நூல் : காலச் சப்பரம்
நூல்
ஆசிரியர் :
  
கவிஞர் கவிமுகில்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா. இரவி

ந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.  பேராசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் பாராட்டிய நூல்.  நூல் ஆசிரியர் கவிஞர் கவிமுகில் அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்.  சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று மகிழுந்து விற்பனையாளராகி வெளிநாடுகளிலும் கிளை திறந்து முன்னேறி உள்ளார். பணமும், நல்ல குணமும், இலக்கிய மணமும் பெற்றவர்.  ஈடில்லாக் கவிஞர்.  ஈரோடு தமிழன்பன் பிறந்த நாள் விழா முன்னின்று நடத்தியவர்.  விருதுகள் பல வழங்கியவர். தமிழ்ப்பற்று மிக்கவர். கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர்.

நூலின் அட்டைப்படம் மிக நன்று. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பாரதியார் தமிழியற்புலம் பேராசிரியர் முனைவர் அ. அறிவுநம்பி அவர்களின் அணிந்துரை ஆய்வுரையாக உள்ளது.
  இந்த நூல் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டு நூல் பற்றி உரையாற்றினார்.

இந்த நூலை கவிதையில் முத்திரை பதித்து வரும் வனப்பேச்சி வழங்கிய கவிஞர் தமிழச்சி தங்கப்பண்டியனுக்கு
 அவர்களுக்கு பரிசாக்கி உள்ளார்.கிராமிய மொழியில் பல கவிதைகள் எழுதியுள்ளவருக்கு பரிசாக்கியது பொருத்தம் .

வாழ்க்கைச் சக்கரத்தில் கண்ட, உணர்ந்த, பாதித்த விஷயங்களை எளிய நடையில், கிராமிய மொழியில் காலச் சப்பரம் என்ற பெயரில் நூலாக்கி உள்ளார்.
  நூலாசிரியர் கவிஞர் கவிமுகில், ஆர்சுத்திப்பட்டு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் கிராமிய மொழி மிக இயல்பாக வந்துள்ளது.

ஒரு சாலை பேசுவது போலவே கவிதை எழுதி ரசிக்க வைத்துள்ளார்.

பழைய சாலை

வண்டித் தடத்தால்
இரு கோடு என் முதுகில் விழுந்ததுண்டு
செம்மண்ண போட்டு சீருசெஞ்சு
ஐம்பது வருசத்துக்கு
முன்னாடி எனக்கு கப்பிசட்டை
போட்டாங்க!
மூணு தேர்தலுக்கு முன்னாடி தான்
எனக்கு தாரு கோட்டும்
தச்சாங்க!

தார்ச்சாலையை கோட்டாகப் பார்க்கும் கவிஞர் கவிமுகிலின் கவிப்பார்வை நன்று. 

நூலின் உள்ளே உள்ள புகைப்படங்கள் வடிவமைப்பு, அச்சு யாவும் மிக நேர்த்தி.  விழிகள் பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள். 

நம்மில் பலருக்கும் கிராமிய மொழி தெரியும். ஒரு சிலருக்கு கிராமிய மொழி தெரியாமல் இருக்கலாம். இந்த நூல் படித்தால் கிராமிய மொழி பற்றிய புரிதல் ஏற்படும் என்று உறுதி கூறலாம்.

கவிதையில் காதல் காதலி பற்றிய வர்ணனை இல்லாமல் இருக்காது.
  இருக்கின்றது இதோ!

நெளி கிராப்பு

தஞ்சாவூரு / கோபுரமா / நெளி நெளியா
நிமிர்ந்து நிற்கும் / கிராப்பு.
பார்த்தவுடனே படிச்சிடணுமுன்னு
பயம் வர்ற பார்வை!
ஒழுக்கம் உடனே
வந்திடணுங்குற நடை

அடுத்து வரும் வரிகளில் அந்தக் காலத்தில் ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் எவ்வளவு உரிமை கொடுத்தார்கள் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

கண்ண மட்டும் விட்டுட்டு
எங்க வேணும்னா அடிங்க
எம்புள்ள நல்ல படிக்கிணுங்கிற ஊரு!
வச்சபேரு பெரிய வாத்தியாரு!

நூல் முழுவதும் கிராமிய மணம் வீசும் கவிதைகள், நூலில் உள்ள கவிதைகளைப் படிக்கும் போதே நம் மனம், நாம் கண்ட கிராமங்களுக்கு சென்று விடுவதை தவிர்க்க முடியாது.  அது தான் ஒரு கவிஞனின் வெற்றி.

கிராமத்து திரையரங்கம் பற்றி கவிதையில் நம் கண்முன் கிராம திரையரங்கத்தை கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் கவிஞர் கவிமுகில்.
 

மொத ஆட்டம்

கொட்டாயிக்குள்ள போனா
செகப்பு வாளியில் மண்ணு
தீ ன்னு சொன்னுச்சு!

உண்மை தான் வாளியில் மண் இருக்கும்.  ஆனால் தீ என்று எழுதி இருக்கும்.  தீ பிடித்தால் அணைக்கப் பயன்படும் மண் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  தீ என்று எழுதியதற்குப் பதிலாக மண் என்றே எழுதி இருக்க வேண்டும்.  இந்த முரணை உற்றுநோக்கி, கவிதையாக்கியது சிறப்பு. 

மதுவால் நகரங்கள் மட்டுமல்ல கிராமங்கள் சீரழிந்து வருகின்றது என்பதை கள்ளுக்கடை கவிதையில் வரும் கடைசி வரிகள் காட்சிப்படுத்துகின்றன.

கள்ளுக்கடை

கள்ளுக்கடை சந்துலயோ
கைலியும் டவுசரும் இல்லாம
நிமிந்து படுத்திருக்கும்
நாலஞ்சு பேரு!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கிராமிய திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்பட்டது எனக்கு.  படிக்கும் உங்களுக்கும் ஏற்படும்.  கவிதைகளால் கிராமத்தை படம் பிடித்து உள்ளார்.

மழை பொய்த்து விவசாயம் பொய்த்த்தை உணர்த்திடும் கவிதை.

குறிஞ்னசாக் கீரை
மூணு போகம் சாகுபடி
முப்போகம் வெள்ளாமன்னு
மீசைமுறுக்குன மிராசுக்கு!
மழை மூணு வருசம் பேயல
வெதக்கி வச்ச நெல்லும்
வடிச்சு தின்னாச்சு
ஊருக்கே தின்ன
வெரலு தான் இப்ப
திண்ண பேச்சு மட்டுந்தான்
தீவனமாகிடுச்சு!

விவசாய வேலை இல்லை என்றால் வெட்டிப் பேச்சு தான் என்பதையும் கவிதையில் எழுதி உள்ளார்.

போதையின் தீமையை உணர்த்தும் கவிதை நன்று.

குட்டிச் செவுரு!

போதை தலைக்கேறிய / ஒரு குடும்பச் சண்டையில்
தன் வீட்டைத் / தானே கொளுத்தியதால்
ஊரே சேர்ந்து வைத்த பெயர்
வீடு கொளுத்தி சோமன்.

மதுரையில் ஒருவருக்கு பெயரே தீ கொளுத்தி என்றாகி விட்டது. அது என் நினைவிற்கு வந்தது .இப்படி பல்வேறு கவிதைகள் மிக நன்று.

நூல் ஆசிரியர் கவிஞர் கவிமுகில் அவர்களுக்கு பாராட்டுக்கள் .பணம் இருக்கும்  இடத்தில மனம் இருக்காது . என்ற பொன்மொழி பொய்க்கும் விதமாக பணம் மனமும் பெற்றவர் .உழைத்து சேர்த்த பணத்தில் ஒரு பகுதியை இலக்கியத்திற்கு செலவழித்து வரும் இலக்கிய இதயம் வாழ்க .

கவிஞர் கவிமுகில் இலக்கிய புரவலராக மட்டுமன்றி படைப்பாளியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு .தொடர்ந்து படையுங்கள்.  பாராட்டுக்கள்.  
 

விழிகள் பதிப்பகம், விழிகள் பதிப்பகம் !8/ எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு திருவள்ளுவர நகர் ,திருவான்மியூர் ,சென்னை 41. 

பேச 94442 65152. விலை : ரூ. 100