நூல் : நிஜத்தின் நிழல்
நூல் ஆசிரியர் :
எழுத்தாளர் திருமதி சுப.ராதாபாய்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி


புதுக்கோட்டை என்ற ஊருக்கு பல சிறப்புகள் உண்டு.  புதுகைத் தென்றல் ஆசிரியர் மு. தருமராசன் அவர்கள் பிறந்த ஊரான புதுக்கோட்டையின் சுருக்கமான புதுகையை பெயரோடு இணைத்துக் கொண்டவர். ஹைக்கூ உலகில் தனி முத்திரை பதித்து வரும் இனிய நண்பர் மு. முருகேஷ், கவிஞர் தங்கம் மூர்த்தி, ஏழைதாசன், ஆசிரியர் விசயகுமார் என அனைவரும் புதுக்கோட்டையில் பிறந்து இலக்கியக் கோட்டையில் கொடி நாட்டி வருபவர்கள் அவர்கள் வரிசையில் நிஜத்தின் நிழல் ஆசிரியர் எழுத்தாளர் சுப. ராதாபாய் அவர்கள் இடம்பிடித்து விட்டார்கள்.  முதல் நூலிலேயே முத்திரைப் பதித்து உள்ளார்கள்.  பாராட்டுகள்.

அட்டைப்பட வடிவமைப்பு, உள்  அச்சு கதைக்கான ஓவியங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாக உள்ளன. குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும்.  இந்த நூலில் 12 சிறுகதைகள் உள்ளன.  குறிஞ்சிமலர் போல அபூர்வ மலராகவே கதைகள் மலர்ந்துள்ளன.  தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது.  புதுக்கோட்டை திரு. துரை மனோகரன், சென்னை இலக்கியஇணையர் புதுகை.மு. தருமராசன், பேராசிரியர் பானுமதி தருமராசன் ஆகியோரின் வாழ்த்துரை நூலிற்கு வளம் சேர்ப்பதாக உள்ளன.

புதுகைத் தென்றல் இதழில் படித்த கதைகள் தான்.  அவற்றை ஒட்டுமொத்தமாக நூலாகப் படித்த போது சுவையாக இருந்தது.  படித்த மலரும் நினைவுகளை மலர்வித்தது.

சிலர் சிறுகதை என்ற பெயரில் நகைச்சுவை துணுக்குகளை சற்று விரிவாக எழுதி வரும் காலத்தில் ஒவ்வொரு கதையில் ஒரு நீதி சொல்லும் விதமாக வாசகர்களுக்கு படிப்பினை தரும் விதமாக கதை வடித்த நூலாசிரியர் எழுத்தாளர் சுப. ராதாபாய் அவர்களுக்கு பாராட்டுகள்.

நிஜத்தின் நிழல்’ என்ற நூலின் தலைப்பில் உள்ள முதல் கதையில் பெண்கள் மேடையில் பெண்ணுரிமை பற்றி பேசினாலும், அவர்கள் இல்லத்தில் நாணல் போல வளைந்தே வாழ வேண்டி உள்ளது. ஆணாதிக்க சமுதாயம் எளிதில் மாறிவிடுவதில்லை என்பதை உணர்த்தி உள்ளார்.

‘கடவுளின் பரிசு!’ கதையில் நூலாசிரியர் கவிஞர் என்பதால் இயற்கையை காட்சிப்படுத்தும் விதமாக கதையை கவித்துவமாக எழுதி உள்ளார்.  பதச்சோறாக சில வரிகள். 

“புதுகையின் புறநகர்ப் பகுதி பூங்குடியில், பகலவன் வரவில், பனித்துளிகள் முத்துச்சிதறலாய் முறுவலிக்க வானரங்களின் மரக்கிளை தாவலால் பூத்துக் குலுங்கும் புதுமலர்கள், பூமியில் விரிப்பாகவும், மயில்களின் அகவல் மற்றவர்களை ஈர்த்து மகிழ்விக்க எதிலும் ஈடுபாடின்றி சிலையாய்ச் சாய்ந்திருந்தாள் சீதா.”

பெண் சிசுக் கொலை பற்றியும்,குழந்தை பிறப்பதில்  கணவனுக்கு குறை இருந்தாலும் மனைவியை குறை சொல்லும் சமுதாயதை சாடி உள்ளார் . குழந்தை இல்லாவிட்டால் ஆதரவற்ற குழந்தை எடுத்து வளர்க்கலாம் என்ற நல்ல கருத்தையும் வலியுறுத்தியது ‘கடவுளின் பரிசு’ சிறுகதை.

‘நிறம் மாறும் உறவுகள்’ சிறுகதை நட்பின் மேன்மையும்,  பணம் பணம் என்று அலையும் இயந்திரமயமான மனிதர்களுக்கு பணத்தை விட அன்பே உயர்ந்தது என்பதை உணர்த்தி உள்ளார்.

கலா காத்திருக்கிறாள் சிறுகதையில் வரதட்சணை இன்னும் ஒழியவில்லை என்பதையும் ,மணமக்கள் எய்ட்ஸ் சோதனை செய்து கொள்வது நல்லது என்பதையும் சுட்டி உள்ளார்.

‘மனத்தின் மறுபக்கம்’ சிறுகதையில் உறவுகள் குணத்தை விட பணத்தையே பெரிதாக மதிக்கின்றனர் என்பதை உணர்த்தி உள்ளார்.

‘உள்ளம் ஊனமல்ல’ கதையில் மனிதநேயம் வலியுறுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகளின் மனதை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.

‘அலைபாயும் ஆழ்மனம்’ கதையில் இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்பட்டால் ஆபத்து.  பேராசை பெரு நஷ்டம் என்பதை புகட்டி உள்ளார்.

‘நம்பிக்கை’ கதையில் பிறருக்கு உதவுவது நல்லது. தர்மம் தலை காக்கும் என்ற நெறியை உணர்த்தி உள்ளார்.  நாம் பிறருக்கு உதவினால் நமக்கு பிறர் உதவுவார்கள் என்பதையும் படம் பிடித்துக் காட்டி உள்ளார்.

அழகுக்குப் பின்னால் சிறுகதையில் ஓர் ஆண்மகன் ஒரு பெண்ணை நேசிக்குமுன் அவள் மணமாகாதவளா? என்பதை உறுதிசெய்து கொண்டு நேசிக்க வேண்டும் என்பதையும், இளம் வயது விதவை என்றால் மறுமணம் செய்து கொள்வது நல்லது என்பதையும் வலியுறுத்தி உள்ளார்.

தீர்ப்பு என்ற கதையில் பணத்தையும் தாண்டி உறவுகளே கடைசி வரை துணை வரும்.  பணம் என்பது அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட காகிதம்.  அவ்வளவு தான்.  அதைத் தாண்டி வேறு ஒன்றுமில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.

‘தேடல்’ என்ற கதையில் மூட நம்பிக்கைகளை சாடி உள்ளார்.  நரபலி மடமையைச் சொல்லி, பகுத்தறிவை விதைத்து, உழைப்பால் உயர வேண்டும். குறுக்குவழியில் உயர நினைப்பது முட்டாள்தனம் என்பதையும் உணர்த்தி உள்ளார்.

வாரிசு’ சிறுகதையில் பெண் குழந்தை என்றால் பேதலிப்பவர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக, பெண் என்றால் சாதிப்பவள், பெண்ணை தாழ்வாக எண்ண வேண்டாம் என்று பெண்ணிய கருத்துக்களை கதையின் மூலம் உணர்த்தி உள்ளார்.

பனிரெண்டு சிறுகதையிலும் ஏதாவது செய்தி சொல்லும் விதமாக சமுதாயத்திற்கு பயனுள்ள தகவல்கள் தரும் விதமாக,  நெறிப்படுத்தும் விதமாக, பண்படுத்தும் விதமாக, பணத்தை விட குணமே சிறந்தது என்றும், மனிதநேயம் மலர்விக்கும் விதமாக சிறுகதைகள் எழுதி உள்ள நூலாசிரியர் எழுத்தாளர் சுப. ராதாபாய் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் பெற்றவருக்கு இந்த நூலிற்காகவும் விருது வரும் என்று வாழ்த்துகிறேன்.

சில இடங்களில் எழுத்துப் பிழை உள்ளன.  அடுத்த பதிப்பில் திருத்தி விடுங்கள்.

நூலாசிரியர் எழுத்தாளர் சுப. ராதாபாய் அவர்கள் முதுகலை பட்டம் பெற்றவர்.  புதுக்கோட்டை அரசு மறுவாழ்வு மையத்தில் செவிலியர் பணியினை திறம்பட ஆற்றி ஓய்வு பெற்றவர் என்பதால், செவிலியர் பணி என்பது பொறுமையும் மனிதநேயமும் மிக்க பணி. மனிதநேய சிறுகதைகள் வடிக்க காரணம் செவிலியர் பணி அனுபவம் என்றால் மிகையன்று.  பாராட்டுக்கள்.

 

கீர்த்திகா பதிப்பகம், 13/25, காமராஜபுரம் 8ஆம் வீதி, புதுக்கோட்டை-622 001.  அலைபேசி :95500 37539. விலை : ரூ. 50.

 

                         www.tamilauthors.com