நூல் : அவள் வரும் நேரம்
நூல் ஆசிரியர் :
கவிஞர் அன்பு முருகசாமி லி.
நூல் அறிமுகம்:   கவிஞர் இரா.இரவி


னிய நண்பர் கவிஞர் ஏகலைவனின் வாசகன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் அவள் வரும் நேரம். நூல் ஆசிரியர் கவிஞர் அன்பு முருகசாமி லி. அவர்களுக்கு முதல் நூல். எல்லோருக்கும் முதலில் பூப்பது காதல் கவிதை தான். முதல் நூல் என்பதால் முழுவதும் காதல் கவிதை தான் என்று ஆசிரியர் தன்னுரையில் எழுதி விட்டார்.

காதல் கவிதைகள் மட்டும் படிக்க சுகமாக காரணம். சலிப்பே வராது. காரணம் காதல் கவிதை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் ஆற்றல் காதல் கவிதைக்கு உண்டு.

நூல் ஆசிரியர் பெயரிலேயே அன்பு இருப்பதால் அன்பைப் பொழிந்து காதல் கவிதை வடித்துள்ளார். பதிப்புரை நன்று. திரு. அன்பு இராமகிருஷ்ணன் சு. (ஊத்துக்குளி) அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக வரவேற்கின்றது.

காதலி அருகில் இல்லாவிட்டாலும் காட்சிக்கு வராவிட்டாலும் அவள் பற்றி நினைவு ஓர் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும். அதனை உணர்த்திடும் புதுக்கவிதை நன்று.
அன்பே !
நீ தான்
என்னிடம்
தோன்ற மறுக்கிறாய் ...
உன் நினைவுகள் அல்ல.


காதலின் அடுத்தக் கட்டம், கூடல், தீண்டல், அணைப்பு. உணர்ந்தவர்கள் மட்டும் உணரும் உண்மை உணர்வு காதல்.

இன்னும்
இறுக்கிக் கொள்
அன்பே
நம்மிடையே காதல் புகலாம்
ஆனால் காற்று புகக் கூடாது.


எப்படியோ இறுக்கிக் கொள்வதில் காதலி உடைந்து விடாமல் இருந்தால் சரி.

இன்றைக்கு பலரும் சர்க்கரை நோய் வந்து அவதிப்படுகின்றனர். நண்பர்கள் சந்தித்தால் உன்னுடைய சர்க்கரை அளவு எவ்வளவு என்றுதான் பேசிக் கொள்கின்றனர். சர்க்கரை நோய் வருவதற்கு மருத்துவர்கள் பல காரணங்கள் சொன்னாலும், நூல் ஆசிரியர் கவிஞர் அன்பு முருகசாமி லி. சொல்லும் காரணம் புதுமையானது.

அன்பே !

இனிமேல்
உன் பார்வைகளை
குறைத்துக்கொள்
மருத்துவ அறிக்கை சொல்கிறது.
என் இரத்தத்தில்
சர்க்கரையின் அளவு
அதிகரித்து விட்டதாம்?


மாற்றி சிந்திக்கும் போது வித்தியாசமான கவிதைகள் வந்து விடும். எல்லோரும் அன்று எழுதியது போல மானே! தேனே! என்று அரைத்த மாவையே அரைக்காமல் இன்றைய இளைஞர்கள் புதுமையாகச் சிந்திக்கின்றனர்.

பூக்கள் வாடியதற்காக
கூந்தலை விட்டு
எடுத்தெறியும்
பெண்கள் மத்தியில்
நீ
எடுத்தெறிந்த பின்பு தான்
வாடுகின்றன
பூக்கள்
உன்னைப் பிரிந்ததற்காக!


இது உண்மை இல்லை என்றாலும் காதலியிடம் இப்படி சொல்லும் போது அகம் மகிழ்வாள் என்பது உண்மை.

இன்றைய நவீன காதலையும் காட்சிப்படுத்தும் விதமாக உரையாடல் வடிவில் வடித்த புதுக்கவிதை நன்று.

ஆயிரமாயிரம்
குறுஞ்செய்திகளை அனுப்பு
வலியெடுக்கும்
என் விரல்களுக்கு
என்ன தருவாய்?
எனக் கேட்டாய்
என் அன்பே
மோதிரம் தரவா ? என்றேன்
இல்லை
முத்தம் தா ! என்றாய் !
விடைகளை தயாரித்து விட்டு
கேள்விகள் கேட்கிறாயா?
என் குறும்புக் காதலியே !


முத்தத்திற்கு செலவில்லை உடன் தந்து விடலாம். ஆனால் தங்கத்தில் மோதிரம் தாவென கேட்டு இருந்தால் காதலன் பாடு திண்டாட்டம் ஆகி இருக்கும்.

காதலில் ஊடல் வருவதுண்டு. திட்டி விடுவதும் உண்டு. பின் திட்டியதை நினைத்து வருந்துவதும் உண்டு. காதலர்களிடையே காலம் காலமாக நடக்கும் ஒன்று தான். அது பற்றியும் நூல் ஆசிரியர் கவிஞர் அன்பு முருகசாமி லி. சிந்தித்து உள்ளார். முன் எழுத்தை பின்னால் போட்டு வித்தியாசமானவன் என்பதை எடுத்துக்காட்டி உள்ளார்.

நீ
என்னைத் திட்டிய
நாட்களில் எல்லாம்
நிறைய சந்தோஷப்படுவேன்
அன்பே
நிச்சயம்
அன்று முழுவதும்
என்னை மறந்திருக்க மாட்டாய்
என்பதால்!


காதலியை காலம் காலமாக எல்லோரும் நிலவு என்று தான் வர்ணிப்பது வழக்கம். நூல் ஆசிரியர் மாற்றி சிந்தித்துள்ளார், பாருங்கள்.

அன்பே
நீ நிலவல்ல
சூரியன்
நான் தானே
உன்னை சுற்றுகிறேன்!


காதலியை சூரியன் என்று சொன்ன உவமை புதுமை தான். சூரியன் சுற்றவில்லை, நிலவு தான் சுற்றுகின்றது என்ற அறிவியல் உண்மையையும் கவிதையால் உணர்த்தி விட்டார்.
காதலி பிரிந்து இருக்கும் போது வா என்பாள். வந்ததும் சரி போ என்பாள். காதலின் இயல்பான வசனம் இவை. அதனையும் சிந்தித்து உள்ளார் நூலாசிரியர்.

வா என்கின்றன
கண்கள்
வந்தபின்
போ என்கின்றன
உன் உதடுகள்
உன் கண்களுக்கும்
உதடுகளுக்கும்
இடையே
சிக்கி இருப்பது
உன் நாசி மட்டுமல்ல
நானும் தான்!


வாசகன் பதிப்பகம், பதிப்புலகில் தனி முத்திரை பதித்து வருகின்றது. வளரும் கவிஞர்களை வளர்த்து வரும் விதமாக பல நூல்களை வெளியிட்டு வருகின்றது. இந்த நூலில் பொருத்தமான புகைப்படங்களும் வைத்து மிக நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டுள்ள வாசகன் பதிப்பகம் கவிஞர் ஏகலைவனுக்கு பாராட்டுகள்.

நூல் ஆசிரியர் கவிஞர் அன்பு முருகசாமி லி., முதல் நூல் என்பதால் முழுக்க, முழுக்க காதல் கவிதையாகவே அமைந்து விட்டது இயல்பு தான். அடுத்த நூல் சமுதாயக் கவிதை நூலாக மலர வேண்டும். சமுதாயம் பற்றியும் சிந்தித்து எழுத வேண்டும். காதல் கவிதை எல்லோரும் எழுதுகிறார்கள், சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் தான் இன்றைய தேவை. ஒரு கவிஞனுக்கு அங்கீகாரம் கிடைப்பதும் சமுதாயக் கவிதையில் தான்.

காதலன் காதலியை கூர்ந்து நோக்குவதும், அவளின் அசைவுகளை ரசிப்பதும், காதலில் இயல்பு. அது குறித்தும் சிந்தித்து கவிதை எழுதி உள்ளார்.

அன்பே!
உன் ஒவ்வொரு அசைவுகளையும்
பதிவு செய்து கொண்டே வருகிறேன்
எப்போது அச்சப்படுவாய்?
எப்போது ஆச்சரியப்படுவாய்?
உன்னை விடவும்
உன்னை நானறிவேன்?
என்னை உனக்கு
பிடிக்குமா? இல்லையா?
என்பதைத் தவிர.


கடைசி வரியைப் படிக்கும் போது ஒருதலைக்காதலோ என எண்ண வைத்து விடுகிறார்.

இயற்கையை ரசிப்பதும் ஒரு சுகம்.
அதிகாலைப் பூக்களும்
அந்தி சாயும்
வானமும்
அழகாகத் தான்
இருக்கிறது
ரசிக்கத்தான்
மனமில்லையடி
அருகில்
நீ இல்லாமல்!


காதலன் அருகே காதலி இல்லாவிடில் சோகம் தான். சோறு பிடிக்காது, தூக்கம் பிடிக்காது, இயற்கை ரசிப்பு பிடிக்காது என்ற உண்மையை கவிதையில் உணர்த்தி உள்ளார். நூல் ஆசிரியர் கவிஞர் அன்பு முருகசாமி லி. அவர்களுக்கு பாராட்டுகள். முதல் நூலிலேயே தனி முத்திரை பதித்து உள்ளார்.
 வாசகன் பதிப்பகம், சேலம். பேச : 87287 29494, பக்கங்கள் : 64.