நூல் : நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
நூல் ஆசிரியர் : ுனைவர கி..அனுமந்தன்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி

சாகித்ய அகாதமி நிறுவனம் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் "நாமக்கல் கவிஞர் " என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வரலாறு நூலாக பதிப்பித்து கவிஞருக்கு பெருமை சேர்த்து உள்ளார்கள் .இந்த நூல் ஆசிரியர் முனைவர் கி . .அனுமந்தன் அவர்கள் கவிஞரின் மூத்த மருமகன் என்பது கூடுதல் சிறப்பு .தெளிந்த நீரோடை போன்று மிக நல்ல நடை .இன்றைய இளைய தலைமுறையினர் நாமக்கல் கவிஞர் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக வந்துள்ள நூல் .இன்று நாமக்கல் என்றதும் பலர்க்கு உடன் நினைவிற்கு வருவன முட்டையும், கறிக்கோழியும் , மாணவர்களைப் பிழிந்து மதிப்பெண் எடுக்க வைக்கும் பள்ளிகளும்தான் .ஆனால் அன்று நாமக்கல் என்றதும் எல்லோரின் நினைவிற்கு வந்தவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.

கத்தியின்றி ரத்தமின்றி !
யுத்தமொன்று வருகுது !

இந்த இரண்டே வரிகளின் மூலம் உலகப் புகழ் அடைந்தவர் .அவரது வரலாறு படிக்க பிரமிப்பாக உள்ளது .மிகச் சிறந்த ஆளுமையாளராக பன்முக ஆற்றலாளராக அவர் வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்கும் பாடம் .உரைநடை நூலாசிரியர் , இலக்கியத் திறனாய்வாளர், திறன்மிகுந்த மொழி பெயர்ப்பாளர் ,சிறந்த உரையாசிரியர் ,ஆற்றல் வாய்ந்த வரலாற்றாசிரியர்,தீரம் மிக்க விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த ஓவியர் ,கேட்டார்ப் பிணிக்கும் தகையச் சொல்வன்மை மிக்கவர். கருணை உள்ளம் கொண்ட சமுதாயத் தொண்டர் இப்படி பல்வேறு ஆற்றல்களின் பொக்கிசமாக வாழ்ந்திட்ட மாமனிதர் வரலாறு படிக்கப் படிக்கச் சுவையாக உள்ளது

நூல் ஆசிரியர் முனைவர் கி . .அனுமந்தன் அவர்கள் கவிஞரின் மூத்த மருமகன் என்பதால், நாமக்கல் கவிஞரை கண்டு உணர்ந்து அறிந்து ஆயந்து நூலை வடித்துள்ளார்கள்."தோன்றின் புகழோடு தோன்றுக" என்ற திருக்குறளின் இலக்கணமாக வாழ்ந்துள்ளார் .

நூலை நான்கு இயலாக பிரித்து எழுதி உள்ளார்கள் . முதல் இயல் வாழ்க்கை வரலாறு ,இரண்டாம் இயல் இலக்கியப் படைப்புகள், மூன்றாம் இயல் உரை நடை நூல்கள் ,நான்காம் இயல் இலக்கிய உலகில் கவிஞர் பெற்றுள்ள இடம் இப்படி மிக நன்றாக வகுத்து, தொகுத்து எழுதி உள்ளார்கள் .

காந்தியடிகளின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட கவிஞர் .அகிம்சை ஒன்றினால் மட்டுமே இந்திய விடுதலையை பெற முடியும் என்ற திடமான முடிவுக்கு வந்தார் .காந்தியடிகளை ஆர்வத்துடன் பின்பற்றி, அவரால் தொடங்கப்பட்ட தேசிய இயக்கங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு கொண்டார் .

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !
வெறும் செல்வமானது கேவலம் குப்பைக்குச் சமம் !

நாமக்கல் கவிஞரின் இந்த வைர வரிகள் நூலில் உள்ளன .பணத்தாசை பிடித்து அலையும் மனிதர்களின் மண்டையில் கொட்டும் வரிகள். இன்றைய ஊழல் அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள் .இதுபோன்ற முக்கியமான கவிதை வரிகளில் நூலில் உள்ளன 

மிகச் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்துள்ளார் .தான் வரை ந்த ஓவியங்களில் விலைக்கு விற்று ,பெற்ற பணத்தில் ஏழைகளுக்கு உதவி உள்ளார் .மனிதநேய மாண்பாளராக வாழ்ந்துள்ளார் .புகழ் பெற்ற கவிஞருக்கும் அந்தக்காலத்தில் அவர் சொந்தமாக அச்சிட்ட நூல்கள் எதிர்ப்பார்த்தபடி விற்காமல் வீட்டில் நூல்களை அடுக்கி வைத்து வருத்தமும் அடிந்துள்ளார் .இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன .குழந்தைகளிடம் அன்பு செலுத்தி பேரப்பிள்ளைகளுடன் வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார்

மகாகவி பாரதியாரை சந்திக்க ஆவலுடன் புதுச்சேரி சென்றுபோது அவர் ஊரில் இல்லை வர 10 நாட்கள் ஆகும் என்று சொல்ல, ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளார் .பின்னர் ஒரு முறை கானாடுகாத்தான் பாரதியார் வந்துள்ளார் என்ற செய்தி அறிந்து புறப்பட்டு சென்று சந்தித்து பேசி மகிழ்ந்துள்ளார் .கவிஞரின் கவிதை வரிகளை பாரதியாரும் பாராட்டி உள்ளார்

இந்தநூலில் காந்தியடிகளை புகழ்ந்து பாடிய பாடல்கள் ,தேசப்பற்று மிக்க பாடல்கள் ,தீண்டாமைக்கு எதிரான பாடல் முக்கியமான பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன .

நாமக்கல் கவிஞர் தேசப்பற்று மிக்கவராக இருந்தபோதும் தமிழ்ப்பற்றும் ,,தமிழன் மீதான பற்றும் மிக்கவராகத் திகழ்ந்துள்ளார். அதனால்தான் அவர் .

தமிழனென்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா !
தமிழன் என்றோர் இனமுண்டு !
தனியே அவர்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும் !
அன்பே அவனுடைய வழியாகும் !

நாமக்கல் கவிஞர் எழுதிய இந்த ஒரு பாடல் போதும் .தமிழன் பெருமையையும் ,தமிழின் அருமையையும் தரணிக்கு பறை சாற்றும்

ஆயுதத்தால் மிகச் சிறந்த ஹிட்லர் எங்கே ?
அவன் துணைவன் முஷ்லோனி அகந்தை எங்கே ?
மாயமிகும் போர் புரிந்த டோஜோ எங்கே ?
மாநிலத்தை சீர் குலைத்து மறைந்தார் அன்றோ ?
போர் புகுந்த பிணக்காடாய் உலகைக் கண்டும் 
பின்னும் அந்த போர் வெறியைப் பேசலாமோ ?
தாயறிந்த அன்பினையே உருவாய்த் தாங்கும் 
தவசி எங்கள் காந்தி சொலும் சாந்தி கொள்வோம் !

மற்றொரு கவிதை !

வெற்றி வெற்றி என்பரேல் 
வெற்றி பெற்ற தென்னவோ ?
சுற்றும் முற்றும் பாரெலாம் 
சூரை யான ஊர்களும் 
பெற்ற தாய்கள் ஓலமும் 
போய் புகுந்த கோலமும் 
இற்றொழித்த சுற்றமும் 
இவைகளே நம் வெற்றிகாண் !

அன்று நாமக்கல் கவிஞர் எழுதிய கவிதை வரிகள் .இன்று இலங்கையில் போர் வெறி கொண்டு தமிழ் இனம் அழித்த கொடூரன் இராஜபட்ஜெயைப் பார்த்து பாடியதுபோல உள்ளது . நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வரலாறு படிக்கும் வாசகர்களுக்கு தேன் ஆறு .நூல் ஆசிரியர் முனைவர் கி . .அனுமந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இந்த நூலின் மூலம் மாமனாரின் மங்காப் புகழ் என்ற மகுடத்தில் வைரக்கல் பதித்து உள்ளார்கள்

சாகித்ய அகாதமி ,443.குணா வளாகம ,தேனாம்பேட்ட ,சென்ன .18 விலை ரூபாய 40.
sahityaakademichennai@
gmail.com

 

                         www.tamilauthors.com