நூல் : வண்ண வண்ணப் பூக்கள்
நூல் ஆசிரியர் :
ஷெல்லிதாசன்
நூல் அறிமுகம்: 
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

லங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் இலக்கியங்களுக்கான பங்களிப்புக்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தாலும், பொதுவாக நோக்குமிடத்து ஏனையை துறைகளுடன் ஒப்பிடுகையில் சிறுவர் இலக்கியத் துறை இன்னும் வளர்ச்சியடைய வேண்டுமென்பது நிதர்சனமாகும்.

சிறுவர்கள் ஆர்வமாக நூலை வாசிக்கத் தக்கதாகவும், குழந்தை உலகத்துக்குள் வாசகர்களை அழைத்துச் செல்லும் விதமாகவும் அவற்றை எழுதுவதில் பல யதார்த்த சிக்கல்கள் காணப்படுகின்றன. இலக்கிய ஜாம்பவானகள் என்று அறியப்படும் பலரால் சிறுவர் இலக்கியத் துறையில் பிரவேசித்து தனது பங்களிப்புக்களைச் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. விதிவிலக்காக சிலர் பல தடைகளைத் தாண்டி சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாகவும், அவர்களது வாசிப்பைத் தூண்டும் விதமாகவும் சிறுவர் படைப்புக்கள் எழுதுவோரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

அந்த வகையில் கவிஞர் ஷெல்லிதாசன் அவர்கள் ஈழத்துக் கவிஞர்களுள் முக்கியமான ஒருவர்;. செம்மாதுளம் பூ, நகர வீதிகளில் நதிப் பிரவாகம் ஆகிய காத்திரமான கவிதைத் தொகுதிகளை அவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றார். மூன்றாவது தொகுதியாக வண்ண வண்ணப் பூக்கள் என்ற தலைப்பில் அமைந்த தனது சிறுவர் இலக்கிய நூலை இலக்கிய உலகுக்குத் தந்திருக்கின்றார்.

இந்நூல் மகுடம் வெளியீடாக
42 பக்கங்களில் வண்ணச் சித்திரங்களை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கின்றது. பேராசிரியர் செ.யோகராசா, செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன், மைக்கல் கொலின் போன்றவர்கள் நூல் பற்றிய உரைகளை எழுதியுள்ளனர்.

மாண்பு தரும் கல்வி, பலூன் சிறுவன், தூங்காத சின்ன முயல், எல்லாமே நீதான் அம்மா, பாற் கஞ்சி, வண்ண வண்ணப் பூக்கள், சின்னக் கண்மணி, பள்ளிப் பருவம், ஈடில்லா என் அன்னை, விடிகாலை விழிப்பு, அன்பான அண்ணன் தம்பி, சுகந்தரும் சுத்தம், வீட்டில் ஒரு தோட்டம், கைத் தொலைபேசி, கரணம் போடும் குரங்குக் குட்டி, மகத்துவமானது வாசிப்பு, தாய்மொழிக் கல்வி, ஆடுவோம் பள்ளுப் பாடுவோம், சுவை மாங்கனிகள், அம்மாவின் ஆசை, பச்சைக் கிளியும் பள்ளிச் சிறுவனும், நல்லோராய் நாம், தன்னை நம்பும் சின்னக் குருவி, கைகொடுக்கும் கற்பகதகடு, மதிக்கக் கற்று மதிப்பை உனதாக்கு, பாரதியின் உறவுக் குயில், ஓடி விளையாடு தம்பி, முக்குளித்து முத்தெடுப்போம், கள்ள நரி குள்ள நரி, மாற்றத் திறன் மகிமை, தங்கத் தாத்தா அழைக்கிறார், வளரிளம் பருவம், அம்மாவுக்கு உதவலாம் வா, சின்னத் தம்பியின் செல்லக் குறும்பு ஆகிய தலைப்புக்களில்
34 சிறுவர் பாடல்கள் நூலில் இடம்பிடித்துள்ளன.

கல்விச் செல்லவமானது பிறரால் திருடப்பட முடியாதது. கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு காத்திருக்கும். இன்றைய யுகத்தில் கல்வி இல்லாமல் யாராலும் காலூன்றியிருக்க முடியாது. கல்வியின் பெருமை சொல்லி மாளாதது. கல்வி கற்காதவர்கள் பிற்காலத்தில் அதற்காக எவ்வளவு வருத்தமடைந்தாலும் பயனிருக்காது. அத்தகைய கல்வியின் சிறப்பை மாண்பு தரும் கல்வி (பக்கம் 01) என்ற பாடல் குறிப்பிட்டிருக்கின்றது.

அறிவுக் கண்ணைத் திறக்கும்
ஆற்றல் தன்னை வளர்க்கும்
பெருமை அனைத்தும் கொடுக்கும்
பெரியோராக உயர்த்தும்

உண்மை பொய்யை உணர்த்தும்
உலகை அறிய உதவும்
விண்ணை அளக்க துணியும்
வியக்கும் செயல்க ளாற்றும்


பலூன் சிறுவன் (பக்கம்
03) என்ற கவிதை சிறுவன் தன் கதையைக் கூறும் பாடலாக அமைந்திருக்கின்றது. குடிகாரராக இருக்கும் அவனது அப்பாவால் அந்த குடும்பம் படும் கஷ்டம் பாடலில் தொனிக்கிறது.

குடித்துவிட்டு எங்களப்பா
ஊரைச் சுற்றுறார்
குடிக்கக் காசு வேணுமென்று
என்னை அடிக்கிறார்

அம்மா பாவம் அப்பாவிடம்
அடியை வாங்கியே
அகலாத நோயில் வீழ்ந்து
பாயிற் கிடக்கிறாள்


பள்ளிப் பருவம் (பக்கம்
12) என்ற பாடல் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியதொன்றாகும். அன்றாடம் கற்பவை மனதில் பதிய வேண்டுமென்றால் அவற்றை அதே தினம் இரவில் மீட்டிப் பார்க்க வேண்டும். படிக்காமல் சோம்பேறியாக இருந்துவிட்டு பரீட்சைக் காலத்தில் படிக்க நினைப்பது முட்டாள் தனமாகும். இவற்றைக் கீழுள்ள வரிகளில் கவிஞர் குறிப்பிட்டிருக்கின்றார்.

பள்ளி சென்று நீ நித்தம்
படிக்கும் புதிய பாடங்களை
அன்று இரவே நீ மீட்டால்
அதுவே உனக்கு கைகொடுக்கும்

பரீட்சை வந்த பின்னாலே
படிப்போம் என்று உறங்காதே
நன்றாய் படிக்க நினைத்தாலும்
ஒன்றும் புரியாது அவ்வேளை


இன்று தொலைக் காட்சித் தொடர்கள் எல்லோரையும் ஆக்கிரமித்திருக்கின்றன. பல பெண்கள் அதற்கு அடிமையாகியிருக்கின்றார்கள். கணவனை, குழந்தையை, வீட்டு வேலைகளை கவனிப்பதற்கு அவர்களுக்கு விளம்பர இடைவேளைகள்தான் கிடைக்கின்றன. பிள்ளைகளுக்கான தாய்ப் பாசம் அரிதாகின்றது. அந்நியோன்னியம் குறைகின்றது. ஈடில்லா என் அன்னை (பக்கம் 13) என்ற பாடலில் வரும் அம்மா, தாய்க் குலத்துக்கே பெருமை தேடித் தருவதாக இருக்கிறாள்.

ஆயா ஊட்ட அவளிருந்து
அழகாய் தொடர்கள் பார்த்ததில்லை
அப்பா வுடனே ஊர் சுற்றி
அழவும் தனியே விட்டதில்லை

விரும்பும் பண்டம் அத்தனையும்
வீட்டிலேயே அவள் செய்வாள்
எதையும் தெருவில் வாங்கியுண்ண
எங்க ளம்மா விட்டதில்லை


சிறுவர் பாடல்களுக்கு கனதி சேர்க்கும் விதமாக இந்நூலில் பொருத்தமான சித்திரங்கள் காணப்படுகின்றன. குழந்தைகள் விரும்பிப் படிக்க இது முக்கிய காரணியாக அமையும். ஓசை நயத்துடன் சிறுவர் பாடல்கள் அமைந்திருப்பது நூலின் கூடுதல் சிறப்பு. ஷெல்லிதாசனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!


நூல் - வண்ண வண்ணப் பூக்கள்
நூல் வகை - சிறுவர் பாடல்கள்
நூலாசிரியர் - ஷெல்லிதாசன்
வெளியீடு - மகுடம்
விலை -
200 ரூபாய்