நூல் : நமது மண்வாசம்
நூல் ஆசிரியர் :  
மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை.
நூல் அறிமுகம்: கவிஞர் இரா. இரவிதழ் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் திரு. ப.திருமலை அவர்கள் குமுதம் உள்ளிட்ட பிரபல இதழ்களில் பணிபுரிந்தவர். பத்திரிகைத் துறையில் சிறந்த அனுபவம் மிக்கவர். அறம் சார்ந்த எழுத்துக்குச் சொந்தக்காரர். எதையாவது எழுதி பணமாக்க வேண்டும் என்ற பண ஆசை இல்லாதவர். பணம் சம்பாதிக்க வேண்டுமானால் வழக்கறிஞர் தொழில் புரிந்து கூட் சம்பாதித்து விடலாம். ஆனால் அவர் நோக்கம் பணமன்று. தனது பேனா வலிமையினால் சமூகத்திற்கு தன்னால் முடிந்த நல்ல செயல் புரிய வேண்டும் என்ற வேட்கை உள்ளவர்.

நல்ல மனிதரை, இவரை ஆசிரியராகக் கொண்டு, நமது மண்வாசம் இதழ் வெளியிடும் திரு. ப. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு முதல் பாராட்டு. அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளது. தாள்கள் கண்ணைக் கவரும் விதமாக, வனப்பாக உள்ளது. உள்ளடக்கம், விழிப்புணர்வு விதைக்கும் அருமையான கருத்துக்களின் சுரங்கமாக உள்ளது. தலையங்கம், வரவேற்று விழிப்புணர்வு விதைக்கின்றது.

60 ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் பெண்களுக்கான வங்கி செயல்பட்ட உண்மையை உணர்த்தியது சிறப்பு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை தான், மகளிர் வங்கிக்கும் முன்னோடியாக இருந்த செய்தி அறிந்து மதுரையில் பிறந்தவன் என்ற முறையில் பெருமை அடைந்தேன். புதுமைகள் நிகழ்த்துவதில் மதுரைக்கு நிகர் மதுரை தான்.

ஏழைக்குக் கல்வி எட்டியும், எட்டாமலும் – கட்டுரை, கல்வி வள்ளல் ஏழைப்பங்காளர் கர்மவீரர் காமராசர் செய்த கல்விப்புரட்சியைப் பாராட்டி, இன்று கல்வி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் பகல்கொள்ளை காரணமாக, ஏழைகள் படும் இன்னல்கள் பற்றியும் எடுத்து இயம்பி விழிப்புணர்வு விதைத்தது பாராட்டுக்கள்.

பாரம்பரிய அழகுமிக்க குதிரை சிலைகள் உருவாகும் ஊர், உருவாக்கும் முறை, உருவான வரலாறு யாவும் படிக்கப் படிக்க வியப்பு. மதுரையில் உள்ள யானைக்கல் சிலை வைக்கப்பட்ட வரலாறு. அன்று வெள்ளை யானை, இன்று கருப்பு யானை என்று புகைப்படத்துடன் வண்ண வேறுபாடு காட்டியது சிறப்பு.

இனிய நண்பர் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்கள், வாழ்வின் அர்த்தம் வாசிப்பதில் கட்டுரையில், வாசிப்பின் பயனை நன்கு உணர்த்தி இருந்தார்கள்.

மரம் பற்றி மாணவிகளின் பதில்கள் சிந்திக்க வைத்தது. பனைமரத்தின் சிறப்பை விளக்கியது சிறப்பு.

திருவள்ளுவரை கடவுளாக வணங்கிடும் சிவானந்தர், மதுரை வந்த போது நானும் அவரை சந்தித்து பேசி, புகைப்படம் எடுத்து, எனது வலைப்பூவில் பதிவு செய்து இருந்தேன். அவர் பற்றிய விபரமும், திருக்குறளின் மாண்பும் உணர்த்தியது.

மனிதத் தேனீ அவர்கள் நகைச்சுவை மன்றம் பற்றிய பதிவை சில நகைச்சுவைகளுடன் பதிவு செய்தது சிறப்பு.

பெண்களுக்கான உதவித் திட்டங்களும், உதவும் சட்டங்களும் கட்டுரை பெண்களுக்கு மட்டுமல்ல, வழக்கறிஞர்களுக்கும் தகவல் தரும் நல்ல கட்டுரை.

கிராம வளர்ச்சி பற்றிய கட்டுரை நன்று. நாடும் நடப்பும், நையாண்டி எள்ளல் சிந்திக்க வைத்தது. அடைபடும் அம்பரப்பர் மலை கட்டுரை, மண்மக்களுக்கு மண் காக்க விடுத்த அறைகூவல்.

இந்த மண்ணில் இருக்கிறது வாசம். மரபு கூறும் நேசம். வரலாறு, குறள் அறிவோம், வணக்கம் தமிழா கட்டுரை, வணக்கம், தமிழரின் அடையாளம் என்பதை உணர்த்தியது. விவசாயம், மின்பிடி என பல்வேறு தகவல்களின் சுரங்கமாக இதழ் உள்ளது. படித்து விட்டு தூக்கிப் போடும் சராசரி இதழ் அல்ல இது. படித்து விட்டு, பாதுகாத்து வைத்து மறுவாசிப்பு செய்ய வேண்டிய இதழ் .நமது மண்வாசம் இதழ் தொய்வின்றி வெற்றி நடை போட வாழ்த்துக்கள் .புதிய இதழ் வாசகர்களிடையே வரவேற்பு கிட்டும்.

 

பட்டறிவு பதிப்பகம், 1-ஏ, வைத்தியநாதபுரம்,
கிழக்கு கென்னட் குறுக்குத் தெரு, மதுரை –
625 016.

 

                         www.tamilauthors.com