நூல் : மரண வலிகள் (கவிதைத் தொகுதி)
தொகுத்தவர்:  
அலெக்ஸ் பரந்தாமன்
நூல் அறிமுகம்:
 வெலிகம ரிம்ஸா முஹம்மத்


ஜீவநதியின் 40 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ள கவிதை நூலே மரண வலிகள் தொகுதியாகும். இந்த கவிதை நூலின் ஆசிரியர் அலெக்ஸ் பரந்தாமன் ஆவார். இவர் ஏற்கனவே இதே பதிப்பகத்தினூடாக அழுகைகள் நிரந்தரமில்லை என்ற சிறுகதை நூலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறுகியகால இடைவெளிக்குள் அலெக்ஸ் பரந்தாமனின் இவ்விரண்டு தொகுதிகளும் வெளிவந்து அவரது இலக்கிய ஆற்றலை, திறமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

76 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்தக் கவிதை நூலில் சிறியதும் பெரியதுமான 63 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. யுத்த காலத்தில் ஏற்பட்ட துயரங்களையும், கொடுமைகளையும், யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட விளைவுகளையும், கஷ்டங்களையும் வெளிக்காட்டும் படியான கவிதைகளே நூல் முழுவதுமாக விரவிக் காணப்படுகின்றன. போரின் முகத்தைக் காட்டி நிற்கும் கண்ணாடியாகவே இந்த நூலைப் பார்க்கலாம்.

வலிமிகுந்த வாழ்வைச் சுமந்து போரினால் மண்குழிக்குள் வரலாறாகிப்போன மக்களுக்கே அலெக்ஸ் பரந்தாமன் தனது கவிதை நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.

அலெக்ஸ் பரந்தாமன் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "எமை விட்டுக் கடந்துபோன போரின் உச்சத்துள், நிகழ்ந்த அவல தரிசிப்பில், என்னுள் எழுந்த மனக்கொதிப்பின் வெளிப்பாடுகளே இத்தொகுப்புக்குள் குந்தியிருக்கும் கவிதைகளாகும். ஒரு காலம், எமக்கான சுதந்திர தனியிருப்புக்காக எனது பேனா எழுதிய கவிதைகள் ஏராளம்! போரியல் வாழக்கைக்குள் புரிபடாத மனம் எதிர்பாராத திருப்பங்களோடும் நடுக்கங்களோடும் போன எனது வாழ்வின் பயணம், இறுதியில் (முள்ளி வாய்க்காலில்) நிர்க்கதியாகி நின்றபோது முன்பு முனைப்போடு எழுதிய கவிதைகள் உட்பட பல படைப்புக்கள் அனைத்தும் என்முன்னே எனைப் பார்த்து கைகொட்டி நகைப்பது போன்ற உணர்வுக்குள் சிக்கிச்சிதறி... மனம் குமைந்து அழுதழுது.. அகதி முகாமில் சரணடைந்தது ஒரு வலி மிகுந்த வரலாறாகும். அதன்பின் இனி எதுவும் எழுதுவதில்லை... என்ற ஒருவித வெறுப்போடு இருந்தபோது, மறுக்கப்பட முடியாத நிகழ்வின் தரிசனங்கள் மறைக்கப்பட்டு  அல்லது மறக்கப்பட்டு விடும் எனும் ஒரு சிந்தனை என்னுள் உந்தவே, மீண்டும் எழுத ஆரம்பித்தேன்."

இனி அவரது
63 கவிதைகளில் ஒரு சில கவிதைகளின் வேதனை வெளிப்பாட்டைப் பார்ப்போம்.

அவர்களும் எனது கவிதையும் (பக்கம்
01) என்ற கவிதை உயிர்களை, உடமைகளைப் பறிகொடுத்தவர்களின் இதய வேதனையை இயம்பியிருக்கின்றது. துன்பத்தின்போது கூடவே இருந்து ஆறுதல் கூறியவர்கள் இரத்தம் சிந்தி, உடல் சிதறி இறந்துபோனதை கவிதை அழகாக சுட்டிக் காட்டியிருக்கின்றது.

எல்லோருக்குமான அவலம்தான்,
முடிவில் அவர்களுக்குமாயிற்று
வாழவேண்டுமென்ற துளிர்ப்பும் துடிப்பும்
அவர்களை வழிமாற்றி
இன்னோரிடத்திலிருக்க வைத்தது..
கைகொடுத்துதவியது கைவேலி நிலம்
இடறல்களிலிருந்து
எட்ட வந்துவிட்டதான மன உணர்வோடு
அவர்கள் இருந்தார்கள் ஆறுதலாக...

மரண வலிகளை உணராது
மண்மடியில் அப்படியே
சிதறிய உடல்களாய்..
சிந்திய இரத்தமாய்..
மூச்சிழந்து முகம் மறைந்து போனதை
இனியும் நான் எப்படி எழுதுவேன்
எனது கவிதையில்?


யுத்தம் ஓய்ந்த பின்பும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அவல வாழ்வு, துளிர்க்குமோ? (பக்கம்
05) என்ற கவிதையில் பதிவாகியிருக்கின்றது. தமது உடமைகளை விட்டுக் கொடுத்தவர்கள், அதன் பின்னரும் தமது சொந்த வீடுகளுக்குள் குடியேற முடியாத சூழ்நிலைகள் காணப்பட்டன. பதவிகளில் இருப்பவர்கள் தமது பதவிகளுக்காகவும், பேர் புகழுக்காகவும் பொய்களைக் கூறி தமது சகல காரியங்களை சாதித்துக் கொள்கின்றார்கள். அதனால் பொதுமக்களின் வாழ்வு அந்தரப்பட்ட நிலைமையிலேயே கழிகின்றது என்று இந்தக் கவிதை கூறி நிற்கின்றது.

போர் ஓய்ந்த பின்னிலையில் - வீடு
போய்ச்சேர வழியில்லை எங்கள்
ஊர்மனைகள் அழிந்த பின்பும் - அங்கு
உழ்நுழையத் தெரியவில்லை ஆள
ஆர் வந்து நன்மையென்ன - வாழ்வு
அவலமொரு தொடர்கதைதான் தங்கள்
பேர் வாழ புகழோங்க - பொய்கள்
பேசுவதும் ஒரு கலைதான்!


அஸ்தமனத்துள் ஓர் அருணோதயம் (பக்கம்
15) என்ற கவிதையும் யுத்தம் பற்றியே பேசியிருக்கின்றது. காலம் விட்டுப்போன ரணங்களில் இன்னும் கசிந்துகொண்டிருக்கின்ற வாழ்வுத் துளிகள், பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை நன்றாக எடுத்துக் காட்டுகின்றன. செயற்பாடுகளை எல்லாம் முடக்கிப் போட்டு, வருமானங்கள் யாவும் அடியோடு மறுக்கப்பட்டு வலுவிழந்தவர்களாய் அவர்களை மாற்றிப்போட்டது யுத்தம். இழந்து போனவற்றின் நினைவுகளின் வலிகளைத் தாங்கியபடி மீண்டும் புதிய வாழ்க்கையைத் தேடுகின்றார்கள் என்று கவிதையில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கவிதை வரிகள் இதோ..

பிணங்கள் விழுந்த தரைமீது படர்கிறது.. சூரிய தேவனின் பின்மாலைப்பொழுதின் ஒளி.. காலம் அள்ளிச்சென்ற சில நினைவுகளைத் தேடுகின்றேன் கழிவிரக்கத்தோடு.. கூற்றுவன் பெயரால் குறிக்கோளற்ற செயற்பாடுகள்.. வாழ்க்கையைத் தின்றுமுடித்துவிட்டு.. இப்பொழுது ஏப்பம்விட்டு நிற்கின்றன ஏதுமறியாதனவாக.. இழப்புகளின் சுமைகளைத் தாங்கியபடி.. எங்கெங்கோ பரவலாய்.. புதிய முளைகளாக விட்டெழும் முகங்கள்.. மீண்டும் வீரியத்தைத்தேடி விரைகின்றன.. தம்வழியில் விளக்கம் தெரிந்தனவாய்..

இடம்பெயர்ந்து வந்தவர்களின் வாழ்க்கைக் கனவுகள் யாவும் சிதைந்து போன நிலையில் அவர்களின் வளங்களும் உடற் பலங்களும் அழிந்திருந்தன. நிஜங்களின் தரிசனங்களாக அவர்கள் கண்டவை எல்லாம் கொடுமையான போரின் தாக்கங்கள் மட்டுமேயாகும். தலைவிதிகளின் நிர்ணயிப்புக்கள் தலைகீழாக எழுதப்பட்ட அந்த நிலைமையை ஓர் அகதியின் துயரப்பாடல் (பக்கம்
19) என்ற கவிதை விளக்கியிருக்கின்றது.

இன்னல்கள் எத்தனை கண்டாச்சு - வாழ்வில்
இடப்பெயர்வுகள் பலவாச்சு
வண்ணக் கனவுகள் சிதைஞ்சாச்சு - பெற்ற
வளங்கள் அனைத்தும் இழந்தாச்சு!

ஊரின் முகங்கண்டு நாளாச்சு - போரால்
ஒடுங்கிய வாழ்வும் இருளாச்சு
ஏரி வயல்வளம் அழிந்தாச்சு - எந்தன்
இல்ல முற்றமெல்லாம் என்னாச்சு?


வடுக்கள் (பக்கம்
52) என்ற கவிதை உறவுக்கார பேரனின் ஞாபகங்களை மீட்டுவதாக அமைந்திருக்கின்றது. பிஞ்சு விரல்களால் ஸ்பரிசித்த நினைவுகளில் கவிஞர் நெஞ்சம் நெகிழ்ந்து போகின்றார். மறப்போம் மன்னிப்போம் என்று சொன்னாலும் பேரனை மறக்க முடியாமல் தவிக்கும் கவிஞரின் இதயத்து வேதனை வாசகர்களிடத்திலும் ஒட்டிக்கொள்கின்றது.
அந்தக் கவிதை பின்வருமாறு:

வருடமொரு நாளில் பங்குனி மாத அமாவாசைக்கு முந்திய தசமிதியில் வந்து போகிறது உன் சிரார்த்த நினைவு.. மறப்போம் மன்னிப்போம் என்று கூறுகிறார்கள்.. மன்னித்துவிட்டேன்.. ஆனால் மறக்க முடியவில்லை உன் முகத்தை.. பேரன் என்ற உறவு முறையில் உன் பிஞ்சு விரல்களால் மூன்று வயதில் என் முகத்தைத் தடவி ஸ்பரிசித்த நினைவுகள் சிலது மட்டும் இப்பொழுதும் கூட நீரில் கல்லெறியப்பட்ட அலைகள் போல ஷெல் விழுந்த ஓலைக் குடிசைக்குள் தீ திண்டு புலுண்டி உன் உடம்பு.. இப்பொழுதும் எரிகிறது உன் நினைவுகள் எனக்குள் மன்னித்துவிட்டேன் அவர்களை! ஆனால் மறக்க முடியவில்லை உன் முகத்தை.. உன் நினைவுகளை..!

போரினால் பாதிக்கப்பட்டு, அதன் வலிகளை சுமந்து, அந்த வலிகளை, மனதின் வேதனைகளை மொழிபெயர்த்து கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும் வெளிப்படுத்தியிருக்கும் அலெக்ஸ் பரந்தாமன் பாராட்டுக்குரியவர். யுத்த காலத்தின் நிகழ்வுகளை அறிய இந்நூல் சிறந்த ஆவணமாகும். அவரது படைப்புக்களை இன்னும் எதிர்பார்த்து வாழ்த்துகிறேன்!!!

நூல் - மரண வலிகள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - அலெக்ஸ் பரந்தாமன்
வெளியீடு - ஜீவநதி பதிப்பகம்
விலை - 300 ரூபாய்
 

                         www.tamilauthors.com