நூல் : கனவு மெய்ப்பட வேண்டும்
நூல் ஆசிரியர் :
கவிதாயினி மதுரை குமாரி (ஆ.குமாரி லெட்சுமி)
நூல் அறிமுகம்: 
கவிஞர் இரா.இரவி

ட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. அச்சிட்ட நாஞ்சில் அச்சகம் நாகர்கோவில், பாராட்டுக்கள்.

கவியரங்கங்களில் என்னுடன் கவிதை பாடியவர் .பட்டி மன்றத்தில் என்னுடன் வாதிட்டவர் .விவசாயத் துறையின் அலுவலர் இப்படி பன்முக ஆற்றலாளர் நூல் ஆசிரியர் : கவிதாயினி ஆ.குமாரி லெட்சுமி!.

பொதுவாக திருமணம் ஆனதும் பெற்றோரை மறந்து விடுவார்கள் பெண்கள் என்று சிலர் சொல்வதுண்டு. நூலாசிரியர் கவிதாயினி ஆ.குமாரி லெட்சுமி அவர்கள் மணமான பின்னும் பெற்றோரை மறக்காமல் கவிதை நூலை காணிக்கையாக்கி சிறப்பு.

“வாழ்க! வளர்க! எனக்குள் கவிதை விதைத்தவள் என் காரியம் சிறப்புற உயிர்ப்பவள். அம்மா என்னுள்ளிருந்தே எனை வாழ்த்தும் அப்பா இருவருக்கும் சமர்ப்பணம்”.

ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் ஓர் ஆண் துணை நிற்கிறான் என்று புதுமொழி கூறும் வண்ணம் நூலாசிரியர் கவிதாயினி ஆ. குமாரி லெட்சுமி அவர்களின் வெற்றிக்கு அவரது கணவர் திரு. உமையொருபாகம் துணை நிற்கிறார். உமையொரு பாகம் காரணப்பெயர் என்று கூட சொல்லலாம். நூலாசிரியர் கவியரங்கங்களில் கவிதை பாட வரும்போதெல்லாம் அழைத்து வந்து பாட வைத்து முடிந்தபின் அழைத்துச் செல்வார். முற்போக்குவாதிகளிடம் கூட இத்தகைய பொறுமையை எதிர்பார்க்க முடியாது. இந்நூல் வெளிவர அவரது கணவரும் காரணம் என்றால் மிகையன்று.

நூலாசிரியர் தன்னுரையில் கணவர் பற்றியும், தனக்கு தாயாக இருந்து உதவிகள் புரியும் ஒரே மகள் செல்வி உமாமகேஸ்வரி பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கவிதையில் கவிஞன் என்றால் யார்? என்பதற்கு விளக்கம் கூறும் விதமாக வடித்த கவிதை. கவிஞர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதமான படைப்பு.

கவிஞன்
பூமிப்பந்தின் எங்கோ ஓர்
மூலையில் இருந்து கொண்டு
அண்டங்கள் ஆள்கின்ற அரசன்
கண்களில் தீப்பொறி
கருத்தினில் புரட்சி கொண்டு
எழுதுகோல் ஆயுதம்
எடுத்திட்ட வீரன்.

இந்த கவிதையை அப்படியே கவியரசர் மகாகவி பாரதியாருக்கும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கும் பொருத்திப் பார்த்து மகிழலாம்.

மனிதநேயத்தை மறந்து விட்டு பலர் கடவுள் பிரார்த்தனை பூஜை என்று நேரத்தை விரயம் செய்து வருகின்றனர். அவர்களுக்காக எள்ளல் சுவையுடன் பகுத்தறிவு மற்றும் மனிதநேயம் விதைக்கும் வகையில் வடித்த கவிதை நன்று.

சாமியை தொலைத்து விட்டு...
சாலை கடக்க கேட்ட
கிழவன் தவிர்த்து
எதிரே மோதிய
மனிதனைக் கடிந்து
பிச்சைக்காரர்கள்
குரல் கேட்டபடி
பசித்தவனை உதாசீனப் படுத்தி
கோவிலுக்குள் செல்கிறான் அவன்.


சாலை ஓரத்திலேயே சாமியைத் தவற விட்டுவிட்டு சாலை கடக்கக் கேட்ட கிழவன் தான் அந்த சாமி என்று கூறி மனிதநேயம் விதைத்துள்ளார்.

தன்னம்பிக்கை விதைக்கும் கவிதைகளும் நூலில் உள்ளன. பதச்சோறாக ஒன்று.

வெற்றியுடன் போராடு!
வெற்றி வேண்டுமெனில்
வெறியுடன் போராடு
புறக்கணிப்புகளே உன்னை
புடம் போடும் அதனாலே
மறக்காமல் மனதுக்கு
உரமாக அதை போடு !


புறக்கணிப்புகள் கண்டு கவலை கொள்ளாமல் தொடர்ந்து முயன்றால் வெற்றி வசப்படும் என்பதை கவிதையில் வசப்படுத்தி உள்ளார்.

அன்று, கல்வி – அரசிடம் ; மதுக்கடை – தனியாரிடம் இருந்த்து. ஆனால் இன்று, கல்வி – தனியாரிடமும் ; மதுக்கடைகள் – அரசிடமும் என்ற அவல நிலை தொடர்கின்றது. கல்வியே இன்று விற்பனையானது. குறுகிய காலத்தில் பணக்காரன் ஆகும் வழியாக பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் ஆகி விட்டன.

விற்பனைக்கு
கல்லூரி வாசல்களில் சுய விளம்பரம்
இங்கு கல்வி விற்பனைக்கு
அங்கு பணம் ஈட்ட மட்டுமே
பழக்கப்படுத்தப்படும்
மாணவ மாணவியர் !

ஆம். இன்றைய மாணவ, மாணவியரின் நோக்கம், குறிக்கோள் – அதிக வருமானம் ஈட்டும் கல்வி எது? என்பதிலேயே ஈடுபாடு உள்ளது. மதிப்பெண் கல்வி மட்டுமே உள்ளது. நீதிபோதனை வகுப்புகள் இல்லை, அறநெறி போதிப்பது இல்லை. அழகு தமிழுக்கும் வாய்ப்பு இல்லை என்ற நிலை வெட்கக்கேடு. பல சிந்தனைகளை தோற்றுவித்தது கவிதை.

தன்னலமின்றி பிறருக்காக வாழும் வாழ்க்கை பொருள் மிக்கது என்பதை உணர்த்தும் வண்ணம் வடித்த கவிதை நன்று.

தியாகம்!
மெழுகுவர்த்தியின் தியாகம்
ஒளியினை நிறைத்திருக்கும்
பூக்களைப் பார்
மறைவதற்காய் பூத்துச் சிரிக்கிறது
மலர்களின் ராசாவாகிய ரோசா மலர் !


ஆண், பெண் இருபாலருக்கும் பிடிக்கும் ரோசா பற்றிய கவிதை நன்று.

ரோஜா
மலரே
பிரபஞ்சத்திற்கு
மென்மை கற்றுத் தந்தது
உன் இதழ்கள்
காற்றுக்கு
நடக்கச் சொல்லித் தந்தது
அசைவு
உதிரப் போவது தெரிந்தும்
மலரத் துடிக்கும் இயற்கை புரட்சி நீ!
நீ வண்ணத்துப் பூச்சிகளுக்கு வரம் கொடுத்த போது /
உன் தோற்றத்தில் நான் வனப்பு கண்டேன் !


இந்த நூலில் புதுக் கவிதைகள் மட்டுமல்ல. ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. எதிர்காலத்தில் தனியாக ஹைக்கூ கவிதைகள் மட்டுமே எழுதி தனி நூல் வெளியிடுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

உலகப்பொதுமறை படைத்திட்ட திருவள்ளுவர் வழியில் அன்பை வழிமொழிந்து வடித்த கவிதை நன்று.

ஆதலினால் அன்பு செய்வீர்!
அன்பு மட்டுமே
உலகை கைகளுக்குள் கொண்டு வரும்
ஆதலினால் அன்பு செய்வீர்
உலகத்தோரே!


கல்வி என்று ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விடுகின்றது. வறுமை வாட்டுகின்றது. 67வது குடியரசு தின விழாவை கோலாகலமாக இராணுவ அணிவகுப்புகளுடன் கொண்டாடிய போதும் இன்னும் நாட்டில் வறுமை ஒழிக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.

துளிப்பா !

காற்றுக்கு விடுதலையாகி
கைகளுக்குள் சிறைப்பட்டுப் போனது
மலர்!


ரோபோக்கள் விற்பனைக்கு
கையில் பணத்துடன் பெண்
திருமணச் சந்தை.


வரதட்சணைக் கொடுமை பற்றி எள்ளல் சுவையுடன் நுட்பமாக வடித்த துளிப்பா மிக நன்று.

இளமையில் கற்கலாம்
பின் வயிற்றுப்பாடு?
ஏழை சிறுவன்.

இப்படி சிந்திக்க வைக்கும் கவிதைகள் எழுதிய நூலாசிரியர் கவிதாயினி ஆ.குமாரி லெட்சுமி அவர்களுக்கு பாராட்டுக்கள்.



உமா பதிப்பகம், அன்னை இல்லம்,
73, நேரு நகர் முதல் தெரு, டி.வி.எஸ். நகர், மதுரை – 625 003. 68 பக்கங்கள். விலை : ரூ.40.