நூல் :  நெஞ்சினிலே (கவிதைத் தொகுதி)
நூல் ஆசிரியர்:
ஏ.எம்.கஸ்புள்ளா
நூல் அறிமுகம்: 
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

விதையின் ஆழ(ணி) வேர் காலந்தோறும் பரந்துபட்டு செல்கின்றது. செய்யுள் வடிவத்திலிருந்து இன்றைய பின் நவீனத்துவ வடிவம் வரை கவிதைகளின் போக்கு மாறி மாறி வந்திருக்கின்றது. கவிதை என்பது வாசகர்களின் கவனத்தை ஈர்த்தெடுக்கும் உத்திகளில் மிக முக்கியமானது, முதன்மையானது.

கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் ஏ.எம். கஸ்புள்ளாவின் நெஞ்சினிலே என்ற கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கின்றது. இத்தொகுதியில் 88 பக்கங்களை உள்ளடக்கியதாக சிறியதும் பெரியதுமான 62 கவிதைகள் காணப்படுகின்றது.

ஷகவிதைகள் இலகு சொற்களால் அழகு தருகின்றன. இருண்மையோ இறுக்கமோ காணாது அவை காதல், கடமை, சமயம், சமூகம் என்று ஊடுறுவிச் செல்கின்றது. கவிதைகள் மரபிலும் புதுக் கவிதையிலும் காணப்பட்டாலும் சிறுவர் பாடல்களாகவும் கிராமியப் பாடல்களாகவும் கலவை செய்த நூலாக பரிணமிக்கிறது| என்று இவரது நூல் பற்றிய அணிந்துரையில் கலாபூஷணம் ஐ.ஏ.ஹஸன்ஜி அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளார். ஷநெஞ்சினிலே இனிக்கின்ற கவிதைகள்| என்ற தலைப்பில் கிண்ணியா அமீர் அலி நூல் பற்றிய தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

மறக்க முடியவில்லை (பக்கம்
13) என்ற கவிதை யுத்தத்தால் ஏற்பட்ட பின்விளைவுகளின் மொத்த வலியையும் சுட்டிக் காட்டுகின்றது. அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டு அடிப்படை வசதிகளற்று துயர் சுமக்கும் ஜீவன்கள் தாம் வசதியாக வாழ்ந்த காலத்தை எத்தனை வேதனையுடன் நினைவுகூருவார்கள்? இவர்கள் பற்றிய தன் பார்வையை நூலாசிரியர் சிறப்பாக பின்வருமாறு பதிவாக்கியிருக்கின்றார்.

வெடிக்கும் பொறிகள்
துடிக்கும் உயிர்கள்
வடிக்கும் கண்ணீர்கள்
மறக்க முடியவில்லை.

பிறந்த மண்ணை
பிரிந்து வாழும்
துறவி வாழ்வை
மறக்க முடியவில்லை.


ஏற்றம் வேண்டும் (பக்கம்17) என்ற கவிதை பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக இயம்பி நிற்கின்றது. இன்று பொதுவான பிரச்சினையாக மாமியார் - மருமகள் பிரச்சினை காணப்படுகின்றது. பெண்களே பெண்களுக்கு எதிரியாக மாறிவிடும் ஒரு சூழ்நிலை அது. அதே போல் ஊர் வம்பு கதைக்கும் பெண்கள் பிற பெண்களைப் பற்றித்தான் கதைப்பார்கள். இத்தகைய போக்கு மாற வேண்டும். பிறரது குறைகளை துருவித் துருவி ஆராயும் பழக்கத்தை இல்லாமலாக்க வேண்டும். வீட்டில் பெண் பொறுப்பாக இருக்க வேண்டும். வெளியே சென்றால் நெருப்பாக இருக்க வேண்டும். பொறுமை, நிதானம், பணிவு, அடக்கம் என்பன பெண்ணிடத்தே காணப்பட வேண்டிய நல்ல பண்புகளாகும். கீழுள்ள வரிகள் இதை நிதர்சனமாக்குனின்றன.

பெண்ணை பெண்ணே
பழித்தல் மாற வேண்டும்
மண்ணில் எந்தப் பெண்ணும்
மாண்புற வாழ வேண்டும்

வீட்டுப் பொறுப்பிலும் பெண்ணுக்கு
கூட்டுப் பொறுப்பு வேண்டும்
நாட்டுச் சிறப்பிலும் பெண்
நாமம் பதியப்பட வேண்டும்


உன் நினைவுகளில் நான் (பக்கம்
18) என்ற கவிதை அக உணர்வை அழகாக படம் பிடித்துக் காட்டுகின்றது. பிரிந்து போன ஒரு பிரியத்தைப் பற்றிய வரிகளில் மனது கனத்துப் போகிறது. ஒருதலைக் காதல் எத்தனை துன்பமோ அதைவிட பல மடங்கு துன்பம் தரக்கூடியது இருவரும் காதலித்துவிட்டு பிரிந்து செல்வது. அந்த வலி கீழுள்ள வரிகளில் தொனிக்கின்றது.

பிரியமானவளே..!
உன் நினைவுகளை
நான் பிரியும்
நாள் வந்தால்
அது மரணமாகவிருக்கும்
அப்போது
என் மனசு மட்டும்
உன்னிடமிருக்கும்!


சின்ன மகள் (பக்கம் 43
) என்ற கவிதை ரசிக்கத்கதாக இருக்கின்றது. மழலைகளில் மொழி கேட்டு அவர்களுடன் விளையாடுவதே ஒரு சுகம்தான். கவலைகள் எல்லாம் சிறு குழந்தைகளால் காணாமல் போகும்.

சின்ன மகளின் சிரிப்பில்
சிந்தை குளி ராகுதே
என்னைப் பிரியும் நேரம்
ஏன்தான் நெஞ்சு துயராகுதே

ஆடிப் பாடி நாளும்
அன்பாய் இருந்திடு வாளே
தேடித் தேடி என்னைக் காணாமல்
தெருவிற்கும் வந்திடு வாளே!

பண்புதனை பற்றிடுவோம் (பக்கம்
57) என்ற கவிதை நல்ல பழக்க வழக்கங்கள் பற்றி இயம்பி நிற்கின்றது. நல்ல பழக்க வழக்கங்களை நாம் முதலில் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டிலும் பாடசாலையிலும் நமக்குக் கற்றுத் தந்த அத்தகைய நல்ல பழக்கங்கள் தான் பின்னாளில் நாம் சமூகத்தில் மதிப்புடன் வாழ்வதற்கான வழிவகையை ஏற்படுத்தித் தரும். நல்ல பண்புகள்தான் ஒருவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றது.

மண்மீது கொண்ட வாழ்வில் - பிறரை
மதித்து நடத்தல் வேண்டும்
தன் மீது கடமையாகும் என்றும்
தன்னலம் கருதாத சேவையாகும்

கெடுத்து வாழும் எண்ணம்
கேவலமாகுமே - அள்ளிக்
கொடுத்து வாழும் உள்ளம்
கொண்ட கொள்கை வேண்டுமே


கவிஞர் ஏ.எம்.கஸ்புள்ளாவின் கவிதைகள் சமூக அக்கறையோடு மிளிர்கின்றன. இவர் ஏற்கனவே கற்க கசடற என்ற கட்டுரைத் தொகுதியை வெளியிட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவரின் இலக்கிய முயற்சிகள் தொடர வாழ்த்துகிறேன்!!!


நூல் - நெஞ்சினிலே
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - ஏ.எம். கஸ்புள்ளா
வெளியீடு - செய்ப் பதிப்பகம்
விலை -
200 ரூபாய்