பூங்காவனம்  18 ஆவது இதழ் மீதான பார்வை

லாபூஷணம்
மாவனல்லை எம்.எம். மன்ஸுர்


காலாண்டுச் சஞ்சிகையான பூங்காவனத்தின் 18 ஆவது இதழ் கையில் கிடைத்தது. திருமதி சுகந்தி இராஜகுலேந்திராவின் முகப்புப் படத்தைத் தாங்கி அட்டைப்படம் வந்திருக்கிறது. உள்ளே நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரை, நூல் விமர்சனம் என்பவற்றோடு வழமையான அம்சங்கள் இதழில் இடம்பிடித்திருக்கின்றன. இதில் நேர்காணல், மூன்று சிறுகதைகள், பதினொரு கவிதைகள், இரு கட்டுரைகள், நூல் மதிப்புரை, ஒரு குறுங்கதை என்பன காணப்படுகின்றன

திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்களுடனான நேர்காணலில் அவர், தனது வாழ்க்கை அனுபவங்களையும், கலை உலக ஈடுபாடுகளையும் விளக்கியிருக்கிறார். இவர், சட்டத் துறையைத் தேர்ந்து எடுத்துக் கொண்டதால் சட்டத் தரணியாக கடமையாற்றினாலும் எழுத்து ஈடுபாடுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். என்றாலும் அதற்கான கால நேரம் அதிக இடம் கொடுப்பதில்லை. திருமதி. இராஜகுலேந்திரா வடமாராட்சி பருத்தித் துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றவர். பாடசாலை நாட்களில் நடனம், நாடகம், விளையாட்டு, பேச்சு, கவிதை என பல்துறை ஈடுபாடு கொண்டவராகக் காணப்படுகிறார். இரண்டு மகள்களுக்குத் தாயாக இருப்பதோடு, கணவர் உட்பட இவர்கள் நாள்வருமே இலக்கிய ஈடுபாடு உள்ளவர்களாகக் காணப்படுவது சிறப்புக்குரியது.

சிறுகதைகளை நோக்குவோமேயானால் கினியம இக்ராம் எம். தாஹா எழுதியுள்ள முயற்சி என்ற சிறுகதை ஒரு மாணவனின் விடா முயற்சியை எடுத்துக் காட்டுகிறது. போட்டிச் சிறுகதை ஒன்றுக்காக அந்த மாணவன் மேற்கொள்ளும் முயற்சியினால் அகில இலங்கைப் போட்டியில் போட்டியிட்டு முதல் இடத்தைப் பெறக்கூடிய வாய்ப்பை அந்தச் சிறுகதை ஏற்படுத்தித் தருகிறது.

எஸ்.ஆர். பாலசந்திரன் எழுதியுள்ள சபலம் என்ற கதை மனித உணர்ச்சிகளுக்கு மனிதன் முதலிடம் கொடுப்பதனால் ஏற்படப் போகின்ற விபரீதத்தை விளக்குகிறது. வீட்டுப் பணிப் பெண்ணாக சிறு வயது முதல் ஈடுபட்டு வரும் சிறுமி பெரியவளாக வளர்ந்து வனப்பு மிகு கன்னிப் பெண்ணாக காட்சி தரும் போது வீட்டு எஜமானுக்கு விருந்தாகப் போகும் போது ஏற்படுகின்ற சலனம் மயிரிழையில் உயிர் தப்புகிறது.

கிண்ணியா ஜெனீரா ஹைருள் அமான் எழுதியுள்ள ஷமலரைத் தாவிச் செல்லும் வண்டு| என்ற கதை தன் மனைவி நோய்வாய்ப்பட்டிருப்பதைச் சாட்டாகக் கொண்டு வேறு ஒரு திருமணம் முடித்து குடித்தனம் செய்யும் கணவனின் கொடுமையைப்பற்றி விளக்குகிறது. எத்தனை எத்தனை குடும்பங்களில் இத்தகைய நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றனவோ?

சூசை எட்வேட்டின் இரந்துண்டு வாழ்வதில் சுகமுண்டு என்ற சிறுகதை, அன்றாடம் பிச்சை எடுத்துப் பிழைக்கும் இரண்டு பெண் பிறவிகளைப் பற்றியது. அவர்கள் பிறவிப் பிச்சைக்காரர்கள் அல்லாவிட்டாலும் கூட சந்தர்ப்ப வசத்தால் பிச்சை எடுக்க நேரிடுகிறது. சிவப்பிரகாசம் - பத்மாவதித் தம்பதியினருக்கு இப்பிச்சைக்காரப் பெண்களால் புதிய அனுபவம் ஒன்று ஏற்படுகிறது. தம்மிடம் பிச்சை கேட்டு வந்த இரு பெண்களையும் பிச்சை எடுக்கவிடாது உழைத்து உண்பதற்கு புத்திமதி சொல்லி தனது தோட்டத்தில் வேலை செய்யும்படி பணித்துவிட்டு உண்ண உணவும், வேலைக்குக் கூலியும் கொடுத்துவிட்டு, உடுக்க உடையும் கொடுக்கத் தயாரான போது மீண்டும் வேலைக்கு வருவதாகக் கூறிச் சென்ற பெண்கள் அதன்பிறகு அங்கு வரவேயில்லை. பிச்சையே மேல் என மீண்டும் மேனி நோகாமல் உழைப்பதற்கு பிச்சைத் தொழிலுக்கே சென்றுவிடுகின்றனர். இச்செய்கையானது அட்டையைத் தூக்கி மெத்தையில் வைத்த கதையாகிவிட்டது.

வழமைபோன்று கவிஞர் . இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இவ்விதழிலும் இடம்பெற்றிருக்கிறது. இம்முறை கவிதை பற்றிய அரிய பல குறிப்புக்களை கவிஞர் . இக்பால் தந்திருக்கிறார். கவிதையின் ஆரம்பம், அதில் நாட்டுப் பாடல்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய குறிப்புக்களை எல்லாம் சங்க கால கவிதை எடுத்துக் காட்டுகளோடு நன்றாகவே ஆராய்ந்து இருக்கிறார்

மேலும் லண்டன் நுணாவிலூர் கா. விசயரத்தினம் குறந்தொகையில் இரு காட்சிகள் என்ற தலைப்பில் தனது கட்டுரையைத் தந்திருக்கிறார். குறுந்தொகைக் காட்சிகள் இரண்டில் முதலாவதைக் கூடலூர் கிழார் இயற்றிய குறுந்தொகைப் பாடல்களில் இருந்து 167 வது பாடலைத் தெரிவு செய்து காட்சியை விரித்திருக்கிறார். அதே போன்று காட்சி இரண்டுக்கு இரயனாரகப் பொருளில் இருந்து இரண்டாவது செய்யுளைத் தெரிவு செய்து அதற்கான காட்சியைத் தந்திருக்கிறார். இரண்டாவது எடுத்துக் கொள்ளப்பட்ட செய்யுளில் கொங்குதேர் வாழ்க்கை என்ற செய்யுள் அரச சபையில் புலவர் நக்கீரரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட அருமையான செய்யுள். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதிட்டவர். வாதிட்டு இறைவனுக்கே சவால் விடப்பட்ட அருமையான பாடல் காட்சியைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

ஜீவநதி வெளியீடான கவிஞர் ஷெல்லிதாசனின் நகர வீதிகளில் நதிப் பிரவாகம் என்ற கவிதைத் தொகுதியைப் பற்றிய நூல் மதிப்பீட்டினை நிலாக்குயில் தந்திருக்கிறார். இவர் நூலில் இருந்து எடுத்துக் காட்டாக சில கவிதைகளைத் தந்து நூல் மதிப்பீட்டினைப் பெறுமதியாக்கி இருக்கிறார்.

இன்னும் பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்களும், புதிதாக வெளிவருகின்ற நூல்களைப் பற்றிய விபரங்களோடு நூலகப் பூங்காவும் இடம் பிடித்திருக்கின்றன. மொத்தத்தில் இந்த சஞ்சிகை தரமான பூங்காவனமாகக் காட்சி தருகிறது!!!

 

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம
ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி
- 0775009222
வெளியீடு
- பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை
- 100 ரூபாய்

 

 

                         www.tamilauthors.com