நூல் :  ஹைக்கூ முதற்றே உலகு
நூல் ஆசிரியர்: கவிஞர் இரா. இரவி
நூல் அறிமுகம்:   
முனைவர் இ.கி.இராமசாமி

நூல் அரங்கம்

விஞர் இரா. இரவியின் “ஹைக்கூ முதற்றே உலகு” என்ற கவிதை நூல் 27-12-2015 அன்று வெளியிடப்பட்டது. ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பது போல ஹைக்கூ கவிதை இன்றியமையாத இலக்கிய வகைமையாகி விட்டது இன்று. இந்த உண்மையைப் புத்தகத்தின் தலைப்பே காட்டுகின்றது.

முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., “தமிழ்த்தேனீ’ முனைவர் இரா. மோகன் ஆகிய இரண்டு தமிழறிஞர்களின் அணிந்துரைகள் இந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றன.

இறையன்பு, தமது மதுரை வாழ்க்கை ‘ஹைக்கூ திலகம்’ இரவியுடன் இணைந்து பயணித்ததைப் பதிவு செய்துள்ளார். திருவள்ளுவரையும், சேக்சுபியரையும் ஒப்பாய்வு செய்த இறையன்புக்குத் தகவல்களைத் திரட்ட உதவியதோடு, தகவலாளிகளையும் இரவி அறிமுகம் செய்து வைத்த பாங்கினை நினைவுகூர்கின்றார். அரிய தகவல்களைத் தந்த இரவியினைப் ‘புலிப்பால் இரவி’ என்று பாராட்டுகின்றார் இறையன்பு.

அல்லதை நீக்கி நல்லதைப் பாராட்டும் பண்பாளர் மோகன், இதனை இரவி படைத்துள்ள 15ஆவது நூல் என்று கணிக்கிடுகின்ரார். ‘விழிகளில்’, ‘உள்ளத்தில்’, ‘நெஞ்சத்தில்’ ‘மனதில்’ நிறைந்த ஹைக்கூவை இப்போது உலகெங்கும் நிறைந்திருக்கும் ஹைக்கூவாக்க் காட்டுகின்றார்.

முடியாது என்று
நினைக்கும் போது
தொடங்கிடும் தோல்வி !


இவ்வாறு தன்னம்பிக்கையின் தேவையையும்,

இவ்வளவு அழகாய்
பவளம் அடுக்கியது யாரோ
மாதுளம் பழம் !


இவ்வாறு இயற்கை எழிலையும் சித்திரிக்கும் இரவியின் கவிதைப்-புனைதிறனைப் பாராட்டுகின்றார் மோகன்.

இரவியின், ‘என்னுரை’யில் அவர் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத ஏக்கத்தைப் பார்க்கிறோம். அதே சமயம் அவருடைய கவிதைப் படைப்புகள் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைத்திருப்பதை அறிந்து அவர் பெருமிதம் கொள்வதையும் பார்க்கின்றோம். அவருடைய மூத்தமகன் பிரபாகரன், தியாகராசர் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்கு இரவியின்
10 ஹைக்கூகள் பாடமாக அமைந்துவிட்ட இன்ப அதிர்ச்சியை அசை போடுகின்றார்.

தகவல் தொடர்புகளிலும், கணினியிலும், சமூகவலைத் தளங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் விளையாடும் இரவிக்கு ஊற்றாக வருகின்றது ஹைக்கூ. இவ்வாறு தங்கமூர்த்தி இரவியின் படைப்பாற்றலையும், தனித்திறனையும் நேர்த்தியாகப் பதிவு செய்தார்.

ஹைக்கூ வகைமைகளில் ஒன்று பழ்மொன்ரியு. அது பழமொழியைப் புதுமொழியாக்கிக் கட்டமைப்பிலும், பொருண்மையிலும் புகமை ஏற்றுவது. தமிழில் அதன் முன்னோடி ஈரோடு தமிழன்பன். அந்த வடிவம் இரவிக்குக் கைவந்த கலை, இதோ,

வேண்டாம் மூட நம்பிக்கை
சனிப்பிணம் கேட்காது
துணைப் பிணம்!
ஆள் பாதி
ஆடை பாதி
நடிகை !
ஆடி மாதம்
தேடி விதைக்கவில்லை
பெய்யவில்லை மழை !
மருமகள் உடைத்தால்
பொன்குடம், தவறு
பொன்குடம் உடையுமா?
மண் குதிரையை நம்பி
ஆற்றில் இறங்கலாம்
ஆற்றிலும் மண் தான் !
ஆசைப்படலாம் முடவன்
கொம்புத்தேனுக்கு
கடையில் கிடைக்கும்”.


நிறைவாக:

ஹைக்கூ திலகம், இப்போது பழமொன்ரியாக வளர்ந்து விட்டார். துணிவுக்கும், புதுமைக்கும் காட்டாக விளங்கும் இரவி வாழ்க வளமுடன்.

 

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 . 044-24342810. vanathipathippakam@gmail.