நூல் : கடல் தேடும் நதி
நூல் ஆசிரியர் :
நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ்
நூல் அறிமுகம்:  த.ராஜ்சுகா



ளையவர்களின் படைப்புக்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளிவரும் இச்சமகாலத்தில் ஒரு ஆழமான இருத்தலின் இலட்சணங்களோடு புறப்பட்டிருப்பவர் புத்தளத்தைச் சேர்ந்த இளங்கவிஞர் கவித்தீபம் நுஸ்ரிரஹ்மத்துல்லாஹ் அவர்கள்.

குறுகிய காலத்துக்குள் இலக்கிய பெருவெளிக்குள் காலடிவைத்து தனது ஆழமான
கவிதைகளினால் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதில் வெற்றியும் கண்டுள்ளார். அண்மையில் இவரது கன்னித்தொகுப்பு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் வெளியீடு செய்யப்பட்ட 'கடல் தேடும் நதி' கவிதை நூல் கண்ணுக்கு குளிர்ச்சியான அட்டைப்படத்தோடு வெளிவந்துள்ளது.
கடலைத்தேடுகின்றேன் எனும் தலைப்பில் தனதுரையை வழங்கியுள்ளார் கவிஞர்நுஸ்ரி அவர்கள் அதில், தனக்கு உதவிக்கரம் நீட்டிய அத்தனைபேருக்கும் நன்றியினை ஆத்மார்த்தமாக தெரிவித்துள்ளார்.

'கவிதையானது வெகுஜனப்பட்டு பேசப்படுவதும் வெளியாகும் இடத்திலேயேசுடுண்டு விடுவதும் கவிஞனின் மொழியாளுமையை பொறுத்தது. மொழிவாலாயம் கொண்ட கவிஞனின் தேர்ந்த சொற்களும் கவிதை வெளிப்பாட்டுமுறையும்தாம் ஒரு பெரும் பங்கை வகிக்கின்றது' என்ற இளையவர்களுக்கான
ஆலோசனையாகவும் வழிகாட்டலாகவும், நூலாசிரியருக்கு சிறந்தவாழ்த்துதல்களோடு முன்னுரையினை வழங்கியிருக்கின்றார் ஒலிபரப்பாளரும், இலக்கியவாதியுமான கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள்.

அத்தோடு வெளியீட்டாளரும் தடாகத்தின் அமைப்பாளருமான கலைமகள்ஹிதாயா ரிஸ்வி அவர்கள் வாழ்த்துரையினையும் நூலாசிரியரைப்பற்றிய
பின்னட்டைக்குறிப்பை நிறைவோடும் பூரிப்பு மாறாமலும் வழங்கியுள்ளார்ஜேர்மனைச்சேர்ந்த தடாகத்தின் நிருவாக ஆசிரியர் கவிதாயினி லூசியா கூஞ்ஞேஅவர்கள். அறுபத்தெட்டு தலைப்புக்களில் ஆரவாரமில்லா அழகிய ஆழமான கவிதைகளில்முதல் கவிதையினை அன்னைக்காய் சமர்ப்பித்துள்ளார் கவிஞர். மனிதரின்மூலக்கருவான தாயினை இக்கவிஞரும் பல இடங்களில் வலியுறுத்தி தன்அன்பினை தூய்மையாக வெளிப்படுத்தியுள்ளார்.

'என் நாவின்
முதல் வார்த்தையும்
என் எழுத்தின்
முதல் கவிதையும்
நீதான் தாயே'
என தாய்க்கு பிரியமான மகனாய் வெளிப்பட்டுள்ளார்.

பொதுவாக கவிஞர் நுஸ்ரி அவர்களின் கவிதைகளை வாசிக்கும்போது ஓர்இன்பச்சுவையினை அநுபவிக்கும் சந்தர்ப்பத்தை
தாராளமாய் ஏற்படுத்தித்தந்துள்ளது. கவிதையினை வாசித்து நிமிர்கையில்அதுபற்றிய அடையாளமாக தலைப்புக்கள் காணப்படுவது நன்றாகவே உள்ளது.குறிப்பாக
,

'மாலைவரை உங்கள்
உயிர்வாழும் காலமெனினும்
புன்னகைக்காமல் உங்கள்
காலைகள் விடிந்ததில்லை'
என முடிவடையும் கவிதை யார் பற்றியது எனபார்த்தால் 'பூக்கள்' என்ற தலைப்பு புன்னகைக்கின்றது. இப்படி பல
கவிதைகள் தலைப்புக்களிலேயே முடிவடைகின்றது. இதில் இவருடைய இளமைத்தன்மைவெளிப்பட்டு நிற்கின்றது.

தந்தைக்காய் தந்தையைப்பற்றி கூறும் கவிதை 'கோபக்காரர்கள்'. பொதுவாகதந்தை பற்றிய அபிப்பிராயத்தை கூறி அதன் உண்மையான நிலையினை
இக்கவிதை மூலம் எடுத்தியம்ப விரும்புகின்றார் கவிஞர்.

'பெற்ற தன் பிள்ளையை
கொஞ்சாமலும்
கெஞ்சாமலும்
மிஞ்சாமலும் கழியும்
நேரங்களை கண்ணீரால் கழுவும்
அப்பாக்களே'
என்று அவர்களுக்காக பரிதவிக்கிறார். 'திரும்பி வாங்கப்பா' எனும்கவிதையிலும் தந்தைக்காய் ஏங்கும் ஓர் பிள்ளையின் குரலாய் கண்ணீர்தருகின்றார்.

'கடல் தேடும் நதி' தொகுப்பானது கவிதைகளை இலகு மொழியில் செதுக்கிஇதயங்களுக்கு இதமளிக்கிறது. வாசிக்கும் அத்தனை நெஞ்சங்களையும்
சலிக்கவிடாமல் இழுத்துவைத்துவிடுகின்றது.

'கறுப்பி நீ' எனும் தலைப்பில்
கருவறை கறுப்பு
கல்லறை கறுப்பு
வெறும் தோலில்மட்டும்
பாகுபட்டுக் கிடக்கும்
மாந்தரும் நாமும் இனி ஓர்
பாடமாவோம்.'


என்ற கவிதை சமகால பெண்களை நம் கண்முன் கொண்டுவருவதோடுஆக காதல்இ திருமணம் போன்றவற்றோடு இக்கவிதையை இணைக்கும்போதுசிறந்த ஆலோசகராக கொள்ளலாம்.

பொதுவாக இத்தொகுப்பின் கவிதைகளை நோக்கின் சோர்வடைந்து
, தோல்வியில் உழன்று, கண்ணீரில் தோய்ந்து கவிதை எழுதாமல் மீளுவதற்காய், உற்சாகப்படுத்துவதாய், தங்களை உணர்ந்து ஓர் உத்வேகத்துள் எழுதாய் அமைந்தகவிதைகளே அதிகம் எனலாம். 'பட்டது போதும்' 'விழிச்சுக்க' 'தோல்வி' 'நான்' போன்று பல கவிதைகள் அவ்வாறானமனப்பக்குவத்தை வித்திடுகின்றது.

'நினைத்தது முடிந்ததும்
இலக்கை நிறுத்திட எண்ணாதே
எண்ணும் எண்களுக்கு
முடிவில்லை கண்டாய்
நீ அடையவேண்டியது
இன்னும் இருக்கின்றது'
என்ற வரிகளை எடுகோலாக காட்டலாம்.

காதல் பற்றி காதலர்கள் பற்றி மிக அருமையாக பேசியிருக்கின்றார் 'என்னகாதலிது' எனும் கவிதையில் காதலை வித்தியாசமாக சுவாரஸ்யமாகபார்த்திருக்கின்றார் கவிஞர். ஆண் பெண்ணுக்கிடையிலான உறவே நாம்யாவரும்காதலாக பார்க்கின்றோம் ஆனால் கவிஞர் நுஸ்ரியோ
, தாய் மகள், தந்தை மனன், அண்ணன் தங்கை போன்ற உறவுகளுக்கிடையிலான அன்பை அன்னியோன்யத்தைமிக உணர்வுபூர்வமாக வரிகளாக்கியுள்ளமை பாராட்டச்செய்கின்றது.

காதல் பற்றி இத்தனை அழகாய்ப் பேசும் இளங்கவிஞரான இவர் இன்றைய
இளசுகளிடம் காணப்படும் அநாகரிக காதலில் வெறுப்படைந்தவராய் அதனைசாடுபவராய் 'மீண்டும் வேண்டும் என்ற கவியினை வேண்டுகோளாகவடித்துள்ளார்.

அதிகமான கவிதைகள் மனிதத்தை வலியுறுத்தியே புனையப்பட்டுள்ளது.
இன்றளவில் தொலைந்து போய்க்கொண்டிருக்கும் மனிதாபிமானத்தை தட்டியெழுப்பும்படி செய்கின்றது. ஒவ்வொரு வரிகளும் நமக்கென்ன, நாம் மட்டும்வாழ்ந்தால் போதும், நமக்கு மட்டும் கிடைத்தால் சரி என்கின்ற எண்ணத்தை பலகவிகளில் சுட்டிக்காட்டியுள்ளார். 'கண்தானம்' 'இரட்டை' 'மனிதம் இன்னும்வாழ்கிறது' 'தட்டியது யாரோ' போன்ற தலைப்புக்களை இதற்காய்அடையாளமிட்டுக்கொள்ளலாம்.

ஒரே வட்டத்துக்குள் சுற்றிசுற்றி எழுதாமல் பரந்துபட்ட சிந்தனையோடு தனதுபார்வையை விசாலப்படுத்தியுள்ளார் கவிஞர். மனிதம் வெற்றி முயற்சி தாய்தந்தை உறவு பெண்ணடிமை சீதனம் யுத்தம் தந்த வலி என பட்டியல் நீள்கிறது.அத்தோடு கிராமத்து வாடை வீசூம் கவிதைகளை கவிஞர் தந்திருப்பது இதயம்மண்வாசனையையும் அநுபவிக்கின்றது.

நாங்கள் மறந்துபோன இளமைகால அநுபவங்கள்
, நினைக்க மறந்தசுவாரஸ்யங்கள் என அடுக்கிவைத்திருக்கின்றார் இக்கவிஞர். மெல்லியபுன்னகையோடு சுவைத்துசுவைத்து அசைபோடுகின்றது வாசிக்கும் நம்நினைவுகளையும். இளையவராக இருப்பினும் உணர்வுகளை கோர்த்து அதைஉயிரோட்டமாக உச்சரித்துக்காட்டுவதில் கவிஞரின் முதிர்ச்சித்தன்மைவெளிப்படையாக புலப்படுகின்றது.

நூலின் கடைசிப்பக்கங்களில் கிட்டத்தட்ட அறுபத்தைந்து கவிதைகள்குறுங்கவிதைகளாக தலைப்பிட்டு எழுதியுள்ளார். பக்கங்கள் நீளாதுமொத்தத்தையும் சுருக்கி தந்திருக்கும் அந்த விதமும் கவியார்வத்தைஅதிகப்படுத்தி சிந்திக்க வைக்கின்றது எனலாம்.

கிராமத்து வாசனைவீசும் கவிதைகளை சந்தத்துடன் புனைய முயற்சித்திருக்கலாம்என தோன்றுகின்றது. அழகான வரிகள் என்பதால் அப்படித்தோன்றுகின்றதுசந்தத்துடன் அவை அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

இலக்கிய உலகில் அண்மையில் இணைந்துகொண்டாலும் சிறந்த நுட்பங்களுடன்
, பரந்த சிந்தனையுடன், நகைச்சுவை உணர்வுடன், எழுதுவதால் இந்த பெரிய பரப்பில் ஓர் இடத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். இன்னும் வாசிப்பனுபவத்தை அதிகப்படுத்துவதன் மூலம் அதனை சாத்தியப்படுத்திக்கொள்ளலாம்.

இந்நூலில் குறிப்பிட்டுச்சொல்லும் தவறு
, எழுத்துப் பிழையை சரிசெய்து கொண்டிருந்தால் நிறைவாயிருந்திருக்கும் அச்சுப்பதிவின் போது ஏற்படும் சிலகுறைகளை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இருப்பினும் எழுத்துப்பிழைகள்பல கருத்துப்பிரழ்வையும் ஏற்படுத்திவிடும் என்பதை நினைவில்நிறுத்திக்கொள்ளல் வேண்டும்.

தனது முயற்சிகளை நூலாக்கி
, இலக்கிய பரப்பில் சாதனை படைக்கவந்திருக்கும் இளைய கவிஞர் கவித்தீபம் 'நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ்' அவர்கள் இன்னும் தன்சிந்தனை வட்டத்தின் வெளிப்பாடுகளை சமூகத்தை விழித்தெழச்செய்யும் படியாக, வாசகர்களின் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்றும் படைப்புக்களை நூலிருவாக்கவேண்டுமென்ற பிரார்த்தனைகளோடு அவரின் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய அனைவரின் சார்பாக வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கின்றேன்.


நூல் வகை: கவிதைத்தொகுப்பு
ஆசிரியர்: நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ்
நூலின் பெயர் : கடல் தேடும் நதி
வெளியீடு : தடாகம் கலை இலக்கிய வட்டம்
விலை:
250/=
தொடர்புகளுக்கு:
writer.nusry@gmail.com