நூல் : கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர்
நூல் ஆசிரியர் : பேராசிரியர் மோகன்
நூல் ஆய்வு: முனைவர் அ.கோவிந்தராஜூ


முன்னாள் கல்வி அமைச்சர் தி.சு.அவினாசிலிங்கம் அவர்களின் பெருமுயற்சியால் தொலைந்துபோன திருக்குறள் புழக்கத்திற்கு வந்தது. அவர் கல்வி அமைச்சரானபோது கல்வியாண்டு தொடங்கி பாடநூல்களும் வழங்கப்பட்டுவிட்டன. எந்தப் பாடநூலிலும் திருக்குறள் இல்லாதது கண்டு அதிர்ந்து போனார். உடனே அதிரடியாக களத்தில் இறங்கினார். திருக்குறள் பாக்களைத் தனியாக அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கச் செய்தார். அதற்குப் பிறகுதான் அறிஞர் பலரும் குறளுக்கு உரை எழுதத் தொடங்கினார்கள்.

சிலர் குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து விளக்கவுரை எழுதினர். கடந்த இருபது ஆண்டுகளில் உரை எழுதும் போக்குக் குறைந்து, திருக்குறளை பல கோணங்களில் அணுகி, கட்டுரைகளாக எழுதி நூல் வடிவம் கொடுக்கும் போக்கு மலிந்தது. அவ்வரிசையில் வா.செ.கு. அவர்கள் எழுதிய வாழும் வள்ளுவம் குறிப்பிடத் தகுந்தது. இப்போது அதற்கு இணையான ஒரு நூல் வெளிவந்துள்ளது.

தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தரமான நூல்களை மட்டும் வழங்குவது என்னும் உறுதியுடன் இயங்கும் வானதி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

வள்ளுவத்தில் ஆழ்ந்து தோய்ந்தவர் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள். ஒவ்வொரு படைப்பாளனுக்கு ஒரு படைப்பிலக்கு என்று ஒன்று இருக்கும். அந்த வகையில் வள்ளுவரின் படைப்பிலக்கு என்ன என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர்.

உடம்பு உள்ளம்உயிர் மூன்றும் நல்லுறவுடன் இயைந்து இருப்பதே
வளமான, வலிமையான மனித வாழ்வு என்பது வள்ளுவரின் முடிந்த முடிபு(.39)    

பன்னிரண்டு கட்டுரைகளை எழுதியுள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தனித்துவமான பொருள் பற்றிப் பேசுகிறது. விரித்து எழுதினால் பன்னிரண்டு நூல்களக ஆக்கிவிட முடியும், அவ்வளவு செறிவும் பொருள் திண்மையும் உடையதாக அமைந்துள்ளது. எடுத்துக் காட்டாக பொருளியல் சிந்தனைகள் என்னும் கட்டுரையில் காலத்தால், மொழியால்,இடத்தால் வேறுபட்ட இரண்டு பொருளியல் அறிஞர்கள் எப்படி ஒன்றாகச் சிந்தித்து இருக்கிறார்கள் என்பதை வியந்து எழுதுகிறார். தனி மனிதனும் சமுதாயமும் சரியான தடத்தில் இயங்குவதற்கு அறம் வழுவாப் பொருளியலே வேண்டத்தக்கது என்பதை வள்ளுவரும் ஆடம் ஸ்மித்தும் ஒருமித்தக் குரலில் கூறுவதை பேராசிரியர் விளக்கும் பாங்கினை ஒவ்வொருவரும் படித்து உணர வேண்டும்.

நிறைவுக் கட்டுரையாம் பன்முக நோக்கு என்னும் கட்டுரை அரிய செய்திகளை உள்ளடக்கியது. கட்டுரையின் பெயரே தனிச் சிறப்புடையது. பன்முகப் பார்வை என்று இல்லாமல் பன்முக நோக்கு என அமைத்திருப்பது நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்றாகும். பார்வை வேறு; நோக்கு வேறு. நோக்கு என்பது அறிவுடனும் உணர்வுடனும் தொடர்புடையது. கம்பர் கூட அண்ணலும் பார்த்தான் அவளும் பார்த்தாள் என்றெழுதாமல் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று எழுதுவார். இக்கட்டுரையில் பொதுமை நோக்கு முதலாக, மேலாண்மை நோக்கு ஈறாக பத்து நோக்குகளை வள்ளுவத்துடன் பொருத்திப் பார்க்கும் பாங்கு பேராசிரியருக்கு மட்டுமே வாய்த்த ஒன்றாகும்.

Icing the cake  என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. அது போல, ஆங்காங்கே அறிஞர்களின் மேற்கோள்களைத் தந்து மெருகூட்டி உள்ளார். அட்டைப்படம் படு அமைப்பாக உள்ளது.

வைரமுத்து அவர்களின் அணிந்துரை நூலின் முன்னொட்டாக அமைந்துள்ளது. வைரமுத்து பேராசிரியரின் இலக்கியப் பணியைப் பெரிதும் பாராட்டுகின்றார்.  பேராசிரியருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். அணிந்துரை வழங்குங்கள்; வாங்காதீர்கள். சிவாஜியின் நடிப்பு சிறப்பாக உள்ளது என ஒருவர் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? எனவே இனி நீங்கள் எழுதும் நூல்களுக்கு யாரிடமும் அணிந்துரை வாங்கி சேர்க்காதீர்கள்.

தமிழ்த் தேனீ பேராசிரியர் மோகன் அவர்கள் வள்ளுவம் தொடர்பாக மேலும் பல நூல்களை எழுதி தமிழன்னையின் வற்றாயிருப்பினை மேலும் வளப்படுத்த வேண்டும் என்பது எனது அவா.