நூல் : சொல்லில் உறைந்து போதல (கவிதைத் தொகுதி)
நூல் ஆசிரியர் :
 முல்லை முஸ்ரிபா
நூல் அறிமுகம்:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்


முல்லை முஸ்ரிபா இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்றில் பிறந்தவர். மர்கூம்களான முஹம்மது முஸ்தபா, ஸரிபா உம்மா தம்பதியின் இளைய புத்திரர். இக் கவிஞரின் மூன்றாவது கவிதைத் தொகுதியாக சொல்லில் உறைந்து போதல் எனும் கவிதைத் தொகுதி அண்மையில் வெளிவந்திருக்கிறது. 2002 இளம் படைப்பாளிக்கான கௌரவ விருது, 2004 இல் தேசிய சாகித்திய விருது, 2004 இல் வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருது, 2006 இல் வன்னிச் சான்றோர் விருது, 2010 இல் கொடகே தேசிய விருது, தேசிய சாகித்திய சான்றிதழ், வடமாகாண இலக்கிய விருது ஆகியவற்றையும், 2011 இல் யாழ் முஸ்லிம் இணையத் தளத்தின் மூத்த படைப்பாளிக்கான சிறப்பு விருது ஆகியவற்றை கவிஞர் முல்லை முஸ்ரிபா பெற்றுள்ளார்.

இவரது முதல் கவிதை நூல் இருத்தலுக்கான அழைப்பு என்பதாகும். இந்த நூல் 2003 இல் வெளிவந்தது. அதனைத் தொடந்து தனது இரண்டாவது கவிதைத் தொகுதியான அவாவுறும் நிலம்
(2009) என்ற கவிதை நூலை வெள்ளாப்பு வெளியினூடாக வெளிக் கொணர்ந்திருக்கின்றார். என் மனசின் வரைபடம், எஞ்சியிருக்கும் சிறகுகளால் பறத்தல், மண்ணிறத்தவன் கவிதை ஆகிய நூல்களை கைவசம் வெளியீடு செய்வதற்காக வைத்துள்ளார்.

மொழித்துறை விரிவுரையாளராக, முதன்மை ஆசிரியராக, இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராக, பத்தி எழுத்தாளராக, கவிதைத் திறனாய்வாளராக தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் இக்கவிஞரின் முதல் தொகுதியிலுள்ள மீதம் என்ற கவிதை க.பொ.த. சாதாரணதர தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது இவரது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் அமைந்திருக்கின்றது.

காலமும் காலநிமித்தமுமாக உயிர்த்தெழும் கவிதைகளாகவே சொல்லில் உறைந்து போதல் கவிதை நூலில் உள்ள கவிதைகள் அமைந்துள்ளன. வெள்ளாப்பு வெளியினூடாக வெளிவந்துள்ள இந்த நூலில்
59 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன.

கவிதைகள் குறித்த இன்பத்தை, அதன் ரசனையைத் தூண்டும் விதமாக எழுதுவதில் கவிஞர் முல்லை முஸ்ரிபா தனித்துவமானவர். அவர் அடையாளப்படுத்தும் கவிதைகளின் கரு ஒவ்வொன்றும் அன்றாட வாழ்க்கையில் நாம் கண்டுவிட்டு ஒதுங்கிப் போகும் சின்னச் சின்ன விடயங்களே. அவ்வாறான வாழ்வியல் நடைமுறை குறித்த பார்வையை அழகியல் சார்ந்த கவிதைகளாக எழுதி சொல்லில் உறைந்து போதல் என்ற தனது மூன்றாவது கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கின்றார் கவிஞர் முஸ்ரிபா.

உயிர்ப்பு
1 (பக்கம் 01) என்ற கவிதை ஊர் பற்றிய தனித்துவத்தை நெஞ்சில் விதைக்கின்றது. பொதுவாக யாரும் ஊரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மண் வாசனை என்ற ஒரு பொதுப் பண்பு கொண்டு மனிதர்களின் குணங்கள்; அளிவிடப்படுகின்றன. வௌ;வேறான வாழ்க்கை முறைகள், சம்பிரதாயங்கள், கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள் இடத்திற்கிடம் மாறுபடும். ஒவ்வொருவருமே தத்தம் உயிருக்கு நிகராக ஊரையும் நேசிப்பார்கள். கவிதையில் வருகின்ற உம்மம்மாவும் அப்படித்தான் என்பதை கீழுள்ள வரிகள் இயம்புகின்றன...

உம்மம்மாவின் கண்கள்
குழி விழுந்து பஞ்சையாயின
அருகிலிருக்கும் பொருளையோ குரலையோ
அடையாளம் காண முடிவதில்லை அவளால்
ஆனாலும்
ஆலச் சந்தடியில் தொடங்கி
அதனது உயிர்ப்புச் சிதறாமல்
ஊரினது வரைபடத்தை முழுதாய்
கவ்வியிழுத்து வருகின்ற
அவளது முகத்திலும் அகத்திலுமான
உணர்வின் ரேகைகள்
என் கண்களுக்குள் வெளியாயின!


வாழ்வாதாரத்தை தேடும் வழிகளில் வியாபாரத்தின் பங்கு மிக முக்கியமானது. விசாலமான கடைத் தொகுதியை வைத்திருப்பவன் தொடக்கம், பாதையில் கூவிக்கூவி பொருட்களை விற்பவன் வரைக்கும் பணத்தின் தேடலே குறிக்கோளாக இருக்கின்றது. காலத்தைக் கூவுபவன் (பக்கம்
02) என்ற கவிதையின் தலைப்பே ரசிக்கத்தக்கதாக இருக்கின்றது. நாள் முழுவதும் கூவிக்கூவியே பொருட்களை விற்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு வியாபாரி காலநிலை மாற்றங்களைக் கண்டுகொள்வதில்லை. மெய் வருத்தம் பார்த்துப் பார்த்து உழைக்காமல் இருப்பதில்லை. அல்லது உழைக்கும் காசை எல்லாம் ஊதாரித்தனம் செய்து விடுவதுமில்லை. மாறாக அவனுக்கு வலியோ, வியாதியோ, களைப்போ ஏற்படும்போது தன் குழந்தையரை நினைத்துக்கொள்கின்றான். அவர்களது வதனம் அவன் நினைவுகளில் நிழலாடும் வேளைகளில் அவன் அயர்ந்துவிடாது தன் உழைப்பே குறியாக இருக்கின்றான் என்பதனால் ஆகும். அந்தக் கவிதை இப்படி விரிகிறது..

வியாபாரத்தைக் கூவுபவன்
வியர்வையால் நிரம்பியிருக்கிறான்
நம்பிக்கைச் சுடர் கண்களிலெரிய
நாளைக்கான நிமிசத்தை விதைக்கிறான்
அயர்ந்து போகும் ஜீவிதப் பிடிப்பை
தன் மதலையரின்
சிரிப்பொலி கொண்டு களிப்புறுகிறான்
குழந்தையரின் ரூபம்
தன் வரைபடத்தில் விரிய
வியாபாரத்தை உற்சாகமாய் கூவியபடி
மீண்டும் மீண்டும் அலைகிறான்
அவனது கூடையில் வழிகிறது
இல்லாமையின் உள்ளமை!


குறிப்பிட்டதொரு இனம் குறித்த ஆதாரங்கள் அடியோடு அறு(ழி)க்கப்படுவதற்கான சூழ்நிலைகள் ஒரு மிகுந்திருந்த காலத்தில் கண்டல் காட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முகவரி தொலைத்த சில உள்ளங்களுக்காக எழுதப்பட்ட கவிதை மனம் கண்டல்காடு (பக்கம் 24) ஆகும். இலங்கையின் வரலாறுகளை இரத்தக் கறைபடியச் செய்த சோக நிகழ்வுகள் நிறையவே இருக்கின்றன. அதிலொரு துளியென இக்கவிதையைக் கொள்ளலாம். ஆயுததாரிகளை குரங்களுக்கு ஒப்பிட்டு எழுதப்பட்டிருப்பதானது, அவர்கள் பற்றிய அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக காணப்படுகின்றது. யாரோ இரண்டு கோஷ்டிகளின் மோதல்களுக்கு பலிக்கடாவாக ஆக்கப்படுவதெல்லாம் அப்பாவிப் பொது மக்களே என்பதற்கு வரலாறு சாட்சி. அந்த பொதுமக்கள்தான் முகாம்களிலும், குடில்களிலும் வசிக்க உந்தப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் எதுவுமே அற்று வாழ்கின்ற வாழ்க்கையில் நிம்மதியற்று தவிக்கும் இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் சொகுசு வாழ்க்கைதான் வாழ்ந்திருப்பார்கள். இம்சித்தலின் வலி இந்தக் கவிதைகளில் இப்படி வியாபித்திருக்கின்றது..

அதிபொழுதொன்றில்
எங்கள் பூர்வீகத்தினுள் புகுந்தன கருங்குரங்குகள்
வேரோடிய நம் சுவடுகளை
அழித்தலின் வெறி
குரங்கு முகங்களில் வழிந்தன
....
ஆதி ரத்தத்தில் புரித்த நிலத்தின் மீதென
அராஜகக் கொடூரம் படரவும்
கண்களுக்குள் முள் ஏறிற்று
மீளவே முடியாச் சோகம் பெருந்துயர்
தீயிட்டதில் சாம்பலானது
...............

தம்மைப் பற்றிய சுய விமர்சனத்தை செய்யாதவர்கள் மற்றவர்களின் பிழை பற்றி தாராளமாகக் கதைப்பார்கள். தன்னைத் திருத்திக்கொள்ள வழியற்றவர்கள் பிறரின் குறைகளைக் களைதல் பற்றிய நுணுக்கத்தை கற்றுக் கொடுப்பார்கள். அதே போல தத்தம் வழ்வில் பல புதிர்கள் இருக்கையில் அதை விடுவிக்கும் முயற்சிகளைச் செய்யாமல் மற்றவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்த ஆய்வுகளைச் செய்வதில் நேரத்தை செலவழிப்பார்கள். இது பற்றி கவிதை வாழ்தல் எனும் புதிர் (பக்கம்
35) என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் விடுகதைகளுடன் அலைகிறார்கள்
அவரவர்களின் கதைகளை அவிழ்ப்பதற்கு
அவரவரால் முடிவதேயில்லை
முயன்று தோற்கிறவர்கள்
மற்றவர்களின் புதிர்களை
நொடிக்குள் அவிழ்த்துப் போடுகிறார்கள்
ஆச்சரியம்
இன்னும் தான் முடிவதில்லை
தம்மை
விடுகதைகளிலிருந்து விடுவிப்பதற்கு

தவிப்புறுபவர்களின் மேல்
மேலும் மேலும் வியாபிக்கின்றன விடுகதைகள்!


தன்னைப் பாதித்த விடயங்கள், சமுதாய விழிப்புணர்வுகள், மக்களின் துயர்கள், வாழ்வின் மாயத் தோற்றங்கள் பற்றிய கருக்களுடன் இன்னும் பல்சுவை அம்சங்களை கருவாகக் கொண்டு அழகியல் பாங்கில் ரசிக்கத்தக்க கவிதைகளைத் தரும் கவிஞர் முல்லை முஸ்ரிபாவுக்கு என் வாழ்த்துக்கள்!!!

நூல் - சொல்லில் உறைந்து போதல்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - முல்லை முஸ்ரிபா
வெளியீடு - வெள்ளாப்பு வெளி
விலை -
300 ரூபாய்

  

                         www.tamilauthors.com