நூல் : காது வளர்த்த காதலி !
நூல் ஆசிரியர் :
ஞா. தங்கமாரிமுத்து !
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா. இரவி


காது வளர்த்த காதலி நூலின் தலைப்பே மிக வித்தியாசமாக கிராமத்துக் கிழிவியை நினைவூட்டுகின்றது. நூலின் தலைப்பிலான கவிதை, கிராமத்து கிழவியை மனக்கண் முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றது. நூலின் பின் அட்டையில் கவிதை வரிகள் உள்ளன.

நூலாசிரியர் கவிஞர் ஞா. தங்கமாரிமுத்து அவர்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவராக இருக்க வேண்டும். கிராமத்துக் கிழவியை கிராமிய மொழியிலேயே மிக நுட்பமாக வடித்துள்ளார் பாராட்டுக்கள். பதிப்பாளர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களின் அணிந்துரை மிக நன்று. 'காடு செல்லும் வரை வேண்டும்' என்று தொடங்கி 'காதல்' வரை தலைப்புகள் இட்டு
25 கவிதைகள் உள்ளன.

தாத்தா, பாட்டி பற்றி கவிதைகள் வடித்து நூல் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் தாத்தா, பாட்டியை நினைவூட்டி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கவிஞர் தங்கமாரிமுத்து அவர்கள். கவிதை மாரி பொழிந்து உள்ளார். கவிதையில் நந்தவனம் அமைத்துள்ளார்.

விண்ணில் ஒரு விசாரணை !
என் பாட்டனே! எப்படி இருக்கிறாய்?
உன்
கம்பீரக் குரல் கேட்க
மரணித்துப் போவேன்
எத்தனை முறை வேண்டுமானாலும்
திமிராய் சிரித்திருக்கிறேன்
இவன்
என் பாட்டனென்று
நான் சிலிர்க்கவும்
சிந்திக்கவும்
விதை நீ தானே
யார் அங்கே
பாரதியா?
பார் என்
பட்டிக்காட்டு பாட்டனை
கோகிலாபுரத்து கோமகனை!


எனக்கும் என் தாத்த செல்லையா அவர்கள் தான் விதையாக இருந்தார். மலரும் நினைவை மலர்ப்பித்தது கவிதை. நூலின் தலைப்பில் உள்ள கவிதை நூலிற்கு மகுடமாக இருந்து கவி ஒளி வீசி அம்மம்மாவை நினைவூட்டுகின்றது.

காது வளர்த்த காதலி!

காலமெல்லாம்
என்னைக் காதலித்த
என்
காது வளர்த்த
காதலி
சோர்ந்து வருவோருக்கு
சோறு போட்ட
அட்சய பாத்திரம்!
பட்டினியோடு போராடிய
என் பாட்டனின்
பட்டத்து ராணி
கருவாட்டுக் குழம்பு வச்சி!
காதலை சொல்லும்
காவியம் அறியாத கருவாச்சி.


கவிதையை கிராமிய மொழியிலேயே எழுதி கிராமத்தை நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் காந்தியடிகள். ஆனால் இன்று கிராமங்களில் வாழ முடிகிறதா? என்பது கேள்விக்குறியாகிஇ உலகமயம் கிராமத்தை விழுங்கி வருகின்றது.

முதியவர்களை மதிக்க வேண்டும் என்று இன்றைய இளைய சமுதாயத்திற்கு எடுத்துரைக்கும் விதமாக வடித்த கவிதை நன்று.

மூலவர் இல்லாத கோயில்!

பட்ட பாட்டிற்கு
பட்டாடை வேண்டாம்
பரிவு காட்டுங்கள்
போதும்!
உங்கள் வளர்ச்சிக்காக
தங்களை உதிர்த்தவர்களை
உதாசீனப் படுத்தாதீர்கள்!
சீதனமாய காத்திடுங்கள்!


சித்தர்கள் பாடல் போல, சித்தாந்தம் கூறுவது போல, வாழ்வியல் தத்துவம் விளக்குவது போல வடித்த கவிதை மிக நன்று.

 சுழற்சி!

புழுவிற்கு ஆசைப்பட்டது மீன்
மீனுக்கு ஆசைப்பட்டான் மனிதன்
மீனுக்குச் சிக்கியது புழு
மனிதனுக்குச் சிக்கியது மீன்!
புழுவிற்கு? ஆனாலும் காத்திருக்கிறது புழு
மனிதன் மண்ணுக்கு வரும் வரை!
எதுவும் எதையும் விட
உயர்ந்ததும் இல்லை
தாழ்ந்ததும் இல்லை!


எல்லோரும் சமம் என்பதையும் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதையும் நன்கு உணர்த்தி உள்ளார். புழுவை வைத்து மீன் பிடிக்கும் மனிதனேஇ நீயும் ஒரு நாள் புழுவிற்கு இரையாவாய் என்பதை உணர்த்தியது சிறப்பு. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்த்தியது.

வாழ்வின் நிலையாமையை கவிதை வரிகள் மூலம் மிக நுட்பமாக உணர்த்தி உள்ளார்இ பாருங்கள்.

மரணம்!

நிரந்தரமில்லாத உலகில்
நிரந்தரமானது
நினைவுகள் மட்டுமே!
உலகம்
சுற்றுலா மையம்
எல்லோரும் பயணிகள்
திரும்புவது நிச்சயம்
தேதி மட்டும் ரகசியம்!


வாழ்வில் மகிழ்ச்சியோடு இருங்கள். கவலைகள் காணாமல் போகும். எப்போதும் முகத்தில் புன்னகை என்ற நகையை அணிந்தே இருங்கள். வாழ்க்கை வசப்படும் என்கிறார்.

புன்னகை!


புன்னகைப்பீர்!
எதிர்பார்ப்பு இல்லாது
புன்னகை செய்தால்
உலகில் உங்களை விட
அழகானவர் இல்லை
ஐந்து நிமிடம் புன்னகையால்
அழகாகிறது
புகைப்படம்
ஆயுள் முழுக்கப் புன்னகைத்தால்
அழகாகும் வாழ்க்கைப் படம்.


காதலர்களுக்கு பிரிவு என்பது சோகம் தரும் நிகழ்வு. அந்த சோகத்தையும் சுகமாகப் பார்க்கும் பார்வை நன்று.

பிரிவு !

கலைந்து செல்லும் மேகம்
தொலைந்து போவதில்லை
பிரிந்து செல்லும் அன்பு
மறந்து செல்வதில்லை
பிரிவு
சோகம் அல்ல
சுகம்.
இமைகள் பிரிந்தால் தான்
உலகை ரசிக்க முடியும்
பிரிவு
உறவின் முடிவல்ல
நினைவின் ஆரம்பம் !


எதையும் நேர்மறையாக உடன்பாட்டுச் சிந்தனையுடன் பார்க்கும் பார்வை நன்று. முத்தாய்ப்பான முடிப்பு மிக நன்று. தன்னம்பிக்கை விதைக்கும் விதமான கவிதைகள் உள்ளன. பாராட்டுக்கள். படிக்கும் வாசகர்களுக்கு தெம்பு தரும் விதமாகவே படைப்புகள் இருக்க வேண்டும்.

நம்பிக்கை!
கடைசியில் எல்லாம்
சரியாகும் என் நம்பு
சரியாகவில்லையெனில்
கடைசி இல்லை
இது என்று நம்பு!
காலில் ஈரம் படாமல்
கடலை கடந்தவர்களுண்டு
கண்ணில் ஈரம் படாமல்
வாழ்வைக் கடந்தவரில்லை
நம்பிக்கை தான் வாழ்க்கை!


மாற்றுத் திறனாளிகள் அவர்களை சிலர் உற்றுநோக்கும் போது தான் அவர்களுக்கு வலிக்கிறது என்ற உண்மையை நன்கு உணர்த்தி உள்ளார்.

ஊனம் எங்கே?

வலிப்பதில்லை
ஊன்றி நடக்கும் போது
ஆனால் வலிக்கிறது
சிலர் உற்றுப் பார்க்கும் போது
தன்னலத்தோடு வாழ்வது மனிதம் அன்று
பொதுநலத்தோடு வாழ்வதே மனிதம் !


என்பதை உணர்த்தும் கவிதை மிக நன்று.

தனக்காய் மட்டும்
வாழ்ந்து மடியும் மனிதா!
பிறருக்காய் வாழ்வதும்
பிறருக்காய் தருவதும் மட்டுமே
மனிதம்!


நூல் ஆசிரியர் :ஞா. தங்கமாரிமுத்து அவர்களுக்கு பாராட்டுக்கள். மத்தாப்பூ நகராம் சிவகாசியில் இருந்து மத்தாப்பூ கவிதைகள் வந்து கொண்டே இருக்கட்டும் வாழ்த்துக்கள் .

 

கந்தகப்பூக்கள் பதிப்பகம், 120, குட்டியணைஞ்சான் தெரு, சிவகாசி-626 123. விலை: ரூ. 60.sivakasi@gmail.com


  

                         www.tamilauthors.com