நூல் : அண்ணல் வருவானா? (கவிதைத் தொகுதி)
நூல் ஆசிரியர் : எஸ். முத்துமீரான்
நூல் அறிமுகம்:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்


லங்கையின் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எஸ்.முத்துமீரான் அவர்கள். தொழில் ரீதியாக இவர் ஒரு வழக்கறிஞராக கடமையாற்றி வருகிறார். கவிதை, சிறுகதை, வானொலி நாடகம், கிராமிய இலக்கிய ஆய்வுகள் எனப் பல்வேறு துறைகளிலும் மிகவும் கரிசனையோடு நீண்டகாலமாக ஈடுபாடு காட்டி வருகிறார். யாப்பு மரபையும், புதுக் கவிதை மரபையும் ஒன்றிணைத்து படைப்புக்களை படைப்பது இவரது விசேட தன்மையாகும். நிந்தவூரான், லத்திபா முத்துமீரான், நிந்தன், முத்து ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதிவரும் எஸ். முத்துமீரான் அவர்கள் தனது கவிதைகளைப் புனையும்போது விசேடமாக மட்டக்களப்பு முஸ்லிம்களின் மொழி வழக்கையை கையாள்கிறார்.

இவர் 200க்கு மேற்பட்ட வானொலி ஆக்கங்களையும், 100 க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 100 க்கு மேற்பட்ட உருவகக் கதைகளையும், 250 க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளதுடன் 30 க்கு மேற்பட்ட ஆய்வுகளையும் செய்துள்ளார். இந்த அடிப்படையில் பல நூல்களையும் இவர் வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. உருவகக் கதைகள் (1982), முத்துமீரான் சிறுகதைகள் (1991), கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம் (1991), முத்துமீரான் கவிதைகள் (1993), கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் (1997), இயற்கை - உருவகக் கதை (1999), இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள் (2005), மனிதம் சாகவில்லை - கவிதை (2005), கருவாட்டுக் கஸ்ஸா - கவிதை (2005), இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்கள் (2007), கக்கக் கனிய... - சிறுகதை (2007), கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள் (2011), என்னடா கொலமும் கோத்திரமும்? - சிறுகதை (2013), கிழக்கிலங்கை நாட்டுப்புற முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்வும் வாழ்வாதாரங்களும் (2013) ஆகிய 15 நூல் தொகுதிகளை இதுவரை வெளியிட்டுள்ளார். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் என்ற ஆய்வு நூலுக்கு 1997 ஆம் ஆண்டிற்கான வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலபட பரிசு கிடைத்துள்ளது.

இந்திய நாட்டின் நேர் நிரை வெளியீடு எஸ்.முத்துமீரானின் அண்ணல் வருவானா? என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது. 126 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் 62 கவிதைகள் இடம் பிடித்துள்ளன.

இந்த நூலுக்கு மதத்தினூடாக - மதங்கடந்து மானுடம் தேடி என்ற தலைப்பிட்டு தனது கருத்துரையை இன்குலாப் அவர்கள் வழங்கியுள்ளார். இதில் அவர் "இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் நாட்டுப்புற வழக்காற்றுப் பாடல்களைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தியதில் திரு முத்துமீரானுக்குப் பெரும்பங்கு உண்டு. சென்னை வரும் போது சந்தித்து உரையாடியதில் அவருடைய குழந்தை முகமும் மனமும் எனக்குப் பிடித்துப் போயின. போரால் அலைக்கழிக்கப்படும் ஒரு மண்ணில், ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் கலைஞர் இவர்" என்கிறார்.

ஒரு சொட்டுக் கண்ணீராவது என்ற தலைப்பட்டு தனதுரையில் எஸ். முத்துமீரான் அவர்கள் "இயற்கை அன்னையின் இனிய தாலாட்டில், இன்புறும் கிராமத்தின் சொந்தக்காரன் நான். என் கிராமத்து மக்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு, அவர்களோடு ஒன்றித்து, நகமும் சதையுமாய் வாழும், ஒரு படித்த பட்டிக்காட்டான். இந்நூலில் உள்ள கவிதைகள் எல்லாம் என் கிராமமும், அதில் வாழும் மக்களின் அவலங்களும், ஆசைகளும், அடக்க முடியாத வெப்புசாரங்களும், வெறுப்புகளுமேயாகும். இவை இனத்துவெசிகளையும், இரக்கமில்லா சமூகத் துரொகிகளையும், காம வெறிபிடித்த கயவர்களையும் காறி உமிழ்ந்து, கடித்துக் குதறி எறிவதை, நீஞ்கள் படிக்கும் போது அறியலாம். அரக்க குணம் படைத்த ஆட்சியாளர்களையும், அவர்களின் அவலங்களையும், அறிவையும் மதத்தையும் விற்றுப் பிழைக்கும் வேடதாரிகளையும் முற்றாக வெறுக்கும் ஆளுமையும் துணிவுமுள்ள வழக்கறிஞன் நான். இதனால்தான் என் கவிதைகள் வீச்சாகவும், வீரியமுள்ளவையாகவும், உங்களிடம் வாதிட வந்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலில் உள்ள 62 கவிதைகளில் ஒரு சில கவிதைகளை இனி பார்ப்போம்.

வானில் பறக்கவிடு (பக்கம் 17) என்ற கவிதை ஏழைகளின் துயரைப் பாடி நிற்கின்றது. பறவைகள் சுதந்திரமாகப் பறந்து திரிவன. மனிதர்களுக்கு போல் அவைகளுக்கு கவலை, துன்பம், குரோதம், பொறாமை போன்றவை இருப்பதில்லை. அவை கிடைத்ததை உண்கின்றன. தாய்ப் பறவை தன் குஞ்சுகளுக்கும் இரை தேடி வருகின்றன. அதிகாலையில் இனிமையாக கீச்சிட்டுக்கொண்டு அதே தொழிலை செய்கின்றன. தான் ஒரு குருவியாக படைக்கப்பட்டிருந்தால்.. என்ற கற்பனையை கவிஞர் இந்தக் கவிதையினூடாக கூறியிருக்கின்றார்.

வண்ணக் குருவியாய் என்னைப் படைத்து நீ, வானில் பறக்கவிடு - நான் கண்ணீரில் வாடிக் கதறி அழும் மக்கள் கவலையைப் போக்கி வர.. ஏழைகள் வாழ்க்கையைக் குதூகலமாக்கும் எத்தர் அழிவதற்கு - நான் வித்தைகள் கற்று விதியினை, மாற்றிட சக்தியைத் தந்துவிடு.. வையம் செழித்து வளங்கள் பெருகிட வாழ்த்தி, என்னையனுப்பு - நான் வாரிவளங்களைக் கோரியே வந்திங்கு பாரை நிரப்புதற்கு கொடிய துவேசிகள் கொடுமையழித்திட கொடுவாளைத் தந்துவிடு - நான் வெட்டியழித்து வேரோடு சாய்த்துடன் கெட்டியாய் வந்துவிட.. படைப்புகளெல்லாமே பரமனின் சொத்தென்று பறையை அடிப்பதற்கு - நான் பாடிப் பறந்துபோய் ஓடியே வந்திட பாதையைக் காட்டிவிடு.. மானிட நேசம் மனித மனங்களில் மலர்ந்து ஒளிர்வதற்கு - நான் ஆனந்தமாக அங்கு பறந்து போய் அன்பினைக் கூட்டிவர!!

அண்ணல் வருவானா? (பக்கம் 19) என்ற கவிதை நடைமுறை வாழ்வில் அரங்கேறும் அநியாயங்களையும், அசிங்கங்களையும் பற்றி எடுத்துரைக்கின்றது. ஏழை உழைப்பில் வயிறு வளர்த்து, தம் உல்லாச ஆசைகளுக்காக ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி வாழும் மனித மிருகங்களை அம்பால் எய்து அழிப்பதற்கு அண்ணல் வருவானா என்று கேட்டு நிற்கும் கவிஞர், அதே வேளை சாதி வெறியைக் கிளப்பிவிட்டு மக்கள் துயரில் குளிர் காய்பவர்களையும், மதம் என்ற பெயரில் மகா தவறு புரிந்து பொது மக்களை ஏமாற்றுபவர்களையும் அழித்து உலகத்தைக் காப்பாற்ற அண்ணல் வருவானா என்று கேட்டு நிற்கும் விதம் இதோ..

வானில் தெரியும் வளர் பிறையை, வளைத்து வில்லாய் எடுத்து வந்து, ஏழை உழைப்பை சுரண்டி வைத்து, இரவும் பகலும் கூத்தியுடன், கூடிக்குலாவி மதுவெறியில், ஆடித் திரியும் கொடியவரை, அம்பால் எய்தி அழிப்பதற்கு, அண்ணல் ஒருவன் வருவானா? சாதி வெறியால் துவேசத்தால் சண்டை குழப்பம் செய்பவரை, பொய்யைச் சொல்லி ஏமாற்றும் போலித் தலைவர் கயவர்களை மதத்தைவிற்று உடல் வளர்க்கும் மாயப் போலிச் சாமிகளை அடித்து உதைத்து அழிப்பதற்கு அண்ணல் ஒருவன் வருவானா?

பாவிகள் (பக்கம் 31) என்ற கவிதை நன்றி கெட்ட மனித வர்க்கம் பற்றி பேசியிருக்கின்றது. பாவங்களை புரிபவர்கள் மாத்திரம் பாவிகள் அல்லர். உயிரை, உடலை மட்டுமன்றி அதைப் பேணிப் பாதுகாக்க உணவையும், மானிடர்கள் சிறந்துவாழ்வதற்காக உயிரை விடவும் மேலான அண்ணல் நபி அவர்களையும் அருளித்த தந்தவன் அல்லாஹ். அவனை மறந்தும் இணை வைத்தும் வாழ்கின்றவர்கள் பாவிகளே. மனிதனை வழிகெடுக்கும் ஷைத்தானின் கூட்டாளிகளாக வாழ்ந்து ஏழை எளியவரை இழிவாக நோக்குபவர்களும் பாவிகளே. இரு கண்களைப் போன்ற தாய் தந்தையரையும், சகோதரர்களையும், சுற்றத்தாரையும் ஒதுக்கிவிட்டு வாழ்பவர்களும் பாவிகளே என்பதை கீழுள்ள கவிதை வரிகள் உணர்த்தியிருக்கின்றன.

உடல்தந்து உயிர் தந்து உறுதியோடு உலகத்தில் வாழ்வதற்கு உணவும் தந்து, அருட்கொடையாய் அண்ணலரை எங்களுக்கு அழகான பரிசாக ஆக்கித்தந்த, அல்லாஹ்வை மறந்துலகில் வாழுகின்ற எல்லோரும் இவ்வுலகில் பாவிகளே. வல்லவனாம் அல்லாஹ்வை வாழ்நாளிலே வணங்காது சாத்தானின் கூட்டாளியாய், அண்ணல் நபி பொன்மொழிகள் போதனைகள் அத்தனையும் புறத்தொதுக்கி, எப்பொழுதும் ஏழைகளை எளியவரை ஏய்த்து வாழும் இரக்கமில்லா எல்லோரும் பாவிகளே.. ஒழுக்கத்தை விலைபேசி விற்பவரும் உயர்பண்பை மறந்துலகில் வாழ்பவரும் பாவிகளே!!

ஆசான்கள் (பக்கம் 36) என்ற கவிதை ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தைப் பற்றி விளக்கியிருக்கின்றது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கூற்றிலும் தாய் தந்தைக்கு அடுத்து ஆசிரியரே நோக்கப்படுகின்றார். ஆசிரியர்களின் ஆசி, ஒரு மாணவனின் வாழ்க்கையையே உயர்த்திவிடுகின்றது. மற்றவர்களின் பிள்ளைகள் நன்றாகப் படித்து பட்டம் பெற வேண்டும் என்பதற்காக தாம் கற்ற அறிவை அள்ளி வழங்குபவர்கள் ஆசிரியர்களே. ஒரு குழந்தைக்கு இரண்டாவது வீடாக பாடசாலை ஆகிவிடுகின்றது. பல மணி நேரங்களை பாடசாலையில் கழிக்க நேர்கின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் தாயும் தந்தையுமாக நின்று செயற்படுபவர்கள் ஆசிரியர்கள் தாம். ஆசிரியர்களின் மனதை நோவினை செய்யாமல் சிறந்த மாணவரக பெயரெடுத்தவர்கள் எல்லாம் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக ஆகிவிட்ட சந்தர்ப்பங்கள் கண்கூடு. அத்தகைய ஆசிரியர்கள் பற்றிய கவிதை இவ்வாறு அமைந்துள்ளது.

கல்விக்கு வித்திட்டு காலமெல்லாம் நல்லவனாய் வாழ்வதற்கு வழியும் காட்டி.. கண்ணியத்தின் இருப்பிடமாய் வாழுகின்ற நல்லாசான் எல்லோர்க்கும் இரஞ்சுவோமே.. எத்தனையோ ஆசிரியர் இருந்திட்டாலும் சத்தியத்தின் வழிநடந்து சான்றோனாக பக்தியுடன் வாழ்ந்துலகில் சேவை செய்த பண்பாளர், நல்லவரே குருவாவார்கள்.. அடுத்தவரின் பிள்ளைகளின் தலைதடவி அன்போடு கல்வியினை ஊட்டுகினற ஆசிரியர் ஒருபோதும் அழிவதில்லை அவர் நாமம் எப்பொழுதும் நிலையானதே.. ஊணின்றி உறக்கமின்றி உழைத்துழைத்து ஓடாகிப் போனபின்பும் மாணவர்க்காய் ஓயாது பாடுபடும் ஆசான்களை ஒருபோதும் மறவாது உலகமென்றும்!!

தண்டனைகள் போதும் (பக்கம் 64) என்ற கவிதை இன்றுகளில் மிகப் பொருந்திப் போகின்றது. சுனாமியின் கோரப் பசிக்கு மனிதர்கள் ஆளாகி இன்றைக்கு பதினொரு வருடங்கள் கழிந்துவிட்டது. ஆனாலும் சுனாமி, இதயத்தில் தந்துவிட்டுப் போன தழும்புகள் இன்னுமே மாறவில்லை. பெற்றோரை, பிள்ளைகளை, சொந்த பந்தங்களை, சொத்து சுகங்களை எல்லாம் இழந்து நிர்க்கதியாகிவிட்ட பலர் இன்றும் தாம் நன்றாக வாழ்ந்த காலத்தை எண்ணி பெருமூச்சு விடுகின்றமை பொய்யல்ல. அது மாத்திமா? சுழல் காற்றும், தொடர் மழை விழ்ச்சியும் மண் சரிவினை தோற்றவித்துள்ளது. அந்த அயற்கை அனர்த்தத்தில் பலியானவர்கள் ஏராளம். மலைகள் இடம்பெர்ந்து வீடுகளையும், வாகனங்களையும் அதில் இருந்தவர்களையும் பலியெடுத்துக்கொண்ட சோக நிகழ்வுகளை வரலாறு சொல்லும். இவை எல்லாம் இறைவனின் கோபத்தால் ஏற்பட்டதா? அல்லது மக்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டதால் வந்த வினையா? பூமியில் சுதந்திரமாக வாழ வேண்டியவர்கள், தீய குணங்களுடன் ஒள்றிணைந்து அடுத்தவர்களை விழ வைத்துப் பார்த்து சந்தோசமடைவதால் இயற்கை அல்லது இறைவன் கொண்ட கோபத்தால் வந்த சோதனையா? எது எப்படியென்றாலும் மனிதர்கள் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் தளர்ந்து போய்விட்டார்கள். அவர்களுக்கு இறைவன் சக்தியைக் கொடுக்க வேண்டும். இறை நம்பிக்கையற்று வாழ்வோருக்கு பக்தியைக் கொடுக்க வேண்டும். கவிதை இதை இவ்வாறு கூறியிருக்கின்றது.

எங்கள் இறைவா! ஏனுனக்கு இக்கோபம்? ஆழி அலைகளுக்கு அத்தனையும் பறிகொடுத்து கேள்விக்குறியாய் கிடக்குமெங்கள் வாழ்க்கையிலே, புயலும், மழையும், பூமி அதிர்வுகளும், தொடர்ந்து வந்து எங்களுக்கு தொல்லை தருவதென்ன? எலும்போடு தோல்ஓட்டி இருக்கின்ற எங்களிடம் கண்ணீர்தான் மிச்சம் கதியென்றும் இல்லையப்பா! கஞ்சிக்காய் நாங்கள் கதறி, அழுவதை நீ பஞ்சத்தின் ஓலமென்று வஞ்சித்து விட்டாயா? தஞ்சமென்று உன்னிடத்தில் தவித்துக் கிடக்கின்ற ஏழையெங்கள் வாழ்க்கையிலே ஏனிந்த சோதனைகள்? கருணையுள்ள ஆண்டவனே கல்லாகிப் போனாயா? நித்திரையும், நிம்மதியும் நீர்மேல் எழுத்தாகப் போனதினால் நாங்கள் புழுங்கிக் கிடக்கின்றோம். சீறிச் சினத்தெங்கள் சீவியத்தை சீரழித்த ஷசுனாமி| அலையும் சுழற்காற்றும் அதிர்வுகளும் இனிவேண்டாம் எங்களுக்கு இரங்கியெம்மை காத்துவிடு! தண்டனைகள் போதும் தாள் பணிந்து கேட்கின்றோம்.. நிம்மதியைத் தந்தெம்மை நித்தியனே வாழவிடு!!

சமூக நிலைப்பாட்டை எடுத்துக்கூறும் இத்தகைய கவிதைகள் இத்தொகுதியில் உள்ளடங்கியிருக்கின்றன. கவிஞர் அவற்றை அழகிய முறையில் வாசகர்களுக்கு வழங்கியிருக்கும் விதம் மிகவும் சிறப்பானது. தாஜுல் அதீப், கலாபூஷணம், தமிழ் மணி, கவிக் குரிசில், இலக்கியத் திலகம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவரது இலக்கியப் பணிதொடர வாழ்த்துகிறேன்!!!

நூல் - அண்ணல் வருவானா?
நூல்
வகை - கவிதை
நூலாசிரியர்
- எஸ். முத்துமீரான்
வெளியீடு
- நேர் நிரை
வெளியீடு

 

                         www.tamilauthors.com