நூல் : தாய் நிலம்
நூல் ஆசிரியர் :
ஆ.முல்லை திவ்யன்
நூல் அறிமுகம்:  
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
.

வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் அனுபவங்கள் பலதரப்பட்டவை. அவற்றில் சில காலத்தின் வடுவாகவும், சில காலத்தின் வரமாகவும் அமைந்து விடுகின்றன. வடுவாக அமைந்த அனுபவங்கள் ஒருவரின் மரணம் வரையும் உயிரை வதைத்துவிடுவதில் முன்னிலை வகிக்கின்றன.

இலங்கையில் முப்பது ஆண்டு காலம் தொடர்ந்து நடந்த யுத்தம் பலரின் வாழ்வை சின்னாபின்னமாக்கி இருக்கின்றது. பலரின் வாழ்வை நடுவில் முடித்து வைத்திருக்கின்றது. பலரின் உயிரை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்கி விட்டிருக்கின்றது. சில நல்ல எழுத்தாளர்களைத் தோற்றுவித்திருக்கின்றது.

போரின் பின்னர் எழுந்த இலக்கியங்கள் போரின் அச்சுறுத்தல் குறித்தும், அதன் வக்கிரம் குறித்தும், சாதாரண மக்களின் வாழ்க்கைப் படகு திசை தெரியாதவாறு தத்தளிப்பது பற்றியும், ஊரிழந்து, உறவிழந்து வாழ்ந்து கொண்டிருப்போர் பற்றியும் அதிகம் பேசியுள்ளன.

இளந்தலைமுறை எழுத்தாளர்களின் சொல் வீச்சும், நம்பிக்கையும் இலங்கை எழுத்தாளர்களின் வரிசையை இன்னும் நீளமாக்கியிருப்பதில் மிக்க ஆனந்த மாயிருந்தாலும், ஒரு துயரத்தினால் அவர்கள் பட்ட வலியை எண்ணுகையில் கண்ணீர் துளிர்க்கின்றது.

ஆ.முல்லை திவ்யன் என்ற இளம் படைப்பாளி யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை கதையின் கருக்களாக்கி சிறுகதை படைத்திருக்கின்றார். அவரது கதைகளை வாசிக்கும்போது அருகேயிருந்து கொண்டு அக்காட்சியைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இது அவரது எழுத்துக்களின் சிறப்பாகும். சொல்ல வந்த விடயத்தை தெளிவாக சொல்லியிருப்பதிலிருந்து கதையை தொடர்ந்தும் வாசிக்கச் செய்து விடுகின்ற திறமை அவரது எழுத்துக்களுக்கு இருக்கின்றது. அவரது சொல்லாடலும், மொழிநடையும் மிகச் சிறப்பாக கையாளப்பட்டிருப்பது அவதானத்துக்குரியது. பாத்திரங்களின் உரையாடல்கள் பந்திகளாக இல்லாமல் உரையாடல் வடிவில் கீழ்கீழாக அச்சிடப்பட்டிருப்பின் அது இன்னும் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும்.

இருள் விலகுமா? (பக்கம் 01) என்ற சிறுகதையில் வரும் பிரதான பாத்திரமான தமிழ்நிலவன் ஒரு கிழமையாக பாடசாலைக்கு வராமல் இருக்கின்றான். அதற்கான காரணம் வறுமை. தாய் இதய நோயாளியாக ஆகிவிட்ட பிறகு அவனால் தொடர்ந்து படிக்க முடியாத மனவேதனை. தாயை நன்றாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு. கல்யாண வயதில் அக்கா. இத்தகைய பிரச்சினைகள் யாவும் அவனது தலையில் சுமத்தப்பட்டிருக்கின்றன. யுத்தத்தால் தந்தையை இழந்த குடும்பம் துடுப்பின்றி தள்ளாடுவதை தமிழ்நிலவனால் தாங்க முடியாதிருக்கவே அவன் தொழில் செய்கின்றானென கதை நிறைவடைகின்றது.

இன்று இதைப் போல எத்தனையோ பேர் படிப்பை துறந்து விட்டு வெளிநாடுகளுக்குப் பறந்து போய்விட்டனர். தனது குடும்பத்துக்காக உழைக்க வேண்டி அவர்கள் அவ்வாறு போன பின்பும் இங்குள்ளவர்கள் நிம்மதியாய் வாழ்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை. பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோர், சகோதரர்களை இழந்த உடன் பிறப்புக்கள் என்று யுத்தம் அவர்களது வாழ்வில் எத்தனை சுவடுகளை பதித்திருக்கின்றது என்பதற்கு இக்கதை சிறந்த உதாரணம்.

வேலை கிடைச்சாச்சு (பக்கம் 10) என்ற கதை இன்றைய இளைஞர்களின் வாழ்க்கைக் கோலத்தை அழகாக எடுத்துக் காட்டுகின்றது. படித்தும் வேலையில்லாத பிரச்சினை எப்போது ஒழியுமோ என்ற பலரது ஆத்திரம் இக்கதையில் வெளிப்பட்டு நிற்கின்றது. நல்லதொரு உத்தியோகத்துக்கு செல்ல வேண்டுமானால் ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் என்று பணம் செலவழிக்க வேண்டும். தொழில் கிடைத்த பிறகும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும், அல்லது யாராவது மந்திரியின் பின்னால் அலைய வேண்டும் என்ற நிலைமை பல இளைஞர்களின் வயிற்றெரிச்சலுக்குக் காரணமாக அமைகின்றது. இந்தக் கதையில் வருகின்ற யாழவன் என்ற இளைஞனும் மேற்படி பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றான்.

பிறகு ஒருவாறு பத்திரிகையில் பார்த்த வேலைக்கான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்புகின்றான். நேர்முகத்தேர்வுக்கு கொழும்புக்கு வருமாறு கடிதம் வருகின்றது. அங்கு செல்வதற்காக நல்ல சப்பாத்து ஒன்றுகூட இல்லாத நிலையில் அடுத்த வீட்டு அண்ணனிடம் சப்பாத்தை இரவல் பெற்று நேர்முகப் பரீட்சைக்குச் செல்கின்றான். அவனுக்கு கொழும்பில் வேலை கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தி வாசகரையும் மகிழ்விக்கின்றது. அந்த கதையின் இறுதியின் யாழவனுக்கு இதற்கு முன்னர் விண்ணப்பித்த தொழிலொன்றுக்குச் சொந்த ஊரிலேயே தொழிலுக்கான கடிதம் வந்திருப்பதாக அவனது அம்மா சொல்வதினூடாக இன்னும் மகிழ்ச்சி இழையோடுகின்றது.

பாசம் (பக்கம் 25) என்ற சிறுகதை கனகம்மா ஆச்சியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. வயது போன காலத்தில் தன் மகனைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றாள். அவளைப் பிரிந்த மகன் ஈழமாறன் தற்போது உயிருடன் இருக்கின்றானா? அல்லது இறந்துவிட்டானா? இல்லை பிடிபட்டு சித்திரவதை அனுபவிக்கிறானா? என்ற தகவல் கூட தெரியாமல் தனிமையில் வாடும் கனகம்மா ஆச்சி வாசகரின் மனதில் ஆசனமிட்டு அமர்ந்துகொள்கின்றான். தான் அநாதைப் பிணமாக சாகக்கூடாது. தனக்கு கொள்ளி வைக்க தன் மகன் வந்துவிட வேண்டும் என்று அவள் சதாவும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றாள். சில காலங்களின் பின்னர் ஒருநாள் அவள் திடீரென இறந்துவிடுகின்றாள். அங்கு காவல் துறையினரின் பலத்த காவலோடு வந்திருந்த அவளது மகன் ஈழமாறன் தன் தாயுடன் இறுதிக் காலத்தில் இருக்க முடியவில்லையே என்று வருந்துவது வாசகரின் நெஞ்சையும் கலங்க வைத்துவிடுகின்றது. யுத்தம் மனிதனின் அன்றாட வாழ்வைக்கூட சிதைத்து விட்டபோது அவன் மாத்திரம் எப்படி இயல்பாக இருக்க முடியும்? தாயும் தாய் மண்ணும் வெவ்வேறல்ல.. இரண்டும் ஒன்றுதான் என்று கதையின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

செவ்வரத்தப் பூ (பக்கம் 35) என்ற சிறுகதை தமிழ்விழி என்பவள் காலை வேளையில் செவ்வரத்தம் பூவுக்கு நீருற்றிக் கொண்டிருப்பதாக தொடங்குகின்றது. குடிசை வீடு என்றாலும் அழகாக பூக்களை வளர்த்து அந்த சூழலையே அழகுறச் செய்து கொண்டிருப்பவள். அவள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. வைத்தியராக வர வேண்டும் என்ற உறுதியான கொள்கையில் இருக்கின்றாள். தந்தை ஷெல்லடி பட்டு இறந்து போன பிறகு அவர்களது வாழ்வை வறுமை சூழ்ந்துகொள்கின்றது.

ஒரு சைக்கிளை வாங்குவதற்கு மனதுக்குள் ஆவல் மேலிட்டாலும் அதை அடக்கிக்கொண்டு தனது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றாள் தமிழ்விழி. சேகுவேராவின் புரட்சி வரிகள் அவளது சிந்தையில் நிறைந்திருக்கின்றன. அவளது படிப்பை விட சுதந்திரமே முக்கியம் என்று அவள் சிலரால் மூளைச் சலவை செய்யப்படுவதால் இறுதியில் அவளுக்குள் உறைந்திருந்த சுதந்திர தாகம் விழித்துக்கொள்கின்றது.

அவள் படிப்பை கைவிட்டுவிட்டு இயக்கத்தில் இணைந்துகொள்கின்றாள். அவள் அதற்குப் பிறகு தன் தாயைப் பார்க்கக் கூட வரவில்லை. முட்புதர்கள் மூடிக்கிடந்த அவளின் வீட்டருகே ஒற்றை செவ்வரத்தை பூத்து நிற்கின்றது. அது தமிழ்விழி என்ற புரட்சிப் பூ என்பதாக கதை நிறைவு பெற்றிருக்கின்றது.

யுத்தம் தந்த வேதனைகளை கதையின் கருக்களில் அழகாக உட்புகுத்தி சிறுகதைகளை அமைத்திருக்கும் ஆ. முல்லை திவ்யன் இன்னும் நிறைய படைப்புக்களை வாசிக்க வேண்டும். அதன் மூலம் பெறும் ஒளியால் அவரது எழுத்துத் துறை இன்னும் மிளிர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!.
 நூல் - தாய் நிலம்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ஆ.முல்லை திவ்யன்
வெளியீடு - வர்ணா வெளியீடு
விலை; - 200 ரூபாய்