நூல் : ஒரு நீதியரசரின் நெடிய பயணம்
நூல் ஆசிரியர் : ராணிமைந்தன்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி


(நீதியரசர் மு. கற்பக விநாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு)

ட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, பதிப்பாளர் உரை என யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. வானதி பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள்.  உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறள் போல வாழ்வாங்கு வாழ்ந்து வரும் மாமனிதர் நீதியரசர் மு. கற்பக விநாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு, இன்றைய இளைய தலுமுறையினர் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அற்புத நூல்.

நீதியரசர் டி.எஸ். அருணாசலம் அவர்களின் அணிந்துரை மிக நன்று.  அதிலிருந்து ஒரு துளி.

மின்சாரம் ஷாக் அடிக்கும் என்பதில் அனுபவம் உண்டு.  ஆனால் மின் தீர்ப்பாயத் தலைவர் இவ்வளவு இன்ப அதிர்வுகளைத் தந்திருக்கிறார் என்று இப்பொழுது புரிந்து கொண்டேன்”.

கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் டிசம்பர் 2014 இதழில் மனத்தில் பதிந்தவர்கள் பகுதியில் நீதியரசர் கற்பகவிநாயகம் பற்றி மிகச் சிறப்பாக பதிவு செய்து இருந்தார்.  நீதியரசரின் அலைபேசி எண் தந்து உதவி, அந்த இதழ் வர, நான் ஒரு காரணமாக இருந்ததில் மகிழ்ச்சி. கவிதை உறவில் படித்து முடித்தவுடன் இந்த நூலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுதியில் வானதி பதிப்பகம் பதிப்புத்திலகம் திருமிகு.  திருநாவுக்கரசு அவர்களுக்கு தகவல் தந்து நூலை அனுப்பி வைக்க வேண்டி படித்து மகிழ்ந்தேன்.  பரவசம் அடைந்தேன்

எனது இல்ல நூலகத்தில் முதல் நூலாக இந்த நூலை வைத்துள்ளேன்.  மனச்சோர்வு வரும் போது எடுத்து வாசித்தால் தன்னம்பிக்கை பிறக்கும்.  இந்த நூல் பற்றி நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களின் வைர வரிகளில் காண்போம்

எனது முழு உருவத்தையும் முதன் முதலாக நானே பார்த்துக் கொள்ளும் அற்புதக் கண்ணாடியாகஇந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ராணிமைந்தன்.

தேவகோட்டையில் விநாயக சதுர்த்தி அன்று பிறந்ததால் கற்பகவிநாயகம் என்று பெயர் சூட்டப் பெற்றவர்.  திரைப்படத்தின் வாய்ப்புகளுக்காக தேடி அலைந்தவர்.  உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர், உயர்நீதிமன்ற நீதியரசர், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர், டில்லி உச்சநீதிமன்ற நீதியரசருக்கு இணையான அகில் இந்திய மின்சார மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர் என படிப்படியாக உயர்ந்து உச்சம் தொட்டவரின் உண்மை வரலாறு.ஜார்க்கண்டில் அரசு அறிவித்த பந்த வாபஸ் வாங்க வைத்தவர்.  காரின் கண்ணாடியில் உள்ள கருப்பு காகித்தை கிழிக்க வைத்தவர்.

இந்த நூல் படித்த போது அவரின் உயர்ந்த பண்பை பறைசாற்றும் மலரும் நினைவுகள் மலர்ந்தன. மதுரை காலேஜ் ஹவுஸ் விடுதி அரங்கில் 15 வருடங்களுக்கு முன்பு மிகச்சிறப்பாக உரையாற்றினார்.  உடன் அவ்வுரையைப் பாராட்டி மடல் அனுப்பினேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தார். அம்மடல் மிகவும் பிடித்து, மதுரை வந்த போது என்னை அழைத்துப் பாராட்டினார்.

சமீபத்தில் மதுரை விமான நிலையம் வந்திருந்த போது அறிமுகமாகி எனது ஆயிரம் ஹைக்கூ நூல் தந்தேன்.  டில்லி சென்ற பின் படித்து முடித்து விட்டு அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள்.  மதிப்புரையும் அனுப்பினார்கள்.  அதனைபுத்தகம் போற்றுதும்”  நூலிலும் இடம்பெறச் செய்தேன்.  நீதியரசர் என்ற கர்வம் துளியும் இல்லாதவர்.  என் போன்ற சாமானியனுடனும் அன்பு செலுத்தும் ஆளுமையாளர்.  அவர் வரலாற்றை படித்து அசந்து போனேன். பிரமிப்பாக இருந்தது.  தோன்றின் புகழோடு தோன்றுக என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் மாண்பாளர்.  நூலின் பின் அட்டையில் உள்ள நீதியரசர் கவிதை மிக நன்று.  பத்திர எழுத்தரின் பிள்ளையாக பிறந்து நீதியரசராக உயர்ந்தவர்.

நூல் என்ன செய்யும்? என்று கேட்பவர்களுக்கு நீதியரசர் மு. கற்பக விநாயகம் அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு. S.S.L.C  தேர்வில் தோல்வி கண்டதும் திங்கள்கிழமை இறப்பதென்று தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் சத்தியசோதனை நூலைப் படித்தார்.  தற்கொலை செய்யும் முடிவை மூடி வைத்தார்.  இன்று வையகம் போற்றிட வாழ்ந்து வருகிறார்.  இன்றைய இளைஞர்கள் பலரும் தற்கொலை செய்து கொள்வதை தினசரி செய்தித்தாளில் பார்க்கிறோம். தற்கொலை செய்யும் எண்ணம் உள்ளவர்கள் இந்த நூலைப் படித்தால் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள் என்று உறுதி கூறலாம்.

கல்லூரி நாடகங்களில் நடிப்பது என்று கலை ஆர்வத்துடன் வாழ்ந்தவர். கலைத்துறையிலிருந்து நீதித்துறைக்கு மடைமாற்றம் ஆகின்றார்.  பல சமயங்களில் எழும்பூரிலிருந்து திருவல்லிக்கேணிக்கு நடந்தே வந்து இருக்கிறார்.  பல கஷ்டங்கள் அடைந்தே முன்னேறி இருக்கிறார்.  நம்மில் பலர் திரைப்படம் போல உடனே ஏற்றம் வர வேண்டும் என்று நினைக்கின்றோம்.  படிப்படியாக வரும் ஏற்றமே நிலைக்கும்

நீதியரசர் கற்பகவிநாயகம் வாலிபராக இருந்த போது ரத்ததானம் செய்து அரசு பொது மருத்துவமனையில் தந்த ரூ. 151 அன்பளிப்பை வாங்கி காசோலையாக மாறிய்இரத்த தானம் செய்து பெற்ற பணம் நெசவாளர்களுக்காக எனது நன்கொடைஎன்று எழுதி எம்.ஜி.ஆர். அவர்களிடம் வழங்கி இருக்கிறார்.  கடிதத்தைப் படித்த எம்.ஜி.ஆர். கண்கலங்கிநீங்க பெரிய மனுஷன்என்று பாராட்டி இருக்கிறார்.  அவர் வாழ்த்தியது போலவே பெரிய மனிதராக உயர்ந்து விட்டார்.

எம்.ஜி.ஆரை தேவகோட்டையில் தன் இல்லத்தில் உணவு உண்ண அழைத்ததும். அன்போடு அவர் சாப்பிட்டதை கட்சியினர் சிலர் எதிர்த்த போது அவர்களிடம், “இந்தத் தம்பி எனக்காக ஜெயிலுக்குப் போனவன்அவங்க வீட்டில் சாப்பிடாவிட்டால் எப்படி?” என்றார் எம்.ஜி.ஆர்.  எதிர்த்தவர்கள் அமைதி ஆனார்கள், இப்படி பல  நிகழ்வுகள் நூலில் உள்ளன.

ஆங்கிலம் சரளமாக பேச வரவில்லையே என்று தயங்கியவர், பயிற்சி, முயற்சி காரணமாக, சரளமாக ஆங்கிலம் பேசவும், எழுதவும் வந்தது என்ற தகவல் நூலில் உள்ளது. நமது இளைஞர்கள் பலருக்கும் இந்த தயக்கம் உள்ளது.  முயற்சி செய்தால் முத்திரை பதிக்கலாம்.  அசிஸ்டன்ட் பி.பி. வேலையை ராஜினாமா செய்து விட்டு வாருங்கள் என்று சொன்ன நண்பரே அந்தப் பதவியில் இருந்தது கண்டு மனம் நொந்து போகிறார். வாழ்க்கையில் பல துன்பங்கள் சந்தித்து உள்ளார். ஆனாலும்  நேர்மையிலிருந்து சற்றும் விலகாதவர்.

திறமையாக பல வழக்குகளில் வழக்கறிஞராக வாதாடி முத்திரை பதித்து நீதியரசராகிறார். இலக்கியக் கழகத்திலும் உரை நிகழ்த்துகின்றார்.  நீதியரசராகி உரையாற்றும் போது மறக்காமல் கற்றுத்தந்த ஆசிரியர் அரு. சோமசுந்தரம் என்று நினைவு கூறுகின்றார்.  

நீதியரசர் மு .கற்பக விநாயகம் அவர்கள்  வழக்கறிஞர்களுக்கு இருக்க வேண்டிய திறமைகள் எவை என்பதை கல்வெட்டு போல சொல்லி உள்ளார்கள் .

ஒன்று பிரபரேசன் ( PREPARATION   )  இரண்டு  பிரசன்டேசன் 

( PRESENTATION  ) மூன்று பெர்சுவேசன் ( PERSUASTION  )விளக்கம்   தேவையில்லாத வார்த்தைகள் இவை .

இந்தத் திறமைகளை வளர்த்துக் கொண்டால் வழக்கறிஞர்கள் வாழ்வில் மிளிரலாம் .

நீதியரசர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் விளக்கம் தந்து உள்ளார்கள்.

"அவருக்கும் மூன்று உண்டு .ஒன்று ( ABSOLUTE INTEGRITY ) ,இரண்டாவது ( AVARAGE INTELLIGENCE ) முன்றாவது ( ANXIETY TO DO JUSTICE ) அதாவது ஒரு நீதிபதிக்கு சராசரியான அறிவுக் கூர்மை இருந்தாலும் போதும் .ஆனால் சரியான நீதி வழங்க வேண்டும் என்ற பேரார்வமும் ,அதற்கும் மேலாக முழுமையான நேர்மையும் அவசியம் என்பதுதான் இந்த மூன்றின் அர்த்தம் .. 

இந்தத் திறமைகளை வளர்த்துக் கொண்டால் நீதியரசர்கள் வாழ்வில் மிளிரலாம் .

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள் வழங்கி நீதித்துறையின் வரலாற்றில் இடம் பெற்றுள்ள நீதியரசரின் வரலாறு மிக நன்று .சோதனைகளைச் சாதனையாக்கி உள்ளார்கள் கலைத்துறையின் மீது விருப்பம் இருந்த போதும் சட்டத்துறை விரும்பி வர இன்முகத்துடன் ஏற்று முத்திரை பதித்து உள்ளார் . தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழியிலும் எழுத்து பேச்சு இரண்டிலும்  தனி முத்திரை பதித்து வருகிறார் .நேர்மையான நீதியரசருக்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர்.காந்தியசிந்தனையாளர் . சராசரியாக  வாழ்க்கையைத் தொடங்கி தோல்விகள், ஏமாற்றங்கள்,   துன்பங்கள்  பல சந்தித்து உச்சம் தொட்ட வரலாறு. இந்த நூல்  படிக்கும் வாசகர்களுக்கும்  உத்வேகம் தருகின்றது .

நீதியரசர்கள் பலர் பாராட்டி உள்ளனர் .நூலின் இறுதியில் நீதியரசர்கள் பாராட்டிய ஆங்கில மடல்களும் உள்ளன .சமீபத்தில்  நீதியரசர் மு. கற்பக விநாயகம்  அவர்கள் மதுரை வந்த போது இரண்டு முறை   இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன், இலக்கியச் சுடர் நிர்மலா மோகன்   அவர்களுடன் நானும் சந்தித்து உரையாடினோம் .அறிவார்ந்த பேச்சு .மறக்க முடியாத சந்திப்பு .மலரும் நினைவுகளை மலர்விதது இந்த நூல் .

வரலாற்று சிறப்புமிக்க பல நல்ல தீர்ப்புகளை வழங்குகிறார். நேர்மையான நீதியரசர் என்ற பெயர் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.  ஆனால் இந்த மாமனிதருக்கு கிடைத்துள்ளது. நல்ல பண்பாளர், அன்பாளர் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் நூல்.  நினைத்தது கிடைக்காவிடில் கிடைத்ததை நினை என்று வலியுறுத்தும் நூல். நீதியரசர் மு. கற்பக விநாயகம் அவர்களுக்கும் நூல் ஆசிரியர் ராணிமைந்தன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.


வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை- 600 017. விலை : ரூ. 200 பக்கம் : 244

 

                         www.tamilauthors.com