நூல் : இறகுகளால் ஒரு மாளிகை (கவிதைத் தொகுதி )
நூல் ஆசிரியர் : எம்.ரீ. சஜாத்
நூல் அறிமுகம்:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்த கிண்ணியாவைச் சேர்ந்த எம்.ரீ. சஜாத்தின் இரண்டாவது நூலே இறகுகளால் ஒரு மாளிகை கவிதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே செல்லமே (2012) என்ற சிறுவர் பாடல் தொகுதியை வெளியிட்டுள்ளார். கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக 100 பக்கங்களில் 58 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இத்தொகுதியில் உள்ள அணைத்துக் கவிதைகளும் மரபுக் கவிதைகளாக இருப்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும். இந்த அடிப்படையில் நோக்கும் போது தன்னை ஒரு மரபுக் கவிஞராக நிலை நிறுத்த முனைகிறார் என்று சொல்லலாம்

செல்லமே என்ற இவரது சிறுவர் பாடல் தொகுதி 2013 இல் கிழக்கு மாகாணத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான பரிசைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதுபோல் 2013 இல் இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான பரிசையும், 2013 இல் தேசிய சாகித்திய மண்டல சிறுவர் இலக்கியச் சிறப்புச் சான்றிதழையும் பெற்றுள்ளது

கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவர் கவிதைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்களுக்காக கவிச்சுடர் என்ற பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார். அதுபோன்றே சிறுவர் இலக்கியத்துக்காக ஆற்றிய பங்களிப்புக்காக கண்டி கலை இலக்கிய மன்றம் இவருக்கு இரத்தினதீபம் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இவை இவரது இலக்கிய ஆற்றலுக்கு கிடைத்த வெற்றிகளாகும்

அந்தந்த காலகட்டங்களில் பத்திரிகையிலும், சஞ்சிகைகளிலும், கவிதைப் போட்டிகளுக்கும் என்று எழுதப்பட்ட பல கவிதைகளை உள்ளடக்கியே இந்தத் தொகுதியை கவிஞர் வெளியிட்டுள்ளார். ஆன்மீகம், சுனாமி, காதல், இயற்கை, மானிட நேயம், உழைப்பு, இன ஒற்றுமை, தத்துவம், போதனை, வாழ்த்து, இரங்கல் போன்ற பல கருப்பொருட்களை உள்ளடக்கியதாகவே கவிதைகள் புனையப்பட்டுள்ளன

இந்த நூலுக்கு கலாநிதி கலாபூஷணம் அகளங்கன் அணிந்துரையையும், காப்பியக் கோ ஜின்னாஹ் சரிபுத்தீன் நயவுரையையும், கலாபூஷணம் .எம்.எம். அலி அவர்கள் ஆரோக்கியமான கவிதை ஜனிக்காது கவிஞன் என்று காசினி கணிக்காது என்ற தலைப்பில் கருத்துரையையும், எச்.எம். ஹலால்தீன் மனநிறை மகிழ்சியும் மகிழ்வுறும் உயர்ச்சியும் என்ற தலைப்பில் உரையொன்றையும், நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை கவிஞர் கிண்ணியா அமீர் அலியும் வழங்கியுள்ளனர்.

இளந்தலைமுறைக் கவிஞர்கள் வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கவிஞர் சஜாத்தின் சில கவிதை வரிகளை இனி இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.

சுழன்று அடித்த சுனாமியே! (பக்கம் 25) என்ற கவிதையானது ஒரு நொடியில் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த கொடிய சுனாமியைப் பற்றி பேசியிருக்கின்றது. உயிர்கள், உடமைகள் என்ற பாகுபாடின்றி அனைத்தையும் தன் பசிக்கு இரையாக்கி கடல், மக்களின் சந்தோசங்களையெல்லாம் சொற்ப நேரத்துக்குள் ஏப்பம் விட்டது இன்றுபோல் இருக்கின்றது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அதே வலி அல்லது வடு கொஞ்சமும் மாறாமலேயே மக்கள் மனதில் அனலாய் எரிந்துகொண்டிருக்கின்றது. அது பற்றி கவிஞரின் வரிகள் இவ்வாறு அமைந்துள்ளது.

உயிரைக் குடித்து உடைமையை யழித்து வயிற்றில் அடித்து வாழ்வை யொடித்து சொத்துச் சுகங்கள் சொந்தம் இழந்து கத்திக் கதறிக் கலங்க வைத்தாய்! காலைப் பொழுதுக் கடலே! அந்த நாளை நினைத்தால் நடுங்குது நெஞ்சம் மதிய மாகுமுன் மயான மானதூர் இதயம் கனத்து இன்று மழுகுதே! கரையிலே வாழ்வைக் கழித்த மாந்தர் தரையிலே தமதுயிர் நீத்துக் கிடந்தனர்! கனன்றே எழுந்த கடலலை யே!நீ சுழன்று வந்து சோகந் தந்தாய்! பொங்கி எழுந்து பொருந்தி கடலே! எங்கும் ஓலம் எழுந்திட வைத்தாய் வறுமைக் கோட்டில் வாழ்வைக் கொடுத்து வெறுமை ஆக்கி விட்ட சுனாமியே!

இணையிலாத இயற்கை பார்த்தேன்! (பக்கம் 35) என்ற கவிதையானது கவிஞர் இயற்கை மீது கொண்ட காதலை மொழி பெயர்ப்பு செய்வதாக அமைந்துள்ளது. இயற்கையைப் பார்த்து இரசிக்(வியக்)காத ஒருவரும் இல்லை. சாதாரணமான ஒருவன் மழையாகப் பார்ப்பதை கவிஞன் வானத்தின் கண்ணீராகக் காண்கின்றான். தவளையின் கத்துதலை எரிச்சாகப் பார்ப்பவர் மத்தியில் கவிஞன் அதை இசையாகக் கேட்கின்றான். உவமைகள் பொருத்தமாகக் கூறப்பட்டிருக்கும் இந்தக் கவிதை இவ்வாறு தொடங்குகின்றது.

சோலைகள் சுமந்த பூவில் சுகங்காணும் வண்டைப் பார்த்தேன்.. வாழைகள் விரித்த தண்டை வளைக்கின்ற தென்றல் பார்த்தேன்.. கவலைகள் நிறைந்த வானில் கண்ணீராய் மழையைப் பார்த்தேன்.. தவளைகள் இசை யெழுப்பித் தலைநீட்டும் எழிலைப் பார்த்தேன்.. வான் மீது வெண்ணிலாவும் வருகின்ற வண்ணம் பார்த்தேன்.. பொன்னந்தி மாலை நேரம் பொழிகின்ற அழகைப் பார்த்தேன்.. கரையோடு வந்து மோதிக் கலக்கின்ற அலையைப் பார்த்தேன்.. இறையோனின் அருளாம் இயற்கை அளிக்கின்ற எழிலைப் பார்த்தேன்..

தியாகத் திருநாளே! (பக்கம் 39) என்ற கவிதையானது பிறை பார்க்கும் பரவச நிலையினை எடுத்துக் காட்டியிருக்கின்றது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு புதிய மாத தொடக்கமும் ஆரம்பிப்பது தலைப் பிறை தென்பட்ட பிறகுதான். அதிலும் நோன்பு தொடங்குவதற்கும், நோன்புப் பெருநாளைத் தீர்மானிப்பதற்கும், ஹஜ் பெருநாளைத் தீர்மானிப்பதற்கும் பிறை பார்க்கும் நிகழ்வு விசேட நிகழ்வாக காணப்படுகின்றது. மேற்கூறப்பட்டவைகளுக்காக பிறையை கண்டவுடன் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகிக்கும். அது பற்றிய பதிவை கீழுள்ள வரிகளில் அவதானிக்கலாம்.

பிறையொன்று அடிவானில் பூக்கும்! – அப் பிறைதன்னை கோடிக் கண்கள் பார்க்கும்! இத் தரையன்று குதூகலத்தில் சிலிர்க்கும்! – உள்ளம் சந்தோஷப் புனலிடையே மிதக்கும்! உதித்திட்ட பிறைக் கீற்றைப் பார்ப்பார்! – தம் உள்ளத்தில் உவகைப்பூ கோர்ப்பார்! – நெஞ்சில் பதித்திட்ட உள்ளன்பை வார்ப்பார்! - ஹஜ்ஜுப் பண்டிகையின் பண்புநலன் காப்பார்!

ஒற்றுமைப் புனலில் உள்ளங் குளிக்கட்டும்! (பக்கம் 41) என்ற கவிதையானது சமாதானத்தை வலியுறுத்தும் ஒரு சிறந்த கவிதையாகும். ஓசை நயம் இதில் சிறப்பாக காணப்படுகின்றது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற கூற்றுக்கிணங்க மக்கள் ஒருதாய் மக்களாக வாழ்ந்தால் தம்மைப் பிடித்துள்ள சோகங்கள், துவேசங்கள் களையப்படும். அன்பு பெருகி சந்தோச வெள்ளம் வரும். எல்லோரும் இதற்காக தனிப்பட்ட ரீதியல் போராட வேண்டும். பொறாமை, வஞ்சகம், கோள் மூட்டுதல் போன்ற தீய குணங்களை விட்டுவிட்டு இறைவன் படைப்பில் அனைவரும் சமம் என்ற கொள்கையைக் கடைப்பிக்க வேண்டும் போன்ற விடயங்கள் கீழுள்ள வரிகளை வாசிக்கும் போது ஏற்படுகின்றதெனலாம்.

ஒற்றுமை நாட்டில் ஓங்கட்டும்! – மனிதா ஒன்று பட்டு வாழட்டும்! குற்றம் யாவும் அகலட்டும்! – மனக் குறைகள் விட்டு விலகட்டும்! மற்றோர் வாழ்வும் செழிக்கட்டும்! – மனித நேயம் ஓங்கி வழியட்டும்! முற்றும் இன்பம் பெருகட்டும்! – முட்டி மோதும் குணங்கள் அருகட்டும்!

உழைத்து உயர்வாய்! (பக்கம் 45) என்ற கவிதையானது உழைப்பின் முக்கியத்துவத்தைப் பாடுவதாக அமைந்துள்ளது. சொந்தமாக உழைத்து சாப்பிடும் சாப்பாட்டைவிட வேறு சிறந்த உணவு இல்லை என்று கூறப்படுவது இதற்காகத்தான். மற்றவர்களை எதிர்பார்த்து வாழுதல் என்பது கானல் நீரை குடிக்க ஆசைப்படுவது போலாகும். உழைக்காமல் சோம்பேறியாக இருந்துகொண்டு அடுத்தவர்களை அண்டி வாழ்வதால் எந்தப் பயனும் கிடையாது. மாறாக நாம் உழைத்து எம்மைச் சார்ந்தவர்களுக்கும் உதவி புரியும்போது மனதில் திருப்திகரத் தன்மை நிரம்பிவிடுகின்றது. உழைத்து வாழ வேண்டும் என்பதை கீழுள்ள வரிகள் எடுத்துக்காட்டுகின்றன.

பட்டி னியாலே வாடினாலும்! – நம்மை அயலவன் வந்து பார்ப்பானா? எட்டு நாட்கள் படுத்தாலும்! – வந்து என்ன என்று கேட்பானா? வட்டி சுரண்டற் கொள்கையிலே.. வாழும் இந்தக் காலத்திலே எட்டுத் திக்குஞ் சென்றேனும் ஏழ்மை நீங்க உழைத்துயர்வாய்!

எல்லாமே நீதான்! (பக்கம் 57) என்ற கவிதையானது காதலிக்காக அல்லது மனைவிக்காக எழுதப்பட்ட சிறந்ததொரு காதல் கவிதையாகும். இக்கவிதையை வாசிக்கும்போது, கவிஞர் தன் துணையிடம் கொண்ட காதல் பிரவாசித்துப் பாய்வதை இக்கவிதையை வாசிக்கையில் உணர முடிகின்றது. வாழ்க்கையின் பாதியாக, எல்லாமாக இருக்கும் துணையை எண்ணி எழுதப்பட்ட இக்கவிதையின் வரிகளை வாசித்துப் பாருங்கள்

கண்ணுக்குள் கருவிழியாய் வந்தவளும் நீதான்.. என் நெஞ்சுக்குள் புது ராகம் தந்தவளும் நீதான்.. தனிமையிலே என்னோடு இருப்பவளும் நீதான்.. என் தாகத்தை எந்நாளும் தணிப்பவளும் நீதான்.. எண்ணத்தில் கவியாக உதிப்பவளும் நீதான்.. என் இதயத்தைப் பெரிதாக மதிப்பவளும் நீதான்.. அன்னம் போல் அழகாக நடப்பவளும் நீதான்.. என் அன்புக்குள் அகப்பட்டு கிடப்பவளும் நீதான்.. 

பேச்சு! (பக்கம் 83) என்ற கவிதை மெனத்தின் சிறப்பம்சங்களை எடுத்துக் காட்டுகுpன்றது. நாவைப் பேணிக்கொள் என்று பெரியோர்கள் வெறுமனே சொல்லவில்லை. வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அதன் பிறகு அதைப் பொறுக்கவும் முடியாது. சொன்ன சொற்களை மற்றவர்களால் பொறுத்துக்கொள்ளவும் முடியாது. வாய் மூடி மெனமாக இருந்தால் அது நிறைய பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்பதை இக்கவிதை கூறிநிற்கின்றது.

மௌனம் போலொரு மருந்தில்லை.. மனத் தாபம் அதனால் விளைவதில்லை.. மௌனம் பூணும் மனிதர்க்கு வீண் வாதம் வம்பும் வருவதில்லை.. வாயை விட்டுப் போம் வரைக்கும் நம் வார்த்தை நமக்கு அடிமையாம்.. வாயை விட்டுப் போய் விட்டால் அவ் வார்த்தைக்குப்பின் அடிமை நாம்..

சிறுவர் இலக்கியத் துறையிலும் தனக்கானதொரு நிலையான இடத்தை தக்க வைத்துள்ள நூலாசிரியர்  எம்.ரீ. சஜாத் அவர்கள் கவிதையிலும் தன்னை இனங்காட்டியுள்ளார். அவரது இலக்கிய முயற்சிகள் தொடர வாழ்த்துகின்றேன்!!!

நூல் தலைப்பு - இறகுகளால் ஒரு மாளிகை
நூல்
வகை - கவிதை
நூலாசிரியர்
- எம்.ரீ. சஜாத்
வெளியீடு
- கிண்ணியா கலை இலக்கிய மன்றம்
விலை
- 300
ரூபாய்

 

 

   

                         www.tamilauthors.com