நூல் :  முப்லிஹாவின் சிறுவர் கானங்கள்
நூல்ஆசிரியர்:
ஜெனீரா கைருல் அமான்
நூல் அறிமுகம்:  வெலிகம ரிம்ஸா முஹம்மத்

சிறுவர் இலக்கியத் துறையில் தன் பெயரைப் பதித்துக் கொண்டவர்களுள் கிண்ணியாவைச் சேர்ந்த ஜெனீரா ஹைருள் அமான் குறிப்பிடத்தக்கவர். அவரது நூல்கள் பல விருதுகளையும, பரிசில்களையும் பெற்றிருப்பதானது இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். குழந்தைகளாக மாறி அவர்களுக்கு ஏற்ற விதத்தில் பாடல்களை எழுதுவதென்பது மிகக் கடினமான விடயம். ஆனாலும் மாணவர்களின் வாசிப்பின்மீது கொண்ட அக்கறையால் அத்தகைய சிறந்த பணியைச் செய்திருக்கின்றார் நூலாசிரியர் ஜெனீரா. ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியராக தான் கடமையாற்றுவதனாலும், அவரது குடும்பச் சூழ்நிலை சாதகமாக அமைந்திருப்பதனாலும் அவரால் தொடர்ந்து எழுத்துத் துறையில் பயணிக்க முடிந்திருக்கிறது.

முப்லிஹாவின் சிறுவர் கானங்கள் என்ற தொகுதி அவரது ஆறாவது நூலாகும். இந்நூலில்
34 சிறுவர் பாடல்கள் 69 பக்களில் அமைந்திருக்கின்றன.

ஓசைநயமிக்க பாடல் வரிகளைக் கொண்டமைந்த விளக்கம் தாருங்கள் (பக்கம்
03) என்ற பாடல் இரசிக்கத்தக்கதாய் இருக்கின்றது. சூரியக் கதிரின் சூட்டிலா சோளப் பொரிகள் பொரித்தன என்ற வரிகள் மிக அற்புதமானவையாக இருக்கின்றன. அதேபோல நட்சத்திரங்கள் பற்றிய நூலாசிரியன் கற்பனை இவ்வாறு அமைந்திருக்கின்றன.

சூரியக் கதிரின் சூட்டிலா
சோளப் பொரிகள் பொரித்தன
காற்றுமெல்லத் தொட்டதாலா
கண்கள் சிமிட்டும் தாரகை

மல்லிகைப் பூக்கள் என்று எண்ணியே
மதிததான் கொண்டுசென்றதா?
வெள்ளைநிறத்துப் பூக்கள்தான்
வெள்ளிஎன்றுஆனதா?


விரைந்து வாருங்கள் (பக்கம்
09) என்ற பாடலில் நற்பண்புகள் கூறப்பட்டிருக்கின்றன. கல்வி ஆரம்பத்தில் கசப்பாக இருந்தபோதும் அதுவே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு மூலகாரணமாக அமையும் என்தை எடுத்துக் காட்டுகின்றார். விளையாட்டு மூலம் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டால் அவை மாணவர் மனதில் பதியும் என்பதை பின்வரும் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.

படிக்கச் சிறுவர் வருகின்றார்
பண்பை மறந்து திரிகின்றார்....
....விலகிச் செல்லும் மாணவர்க்கு
விளையாட்டு மூலம் கற்பிப்போம்


ரோசாமலர் பற்றி மலர்களின் ராணி ரோசா (பக்கம்
11) என்ற கவிதையில் அழகாக கூறப்பட்டுள்ளது. ரோசாமலர் பொதுவாக எல்லோராலும் விரும்பப்படுகின்றது. அதன் தன்மையும், நிறமும் பார்ப்பவர் கண்ணைக் கவர்ந்துவிடுவதே அதற்குக் காரணமாகும். அழகுக்காகவும், அன்பைவெளிப்படுத்தவும் ரோசா பயன்படுகின்றது. ரோசாபற்றி நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

பலபல நிறங்களில் பூக்குமாம்
பலரையும் விரும்ப வைக்குமாம்
வளர்ப்பது சற்றுச் சிரமம்தான்
வளர்ந்து பூத்தால் அழகுதான்


நல்லதை வளருங்கள் (பக்கம்
21) எனும் பாடல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள பாடலாகும். அறிவுரைகளை அழகிய முறையில் அள்ளித் தெளித்திருக்கின்றார் நூலாசிரியர் ஜனீரா. அதைச் செய் இதைச் செய் என்று குழந்தைகளை வருத்தக் கூடாது. பக்குவமாக அவர்களிடம் புரியவைக்க வேண்டும். அறிவுரையை இசையுடன், பாடலாகச் சொல்லிக் கொடுத்தால் அவை மாணவர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துவிடும்.

அன்பு கொண்ட சிறுவர்களே
அறிவைத் தேடிப் படியுங்கள்
அகிம்சை வழியில் செல்லுங்கள்
அகிலம் போற்ற வாழுங்கள்


வட்டமிடும் பருந்து (பக்கம்
29) என்ற பாடலில் பருந்தின் பண்புகள் கூறப்பட்டுள்ளன. மாணவர்களின் சிந்தனையைக் கவரும் விதத்தில் எடுத்தாளப்பட்டுள்ள மொழி நடை சிறப்புக்குரியதெனலாம்.

கூர்மையான கண்களால்
கூர்ந்து நன்கு பார்க்கின்றாய்
கூர்மைமிக்க நகங்களால்
குஞ்சைத் தூக்கிச் செல்கின்றாய்


சிறுவர்களின் வாசிப்புத் திறனையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் வண்ணம் பாடல்கள் எழுதப்படுவது இன்றியமையாதது. அந்தப் பணியை செவ்வனே செய்யும் ஜெனீரா அமானுக்கு வாழ்த்துக்கள்!!!


நூலின் பெயர் - முப்லிஹாவின் சிறுவர் கானங்கள்
நூல் வகை - சிறுவர் பாடல்கள்
நூலாசிரியர் - ஜெனீரா கைருல் அமான்
வெளியீடு - அல் அக்தாப் இலக்கிய மன்றம்
விலை - 200 ரூபாய்








                         www.tamilauthors.com