நூல் :  இஃதோர் கன்னிப்பெண் விழி
தொகுத்தவர்:
கௌதம் ராஜ் கிருஷ்ணன்
நூல் அறிமுகம்:  கவிஞர் இரா. இரவி


நூல் ஆசிரியர் கவிஞர் கௌதம்ராஜ் கிருஷ்ணன் அவர்கள் பொறியாளர். இவருக்கு முதல் நூல். அரசினர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ர.ஷே.தா. வஹிதா பானு பாவலர் எழு ஞாயிறு ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயில்களாக உள்ளன. இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை நன்று.

கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகவே இருக்கும். நூலாசிரியர் கௌதம்ராஜ் கிருஷ்ணன் விதிவிலக்கு அல்ல. நூலில் காதல் கவிதைகள் பல உள்ளன.
28 தலைப்புகளில் புதுக்கவிதைகள் எழுதி உள்ளார்.

இரு கவிதை !

என் கையில் கவிதைப் புத்தகம்
முன்னால் அவள்
ஒரே நேரத்தில்
இரு கவிதைகளை
எப்படி வாசிப்பது ...?


பெண்களுக்கு கவிதை பிடிக்கும். பெண்ணையே கவிதை என்கிறார். வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள். எள்ளல் சுவையுடன் இனிக்கும் கவிதை நன்று.

மூன்று தலைமுறைக்கு பாட்டு எழுதிய காவியக் கவிஞர் வாலி மறைவிற்கு வடித்த கவிதை நன்று.

என் வாலிபனே ...!

(காவியக் கவிஞர் வாலி அவர்களின் இறப்பில் வலித்தது)
வாலிப கவிஞனே!
இம்மண்ணை விடுத்த வலி
நெஞ்சி முள்ளாய் நெஞ்சம் தைக்கின்றது...
ஈவிறக்கம் இல்லா வானமே ...
எம் மறவனை ஆட்கொண்டு தான்
உன் பசி தீர்க்கின்றாயோ...!


நூலாசிரியர் கவிஞர் என்ற முறையில் மற்றொரு மூத்த கவிஞர் வாலி மரணத்திற்காக மனம் வலித்தது கவிதை வடித்த பாங்கு நன்று.

தொடக்க நிலையில் காதல் கவிதை வரும். அதோடு நின்று விடாமல் அடுத்தடுத்து சமுதாயக் கவிதைகள் வடிக்க முன்வர வேண்டும்.

நீ நடக்கையில் நான் தெருக்கோலம் !

ஒரு கார்காலப் பறவையாய் நான்
மீசை அரும்பியதை
காதல் அரும்பியதைக் கொண்டு
கணிக்கும் சாமான்யன்
எதிர்வீட்டு ஈர விழிகளில்
என் வீட்டு ஜாடி பூத்தது
தார்ச்சாலை தகவல் பெட்டியாய்
உன் வாசம் அஞ்சல் சேர்த்தது
உன் வீட்டு நாய்க்குட்டியும்
நானும் தோழர்கள்
எப்பொழுதும் உன் பின்னாலேயே
இருவரும் சுற்றுவதால்...


காதலியின் பின்னால் காதலன் சுற்றுவது அன்று தொட்டு இன்று வரை மாறாத வழக்கம், பழக்கம் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார்.

பார்வை !

என் கண்களின்
இமைகளுக்குள்
ஒரே சுமை
அவளைப் பார்த்து பார்த்து
தேக்கி வைத்த காதல்.


காதல் என்பது கண்கள் வழி தொடங்கி மூளையில் பதிவாகி எண்ணத்தில் வெளிப்படுவது. காதலின் முன்னுரை என்பது கண்களால் தான் எழுதப்படுகிறது.

கண்ணாடி !

ஆணழகுப் பெட்டகத்தில்
நானழகு என்றென்னை
மார் தட்ட வைத்த
கன்னிப்பெண் விழிகள் !


மீனவர்கள் துன்பம் கண்டு உணர்ந்து எழுதிய கவிதை நன்று. தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்று திரும்பி வருவது உறுதி இல்லை. அண்டை நாடு என்கிறோம் இலங்கை. ஆனால் அண்டை நாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தான் கூட இப்படி நடந்து கொள்வது இல்லை. நட்பு நாடு என்று சொல்லப்படும் இலங்கை, நாள்தோரும் தமிழக மீனவர்களைச் சுடுவது, தாக்குவது, வலைகளை அறுப்பது என்ற கொடூரத்தை நடத்திக் கொண்டே இருக்கின்றது. தட்டிக் கேட்க நாதி இல்லை. இப்படி பல நினைவுகளை மலர்வித்தது இக்கவிதை.

தண்ணீர் தேசத்து தாகம்!


சூரியன் எழுகையில்
சுள்ளென முகம் நனைக்கும்
கதவெங்கள் வீடு…
அதை தாண்டி அனுப்பிய கணவன்
கால் பதிக்கும்
நாழிகை தொட்டு
காரிகைகள் கண்ணீர் சொட்டும்
பாடெங்கள் பாடு.
அண்டை நாட்டுச் சிறை
எங்கள் ஆஸ்தான வாசற்படி
தாய் மண்ணிலிருந்தும்
கேட்க நாதியில்லா
அநாதை
எங்கள் பெயர்!


வாள் முனையை விட பேனா முனைக்கு ஆற்றல் அதிகம். பல ஆதிக்கங்கள் அகற்றிய வரலாறு பேனா முனைக்கு உண்டு. பேனா பற்றி வடித்த கவிதை நன்று.

ஒவ்வொரு பேனாவிற்கும்
அநியாயங்களைக் கேட்க
ஆசைகளைத் தீர்க்க
ஆயிரம் எழுத்துக்கள் எழுத
ஆயிரம் எழுத்த்துக்கள் எழுத
சீமைத்துரை தேவையில்லை.
நீ வா …! பேனாக்கள் காத்திருக்கின்றன…!
உனக்கென மரங்கள்
தாள்கள் தூவுகின்றன…
எழுதவா எண்ணங்கள் இல்லை…
கேட்கவா சமுதாயம் இல்லை…?
பல்லாயிரம் முகத்திரைகள்
கிழித்தெறியப்பட காத்திருக்கின்றன.
பல லட்ச் தாய்மார்களின்
கண்ணீரில் மையெடு!


வித்தியாசமான கவிதைகள் உள்ளன.
சமுதாய விழிப்புணர்வு வேண்டும், அநீதிக்கு எதிராக படைப்பாளிகளின் சிந்தனை வரவேண்டுமென்ற ஆசை நன்று.
நூலின் கடைசிக்கவிதை நன்று.

முதல் தடம் !

பதித்திருக்கிறேன்
முட்கள் இல்லாமல்
பார்த்து பார்த்து
இனி போகும் தடமெங்கும்
ஓர் தடாகம்
பதித்து விட வேண்டுமென்ற
வாஞ்சையுடன் !


முதல் தடம் முத்திரை பதிக்கும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். தரமாக வடிவமைத்து அச்சிட்டு பதிப்பித்த வாசகன் பதிப்பகத்திற்கு பாராட்டுகள்.

வாசகன் பதிப்பகம், 167, AVR வளாகம், அரசு கலைக்கல்லூரி எதிரில்,
செரி சாலை, சேலம்
– 636 007. பேச : 98429 74697
விலை : ரூ.
55

                         www.tamilauthors.com