நூல் : ஒரே பூமியில் நானும் நீயும் (கவிதைத் தொகுதி)
நூல் ஆசிரியர் :
உ.நிசார்
நூல் அறிமுகம்: 
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

1979 இல் தினகரன் பத்திரிகையில் உலக சாதனை எனும் கவிதையை எழுதியதையடுத்து இன்று வரை கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியத் துறைகளில் அதிக முனைப்புடன் செயற்படுபட்டு வருபவர் எழுத்தாளர் மாவனெல்லை உ.நிசார் அவர்கள். 18 நூல்களை இதுவரை வெளியிட்டிருக்கும் இவர் ஒரே பூமியில் நானும் நீயும் என்ற இந்த நூலை தனது 19 ஆவது நூலாக தற்போது வெளியிட்டிருக்கின்றார்.

கவிதைகளைக் காதலிப்பவர்களுக்கு இலக்கியத்தின் மறு வடிவங்களையும் ரசிக்கும் திறன் இயல்பிலேயே வாய்த்து விடுகின்றது. தீவிரமாக ஏனைய துறைகளில் ஈடுபட முடியாவிட்டாலும் கூட, இலக்கியத்தின் பரிணாமங்களை ஆராயும் மனம் இயல்பாகவே தோன்றி விடுகின்றது.

கவிதை, சிறுகதை, நாவல் என்ற தளத்தில் ஈடுபட்டவர்களில் பலர் சிறுவர்களுக்கான இலக்கியங்களை முன்வைக்கும்போது திக்குமுக்காடுவது கண்கூடு. ஆனால் உ. நிசார் அவர்களுக்கு அவை கைவந்த கலையாகிவிட்டது. அவர் வெளியிட்டுள்ள
19 நூல்களில் 13 நூல்கள் சிறுவர்களுக்கானவை.

ஒரே பூமியில் நானும் நீயும் என்ற கவிதைத் தொகுதி பானு வெளியீடாக
68 பக்கங்களில் 49 கவிதைகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது.

செடியில் பூத்திருக்கும் அழகிய பூவை ரசிக்கும் யாருக்கும் செடியைத் தாங்கும் வேர் பற்றிய அக்கறை இருப்பதில்லை. மலரின் வாசத்தை, மென்மையை வர்ணிப்பவர்கள் வேரின் தியாகத்தை வர்ணிப்பதில்லை. அது மனிதனின் இயல்பு. அதை ஓவியம் (பக்கம்
03) என்ற கவிதையினூடா கவிஞர் உ.நிசார் சொல்லியிருக்கும் விதம் அலாதியானது.

வானவில்லின்
வர்ணங்களிலெல்லாம்
வந்து குவியும்
ஓவியமொன்று அது

.. வரிசை வரிசையாக
வருவோர் போவோர்
வர்ணிக்கிறார்கள் ஓவியத்தை
அதை வரைந்த
கலைஞனை மறந்துவிட்டு!


நாம் என்றும் பெரியவர்கள் (பக்கம்
14) என்ற கவிதை சம காலத்துக்கு வெகுவாகப் பொருந்தும் கவிதையாக அமைந்திருக்கின்றது. சிறுவர்கள், வயோதிபர்கள் என்று பேதமில்லாமல் கற்பழிக்கப்படும் ஒரு புதுமையான யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதர்கள் மனிதத்தையெல்லாம் தொலைத்துவிட்டு இருட்டு வாழ்க்கைக்குள் தம்மை அடைத்துக் கொண்டுள்ளார்கள். இரக்க குணம் என்பது துளியளவுமின்றி பிஞ்சுகளைக் கூட முகர்ந்து பார்த்துவிட்டு கொன்றுவிட்டு தப்பிவிடுகின்றார்கள். வீடு, பாடசாலை, உறவினர் வீடுகள் என்று எந்தவித அலட்டலும் இல்லாமல் பிள்ளைகளை அனுமதித்துவிட்டு அவர்களை முறையாகக் கண்கானிக்காமல் பின்னாளில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால் அழுது துடிக்கிறார்கள். நம்மில் எத்தனைப் பேர் நம் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அலசி ஆராய்கிறோம்? அவர்களிடம் பிறர் தவறாக நடக்கின்றார்களா என்பதை எத்தனைப் பேர் பரிசீலனை செய்திருக்கின்றோம்.

ஒரு பிள்ளை வீட்டைவிட்டு காலையில் சென்றால் மாலை வீடு திரும்பும் வரை பல பிரச்சினைகளை எதிர்நோக்கலாம். அவற்றை வீட்டில் சொல்ல பயந்து கொண்டு உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்கலாம். அவற்றை அறிந்து அவர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிடில் பூக்காத மொட்டுக்கள் கூட கருகிப் போய்விடும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதை கீழுள்ள கவிஞரின் வரிகள் நிதர்சனமாக்குகின்றன.

எட்டிப் பார்த்து உட்புகும்
கட்டவிழ்த்து விடப்பட்ட
விகாரப் பேய்களின்
குரூர காம சேஷ்டைகளினால்
குஞ்சு வீடுகள் உடைந்து
கூட்டாஞ் சோறு சிதறி
பொம்மைகளின்
கழுத்துக்கள் திருகப்படும்


பெண்கள் இறைவனின் அற்புத படைப்புக்கள். பெண்ணின் அன்புக்கு எந்த ஆணும் அடிமையாகிவிடுவான். இயற்கையிலே பெண்ணுக்கு மிருதுவான குணமும், உடலும் அமையப் பெற்றிருக்கின்றது. அந்த அழகைப் பற்றி பாடாத கவிஞர்களே இல்லை. கவிஞர் உ.நிசார் பெண் (பக்கம்
22) என்ற கவிதையில் பெண்களைப் பற்றி பின்வருமாறு வர்ணிக்கின்றார்.

மலைகளின் உறுதி
அலைகளின் சலனம்
பூமியின் பொறுமை
தாமரையின் புனிதம்
ரோஜாவின் மென்மை
வைரத்தின் கடினம்....

இவற்றை சிறிது சிறிதாக எடுத்து
அமுதை விடத்தை இட்டு
குழைத்துக் குழைத்து
பக்குவமாக
ஊட்டி வளர்க்கப்பட்ட
அற்புதப் படைப்பு


வெற்றி என்பது இலகுவில் கிடைக்கக் கூடியதல்ல. இலகுவில் கிடைத்துவிட்டால் அது வெற்றியும் அல்ல. ஆனால் வெற்றியை அடைந்து கொள்வதற்கு நாம் மிகவும் பாடுபட வேண்டியிருக்கின்றது. போராட்டத்துக்குபின் தான் நல்ல வெகுமதி காத்திருக்கின்றது. சிறு சிறு தோல்விகளை நம்மை நாமே புடம்போட்டுக்கொள்ள இறைவனால் அமைத்துத் தரப்பட்ட சந்தர்ப்பங்கள். வெற்றி (பக்கம்
43) என்ற கவிதை வரிகள் வெற்றின் தத்துவத்தை அழகாக கூறி நிற்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

சுடராகி மின்மினியின்
உடல் ஒளிருது – தன்
மடல் விரிய வலி கொண்டு
மலர் பூக்குது

வீழ்ந்தாலும் அருவிகள்
எழுந்தோடுது – சகதி
தாழ்ந்தாலும் தாமரைகள்
தரம் பேணுது


இத்தகைய அழகிய அர்த்தம் மிக்க கவிதைகளை எழுதி இலக்கியப் பணியாற்றி வரும் கவிஞர் உ.நிசார் இலங்கை இலக்கிய வரலாற்றில் நற்பெயரைப் பதித்துக்கொண்டவர். இன்னும் பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!

நூல் - ஒரே பூமியில் நானும் நீயும்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - உ.நிசார்
வெளியீடு - பானு வெளியீட்டகம்
விலை -
300 ரூபாய்