நூல் :  நிலவு நீரிலும் தெரியும் (சிறுகதைத் தொகுதி)
நூல்ஆசிரியர்:
 
முருகேசு இரவீந்திரன்
நூல் அறிமுகம்:  வெலிகம ரிம்ஸா முஹம்மத்


முருகேசு ரவீந்திரன் இலங்கை வானொலியின் முதற்தர அறிவிப்பாளராவார். இவர் எழுதியிருக்கும் நிலவு நீரிலும் சுடும் என்ற சிறுகதைத் தொகுதி 12 சிறுகதைகளை உஎள்ளடக்கி 90 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் கதைகள் இத்தொகுதியில் காணப்படுகின்றது. மண் வாசனைச் சொற்களோடு கதைகள் யாவும் எழுதப்பட்டிருக்கின்றன. சமுதாயத்தில் பரவிக் காணப்படுகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகள் இவரது கதைகளின் கருவாக கையாளப்பட்டுள்ளன.

இறுக்கம் (பக்கம்
10) என்ற சிறுகதை போர்க் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைத் துயரை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. சிவராசா கொழும்பில் வேலை செய்பவன். விடுமுறை தினங்களில் ஊருக்குப் போவான். மனைவியும், மகன் கோபுவும் அவன் வருகைக்காக காத்திருப்பார்கள். ஊருக்குப் போகும்போது இருக்கும் உற்சாகம் கொழும்புக்கு மீண்டும் வரும்போது அவனுக்கு இருப்பதில்லை. ஆனால் தொழில் முக்கியம் என்பதால் மனைவி அவனை ஆதரவுடன் அனுப்பி வைப்பாள். தொழிலுக்கு வந்தாலும் அவனுக்கு வீட்டு நினைப்பே காணப்படும். கால்கற்சட்டை உடுத்தி காற்றாடியின் கீழ் வேலைப் பார்த்த அவன் யுத்த நிலமையில் வீட்டாரை விட்டுப் போக மனமின்றி சாப்பாட்டுக் கடையொன்றில் வேலை செய்வதற்கு எண்ணி அதுபற்றி மனைவியிடம் கூறுகின்றான். மனைவிக்கும் அவன் தங்களோடு வீட்டில் இருப்பது மனதுக்குத் திருப்தியாக இருப்பதால் அவள் அதற்குச் சம்மதிக்கின்றாள். கதை நிறைவடைகின்றது.

நிலவு நீரிலும் தெரியும் (பக்கம்
17) என்ற சிறுகதை பிரிவின் துயரத்தைச் சொல்லி நிற்கின்றது. அவன் தன் மகள் சுஜியுடன் ஐஸ்கிரீம் கடைக்குச் செல்கின்றான். அவளோ குழந்தைத் தனத்துக்கே உரிய குறும்போடு ஐஸ்கிரீமை சுவைப்பதை இவன் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இடையே அவர்களிருவருக்கும் இடையே நடக்கும் சிறு உரையாடல் அவன் மனதில் தேக்கி வைத்திருக்கும் துயரத்தை அப்படியே புடம் போட்டுக் காட்டுகின்றது.

'அப்பா இனி எப்ப வருவியள்?|

'கெதியா வருவன்|

'கெதியா என்டால்?|

'இந்த மாதக் கடைசியில்|

'அப்பா உங்களுக்கு லீவு கிடைக்குமே?|

'கிடைக்கும்"

மீண்டும் அவன் கொழும்புக்கு வந்தபோது ரயில் நிலையத்திலிருக்கும் ஒரு சிறுமி முருங்கைக் காய் விற்றபடி வருகின்றாள். அவளிடம் அவன் அனைத்து முரங்கைக் கட்டுக்களையும் வாங்கிவிட்டு பணம் கொடுக்கின்றான். அவளோ ஓடிச்சென்று இரண்டு ஐஸ்கிரீம்களை வாங்கிவந்து அவனுக்கும் ஒன்றை நீட்டுகின்றாள். மீண்டும் மகள் சுஜியின் நினைவு அவனுக்கு வருகின்றது. பிரிவு தரும் துன்பம் யாவருக்கும் பொதுவானது. சிலசில சந்தர்ப்பங்களில் நாம் விரும்பாமலேயே பிரிவு நேர்ந்துவிடும் போது மனது தளர்ந்து போகின்றது. அத்தகையதொரு வலியை இக்கதை வாசகர்களுக்குள் ஏற்படுத்தி விடுவது கதையின் சிறப்பம்சமாகும்.

தெளிவு (பக்கம்
24) என்ற சிறுகதை திருமணம் முடிக்கக் காத்திருக்கும் கன்னியின் மன உணர்வுகளை தத்ரூபமாகச் சொல்லியிருக்கின்றது. தன்னை பெண் பார்த்துவிட்டுச் சென்ற கணத்திலிருந்து தமிழினி ஆயிரமாயிரம் கற்பனைகளை வளர்க்கின்றாள். நேற்றுவரை தெரியாத சின்னச் சின்ன அழகுகள் எல்லாம் இன்று அவள் கண்ணில்பட்டு மகிழ்ச்சி காட்டுகின்றன. இந்த உலகம் அவளுக்கும் பார்த்தீபனுக்கும் மாத்திரம் உரியதாக அவளது பெண்ணுள்ளம் நினைத்து மகிழ்கின்றது. பெண் பார்க்க வந்திருந்த சமயம் அவளுடன் உரையாடிய பார்த்தீபன் தமிழினியை திருமணம் செய்யதான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அவளிடமே கூறும்போது இந்த உலகமே தன் வசப்பட்டுவிட்டதாய் தோன்றுகிறது அவளுக்கு.

ஆனால் அவனது வீட்டிலோ அவள் இதற்குமுதல் இன்னொருவனைக் காதலித்திருப்பதாக யாரோ சொன்ன செய்தியை அறிந்து தமிழினியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை பார்த்தீபனுக்கு மணமுடித்து வைக்க பேசிக்கொள்கின்றார்கள். பார்த்தீபனுக்கு தமிழின் காதலித்த விடயம் பெரிதாகத் தோன்றவில்லை. அவனும் மனதார சிலரை விரும்பியிருக்கின்றான். ஆனால் சொல்வதற்குத் துணிச்சலில்லாததால் அவை கைமீறிப் போய்விட்டன என கூறிக்கொண்டு தமிழியைச் சந்திக்கச் செல்வதாக கதை நிறைவு செய்யப்பட்டுள்ளது. அந்தத் திருமணம் கைகூடுமா? இல்லையா என்பதை வாசகர்களின் கற்பனைக்கு விட்டிருக்கின்றார் நூலாசிரியர்.

பரந்துபட்ட வாசிப்பின் தேடல் வளம் மிக்கதொரு படைப்பாளனை உருவாக்கும். நூலாசிரியர் ஏற்கனவே வாழ்க்கைப் பயணம் சிறுகதைத் தொகுதியையும், அனைத்தும் கட்டுரைத் தொகுதியையும் வெளியிட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முருகேசு இரவீந்திரன் அவர்கள் இன்னும் பல காத்திரமான படைப்புகளை வெளியிட வாழ்த்துக்கள்!!!


நூல் - நிலவு நீரிலும் தெரியும்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - முருகேசு இரவீந்திரன்
வெளியீடு - யாழ். இந்துக் கல்லூரி நண்பர்கள் வட்டம்
விலை -
300 ரூபாய்


                         www.tamilauthors.com