நூல் :  மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள்
தொகுத்தவர்: கவிஞர் ந.பாண்டுரெங்கன்
நூல் அறிமுகம்:  கவிஞர் இரா. இரவி


நூல் ஆசிரியர் கவிஞர் ந.பாண்டுரங்கன் அவர்கள் மாவட்ட நூலக அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் ஓய்வின்றி வாசிப்பை நேசிப்பாகாக் கொண்டு கோவில்கள் சென்று ஆராய்ந்து வடித்த அற்புத நூல்.

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்ற போதிலும், இந்த நூலை ஆழ்ந்து படித்தேன். தமிழர்களின் கட்டிடக்கலை மீது எனக்கு மரியாதை உண்டு. கோயில்களை பக்தியோடு ரசிக்காவிட்டாலும், கலைக்கண்ணோடு ரசிப்பது உண்டு.
27 கோயில்கள் பற்றிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக மதுரையை ஆளும் பெண்ணரசி என்ற முதல் கட்டுரையில் தமிழர்களின் கட்டிடக்கலையை, சிற்பக்கலையை உலகிற்கு பறைசாற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பற்றி மிக விரிவாகவும், விளக்கமாகவும் எழுதி உள்ளார். நூலைப் படிக்கப் படிக்க மதுரை மீனாட்சியம்மன் கோயில், வாசகர் மனக்கண் முன் காட்சிகளாக தோன்றுகின்றன. இது தான் நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரங்கன் வெற்றி.

மீனாட்சியம்மன் கோவில் இடம், பரப்பளவு வளர்ந்த விதத்தைக் கூட நூலில் எழுதி உள்ளார்.

“மதுரை மீனாட்சியம்மன் கோவில்
7ஆம் நூற்றாண்டில் 1 ஏக்கர் பரப்பளவாகவும், 13ஆம் நூற்றாண்டில் 8 ஏக்கர் ஆகவும் 17 ஆம் நூற்றாண்டில் 15 ஏக்கர் பரப்பளவிலும் விரித்துக் கட்டப்பட்டது”

மீனாட்சியம்மன் கோவில்கள் தொடர்பாக வெளிவந்த பல நூல்கள் படித்து நேரில் பலமுறை சென்று பார்த்து ஆராய்ந்து அறிந்து வரலாறு எழுதி உள்ளார்.

பொதுவுடைமைக் கட்சி சார்புடைய கலை இலக்கிய பெருமன்றத்தில் பொறுப்பு வகித்த போதும், பொதுவுடைமை இயக்கத்தின் கடவுள் மறுப்பு கொள்கையை ஒதுக்கி வைத்து விட்டு, கோ இல் மன்னர் வீடு என்று சொல்லப்படும் கோயில்கள் பற்றிய ஆராய்ச்சி நூல் வடித்துள்ளார். இந்த நூலில் மீனாட்சி கோயில் பற்றி நாம் அறிந்த செய்திகள் பலவும் அறியாத செய்திகள் சிலவும் உள்ளன.

மீனாட்சியம்மன் கோயில் உள்ளே உள்ள ஒவ்வொரு பகுதிகள் பற்றியும் விரிவாக எழுதி உள்ளார். கோபுரங்கள் தொடங்கி, பொற்றாமரைக்குளம், மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபம் பற்றியும் எழுதி உள்ளார்.
1000 கால் மண்டபத்தில், 16 கால்கள் குறைவாக 984 கால்கள் இருப்பதாகவும், 16 கால்களுடன் ஆடி வீதியில் ஒரு மண்டபம் இருப்பதாகவும் சொன்னார்கள்.

இந்த நூலில்
985 தூண்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இன்னும் ஆராய வேண்டும். மீனாட்சியம்மன் கோவில் பற்றி அறிந்து கொள்ள உதவிடும் நூல். நூலாசிரியர் கவிஞர் ந.பாண்டுரங்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள். திருவாதவூர் திருமறை நாயனார் ஆலயம், முக்தி தரும் முக்தீஸ்வர்ர் திருக்கோயில் இப்படி நூலில் உள்ள கோவில்களின் பட்டியல் மிக நீளம்.

சுற்றுலாத் துறையின் சார்பில் நடந்த பொங்கல் விழாவைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை, ஏடகநாதன் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்றோம். பார்த்தவர்கள் பிரமித்து நின்றனர். அந்தக் கோயில் பற்றிய தல வரலாறு அமைப்பு அனைத்தும் நூலில் உள்ளன. தல வரலாறுகளில் வரும் கதைகளை, காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த கதைகளை கேள்விகளுக்கு இடம் தராமல் அப்படியே நூலில் பதிவு செய்துள்ளார்.

பெரிய கோயில், சிறிய கோயில் என்ற பாகுபாடு இல்லாமல் தன்னால் முடிந்த கோயில்கள் அனைத்தும் சென்று பார்த்து வடித்துள்ள நூல்.

மதுரையைச் சுற்றியுள்ள பல சிறிய கோயில்கள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ள நூல்.

பழைய சொக்கநாதர் கோவில் என்று சொல்லப்படும் கோயில் பற்றி அருள்தரும் ஆதிசொக்கநாதர் என்று தலைப்பிட்டு வடித்துள்ள கட்டுரை நன்று. இடைக்காட்டூரார் என்ற சித்தர் வந்த கோவில் என்பதை குறிப்பட்டு உள்ளார். அந்தக் காலத்தில் மக்களுக்கு பக்தி வர வேண்டும், கோவிலுக்கு வர வேண்டும் என்பதற்காக செவிவழிச் செய்தியாக பரப்பப்பட்ட கற்பனைக் கதைகள் பலவற்றை தலபுராணம் என்ற பெயரில் பலரும் எழுதி உள்ளனர். இவரும் தான் படித்த நூல்களின் மூலம் அறிந்த சுவையான கதைகள் பல நூலில் எழுதி உள்ளார்.

தமிழர்கள் பெரிய கோவிலோ, சிறிய கோவிலோ ஒவ்வொரு கோவிலிலும் கலைஅம்சம் மிக்க சிலைகளை மண்டபங்களை அமைத்து நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி விடுகின்றனர். நாத்திகர்கள் சிலரும் கடவுளை வணங்குவதற்காக கோயில் செல்லாவிட்டாலும் சிலைகளை, கலைகளை ரசிப்பதற்காக கோவில்கள் சொல்வதுண்டு. இந்த நூல் படித்தால் தமிழர்களின் கோவில் கலைகள் பற்றிய மதிப்பீடு மேலும் உயர்ந்து விடும் என்பது மட்டும் உண்மை.

அணைப்பட்டி ஆஞ்சநேயர், பைராகி மடம் அனுமன், திருப்பரங்குன்றம் இப்படி பல்வேறு கோவில்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு கோவில்கள் தொடர்பான கல்வெட்டு வரிகளையும் குறிப்பிட்ட பாடல்கள்களையும் குறிப்பிட்டு எழுதி உள்ளார். அழகர்கோவில் மலை மீதுள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் பற்றியும் எழுது உள்ளார்.

“ஆறுபடை வீடுகளில் இப்பழமுதிர்சோலை மட்டுமே இயற்கைஎழில் சூழ்ந்த மலைகளின் நடுவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்” என்று எழுதி உள்ளார். நூலாசிரியர் அறியப்படாத செய்தி ஒன்று இங்கே குறிப்பிட வேண்டும். பழமுதிர்சோலை முருகன் கோவிலை ஆறுபடை வீடுகளில் ஒன்றாக சொல்லக் கூடாது என்று ஆதாரங்களுடன் ஒருவர் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார்.

மதுரை சித்திரைத் திருவிழா பற்றியும் நூலில் எழுதி உள்ளார். ஒரு கடவுளுக்கு தன் தங்கை திருமணம் என்று? என்று தெரியாமலா போகும் என்ற கேள்விகள் எல்லாம் கேட்காமல் ,நூலை படிக்கலாம், நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.


ஸ்ரீரெங்கநாயகி பதிப்பகம், 10, சேர்மன் துளசிராம் 1ஆவது தெரு,
கீழவெளி வீதி, புது மாகாளிப்பட்டி ரோடு, மதுரை –
625 001.
அலைபேசி
: 98426 88407 விலை : ரூ.
115.

                         www.tamilauthors.com