நூல் : பறத்தலுக்கான பாடல்!
நூல் ஆசிரியர் :
கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா. இரவி


நூலாசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ஓய்வின்றி எழுதி வரும் படைப்பாளி. 10 நூல்களின் ஆசிரியர். குட்டி சப்பான் என்று சொல்லும் சிவகாசி என்ற கந்தக பூமியின் கந்தகக் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி. மனதில் பட்டதை பட்டென கவிதையாக வடிக்கும் ஆற்றல் மிக்கவர். மதுரை, சென்னை எங்கெல்லாம் இலக்கிய விழாக்கள் நடந்தாலும் தேடிச்சென்று ரசித்து மகிழும் தேனீ. இலக்கிய விழாக்களில் சந்தித்தும் மகிழும் நண்பர்.

மகாபாரத்தை நன்கு படித்து உள்வாங்கி எள்ளல் சுவையுடன் மாற்றி யோசித்து வடித்த கவிதை மிக நன்று. இன்றைய புதுமைப்பெண்ணாக பாஞ்சாலியை சித்தரித்தது சிறப்பு.

கிருஷ்ணன் காத்திருக்கிறான் !
கரங்களை விரித்து

அபயம் அபயம் என
அலற வேண்டியளோ
நிமிர்ந்த நன்னடை போட்டு
நேர் கொண்ட பார்வையோடு
பீமனின் கதையைப் பிடுங்கி
துச்சாதனன் தலையை ...
அர்ச்சுனன் காண்டீபம் எடுத்து
துரியோதனன் நெஞ்சை
ஒளிய ஒடிய சகுனிக்கு
ஏதுமறியாது கிடந்த பகடைகளை
துணிவற்ற சபையோருக்கு
காரி உமிழ்ந்த எச்சிலை
பரிசாக்கிச் சிரித்தாள்
அச்சிரிப்பு எத்திசையும் விரிந்து
பாண்டவர் சங்கை நெரிக்க
அபயம் அபயம் என்ற
அவர்களின் அலறல் ...


இப்படி வித்தியாசமாக சிந்தித்து புதிய மகாபாரதத்தை கவிதையில் வடித்த நூலாசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களுக்கு பாராட்டுக்கள். மாற்றி யோசித்தன் விளைவே இக்கவிதை.

சமூகத்தில் நடக்கும் சீர்கேட்டை சுட்டிக்காட்டி கவிஞர்கள் கவிதைகள் வடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சீர்கேடுகள் சீராகவில்லை என்ற வருத்தத்தை மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாக வடித்தது சிறப்பு.

தொடர்களுக்குள் அவள்களும்
பார்களுக்குள் அவன்களும்
கவிதைகளுக்குள் நாங்களும்!


சதுரங்கம் என்ற விளையாட்டை கவிதையால் வடித்து நம் கண் முன்னே சதுரங்க விளையாட்டை விளையாடி காட்டியது சிறப்பு.

சதுரங்க விளையாட்டில் சாதித்தவர்களும் உண்டு. சரிந்தவர்களும் உண்டு. சரித்திரம் உண்டு.

சதுரங்கம் !
கருப்பு வெள்ளை கட்டம்! – இதில்
ஏகப்பட்ட சட்டம் – இது
ராசா காலத்து ஆட்டம் – இதில்
ராசாவை காக்குறதே ஆட்டம்!
முன்னால் போகும் காலாட்படை!
நேரப் போகும் யானைப்படை!
குறுக்கப் பாயும் மந்திரிப்படை!
எதையும் தாவும் குதிரைப்படை!
கட்டுப்பாடு எதுவும் இல்லாம
எட்டுதிக்கும் பறந்தடிக்கும் ராணி – இது
அறிவு வளர்க்கும் ஏணி! – இதில்
மூளைக்குத்தான் வேலை!


இக்கவிதையைப் படித்தால் போதும் சதுரங்க விளையாட்டு பற்றி அறியாதவர்களும் அறிந்து கொள்வார்கள். வித்தியாசமான கவிதை வடித்து வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி. சமூகத்தின் மீது பற்றுக் கொண்ட காரணத்தால் உரக்க சிந்தித்து சீரான கவிதைகளை வடித்துள்ளார், பாராட்டுக்கள்.

மகாகவி பாரதியோடு உரையாடுவது போல வடித்த கவிதை நன்று.தமிங்கிலம் பேசி தமிழ்மொழியைச் சிதைத்து வருபவர்களுக்குப் புத்தி புகட்டும் கவிதை.

மொழி அழிந்தால் அடையாளம் அழியும்
அடையாளம் அழிந்தால் கலாச்சாரம் அழியும்
கலாச்சாரம் அழிந்தால் இனம் அழியும்
ஓர் இனத்தை அழிக்க
அணுகுண்டுகள் தேவையில்லை...
அதன் மொழியை அழித்தாலே போதுமெனும்
அடிப்படை கூடவா தெரியவில்லை?

இப்படி பல கேள்விகள் பாரதி கேட்பது போலவே கேட்டு சிந்திக்க வைத்து தாய்மொழிப்பற்றை, தமிழ்மொழிப்பற்றை விதைத்து உள்ளார். பாராட்டுக்கள். தமிழின் பெருமை தமிழன் உணர்வில்லை என்பது தான் வேதனை.

பஞ்சபூதக் கவியரங்கில் பாடிய கவிதையை பஞ்சபூதங்கள் பற்றி கவிதையில் வடித்தது சிறப்பு. வித்தியாசமான நடை, பதச்சோறாக ஒன்று மட்டும்.

நெருப்பே – நீ
என் அடிவயிற்றில்
அடங்கிக் கிடக்கிறாய்
எரிமலையாய்
வெடித்துச் சிதறினாலும்
என்னுள்ளேயே
உன் நெருப்பாறு.


தமிழகத்தில் திரைப்பட மோகம் ஒழியவில்லை. கட் அவுட்டிற்கு மாலை இடுவத, அபிசேகம் செய்வது தோரணம் கட்டுவது, நடிகைக்கு கோயில் கட்டுவது என்று கோமாளித்தனம் குறைந்தபாடில்லை. தமிழகத்தின் நிலையை படம்பிடித்துக் காட்டும் விதமாக வடித்த கவிதை நன்று. பகுத்தறிவை உணர்த்திடும் கவிதை இது.

சக்கரம் !
வாழ்க்கை ஒரு வட்டம்
கீழ இருக்கிறவன் மேல வருவான்
மேல இருக்கிறவன் கீழ வருவான்
சினிமா தத்துவங்கள்
தரும் நம்பிக்கைகள்
கதாநாயகனுக்கு அல்ல
எங்களுக்கு என்றே ... எண்ணி
அவர்களிடமே
அரியணைகள் வழங்குகிறோம்!
அரியணைகள்
அவர்களை வில்லன்களாக மாற்றி விடுகிறது
பாவம்
அவர்கள் என்ன செய்வார்கள்!
எங்கள் இரவுகளையும் கனவுகளையும்
அவர்கள் காலடியில் வைத்துவிட்டு
எப்போதும் போல் சுழல்கிறது
வாழ்க்கைச் சக்கரம்.


நாட்டில் அமைதி நிலவவில்லை. எங்கும் எதிலும் வன்முறை. தினசரி செய்தித்தாளில் குண்டுவெடிப்புகள் வராத நாளே இல்லை. உலக அமைதி கேள்விக்குறியானது. சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது. அவற்றை உணர்த்திடும் கவிதை நன்று, மிக நன்று.

ஆயுதங்கள்
விற்பனையாகிக் கொண்டே இருக்கின்றன!
பயன்பட்டுக் கொண்டே இருக்கின்றன!
அதற்கான தேவைகளும்
அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன!
ஆயுதங்கள் தேவைப்படாத உலகமாக மாற வேண்டும்.


இப்படி சமூக அவலங்கள் நாட்டில் அதிகரிக்க அதிகரிக்க படைப்பாளிகளின் நுட்பமான நெறிப்படுத்தக் கூடிய கவிதைகளுக்கான தேவைகளும் இருக்கின்றன. நூலாசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .

 

கந்தகப்பூக்கள் பதிப்பகம்,120, குட்டியணைஞ்சான் தெரு, சிவகாசி-626 123.  விலை: ரூ.80.  sivakasi@gmail.com 

                         www.tamilauthors.com