நூல் : மரப்பாச்சி பொம்மைகள் !
நூல்
ஆசிரியர் :
 கவிஞர் தியாக இரமேஷ்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா. இரவி

வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு,
சேலம்-636 015.
  விலை : ரூ. 75  ramesh.vdm@gmail.com

*****

நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன.  வாசகன் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது.  பாராட்டுக்கள்.  நூலாசிரியர் கவிஞர் தியாக. இரமேஷ் அவர்களின் மூன்றாவது நூல் இது.  முதல் நூல் - அப்படியே இருந்திருக்கலாம்.  இரண்டாவது நூல் - நினைவுப் படுக்கைகள்.  சிங்கப்பூரின் கவிமாலை அமைப்பின் துணைச்செயலர். பல்வேறு இதழ்களில் எழுதிய கவிதையை நூலாக்கி உள்ளார்.  நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது.  மரப்பாச்சிப் பொம்மைகள் - தமிழக குழந்தைகளின் வாழ்வில், நினைவில், கலந்து விட்டவை, மறக்க முடியாதவை.  முகநூல், வலைப்பூ என நவீன ஊடகங்களிலும் தடம் பதித்து வருபவர். தமிழருக்குப் பெருமைகள் சேர்த்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை,  சிறந்த கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட பலரின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றன.

ஞாயிறு என்றால் தூங்கி வழியும் பலருக்கு சுறுசுறுப்பு விதைக்கும் விதமான புதுக்கவிதை நன்று.

   ஞாயிறு தூங்கட்டும்!

       நமக்கு பல காத்திருக்கு தோழா!
       நாளும் கிழமையும் நமக்கேது
       ஞாயிறு தூங்கட்டும்
       நீ எழுவாய் தோழா!  நீ எழுவாய்!

உலகப் பொதுமறையான ஒப்பற்ற திருக்குறள் பற்றி வடித்த கவிதை மிக நன்று.

       அறம் பொருள் இன்பம் மூன்றிலும்
              சரம் சரமாய் கருத்துமாலைகளைத் தொங்கவிட்டு
       மனித வாழ்வின் உச்சி முதல் உள்ளங்கால் வரை
              ஒவ்வொரு தளமாய் நின்று உண்மையுரைத்த
       உலகம் போற்றும் உத்தமக் குறளே தேசிய நூல் .... மனித உயர்வுக்கு
              பலகுரல் தேவையில்லை ஒரு குறள் போதும்.

நூலின் தலைப்பில் அமைந்த கவிதை வித்தியாசமாக உள்ளது.

   மரப்பாச்சிப் பொம்மைகள்.

       மரப்பாச்சிப் பொம்மைகள் மௌனம் கலைக்கின்றன
       தெள்ளத் தெளிவாய் தேர்தல் காலத்தில்
       அப்போது விளையாடியவர்கள் வீழ்கிறார்கள்
       வீழ்ந்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள்
       அய்ந்தாண்டுக்க்கு ஒரு முறை
       விடாமல் தொடரும் விளையாட்டில்
       மரப்பாச்சிப் பொம்மைகள்
       மறக்காமல் உண்(மை) பேசுகின்றன
       இது மரப்பாச்சி பொம்மைகளின் மை விளையாட்டு.

சிலர் புதுக்கவிதை என்ற பெயரில் புரியாத புதிராக எழுதுவதும் உண்டு.  அவர் எழுதிய கவிதைக்கு அவர் தெளிவுரை எழுதினால் மட்டுமே மற்றவருக்குப் புரியும் என்ற நிலையில் பூடகமாக நவீன கவிதை எழுதுவது உண்டு.  ஆனால் நூலாசிரியர் கவிஞர் தியாக. இரமேஷ் அவர்கள் எழுதியுள்ள புதுக்கவிதைகள், படிக்கும் அனைவருக்கும் எளிதில் புரியும் விதத்தில் இருப்பது சிறப்பு.

   மூடிய கதவுகள்

       மூடிய கதவை மோதியும் திறக்கலாம், மௌனித்தும் திறக்கலாம்,
       சில சமயம் மூடி இருப்பதால் கடந்து செல்வதும் நிகழ்கிறது
       வீழ்ந்து கிடந்தாலும் மூடிக் கிடப்பதால் விதையும் விருட்சமாகிறது

ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைகள் பற்றி எழுதாத படைப்பாளி, படைப்பாளியே அன்று. மனசாட்சியும் மனிதாபிமானமும் உள்ள ஒவ்வொரு படைப்பாளியின் தலையாய கடமை ஈழம் பற்றி எழுதுவது. நூலாசிரியர் கவிஞர் தியாக. இரமேஷ் ஈழம் பற்றி எழுதி உள்ளார்.

   முள்ளிவாய்க்கால்

       வேலிகளுக்குள்ளும் வேதனைகளுக்குள்ளும் 
              சிக்கித் தவிக்கும் உறவுகளை
       எப்படிக் காப்போம் ஓட்டுக்காக மட்டுமே
              மழைத்தவளையாய் குரலெழுப்பி
       உங்களை உயர்த்திப் பிடிக்கும் 
              ஒட்டுண்ணி அரசியல்வாதிகளால்
       தமிழீழம் எழாது கருப்பண்ண சாமியே!
              காக்க வா! காவல் காக்க வா!

ஈழத்தமிழர்கள் வணங்காத சாமியே இல்லை.  அனைத்து சாமியையும் கோவில் கட்டி வணங்குபவர்கள். எந்த சாமியும் வரவில்லை.  காக்கவில்லை.  எனவே கருப்பண்ணசாமியும் வரப் போவதில்லை.  உலகத் தமிழர்களின் ஒரே நம்பிக்கை அய் நா மன்றம்.  அவர்கள் தான் காக்க வேண்டும் நம்மவர்களை, தமிழர்களை.

புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் சிங்கப்பூர் பற்றி வடித்த கவிதை நன்று.  உலகின் முதல் மொழியாம் தமிழை ஆட்சிமொழியாக வைத்து இருக்கும் நன்றிக்குரிய நாடு.

       வாழிய சிங்கப்பூர்

       உலகப் பெரும்புள்ளிகள் உற்றுநோக்கும் வைரப்புள்ளி
       உள்ளம் நினைத்தாலே குதூகலமாய் குதித்தாகும் துள்ளி
       காசு பணம் காணுமிடமெல்லாம் பொங்கு தமிழ்
       தமிழ்த்தாயின் மங்களம் காப்பதில் குங்குமச் சிமிழ்

பல பொருள்களில் கவிதை பாடினாலும் காதல் பற்றி பாடுவது என்பது தனிச்சுவை.  தனி ரகம்.  அந்த வகையில் பாடிய காதல் கவிதை.

   கண்ணால் காதல் மொழி பேசி!

       கண்ணால் காதல் மொழி பேசி! கடந்து சென்ற போதெல்லாம்
       கை கட்டி மனம் மூடி கிடந்து விட்டு நீ இல்லாத நேரத்தில்
       தொடர்ந்து தேடுகிறது உன்னிருப்பை பேதமையாய் மனம்.

மற்றொறு காதல் கவிதை தமிழ்ப் பண்பாடு காதலிலும் காக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது.

       உனக்காக வருந்துகிறேன்!

       சகியே! உடல் மொழியால் காதல் வளர்க்காமல்
       வாய்மொழி மௌன மொழியால் வளர்த்த காதல் நம் காதல்!

மறைந்து மறையாத மாமனிதர், எளியவர், இனியவர் காந்தியடிகள் பற்றிய கவிதை மிக நன்று.      

       அண்ணல் காந்தி

       நள்ளிரவில் சுதந்திரத்தை நாடே கொண்டாட
       நாற்காலியைத் தேடியலையாமல் நவகாளியில் கலவரத்தைத் தடுக்க
       இதயம் துடிதுடிக்கத் தாயாய் இங்கும் அங்கும் அலைந்த இனியவன்.

பிரதமர் பதவியே தேடி வந்த போதும் அதனை ஏற்காமல் மனிதாபிமானத்தோடு மதக்கலவரம் தடுக்கச் சென்ற மாமனிதர் காந்தியடிகளிடமிருந்து இன்றைய அரசியல்வாதிகள், தன்னலமற்ற பொது நலத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். 

நூலாசிரியர் கவிஞர் தியாக. இரமேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.  இந்த நூலை எனக்கு அனுப்பி வைத்த இனிய நண்பர் கவிஞர் ஏகலைவனுக்கு நன்றி!