நூல் : தாலாட்டு
நூல் ஆசிரியர் :  
மருதூர் ஜமால்தீன்
நூல் அறிமுகம்:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்டவர் மருதூர் ஜமால்தீன். இலக்கிய உலகில் மரபுக் கவிதைகள் மற்றும் உருவகக் கதைகளை எழுதுவதில் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்துக்கொண்டவர். எம்.எம். ஜமால்தீன் (முஅய்யதி) என்ற இயற்பெயரை உடைய இவர் 15 ஆண்டுகளாக வாளிப்பா ஜும்ஆப் பள்ளி வாசலில் பேஷ் இமாமாகக் கடமையாற்றி வருபவர்.

புரவலர் புத்தகப் பூங்காவின்
10 ஆவது நூல் வெளியீடாக இவரது முதலாவது கவிதைத் தொகுதியான தடயங்கள் 2009 மே மாதத்தில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இதுவரை மொத்தமாக 06 நூல்களை வெளியிட்டுள்ளார். தடயங்கள், ரமழான் ஸலவாத், கிழக்கின் பெருவெள்ளக் காவியம், முஹம்மது (ஸல்) புகழ் மாலை, இஸ்லாமிய கீதங்கள், தாலாட்டு ஆகிய ஆறு நூல்களே அவையாகும்.

இவரது இலக்கியப் பணிகளுக்காக
2008 ஆம் ஆண்டு அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாமஸ்ரீ (சமூக ஜோதி) பட்டமும், 2013 ஆம் ஆண்டு அகில இலங்கை கவிஞர்கள் சம்மேளனத்தினால் காவிய பிரதீப (கவிச்சுடர்) பட்டமும், விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு தாயின் தாலாட்டில் குழந்தையின் அழுகை தீர்ந்துவிடுகின்றது. அடம்பிடித்து விழித்திருக்கும் குழந்தையை ஆசுவாசப்படுத்தி சுகமான தூக்கத்தை அளிப்பது தாலாட்டாகும். ஒரு குழந்தை முதன்முதலாக சங்கீதமாகக் கேட்பதும் தாலாட்டையே ஆகும். தாலாட்டுப் பாடல்களைக் கொண்டே இந்த நூலை ஆக்கியிருக்கும் கவிஞர் குழந்தைகளுக்கான நற்பண்புகள், நல்லொழுக்கங்கள் போன்றவற்றையும் தாலாட்டினூடாகவே தந்திருக்கின்றமை சிறப்பாகும்.

தாலாட்டு என்ற இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள கலாபூஷணம் எஸ். முத்துமீரான் அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"வாழ்வின் தத்துவங்களையும், வரலாறுகளையும், சூட்சுமங்களையும் உலகில் சிறப்பாகவும், யதார்த்தமாகவும் எடுத்தோதிக் கொண்டிருக்கும் படைப்பிலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியங்களே முன்னிலை வகிக்கின்றன. நாட்டுப்புற இலக்கியங்கள், கலப்பில்லாத, தூய்மையான உண்மையின் பிம்பங்களாகும். அதிலும் அன்புக் கொடைகளில் விலைமதிப்பற்ற கொடையென நாட்டுப்புற ஆய்வாளர்கள் அறுதியிட்டுக் கூறியுள்ளனர். நெடிலோசை வடிவில் தாய்மார்களினால் தங்கள் சேய்களை கண்மூடித் தூங்கச் செய்யும் இத்தாலாட்டுப் பாடல்கள் மூலம் பல வடிவங்களில் பாடப்பட்டிருந்தாலும் இதன் உண்மையான நோக்கம் குழந்தைகள் அமைதியாகத் தூங்கச் செய்வதேயாகும்."

தாலாட்டு என்ற இந்தத் தொகுதியில்
107 பாடலடிகள் அமையப் பெற்றுள்ளன.

பக்கம்
02 இல் உள்ள தாலாட்டு அடிகளில் இப்பூமியில் சிறப்பாக வாழ்வதற்குரிய வழிவகைகளை சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கின்றார். படைத்த இறைவனின் அருளைப் பெற்று பார்போற்றும் நல்லவனாக வாழ வேண்டுமென்றும், கலங்கரை விளக்கான கல்வியை நாட்டத்துடன் கற்று உயர்ந்த தொழில் புரிய வேண்டும் என்றும் கூறி நிற்கின்றார். அத்துடன் உயிருக்கும் மேலான ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்வது அவசியம் என்றும் குறிப்பிடுகின்றார். இறைவனின் சிந்தனை அற்றவர்கள் பாவம் செய்வதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகமாகும். பாவம் செய்பவர்களுக்கு நல்ல விடயங்களின்பால் ஈடுபாடு இருக்காது. கல்வியும், ஒழுக்கமும் எட்டாக் கனியாகவே ஆகிவிடும். எனவே முதலில் அவற்றில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆராரோ என் மகனே
ஆராய்ந்திவ் வுலகமிதில்
சீராய் இப்பூமியிலே
சிறப்பாக நீ வளர்வாய்

வல்லோனருளாலே
வந்தாய் இவ்வுலகமதில்
நல்லோருதவி பெற்று
நல்லபடி நீ வளர்வாய்

கல்வியறிவைக் கற்று
கருத்தாய் ஒழுக்கமுடன்
எல்லோரும் போற்றிடவே
என் கண்ணே நீ வளர்வாய்

ஒழுக்கம் தனை மேலாய்
உழுகிப் பணிவுடனே
அழுக்கான தீமை விட்டு
அனுதினமும் நீ வளர்வாய்


பக்கம்
07 இல் உள்ள அடிகளில் முதியோருக்கு உதவுதல், ஆசிரியர்களை மதித்தல் ஆகிய பண்புகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றன. நம்மைவிட வயதில் மூத்தவர்களுக்கு கண்ணியம் செலுத்த வேண்டும். அவர்கள் கூறும் நல்ல உபதேசங்களைக் கேட்க வேண்டும். மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. அதேபோல ஆசிரியர்களின் ஆசிகளைப் பெற்று, அவர்களின் சொற்படி நடந்துகொள்ள வேண்டும், அவர்கள் மகிழ்வுறும் விதமாக செயற்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

முதியோருக் குதவி செய்து
முன்னோனருளைப் பெற்று
மதிக்கும் நல்லாசான்களால்
மகிழ்வுறவே நீ வளர்வாய்


பக்கம்
09 இல் உள்ள அடிகளில் யாரையும் ஏமாற்றி வாழக் கூடாதென்றும், தீய பழக்கங்களான பொய், களவு ஆகியவற்றைப் புரியக் கூடாதென்றும் கூறப்பட்டுள்ளது. ஏழையாக வாழ்ந்தாலும் அடுத்தவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவது பெருங் குற்றமாகும். அதற்காக கோழையாகவும் வாழ்ந்துவிடக் கூடாது. ஒருவன் குட்டுப்பட்டுக்கொண்டே இருந்தால் முன்னேற விடமாட்டார்கள். எனவே துணிச்சலுடன் வாழ வேண்டுமென்றும், உண்மை கூறும் உத்தமனாய் வாழ வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார் மருதூர் ஜமால்தீன் அவர்கள்.

ஏழையாய் வாழ்ந்தாலும்
ஏமாற்றி சதிகள் செய்யும்
கோழையாய் வாழாமல்
குணக்குன்றாய் நீ வளர்வாய்

பொய் களவு மோசடிகள்
புரிந்த பெயர் இல்லாது
மெய்யுரைக்கும் சான்றோனாய்
மேன்மையுடன் நீ வளர்வாய்


பக்கம்
16 இல் உள்ள அடிகளில் திருக் குர்ஆனை மனனமிட்டு, படைத்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வாழ வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் இணைத்து முஹம்மத் நபியவர்கள் நமக்குக் காட்டித் தந்த வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் மனனமிட்டு
அல்லாஹ்விடம் துஆயிறைஞ்சி
நல்ல நபி வாழ்வெடுத்து
நாநிலத்தில் நீ வளர்வாய்

இறைதூதர் போதனையே
இவ்வுலகில் இகழ்ந்து நின்றோர்
கறைபடிந்து வீழ்ந்த கதை
கற்றுணர்ந்து நீ வளர்வாய்


உலகக் கல்வி, ஆன்மீகம் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாக தாலாட்டு எனும் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. உலகக் கல்வியைப் போன்றே மார்க்கக் கல்வியும் மிக முக்கியமாகும். அனைத்து மதங்களும் நல்ல விடயங்களைச் செய்யுமாறே ஏவி நிற்கின்றன. ஆன்மீக உணர்வு இல்லாததன் காரணமாக பல கலாசார சீரழிவுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து மீள்வதற்கு இவ்வாறான நூல்கள் மிகவும் துணை புரிகின்றன. நல்ல விடயங்களை வலியுறுத்துமுகமாக தாலாட்டு எனும் நூலை வெளியிட்ட கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்!!!

நூல் - தாலாட்டு
நூல் வகை - தாலாட்டுப் பாடல்
நூலாசிரியர் - மருதூர் ஜமால்தீன்
தொலைபேசி
- 0775590611
வெளியீடு - தீன் ஜோதி இலக்கிய மன்றம்
விலை -
50 ரூபாய்

 
 

                         www.tamilauthors.com