நூல்:  விளைச்சல்
நூல்  ஆசிரியர்: செங்கதிரோன்
நூல் ஆய்வு: ஏ.பீர் முகம்மது
 

நீலாவணனின் 'வேளாண்மை'யும் செங்கதிரோனின் 'விளைச்சலும்' 'வேளாண்மை' என்று கவிஞர் நீலாவணன் எழுதிய காவியத்தின் தொடர்ச்சியாகவே 'விளைச்சல்' என்ற குறுங்காவியம் செங்திரோனால் வெளியிடப்பட்டுள்ளது.

காலத்துக்குக் காலம் கிழக்கிலங்கையிலிருந்து நவீன காவிய மரபைப் பின்பற்றி பல குறுங்காவியங்கள் வெளிவந்துள்ளன. கவிஞர் அப்துல் காதர்லெப்பையின் செய்னம்பு நாச்சியார் மான்மியம், நீலாவணனின் பட்டமரம், வடமீன், மற்றும் வேளாண்மை என்பனவும் எம்.ஏ.நுஃமான் ஆக்கிய கோயிலின் வெளியே மற்றும் நிலமென்னும் நன்னாள், பாலமுனை பாறூக் தந்த கொந்தளிப்பு, தோட்டுப்பாய் மூத்தம்மா மற்றும் எஞ்சியுள்ள பிரார்த்தனைகளோடு ஆகியன குறிப்பிடத்தக்க நவீன குறுங்காவியங்கள் ஆகும். அந்த வரிசையிலே விளைச்சலோடு செங்கதிரோனும் சேர்ந்து கொள்கின்றார்.

நீலாவணன்
1975 இல் எதிர்பாராமல் இந்த உலகை விட்டுப் பிரிந்தபோது அவர் தனது எந்தவொரு ஆக்கத்தையும் நூலுருவில் வெளிக்கொண்டு வந்திருக்கவும் இல்லை. வேளாண்மை காவியத்தை எழுதி முடித்திருக்கவுமில்லை. இதுதொடர்பாக நான் தேட வெளிக்கிட்டபோது சில தகவல்கள் கிடைத்தன.

தற்போது தமிழ்நாட்டில் வாழ்கின்ற எம்.ஏ. ரகுமான் என்பவர் அறுபதுகளிலும் எழுபதுகளின் ஆரம்பத்திலும் இலங்கையில் வசித்தவர். அப்போது இளம்பிறை என்ற சஞ்சிகையை வெளியிட்டு சாதனைகள் பல புரிந்தவர். இன்றும்கூட 'இளம்பிறை ரகுமான்' என்றே அவர் அறியப்படுகின்றார். ஈழத்து இலக்கிய உலகில் பல்வேறு துறைகளில் தடம் பதித்தவர். அவர் நீலாவணனோடு மிகுந்த நெருக்கத்தில் இருந்தார். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வந்தால் நீலாவணனின் வீட்டிற்கு வரத் தவறுவதில்லை. நீலாவணனின் மனைவி அழகேஸ்வரியோடும் அவர் மகன் எழில்வேந்தனோடும் இன்றுவரை தொடர்பில் இருக்கிறார்.
1960 இல் அச்சுக்கூட வசதியையும் நூல்களை வெளியிட அரசு பதிப்பகம் என்ற நிறுவனத்தையும் கொண்டிருந்தார். 'அரசு வெளியீடு' தொடங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கான கால்கோள் நீலாவணனின் வீட்டிலேயே இடம் பெற்றது. அப்படியொரு வாய்ப்பு இருந்தும்கூட நீலாவணன் கவிதைத் தொகுப்பொன்றை வெளியிடாமலேயே இருந்து விட்டார். அறுபதுகளின்; முன்னரைப்பகுதியில் எழுதத் தொடங்கிய வேளாண்மை காவியத்தை எழுதி முடிக்காமலேயே வைத்திருந்தார்.

பாடும்மீன் போன்ற சஞ்சிகை வெளியீடுகளிலும் கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்கத்து தலைமைப் பதவியில் இருந்து கொண்டு முழுநேரப் பணிகளிலேயே ஈடுபட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக மற்றவர்களுக்கு உதவுவதிலும் இலக்கியத்தில் அவர்களை வளர்த்தெடுப்பதி;லும் தனது காலங்களைக் கழித்தார். கண்விடுக்காத பூனைக்குட்டியாக நீலாவணனின் வீட்டிற்குச் வந்து சென்றவன் என்று பேராசிரியர் நுஃமான் சொன்னது இதற்கான நல்ல எடுத்துக்காட்டு ஆகும். இவ்வாறான சுயநலமில்லாத பொதுப்பணிகளினால் நூல் வெளியீடுகளுக்கு நேரமில்லாமல் போயிருக்கலாம் என்றே கருதத் தோன்றுகின்றது. என்றாலும் அவர் மரணித்த பிறகும் அவரது தொகுப்புகள் வெளிவருவதும் இன்றுவரை அவர் பேசப்படுவதும் அவர் இலக்கியத்தை ஒரு தவமாகக் கருதி புனித பணியில் ஈடுபட்டார்.

நீலாவணணனின் நெருங்கிய நண்பரும் கவிஞருமான சடாட்சரன் 'வேளாண்மை' காவியத்தின் கையெழுத்துப் பிரதியை எழுத்தாளரும் அச்சுக்கூடமொன்றின் சொந்தக்காரருமான வ.அ.இராசரத்தினம் அவர்களிடம் வழங்கி இதனை நூலாகக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். நீலாவணன் காலமாகி ஏழு வருடங்களின் பின்னர்
1982 செப்டம்பரில் முற்றுப் பெறாத காவியமாக வேளாண்மை வெளிவந்தது.

ஈழத்துக் கவிதை நெடும்பரப்பில் மஹாகவி, முருகையன், நீலாவணன் என்ற வாய்ப்பாடு நீண்டகாலமாக பயன்பாட்டில் இருப்பதை நாம் அறிவோம்.
44 வருடம் மட்டுமே உயிர் வாழ்ந்த நீலாவணன் இருபது வருட கால இலக்கிய வாழ்க்கையில் தனது படைப்பாற்றலின் பலத்தினாலேயே இந்த நிலையை அடைய முடிந்தது.

இதனிலும் கூடுதலான கீர்த்தியை நீலாவணனால் பெற்றிருக்க முடிந்திருக்கும். ஆனால் அவர் உயிரோடிருந்த காலத்தில் அப்போதிருந்த பல்கலைக்கழகச் சட்டாம்பிகள் புலமைத் திமிர் காரணமாக அவரின் படைப்புகளை துடக்கு மனப்பான்மையோடு பார்த்தார்கள். என்றாலும்கூட தற்காலத்தில் எஸ். மௌனகுரு, செ.யோகராசா, ரமீஸ் அப்துல்லா போன்ற பேராசிரியர்களினால் நீலாவணனின் இலக்கியத்தின்மீதான வாழுகையும் ஆளுகையும் உரிய திசைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது என்பது மகிழ்ச்சியான ஒரு விடயமாகும்.

நீலாவணனின் வேளாண்மை காவியம் என்பது அவர் மண்மீது கொண்டிருந்த பற்றுதலுக்குச் சாட்சியம் கூறும் எழுத்துப் பிரதி எனலாம். நீலாவணையில் தான் வாழ்ந்த வீட்டிற்கு 'வேளாண்மை' என்றே அவர் பெயர் வைத்திருந்தார் என்றால் மட்டக்களப்பு மண்ணின் விவசாய உலகத்தின்மீது அவர் கொண்டிருந்த பாசம் எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

செங்கதிரோனின் விளைச்சல் எனும் காவியம் நீலாவணனின் வேளாண்மை காவியத்தின் தொடர்ச்சியாக வெளிவருகின்றது. ஏன் தொடர்ச்சி என்று கூறப்படுகின்றது? காரணம் இதுதான். வேளாண்மை முற்றுப் பெறாத காவியம் என்று கூறப்படுவதினாலும் நீலாவணனின் அதே தளத்திலும் களத்திலும் செங்கதிரோன் காலூன்றி நிற்பதினாலும் வேளாண்மையின் கந்தப்போடி, அழகிப்போடி, பொன்னம்மா, கனகம்மா, செல்லையா, பார்வதிப் பெத்தா போன்ற அதே பாத்திரங்கள் இங்கும் வார்ப்புச் செய்யப்பட்டிருப்பதினாலும் என்று பல காரணங்களினால் வேளாண்மையின் தொடர்ச்சியாக விளைச்சல் நமது கைகளுக்குக் கிடைத்துள்ளது.

நீலாவணன் தனது காவியத்தில் சூட்டுக்களரி, பூப்பு நீராட்டு, கூத்துக் களரி, தேர் இழுப்பு என்று கிராமியச் சித்திரத்தை விருத்தப்பாவினால் கீறி இருக்கிறார். விளைச்சல் காவியத்தில் கல்யாணப் பேச்சுவார்த்தை, சாப்பாட்டுப் பந்தி, ஆலாத்தி எடுத்தல், உலக்கை எறிதல், மருங்கை கொடுத்தல் என்று மட்டக்களப்பு மண்ணின் பண்பாட்டுக் கோலம் தேரோட்டம்போல தெருவுக்கு வருகிறது.

செங்கதிரோன் விளைச்சல் காவியத்தில் அறுசீர் விருத்தத்தின் ஊடாக மறந்துபோன அல்லது மறைந்துபோன சில சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கூறி கலாச்சார பண்பாட்டுச் சுற்றுலாவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.

'உலக்கை எறிதல்' இதற்கொரு உதாரணமாகும். ஆண்மகவு பிறந்தால் தகப்பன் கூரைக்கு மேலால் உலக்கை எறியும் வழக்கம் இருந்திருக்கிறது. தொன்மை வாய்ந்த 'உலக்கை எறியும் ஊரின் வழக்கத்தை' செங்கதிரோன் பின்வருமாறு விளைச்சலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்.

'குலக் கொழுந்தன்னம் ஈன்ற
குழந்தையோ ஆண்தானென்று
உலக்கையைக் கந்தர் நீட்டி
ஓங்கியே எறியச் சொல்ல,
வலக்கையால் வாங்கி ஊரின்
வழக்கம்போல் கூரை மேலால்
இலக்குடன் எறிந்தான் செல்லன்.
எழுப்பந்தான் என்றார் நின்றோர்'


தற்காலத்தில் அரிதாகப் பயன்படுத்துகின்ற உணவுப் பொருள்களை இந்தக் காவியம் முழுவதும் காணலாம். எடுத்துக்காட்டுகளாக வேர்க்கொம்புக் கோப்பி, அசமதாகம், 'வாட்டுரொட்டி' , கொழுக்கட்டை என்று அந்தப் பட்டியல் நீளமானது.

அவ்வாறே வீட்டின் ஒவ்வோர் அறையும் வௌ;வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டமையை செங்கதிரோன் பின்வருமாறு நினைவூட்டுகின்றார்.

'அன்னமோ 'மஞ்சு வீட்டுள்'
அனுகினாள்.
உன்னியே எழும்பி ஏகும்
உபாதையில் அவதிப்பட்டாள்.
மருத்துவிச்சி பண்ணினாள் பரிகாரங்கள்
பன்னீர்க் குடமுடைந்து
பாலகன் வெளியில் வீழ்ந்தான்'


பிரசவத்துக்குப் பயன்படும் அறை 'மஞ்சு' என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். சினிமாப்படமோ என சிலாகிக்க வைக்கும் அளவுக்கு மஞ்சு வீட்டுக்குள் இந்த சூட்டிங்கை
(shooting) நடத்தியுள்ளார் செங்கதிரோன்.

எண்ணிக்கையற்ற மண்வாசனைச் சொற்கள் விளைச்சல் காவியத்iதை அரியாசனம் போட்டு அமரச் செய்கிறது.

'காட்டுப்பீ' கண்ட பின்னர்
கனகம்மா சென்று சீனி
போட்டு வெந்நீரில் செய்து
பொத்தியே ஊட்டினாள்'


என்ற வரிகளை வாசித்தபோது 'காட்டுப் பீ' என்ற சொல் எனது கவனத்தை ஈர்த்தது. குழந்தை பிறந்து முதல் கழிக்கும் மலம் காட்டுப் பீ என்று கவிஞர் குறிப்பும் போட்டுள்ளார். மறந்து போன மண்வாசனைச் சொல் என்பதனால்தான்; விளக்கம் தருகிறார். எலி மூத்திரம், உப்புக்கட்டி போன்ற சொற்களையே மண்வாசனைச் சொற்கள் என்று மயங்குகின்ற இந்தக் காலத்தில் இந்தச் சொல்லைக் கண்டு கைகூப்பி வணக்கம் செலுத்துவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

செங்கதிரோனின் விளைச்சல் காவியத்தில் கவிதையை அவர் கையாண்ட விதம் தொடர்பாகவும் சில விடயங்களைத் தொட்டுச் செல்வது பொருத்தம் என்று நினைக்கிறேன்.

கவிதைப் படைப்பின் வெற்றி என்பது வெறுமனே அதன் உள்ளடக்கத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை. உருவம், உருவகம், சந்தத்தோடு கூடிய சொல்லாட்சித் திறன், வைப்பு முறை என்று கவிதையின் வெற்றி பல்வேறு கூறுகளில் தங்கியிருக்கும். செங்கதிரோன் இவற்றில் பரிச்சயமுள்ளவர் என்பதை விளைச்சல் நமக்கு விளக்கியிருக்கிறது. குறிப்பாக சந்தம் நல்ல வெற்றியினை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.

145 விருத்தப்பாக்களைக் கொண்டமைந்த விளைச்சலில் அவர் கவிதை சொல்லும் பாங்கு அலாதியானது.

அறுசீர் விருத்தங்களை லாவகமாக அவர் கையாளும் விதம் நீலாவணனை நினைவூட்டுகின்றது.


கும்பமும் விளக்கும் வைத்து / குழந்தைக்குத் தேங்காய்பபாலை
செம்பிலே எடுத்து அன்னம் / சிரசிலே அள்ளித் தப்ப
எம்பிய பிள்ளை தோளில் / இதமாகச் செல்லன் தட்ட
அம்பட்டன் நேரம் பார்த்தே / அழகாக வழித்தும் விட்டான்.


முதலிரவில் இன்பம் அநுபவிக்கும் காட்சியை வெண்பாவில் சொல்லியிருக்கிறார்.

சங்கக் கழுத்தில் சரமெனவே கைகோர்த்து
தங்கக் குடங்கள் தழுவினான் - மங்கையுடல்
கூடிக் கிடந்தான். கொழுநன் உடலின்பம்
ஆடிக் கிடந்தாள் அவள்.


கலவியின்பத்தைவிட கவிதையின்பம் சிறப்பாக இருக்கிறது.

இப்படியாக அவரின் சிறியதும் சிக்கலில்லாததுமான நேர்கோட்டு முறையில் அமைந்த கதையொன்றின் ஊடாக அவரின் கவிதா ஆற்றலை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

விளைச்சல் காவியமா? மட்டக்களப்பு மண்ணின் ஓவியமா? என்று எங்கள் மனங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார் செங்கதிரோன். நமது கிழக்குச் சீமையின் கீர்த்தியை உலகறியச் செய்யும் ஒரு முயற்சியாகவும் விளைச்சலைக் கருதலாம்.

பல்கலைக்கழகத்திலும் பாமர மக்களின் வீட்டு ராக்கைகளிலும் கட்டுப் பெட்டிகளுக்குள்ளும் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பண்பாட்டுப் புலமைச் சொத்து இந்தக் காவியம். காலம் காலமாகக் கைமாறி வந்த மண்ணின் அடையாளங்கள் இக்காவியத்தின் ஊடாக நமது தலைமுறையினரிடம் இருந்து எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்க வேண்டிய ஒரு பொக்கிசம் ஆகும்.

காவியத்துக்குரிய முழுமையான 'தகைப்பு' விளைச்சலில் இல்லாதபோதிலும்கூட மானிடவியல் கோலம் புனைந்த காரணத்தினால் கவிதையுலகின் கவனத்தைப் பெறும் என்று நம்பலாம்.

உலகப் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளரான எஸ்.பொன்னுத்துரை 'நீலாவணன் நினைவுகள்' என்ற நூலிலே ' நீலாவணனின் நோக்கத்தை இணைத்து 'வேளாண்மை'யைப் பூர்த்தி செய்யக்கூடிய இன்னொரு நீலாவணன் பிறப்பானா? என்ற கேள்வியை தொடுத்திருந்தார். நண்பர் செங்கதிரோன் இன்னொரு நீலாவணனா? இல்லையா? என்பதை காலம்தான் தீர்மானிக்கும். நாம் அல்ல. ஆனால் நீலாவணன் வேளாண்மையை விட்ட இடத்திலிருந்து செங்கதிரோன் விளைச்சலைக் கொண்டு வந்திருக்கிறார். அதற்காக நாம் அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
 



(செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் எழுதிய விளைச்சல் குறுங்காவியம் வெளியீடு இலங்கை - கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையில்
01.07.2017 மாலை 3.00 மணியளவில் கவிஞர் சடாட்சரன் தலைமையில் நடைபெற்றபோது ஏ.பீர் முகம்மது ஆற்றிய உரையின் இணைய வடிவம் )



ஏ.பீர் முகம்மது

 



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்