வான், காத்தான்குடி நஸீலா, இதயராசன், கார்த்திகாயினி சுபேஸ், பட்டதாரி ஆசிரியையாகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற ஸக்கியா சித்தீக் பரீத், கிண்ணியா .எம்.எம். அலி, வீ. ஜீவகுமாரன், பவானி சிவகுமாரன், தம்பு சிவா, பவானி தேவதாஸ், அஷ்ரப் ஷிஹாப்தீன் ஆகியோரின் நூல்கள் பற்றிய பதிவைக் காண முடிகின்றது.

இனி நூலில் இடம்பெற்றுள்ள நாவல்களை கலைப் பட்டதாரி ஆசிரியை எம்.. சுமைரா, ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி சுலைமா சமி இக்பால், திருமதி .சி. ஜரீனா முஸ்தபா, ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளரும், சிரேஷ்ட எழுத்தாளருமான திக்வல்லை கமால், திருமதி சுமைரா அன்வர் ஆகியோரின் நூல்கள் பற்றிய இரசனையை அவதானிக்கலாம்

சிறுவர் இலக்கியப் பகுதியில் ஆசிரிய ஆலோசகர் வெளிமடை ரபீக், பாடசாலை அதிபர் செ. ஞானராசா, கிண்ணியா பாயிஸா அலி, பிரதி அதிபர் சுகிலா ஞானராசா, கிண்ணியா ஜெனீரா தௌபீக் கைருள் அமான், கலாபூஷணம் கே. விஜயன், திருமதி. .சி. ஜரீனா முஸ்தபா, ஆகியோரின் நூல்களுடன் எனது குள்ளன் என்ற சிறுவர் கதையும் விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்து ஏனையவை என்ற தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்படாத சில நூல்கள் காணப்படுகின்றன. இதில் சூசை எட்வேட்டின் கருத்துக் கலசம், திருமதி ஸக்கியா சித்தீக் பரீதின் முதிசம், கே.எஸ். சிவகுமாரனின் காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை, கே.எஸ். சிவகுமாரனின் ஏடுகளில் திறனாய்வு/ மதிப்பீடுகள் சில, தம்பு சிவாவின் முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் போன்ற நூல்கள் பற்றிய பார்வையும் இடம்பெற்றுள்ளது

மொத்தத்தில் ரிஸ்னாவின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இந்த நூலின் மூலம் தெரிந்த, தெரியாத எழுத்தாளர்களையும், அவர் தம் படைப்புக்களையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய கனதியான நூல்களை எதிர்காலத்தில் இன்னும் இன்னும் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!!!.
 

நூல் - திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை
நூல்
வகை - விமர்சனம்
நூலாசிரியர்
- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
தொலைபேசி
- 0775009222
வெளியீடு
- கொடகே பதிப்பகம்
விலை
- 600 ரூபாய்