நூல் :  ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்
நூல் ஆசிரியர் :  மனுஷி
நூல் ஆய்வு: முனைவர் பூ.மு.அன்புசிவா
 

1985–ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர் மனுஷி. இவரது இயற்பெயர். ஜெயபாரதி. புதுவையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளார். 'குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்' (2013) இவரது முதல் கவிதைத் தொகுப்பு. 'முத்தங்களின் கடவுள்' (2014) இரண்டாவது தொகுப்பு. 'ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்' (2015) மூன்றாவது தொகுபப்பு. இவரது சில கவிதைகள் மனுஷ்ய புத்திரன் கவிதைகளின் தாக்கம் பெற்றுள்ளன. எளிமை, சுய சிந்தனை வழிப்புதுப் படிமங்கள், புனைவு, காதல், வாழ்க்கை பற்றிய துயரங்கள் என விரிகின்றன.

வரலாற்று நோக்கில் பெண்களின் சமுக நிலையை நோக்கும் பொழுது சமுதாயத்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவர்களின் நிலை மேம்பட்டே இருந்தது என்று கருத முடிகிறது. தமிழ்நாட்டில் பெண்களின் நிலை பற்றிய ஆதாரங்கள் முதல் நூல்களான தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலையில் காட்டவில்லை. அவை ஆண்களுக்கு என்று சில இயல்புகளையும், பெண்களுக்கு என்று சில குணங்களையும் வரையறுத்துக் காட்டுகின்றன.

கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் நிகழ்ந்த மாறுதல்களான உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகள் இரண்டாயிரத்திற்கு பிறகாக நம் வாழ்முறையில் பெரும் மாறுதலை விளைவித்திருக்கின்றன. கிராமம் தன் சாயலை இழப்பதை சிறு உச்சுக்கொட்டுதலோடு ஏற்றுக் கொண்டிருக்கிறோம், இயற்கை குரூரமாக வேட்டையாடப்படுவதை ரசிக்கப் பழகியிருக்கிறோம், மண்ணோடு வாழ்ந்தவர்களின் வாழ்வாரம் சிதைக்கப்படுவதற்கு மௌனசாட்சிகளாகியிருக்கிறோம். மண்ணும் மலையும் மலடாக்கப்படுவதின் சூட்சுமத்தை இந்த உலகம் கற்றுக் கொண்டிருக்கும் அதே சமயம் இரண்டாயிரத்திற்கு பிறகான வாழ்முறை மாறுதல்களுக்கு இணையான வேகத்தில் தமிழ்க்கவிதையின் போக்கு பாய்ச்சலை சந்தித்திருக்கிறதா என்று வினாவை நமக்கு நாமே எழுப்பிக் கொள்ளலாம். அதற்கான பதில் இல்லை என்றே இருக்கும். சற்றேறக்குறைய பதினைந்து ஆண்டுகளில் கவிதை தன்னளவில் மாறுதலைச் சந்தித்திருக்கிறது, தான் ஆனால் அது மெதுவான அதே சமயம் சீரான மாறுதல், வாழ்முறை மாறுதலின் வேகத்திலும் பரிமாணத்திலும் ஒப்பிடும் போது கவிதையில் நிகழ்ந்திருக்கும் மாறுதல் மிக மிகக் குறைவு.

கவிதையின் மொழியில், கட்டமைப்பில், பாடுபொருளில் தனித்துவத்தோடு இயங்கும் கவிதைகளை சமகாலக் கவிஞர்கள் கண்டடைந்திருக்கிறார்கள் என்றபோதிலும் இந்தக் காலகட்டத்தில் கவிதை 'புதிய இயக்கமாக' உருப்பெற்றிருக்கவில்லை. பெரும்பாலும் யதார்த்தம், மாய யதார்த்தம், கவிதையினுள் புனைவு போன்றதான ஏற்கனவே கண்டறியப்பட்ட கவிதையியல் சார்ந்த தளங்களில் மட்டுமே தன்னை நகர்த்தி பரிசோதனை செய்து கொண்டிருக்கும் கவிதை மெதுவாகவே தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கவிதை கடந்து வந்திருக்கும் சீரான மாறுதல்களில் குறிப்பிடத் தகுந்த அம்சமாக அவ்வப்பொழுது கவிதை தன் நிலம் நோக்கித் திரும்புதலைக் குறிப்பிடலாம். கவிதை சொல்லியின் நிலம் என்பதில் பால்யம் குறித்தான அவனது மனச்சித்திரம், இழந்துவிட்ட அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமத்து வாழ்க்கை முறைகள், மண் சார்ந்த வாழ்வியல் போன்றவற்றின் பதிவுகளை குறிக்கலாம். கவனமாக குறிப்பிட வேண்டுமானால் கிராமம் குறித்தான கவிதைகள் மட்டுமே நிலம் நோக்கி திரும்புதல் இல்லை- மாறாக மாயவெளிகளிலும் அந்தரதளங்களிலும் அலையும் கவிதை தன் கால்களை அசல் வாழ்க்கை முறையின் நிலத்தில் ஊன்றுவது. அது மிக அரிதாகவே தமிழ்க்கவிதைகளில் நிகழ்கிறது.

'உயிhமை' வெளியீடாக வெளிவந்திருக்கும் மனுஷியின் 'ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்' கவிதைத் தொகுப்பு நம் நிலம் நோக்கி திரும்பும் கவிதைகளின் பிரதியாக இருக்கிறது.

கவிதைக்கென நம் மனம் பழகியிருக்கும் மொழியிலிருந்து விலகி வேறொரு மொழியமைப்பில் இயங்குகின்றன இக்கவிதைகள். கவிதை மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அத்தனை வரையறைகளும் உடைத்தெறியப்படுதலை ஏற்றுக்கொள்ளும் வாசக மனதினால் இந்தக் கவிதைகளை நெருங்க முடிகிறது. இதுவே தொகுப்பின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. பலம் என்பது மனுஷியின் மொழியின் தனித்துவத்தை முன்னிறுத்தி குறிப்பிடப்படுவது. பலவீனம் என்பது இதுவரை கண்டடையப்பட்ட கவிதைக்கான மொழியோடுதான் கவிதை இருக்க வேண்டும் என்பதில் இல்லை - மொழியில் தவறவிட்டுவிட்ட கவித்துவம். அது இந்தத் தொகுப்பில் பல இடங்களில் நிகழ்ந்திருக்கிறது.

கிராமம் சார்ந்த வாழ்க்கை முறையில் எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், அம்மனிதர்களின் வெக்கைகளும் இக்கவிதைகளில் பதிவாகியிருக்கின்றன. உப்பங்காற்று சுழித்துசுழித்தடிக்க கோடையுழவால் பெருங்கடன்களை சுமக்கத்துவங்கும் விவசாயி, மூத்திரத்தின் கவிச்சவாடை நுகர்ந்தே இளமரியை தேடும் கிடாரிகள், இலந்த பழ முள்ளின் ஊக்கி தொக்கி நின்ற சதை ஆகியனவற்றை கவிதைகளில் வாசிக்கும் போது நாம் இழந்துவிட்ட அல்லது இழந்து கொண்டிருக்கும் இன்னொரு உலகம் நமக்கு மௌனமாக கண்ணாமூச்சி ஆடத்துவங்குகிறது.
'சந்திப்பின் கணங்கள்' என்ற தலைப்பில் அமைந்த கவிதை...

'உன் வருகைக்காக
அவ்வளவு ஆவலோடு காத்திருந்தேன்
பகலையும் இரவையும்
எண்ணி எண்ணி
கனவுகளுக்குள் பதுக்கி வைத்தேன்.
நட்சத்திரங்கள் மினுக்கித் திரிவதைப் போன்ற
உன் சிரிப்பொலியை
உன் கண்கள் பார்த்தபடியே
கேட்க எண்ணியிருந்தேன்.
பேசிப் பேசித் தீராத
உரையாடலைச் சுமந்தபடி
விடைபெற்றுச் செல்கையில்
கட்டியணைத்து
வழியனுப்பி வைக்க நிணைத்தேன்.
மணல் வீட்டைப் போல்
சிதைந்து கிடக்கிறது
நம் சந்திப்பிற்கான கணங்கள்
இந்த மாமழைக்காலத்தில்.
மிக இயல்பாய் கடந்து விட்டாய்
அதன் சுவடுகளை.
காகிதக் கப்பலோடு
என் வாசலருகே நிற்கிறேன்
நான்'
-பக்:
16

என்ற கவிதை மனதின் அதிதக் காதலின் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துகிறது. இத்தகைய பலவீனங்கள் மனுஷியின் கவிதைகளில் தென்படுகின்றன.
கவிதையின் வரிகளில் சொற்களுக்கு கவிஞன் தேர்ந்தெடுக்கக்கூடிய இடம் கவிதை வாசிப்பை எளிமையாக்குவதோடு, கவிதையின் தெளிவையும் உறுதிப்படுத்துகிறது. ஒரு சொல் முந்தைய வரியில் இருக்க வேண்டுமா அல்லது அடுத்த வரியில் இருக்க வேண்டுமா என்பது கவிஞனின் உரிமை என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கவிதையியலில் சொற்களின் இடஅமைவுக்கான முக்கியத்துவத்தை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சிக்கல்களை பட்டியலிட்டவர் கவிஞர் சுகந்தி சுப்ரமணியன்.

'மூன்றோ ஐந்தோ என இம்சைப்படும்
தினங்களில்
நடந்து விடாதே
உன் தனியிடம் தவிர
இன்னொரு மூலைக்குச் கூட.
இந்த நாட்களில்
நீ கிடைத்த நேரமெல்லாம்
தூங்குகிறாய்
அல்லது துன்பப்படுகிறாய்.
குறைந்தபட்சம் ஒரு குட்டிப்பிச்சைக்காரி
ஆகி விடுகிறாய்
நிவாரணமில்லாத வயிற்றுவலி எப்போதும்.
கால் குடைச்சல் என்றாலும்
மரியாதைக்கு பயந்து
மாமியாருக்கு எழுந்து நிற்க வேண்டும்.
நடக்கப்பழகும் குழந்தைக்கு
கை கொடுத்து கால் ஆகணும்.
ஆனால்
உதவி செய்ய ஆளில்லாமல்
மாதாந்திர தொல்லைகளில்
சமைக்கும் சமையல்
தேவையானது எல்லோருக்கும்.
இன்னொரு முறை தள்ளிப்போவது தெரிந்தால்
சந்தோஷம் கொள்ள முகமிருக்குமா?
முகம் கறுத்து
'போதும் கலைத்து விடு'
என்று சொல்லப் பக்கத்து வீட்டில் கூட
ஆட்கள் இருக்கக் கூடும்
நானோ சமைத்த பின்
தனியிடம் செல்வேன்.
அவர்களெதிரே டி.வி.யில்
விளம்பரத்திற்காய்
STAY FREE யுடன்
நடக்கும் சிரிக்கும்
இளம்பெண்'


என பெண்களின் தொடர் உபாதைகளை, எதிர்கொள்ளும் சிக்கல்களை இயல்பாய் கவிஞர் எடுத்துரைத்துள்ளார். பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளே இவைகள். இது பெண்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பாகவே சமூகம் பின்பற்றி வருகிறது. கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் குரல் மென்மையானது. எதிர்ப்பிலும் தீவரமில்லை. ஆனால் ஓர் உறுதி வெளிப்படுகிறது.

கவிதையும் கவிதைக்கான தேடலும் ஒரு கணத்தில் நின்று விடுவதில்லை என்பதை அறிய முடிகிறது. சாதியத்தை உடைத்தெறியும் கவிதைகளை மனுஷியின் கவிதைகளில் காண முடிகிறது. 'மதிப்பீடுகளுக்கு அப்பால்' என்ற தலைப்பிலான கவிதையில் மனுஷி கூறுவதைக் காணும் போது மனம் பதைக்கிறது...

'ஒருவேளை நீங்கள்
கருதுவது போல்
நான் கவுண்டச்சி அல்ல என்று தெரிந்தால்
நீங்கள் முகம் சுளிக்கலாம்
என்னுடனான உரையாடலைத்
தண்டித்துக் கொள்ளலாம்
உங்கள் சிறுவயது மகனிடமோ
மகளிடமோ
சொல்லி
அவர்களை என்னிலிறுந்து
விலகியிருக்கச் செய்யலாம்
என் கையால் கொடுக்கும்
தின்பண்டங்களை வாங்க மறுக்கலாம்
அவள் ஒரு சேரிப் பெண்
அவளோடு எதையும் புழங்காதே என
எனக்கு அறிவுறுத்துவதை
நிறுத்திக் கொள்ளலாம்
வீட்டுக்குள் அழைத்தது பாவம்
என
குற்றவுணர்ச்சியில் தத்தளிக்காலம்
என்மீதான காதலையோ
நட்பையோ
திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்
என் கவிதைகள் கூட
தீட்டுக்கு உரியதாகலாம்
இனி.
வருத்தத்துடன் சொல்கிறேன்
கவுண்டச்சியாய் தான் இருப்பேன்
என்ற
உங்களின் எதிர்பார்ப்பை
என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை
என் நிறத்தை வைத்து
என் தலைமுடியை வைத்து
என் பேச்சை வைத்து
என் நடையுடை பாவனைகளை வைத்து
ஒரு சாதிக்குள்
அடைத்து விடாதீர்கள்
சாதிக்கும் மதத்துக்கும் அப்பால்
நான் பெண்ணாக இருக்கிறேன்
ஆம்
உங்கள் மதிப்பீடுகளுக்கு அப்பால்'
-பக்.
57

என பெண்களின் தொடர் உபாதைகளை, எதிர்கொள்ளும் சிக்கல்களை இயல்பாய் கவிஞர் மனுஷி எடுத்துரைத்துள்ளார்.

பெண்ணியம் என்பது தொன்றுதொட்டு தொடரும் ஒரு பிரச்சனை. இலக்கியம் தொடங்கிய காலத்தில் இருந்து பெண்ணுரிமைப் பேசப்பட்டாலும் நவீன இலக்கியத்திலேயே பெண்ணியம் சாத்தியமாகியுள்ளது.

ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொருவிதமாய் ஒவ்வொரு யுத்தியுடன் எழுதியிருந்தாலும் பெண் விடுதலையே இலக்கு. பெண் சுதந்திரமே நோக்கம். பெண் உரிமையே கோரிக்கை. பெண் சமத்துவமே தேவை.

பெண்ணியச் சிந்தனையுடன் எழுதப்பட்ட கவிதைகள் பிரச்சனைகளை, சிக்கல்களை, அவஸ்தைகளை முன் வைத்திருப்பிணும் தீர்வையே கோருகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தை தோலுரித்துக் காட்டவும் தயங்கவில்லை. எதிர்க்கவும் அஞ்சவில்லை.
பெண்ணுக்கான விடுதலை, உரிமை, சுதந்திரம், சமத்துவம் வெகு தூரத்தில் இல்லை என்பதையே பெண் கவிஞர்களில் கவிதைப்படைப்புகள் கட்டியங்கூறுகின்றன. ஆயிணும் அவைகைளை பெண் சமூகம் விரைவில் பெற பெண்ணியப் படைப்புகள் அவசியம் ஆகிறது. அத்தகைய பெண்ணியப் படைப்புகளுக்கு நவீன இலக்கியமே களமாக உள்ளது.




முனைவர் பூ.மு.அன்புசிவா
149, ஹரிஸ்ரீகாடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர்
- 641 007

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்