நூல் :  குத்தூசி
நூல் ஆசிரியர் :  நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன்
நூல் அறிமுகம்:   கவிஞர் இரா.இரவி

பெங்களூரு கீதவானி நகர் தமிழ்மன்றத்தின் பாவாணர் பாட்டரங்கின் பொறுப்பாளர் நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன். பெங்களூரு பெருமைகளில் ஒன்றானவர். நான் அங்கிருந்த ஓராண்டில் இலக்கிய நட்பால் ஒன்றானவர். எனது வேண்டுகோளை ஏற்று ஹைக்கூ நூற்றாண்டு விழாவை பெங்களூருவில் நடத்தியவர்.

குத்தூசி என்ற பெயரில் ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். குத்தூசியில் குத்தினால் வலிக்கும். வலி தரும் உண்மைகளும் உள்ளன. குத்தூசியில் குத்தித் தூக்கினால் பெரும் பாரத்தையும் எளிதாக முதுகில் ஏற்றிக் கொள்ளலாம். பெரிய பெரிய கருத்துக்களை மிக எளிதான சொற்களில் இயல்பாக எழுதி உள்ளார். பதச்சோறாக சில ஹைக்கூ கவிதைகள். எள்ளல் சுவையுடன் நாட்டு நடப்பை உணர்த்திடும் ஹைக்கூ கவிதைகள் நூல் முழுவதும் நிரம்பி உள்ளன.

இராமன் ஏமாந்தான்
அனுமன் கணையாழியுடன்
அடகுக் கடையில்!


இலங்கையில் தமிழினப்படுகொலை நடந்தது. உலகமே வேடிக்கை பார்த்தது. கொலைபாதகச் செயல் நடத்திய கொடூரன் தண்டிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் கைது கூட செய்யவில்லை. ஐ.நா. மன்றமும் விசாரணை என்ற பெயரில் நாள் கடத்தி வருகின்றது. தமிழ் உணர்வுக் கவிதைகள் நிறைய உள்ளன.

ஐ.நா. வில் வீசுகிறது
இலங்கையின்
குருதி வாடை !


அறிவு வளர்க்கும் நூல்கள். நவீன யுகத்திலும் நூல் படிப்பது தனி சுகம் தான். நூலின் பயனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.

வீட்டிற்குள்
அறிவாளிகள் மாநாடு
நூல்கள்!


இன்றைக்கு மருத்துவர்கள் சிலர் சுகப்பிரசவம் என்பதே இல்லாது அறுவைச் சிகிச்சை பிரசவம் என்பதையே வாடிக்கையாக்கி விட்டனர். பணத்திற்காக சிலர் வேண்டுமென்றே அறுவைச்சிகிச்சை செய்கின்றனர்.

இயற்கை பிரசவம்!
செயற்கையானது பணத்திற்காய்
அறுவைச் சிகிச்சை !


இன்றைக்கு அரசியல்வாதிகள் பலர் மணற் கொள்ளையர்களாக உள்ளனர். அல்லது மணற் கொள்ளையரிடம் பணம் பெறும் கூட்டாளிகளாக உள்ளனர். அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.

மடி வற்றியும்
காம்பறுக்கும் வேலை
மணற்கொள்ளை !


தந்தை பெரியார் இல்லாத காரணத்தால் மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்ட, தட்டிக் கேட்க ஆள் இல்லை. காலையில் ராசிபலன் கேட்பதில் தொடங்கி இரவு தூங்கப் போகும் வரை மூடநம்பிக்கைகள் தலைவிரித்து ஆடுகின்றன.

கண்மூடிப் பழக்கம்
மண்மூடிப் போக
பெரியார் வருக!


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பொன்மொழி. ஆனால் இன்று அரசியல்வாதிகள் பலர் பசுத்தோல் போர்த்திய புலிகளாக உள்ளனர். அவர்களைக் கண்டு வடித்த ஹைக்கூ நன்று.

அகத்தின் அழகு
முகத்தில் தெரியவில்லை
வேடதாரிகள் !


பெற்றோர்கள் குழந்தைகளைப் பாசத்தோடு வளர்க்கின்றனர். தியாகம் செய்து, உடலை உருக்கி, ஓடாய் தேய்ந்து வளர்க்கின்றனர். ஆனால் வளர்ந்து விட்ட குழந்தைகள் நன்றி மறந்து பெற்றோரை கவனிக்காத நிலை வெட்கக்கேடு. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.

எல்லாப் பிள்ளையும்
ஒரே மாதிரி பெற்றோரைப்
புறக்கணிப்பதில் !


யாரைப் எப்படி பழி வாங்கலாம். சதித் திட்டம் எப்படி தீட்டலாம்., எப்படி கொலை செய்யலாம், எப்படி கொள்ளை அடிக்கலாம் என்ற எதிர்மறை சிந்தனைகளுக்கு வகுப்பு எடுக்கும் விதமாக இன்றைய தொலைக்காட்சித் தொடர்கள் வருகின்றன. அதனை உணர்த்திடும் ஹைக்கூ..

வீட்டில் வன்முறை
வளர்க்கிறது தினம்
சின்னத்திரை!


ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற பாரபட்ச நிலை இன்றும் நிலவுகின்றது. கற்பு என்றால் இரு பாலருக்கும் பொதுவில் வைக்க வேண்டும் என்றான் பாரதி. ஆணாதிக்க சிந்தனையை ஆண்கள் அகற்றிவிட வேண்டும். பெண்மையைப் போற்றிட வேண்டும்.

கற்பு தவறிய கணவனை
மணமுறிவு செய்தாள்
இன்றைய நளாயினி !


கணினி யுகத்திலும் விஞ்ஞான வளர்ச்சி கண்ட யுகத்திலும் வரதட்சணைக் கொலைகள், தற்கொலைகள் நடப்பது வெட்கக் கேடாகும்.

கள்ளிப்பால் நெல்லுக்குத்
தப்பியவள் பலியானாள்
வரதட்சணையில் !


பெண்ணிற்கு பிறக்க உரிமை கூட இல்லாத அவல நிலை இன்றும் தொடர்வது வேதனை. மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததற்காக தாய் தற்கொலை செய்து கொண்ட செய்தி படித்து நொந்து போனேன். பெண் பெற்றால், பெற்ற தாயைத் தூற்றும் உலகம் மாற வேண்டும். திருந்த வேண்டும். குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணால் தான் என்பதை, முட்டாள் ஆண்கள் உணர வேண்டும்.

நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் சிந்திக்க வைக்கும் பகுத்தறிவுக் கேள்விகளும் கேட்டு உள்ளார்.

எல்லாம்
இறைவன் செயலெனில்
கொலைக் கொள்ளை?


இன்பம் தரும் அருவியை இதுவரை யாரும் இப்படி வர்ணித்தது இல்லை. வித்தியாசமாக சிந்தித்து உள்ளார். பாருங்கள்.

மலைக் கிழவியின்
கூந்தல் வெள்ளை
அருவி!


நெருப்பில்லாமல் புகைவருமா! என்று பொன்மொழி உண்டு. இப்படி பொன்மொழிகளை பழமொழிகளை வெட்டியும் ஒட்டியும் பல ஹைக்கூ கவிதைகள் எழுதி உள்ளார்.

நெருப்பில்லாமல்
புகைந்தது
வதந்தி!


ஆவின் பால் அரசு வழங்கும் பால், அதில் கூட கலப்படம் செய்து ஊழல் செய்த செய்திகளை செய்தித்தாளில் படித்தோம். அதனை நினைவூட்டியது இந்த ஹைக்கூ.

கலப்படமில்லாத
ஒரே பால்
முப்பால்!


ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே ஹைக்கூவில் கலப்படத்திற்கு கண்டனமும் திருக்குறளின் சிறப்பையும் உணர்த்தியது சிறப்பு. பாராட்டுகள்.

இன்றைக்கு நீதியரசர்கள் நேர்மையாளர்கள் பலர் உள்ளனர். விதவிலக்காக சில நேர்மையற்றவர்களும் இருப்பதை பல தீர்ப்புகளில் காண்கிறோம். அவற்றை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.

கண்களோடு காதுகளையும்
சேர்த்துக் கட்டிவிட்டனர்
மாற்றுத் திறனாளியாய் நீதி தேவதை!


விட்டுக் கொடுக்காததால் விட்டுப் போன நட்பு உண்டு. தவறு செய்து இருந்தால் மன்னிப்பு கேட்பதில் தவறு இல்லை என்பதை உணர வேண்டும் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.

இருவர் நட்பு நீடிக்கும்
ஒருவர் கேட்டால்
மன்னிப்பு!


விண்ணில் செயற்கைக் கோள்கள் ஏவுகிறோம் என்று ஒருபுறம் மார் தட்டினாலும், கோடிக்கணக்கான ஏழைகள் ஒருவேளை உணவின்றி பட்டினியால் வாடுகிறார்கள். ஊருக்கே சோறு தந்த உழவன் தலைநகருக்குச் சென்று போராடுகின்றான். அரசியல்வாதிகளே உங்கள் வறுமை ஒழித்தது போதும். மக்கள் வறுமையை ஒழிக்க முன்வாருங்கள். இப்படி பல சிந்தனைகளைத் தந்தது ஒரு ஹைக்கூ.

தூங்க மறுக்கிறது
பட்டினி கிடக்கும்
வயிறு !


மகாகவி பாரதியாரால் ஹைக்கூ வடிவும் தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டு நூற்றாண்டு கொண்டாடி வரும் வேளையில். நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ஹைக்கூ கவிதைகள் குத்தூசி போலவே மனதை குத்தும் விதமாக சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டும் விதமாக ஹைக்கூ கவிதைகளை நன்கு செதுக்கி உள்ளார்.

ஒரு கல்லில் தேவையற்ற பகுதிகளை நீக்கிட சிற்பம் பிறக்கும். அது போல எழுதிவிட்டு தேவையற்ற சொற்களை நீக்கிட அழகிய ஹைக்கூ பிறக்கும். வளரும் கவிஞர்கள் இந்நூல் வாங்கிப் படித்தால் ஹைக்கூ எப்படி எழுதுவது என்ற புரிதல் உண்டாகும்.

அடுத்த பதிப்பில் ஹைக்கூ கவிதைகளை சற்று பெரிய எழுத்துக்களில் அச்சிடுங்கள் வாசிக்க எளிதாக இருக்கும்.
 
சுலோச்சனா பதிப்பகம் 26-1-டி-கிராஸ் சர். எம். வி நகர்
இராமையா தேங்காய் தோட்டம், இராமமூர்த்தி நகர், பெங்களூரு.
204 பக்கங்கள் விலை ரூ. 130.