நூல் :  மகரந்தச் சேர்க்கை
நூல் ஆசிரியர் :
கவிஞர் தியாக இரமேஷ்
நூல் அறிமுகம்:  
கவிஞர் இரா. இரவி


கரந்தச் சேர்க்கை’ நலின் தோற்றம் பார்த்தவுடனேயே நூல் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விடும். பதிப்புலகில் தனி முத்திரை பதித்து வரும் இனிய நண்பர் வாசகன் பதிப்பகம் ஏகலைவன் அவர்களுக்கு முதல் பாராட்டு.

நூல் ஆசிரியர் கவிஞர் தியாக இரமேஷ் அவர்களுக்கு அடுத்த பாராட்டு. காரணம் இந்த நூலை தமிழர்களை, தமிழ்மொழியை மதித்திட்ட மாமனிதர் ‘லீ குவான் யூ’ அவர்களுக்கு காணிக்கை ஆக்கியதற்கு. ‘சிங்கைச் சூரியன் எங்களின் தேசப் பிதா’ என்று அவரைக் குறிப்பிட்ட்து மிகவும் பொருத்தம்.

பதிப்புரை, புதுமைத் தேனீ மா. அன்பழகன், முனைவர் இரத்தின புகழேந்தி, ஆசிரியர் தன்னுரை என அனைத்தும் அற்புதம்.

நூல் ஆசிரியர் கவிஞர் தியாக இரமேஷ் முகநூல் நண்பர். இவரது முந்தைய நூலிற்கும் விமர்சனம் பதிவு செய்துள்ளேன். சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் துணைச் செயலர் பதவியில் துடிப்புடன் செயல்பட்டு வருபவர். அவருடைய இலக்கியப் பயணத்தின் முக்கிய மைல்கற்களான, மலரும் நினைவுகள், புகைப்படங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.

அதன் அருகே ஹைக்கூ வடிவமைப்பு, பேராசிரியர் மறைமலை இலக்குவனார், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட பலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாகவும், நூலாசிரியரின் கடின உழைப்பு, இலக்கிய ஈடுபாட்டை உணர்த்துவதாகவும் உள்ளன. பாராட்டுக்கள்.

முதல் ஹைக்கூ கவிதையில் உலகப் பொதுமறையான திருக்குறளை உயர்த்திப் பிடித்து இருப்பது சிறப்பு.

பல குரல் தேவையில்லை
மனித உயர்வுக்குப் போதும்
ஒரு குறள்!


உண்மை தான்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.


(ஆள்வினை உடைமை, குறள் எண் 619)

இந்த ஒரு திருக்குறளை மட்டும் மனிதன் வாழ்வில் கடைபிடித்தால் உயரலாம் என்பது மறுக்க முடியாத உண்மை. தெய்வத்தால் முடியாதது கூட நீ முயன்றால் முடியும் என்று முயற்சியை உயர்த்தியவர் நம் வள்ளுவர் . அக்கருத்தை ஹைக்கூவில் உணர்த்தியது சிறப்பு.

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் இயங்கிக் கொண்டே இருப்பவர். மற்றவர்களையும் இயங்கிக் கொண்டே இருக்கச் சொல்பவர். அவர் வழியில் நூல் ஆசிரியரும், பதிப்பாளரும் இயங்கிக் கொண்டே இருப்பவர்கள். பல சாதனைகளை இலக்கியத்தில் நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றனர். இந்த நூலும் ஒரு சாதனை தான். இப்படி ஒரு ஹைக்கூ நூல் இதுவரை வந்த்து இல்லை எனலாம்.

உயிரோடு இருப்பதல்ல
உயிர்ப்போடு இருப்பதுவே
வாழ்க்கை!

இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள் குறிப்பிடுவார். "மூச்சு விடுபவரெல்லாம் மனிதரல்ல, முயற்சி செய்பவரே மனிதர்": என்பார். அதனையும் நினைவூட்டியது இந்த ஹைக்கூ பதிப்பாசிரியரும் இந்த ஹைக்கூவை மதிப்புரையில் மேற்கோள் காட்டி உள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரத்தை, கொடுமையை, ஒரு நேர்மையான படைப்பாளியால் படைப்பில் காட்டாமல் மறைக்க முடியாது. இவரும் படைத்துள்ளார் பாருங்கள்.ஈழத்தில் தமிழர்களைச் சமமாக நடத்தவுமில்லை.இனி நடத்தப் போவதுமில்லை .அதனால்தான் தனி ஈழமே தீர்வு என்கிறார்கள் .அங்கு சிங்கள ஆதிக்கமே மேலோங்கி இருக்கின்றது .மனிதநேயம் மறந்து விட்டனர் .ஆசையே அழிவுக்கு காரணம் என்று சொன்ன புத்தரை வழங்கும் சிங்களர் பேராசையோடு இருக்கின்றனர் .

அழிக்கப்படுவதும், இடிக்கப்படுவதும்
அங்கும் இங்கும் தொடர்கிறது
முள்ளி வாய்க்கால்!


ஆண்களின் குற்ற உணர்வை ஒளிவுமறைவு இன்றி அப்படியே பதிவு செய்துள்ளார். பாராட்டுகள். இயல்பான ஹைக்கூ.

பெண்டாட்டி இருந்தும்
பெண்ணைப் பார்க்கையில்
பரபரக்கும் மனசு.


(பெரும்பாலானோர் இப்படித்தான்விதிவிலக்காக சில நல்லவர்களும் உண்டு .)

உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் இப்படி பல்வேறு பெயர்களில் வந்த மாற்றங்கள் மனித நேயத்தை சிதைத்து வருகின்றன என்பதே உண்மை. அவ்வுண்மையை உணர்த்திடும் ஹைக்கூ ஒன்று. நன்று.

உலக நாகரிகத்தால் ஓட்டையாகிப் போனது
ஓசோன் மட்டுமல்ல
மனிதமும்!


கருத்து மிக நன்று. ஆனால் ஹைக்கூ கவிதையாக்கும் போது இன்னும் சுருக்குவது நன்று.

உலக நாகரிகத்தால் ஓட்டை
ஓசோன் மட்டுமல்ல
மனிதமும்.


அடுத்தப் பதிப்பில் ‘ஆகிப்போனது’ என்ற சொல்லை நீக்கி விடுங்கள். இன்னும் செறிவாக இருக்கும் ஹைக்கூ.

உடல்நலம் குன்றிய போதும், இறுதி மூச்சு உள்ளவரை தமிழினத்திற்காக உழைத்து வந்த வெண்தாடி வேந்தர், பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரடீஸ், தந்தை பெரியார் பற்றி ரத்தினச் சுருக்கமான ஹைக்கூ மிக நன்று.

கட்சிக்காரன் அல்ல
கொள்கைக்காரன்
பெரியார்.

உண்மை. தந்தை பெரியார் யாருடனும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர். கொள்கையில் குன்றென நின்று பகுத்தறிவைப் புகட்டியவர். இன்றைய அரசியல்வாதிகள் போல் உள்ஒன்று வைத்து புறம்ஒன்று பேசாதவர்.

பேருந்தில் பயணம் செய்யும் போது சிலர் பேருந்தில் அமர்ந்தவுடன் தூங்கி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நடத்துனர் மீதிப்பணம் தர வேண்டுமென்றால் தூக்கம் வரவே வராது. அவரிடமிருந்து மீதிப்பணம் வாங்கினால் தான் தூக்கம் வரும். இது போன்ற அனுபவம் நமக்கும் நேர்ந்து இருக்கும். அதனை உணர்த்திடும் ஹைக்கூ எள்ளல் சுவை உள்ளது.

வாங்காதவரை
உறக்கமில்லை
மீதி சில்லரை.


சிலர் திருமணம் முடித்துவிட்டு மனைவியை விட்டு வெளிநாடு சென்று விடுவார்கள். மணம் முடித்த மனைவியின் நிலை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதனை உணர்த்தும் ஹைக்கூ.

தனியாக இருப்பதை விட
கன்னியாக இருந்திருக்கலாம்
ஃபாரின்’ மாப்பிள்ளை!


நூலாசிரியரிடம் சிறிய வேண்டுகோள். அடுத்த பதிப்பில் ஆங்கிலச் சொல் தவிர்த்து ‘வெளிநாட்டு மாப்பிள்ளை’ என்று அச்சிடுங்கள். தமிழ்நாட்டு தமிழர்களின் தமிங்கிலம் சிங்கப்பூர் தமிழர்களுக்கு வேண்டவே வேண்டாம் என்பது என் கருத்து. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

நீ எங்கு சென்றாலும்
எண்ணத்தில் என்றுமிருப்பாய்
தமிழாய்!


தமிழுக்கு என்றும் அழிவில்லை. அதுபோல காதலி நினைவிற்கும் அழிவில்லை என்பதை மிக அழகாக உணர்த்தி உள்ளார்.காதலைப் பாடும் போதும் தமிழை நினைக்கும் தமிழ்ப் பற்றுக்குப் பாராட்டுகள்.

உள்ளத்து உணர்வுகளை, மனதில் பட்டவைகளை, அனுபவத்தை, பார்த்ததை, கேட்டதை வைத்து ஹைக்கூ கவிதை எழுதி, ‘மகரந்தச் சேர்க்கை’ என்ற பெயரில் நூலாக்கி வாசகர்களுக்கு ஹைக்கூ விருந்து வைத்துள்ளார், பாராட்டுகள்.


 

வெளியீடு : வாசகன் பதிப்பகம், 167, ஏ.வி.ஆர். வளாகம், செரி சாலை,
சேலம்-636 007. பக்கம் : 80, விலை : ரூ. 100