எழுத்தாளர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

அகில்1. மதுரை தியாகராசர் கல்லூரியில் பேராசிரியாரக பணிபுரிந்து கொண்டே இலக்கியத் துறையிலும் மின்னிட தங்களால் எப்படி முடிகிறது?

எனது சொந்த ஊர் சோழவந்தான் மதுரை மாவட்டம். நான் கல்வி பயின்றது எல்லாமே இப்போது நான் பணியாற்றுகின்ற தியாகராசர் கல்லூரியில்தான். தியாகராசரை கலைத்தந்தை என்று சொல்லுவார்கள். இந்தக் கல்லூரியில் நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனது தந்தையார் தமிழ்துறை சார்ந்தவர். அந்தவகையில் பாரம்பரியமான தமிழ் அறிவு என் குடும்ப சொத்து. கல்வியும், வேலையும் எனக்கு தொழில் சார்ந்த விடயமாக இருக்கிறது. மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கின்ற நல்ல விடயங்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வேன். பொதுமக்களை நான் சந்திக்கின்றபோது ஏற்படுகின்ற அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வேன். அதுமட்டுமல்ல, நான் ஊடகத்துறையிலும் இருப்பதால் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, திரைப்படம் ஆகிய இத்தனை களங்களிலும் நான் இயங்குவதற்கு இந்தக் கல்லூரிப்பணிதான் எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது. வார இறுதிநாட்கள், விடுமுறை நாட்கள் அதேபோல் பருவத்தேர்வு நேரங்கள், கோடைகால விடுமுறைகள் என ஒரு ஆண்டுக்குள் வருகின்ற இந்த விடுமுறைகளில் நான் செய்ய வேண்டியவற்றை திட்டமிட்டுக் கொள்வேன். வெளிநாடு போவது எப்போது, கல்லூரி முடிந்த மாலை நேரங்களில் எப்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது, ஒய்வு நேரங்களில் எப்படி நூல் எழுதலாம் என்ற பல விடயங்களை நான் திட்டமிட்டுக்கொள்வதால் என்னால் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டே இலக்கியப் பணியிலும் ஈடுபட ஏதுவாக இருக்கிறது.


2. நீங்கள் மிகவும் இரசித்த நகைச்சுவை ஒன்று சொல்லுங்கள்?

நகைச்சுவை என்பது எல்லாத்துறைகளிலுமே இருக்கிறது. குறிப்பாக இலக்கிய நகைச்சுவைகள் மிகவும் இரசிக்கத்தக்கவை. கிருபானந்தவாரியாருடைய நகைச்சுவைகளை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அந்தந்த இடத்திற்கு ஏற்றபடியாக அவர் நகைச்சுவைகளை எடுத்துச்சொல்லுவார். ஒருமுறை நான் அவரை சந்தித்தபோது, 'சாமி, நீங்கள் இப்படி எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் உடனே பேசுகிறீர்களே. அது எப்படி? இப்படி எல்லாத் தலைப்பிலும் பேசுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டேன். அப்போது அவர் எனது தலையைத் தொட்டுக்காட்டி, 'வாட்டர் டாங்கியில தண்ணிய நிரப்பி வைத்தால், எந்தக் குழாயைத் திறந்துவிட்டாலும் தண்ணீர் வரும்' என்றார். அதாவது, 'நாம் மூளையில் எல்லாவிடயங்களையும் சேகரித்து வைத்திருந்தால் எந்தவிடயத்தைப் பற்றியும் உடனடியாக பேசமுடியும்' என்பதை நகைச்சுவை உணர்வுடன் கூறினார்.

அதேபோல நம்முடைய வகுப்பறைகளில் மாணவர்களோடு பேசிக்கொண்டிருக்கின்றபோது அவர்கள் எனக்கு கொடுக்கக் கூடிய விடயங்கள் புதியதாக இருக்கும். கல்லூரிகள், கல்விக்கூடங்களில் நான் பேசுவதற்கு செல்கின்றபோது அங்கு இருக்கக்கூடிய மாணவ, மாணவிகள் கேட்கின்ற கேள்விகள் மிக இனிமையாக நகைச்சுவையாக இருக்கும். சில பேராசிரியர்களுடன் பேசுகின்றபோது அவர்களிடையே தோன்றுகின்ற நகைச்சுவைகள் மிக அருமையாக இருக்கும். என்னுடைய இனிய நண்பர் கமலஹாசன் அவர்கள், கலைப்பேரரசு வைரமுத்து அவர்கள் இவர்களோடு நான் பேசுகின்றபோது இலக்கியம் சார்ந்த விடயங்களைப் பேசி மகிழ்வோம். எல்லாவற்றிலும் அனுபவரீதியான நகைச்சுவைகளை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்னும் சொல்வதென்றால், பயணம் செய்கின்றபோது நாம் சந்திக்கின்ற நபர்களும், அப்போது நமக்கு ஏற்படுகின்ற அனுபவங்களும் இடர்பாடுகளும் சில சமயங்களில் நினைத்து நினைத்துப் பார்த்து சிரிக்கக்கூடியதாக இருக்கும். இப்படித்தான் ஒரு பயணச் சம்பவம்.

ரயில் தரிப்பிடத்தில் ஒரு ரயில் வந்து நின்றது. ரயில் நின்றதும் அதிலிருந்த ஒருவன் வேகவேகமாக இறங்கி, ஓடித்தொடங்கினான். அதைப்பார்த்த டிக்கட் பரிசோதகர், அவனை விரட்டிக்கொண்டு ஓடத்தொடங்கினார். ஓடிப்போய் அவனைப் பிடித்தும்விட்டார். அவனிடம் 'எங்க, உன்னோட டிக்கட்ட எடு' என்று அவனை மிரட்டினார் அவர். அவனும் 'இந்தா இருக்கு டிக்கட்' என்று தன்னுடைய டிக்கட்டை எடுத்துக்காட்டி இருக்கிறான். 'அப்ப எதுக்காக இவ்வளவு நேரமும் ஓடினாய்?;' என்று டிக்கட் பரிசோதகர் அவனைப் பார்த்துக்கேட்டார். அதுக்கு அவன் 'நாங்க ரெண்டு பேரு ரயில்ல வந்துகிட்டு இருந்தோம். எனக்கு எதிர்ப்பக்கத்தில இருந்தவன் ராங்டிக்கட் வச்சிருந்தான். அவன் அந்தப் பக்கமாக எழுந்து போயிட்டான். நீங்க அவனை விட்டுட்டு வேகமா ஓடிவந்த என்னை விரட்டிபுடிச்சிட்டீங்க' என்றான். அசடு வழிந்தார் டிக்கட் பரிசோதகர்.

யாராவது ஓடுறவங்களைப் பார்க்கிறபோதெல்லாம் எனக்கு இந்த நகைச்சுவை ஞாபகத்திற்கு வரும். இப்படி பயணங்கள் போறப்போ அந்தந்த இடத்திற்கு தகுந்தாற்போல நகைச்சுவை இருக்கும்.

ஒரு சமயம், ஒரு பள்ளிக்கூடத்திற்கு நான் பேசப் போயிருந்தேன். அந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவரும் வந்திருந்தார். ஒரு எட்டாம் கிளாஸ் படிக்கிற மாணவி வரவேற்புரை வழங்குறதுக்காக எழுந்து வந்தாள். அந்த மாணவி எழுதி வச்சிருந்த விசயங்களை எல்லாம் மறந்துவிட்டாள். அப்பிடியே மைக் முன்னாடி வந்து நின்று 'மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நான் பாராட்டி, சீராட்டி.....' என்று ஏதேதோ சொல்லத்தொடங்கினாள். அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள். சபையோ சந்தோசமாக சிரிச்சது. இதுபோல் அந்தந்தக் கலைஞர்களுக்கு இருக்கின்ற நகைச்சுவைகளை நினைக்கும்போதெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.


3. தமிழ் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை, என்ற குற்றச்சாட்டுப் பற்றி தங்கள் கருத்து என்ன?

இது ஒரு தவறான கருத்து. தமிழ் கற்பது என்னும்போது அது தமிழ் ஆசிரியர் பணிக்கான கல்வி என்றுமட்டும் நாம் தீர்மாணிக்கக்கூடாது. ஏனென்றால் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழாய் இருந்தது தமிழ். பின்னர் நுண்கலை அதனுடன் இணைந்து நான்கு தமிழாச்சு. பிறகு அறிவியல் தமிழ் அதனுடன் இணைந்து ஐந்து தமிழ் ஆகியது. இன்று ஆறாவது தமிழாக கணித்தமிழ் என்று கணணியையும் சேர்த்துள்ளார்கள். இது குறித்து நான் ஒரு கட்டுரைகூட எழுதியிருந்தேன். 'தமிழ் படிப்போம், தரணியை வெல்வோம்' என்ற அந்தக் கட்டுரையை பாரிசில் இருக்கும் ஒரு நண்பருக்காக எழுதினேன். தமிழ் படித்த மாணவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை நான் அதில் சுட்டிக்காட்டி இருந்தேன்.

தமிழ் சார்ந்த துறைகள் என்னும் போது முதலாவதாக இதழியல் துறையைக் குறிப்பிடலாம். ஒரு தமிழ் படித்த இளைஞனை எந்தப் பத்திரிகையிலும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால், அவனுக்கு ஆக்கங்கள் எழுதத் தெரியும். பிழையில்லாமல் எழுதவும் தெரியும். அடுத்து வானொலித்துறை. நல்ல குரல் வளம் உள்ள தமிழ் படித்த மாணவர்கள் இத்துறைக்குச் செல்லலாம். அவ்வாறான பல மாணவர்கள் படித்துக்கொண்டே இந்தத் தொழிலைச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அதேபோல் தொலைக்காட்சியிலும் தொழில் தேடலாம். நல்ல முகவெட்டும், நல்ல உச்சரிப்பும், நல்ல தமிழறிவும் உள்ளவர்களுக்கு செய்தியறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரியலாம். திரைப்படத்துறையில் தமிழ் திரைப்படங்கள் உலகளாவப் பரந்திருக்கின்றன. நல்ல தமிழ் அறிஞர்களுக்கு அத்துறையில் வரவேற்பு இருக்கிறது. எஸ். ராமகிருஷ;ணன், ஜெயமோகன் போன்றவர்களுக்கு அந்த வரவேற்பு கிட்டியிருக்கிறது. நான் கூட என் இனிய நண்பர் கமலஹாசனுடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இதுதவிர கோயில்கள், சுற்றுலாத்துறையிலும் நல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றன. தமிழகத்தில் இருப்பதுபோல நிறைய கோவில்கள் வேறு எங்குமே கிடையாது. இந்தக் கோயில்களின் வரலாறுகளை தமிழில் படிக்கிறோம். ஒரு தமிழ் படித்த மாணவனால் வெளிநாட்டில் இருந்து வருகின்ற ஒரு சுற்றுலாப்பயணிக்கு அந்த கோயில் வரலாறு பற்றி பாடல்களோடு, சிற்பங்கள், கல்வெட்டுக்கள் உதவியோடு நல்ல முறையில் விளக்கம்கொடுக்க முடியும்.

தமிழ் மாணவன் ஒருவன் கணனி அறிவு பெறுவதன் மூலமும் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம். வலைத்தளங்களில் இந்தியாவில் உள்ள மொழிகளில் தமிழ் மொழியில்தான் அதிக வலைத்தளங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. வலைத்தளங்கள் மூலம் அவர்கள் நிறைய சாதனைகள் செய்யமுடியும். இவற்றை வைத்துப் பார்க்கும்போது தமிழ் படிக்கும் ஒருவர் தமிழ் ஆசிரியராகலாம், பத்திரிகைத்துறையில் இதழாசிரியர் ஆகலாம், வானொலி அறிவிப்பாளராகலாம், தொலைக்காட்சியில் செய்தியறிவிப்பாளராகலாம். திரைப்படங்களில் கதை, வசனம், பாட்டு எழுதலாம். கோயில்களில் அதிகாரிகளாகலாம். சுற்றுலாத்துறையில் வருகின்ற பயணிகளுக்கு நம்முடைய வரலாற்றை, தமிழ் வரலாற்றை எடுத்துச் சொல்லும் வழிகாட்டியாகலாம். கணனியும் அவர்கள் படித்திருந்தால் அவர்கள் இந்த உலகத்தையே வெல்லலாம்.

இத்தனையும் தமிழால் மட்டும்தான் முடியும். தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்பது ஒரு மூட நம்பிக்கை.


4. சங்க இலக்கியத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்று சொல்லுங்கள்.

உலகம் முழுவதும் இப்பொழுது சுற்றுச்சூழலை நாம் நேசிக்க வேண்டும் என்கிறோம். பயிர்களை நேசியுங்கள். உயிர்களை நேசியுங்கள் என்று சொல்கிறோம். இது சம்மந்தமாக சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் வருகிறது. அது நற்றிணைப் பாடல். தோழி கூற்றாக வருகிறது.

தலைவன் தலைவியை அணுகி அவளைத் தொட முயல்கிறான். உடனே அந்தத் தலைவி சற்று விலகி நின்று 'என் சகோதரி இருக்கின்ற இந்த இடத்தில் என்னைத் தொட வேண்டாம்' என்கிறாள். தலைவன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். தலைவி 'இதோ இங்கே என்னுடைய சகோதரி இருக்கிறாள். என்னைத் தொட வேண்டாம்' என்கிறாள். 'சகோதரியா? அங்கே யாரையும் காணோமே?' என்று ஆச்சரியத்தோடு மறுபடியும் கேட்கிறான் தலைவன். பக்கத்தில் ஒரு புன்னைமரம் நிற்கிறது. எனவே அதைக்காட்டி 'இதுதான் உன் சகோதரியா? என்று கேட்கிறான் தலைவன். 'ஆம்' என்கிறாள் அழுத்தமாகத் தலைவி. 'அது எப்படி?' என்று தலைவன் கேட்க தலைவி சொல்கிறாள். 'நான் என் தாயின் வயிற்றில் கருவினில் இருந்தபோது என்னுடைய தாயார் ஒரு புன்னைக் காயை இந்த மண்ணிலே ஊன்றினாள். அதற்கு பாலை ஊற்றி வளர்த்தாள். புன்னைக்காய் செடியாக வளர்ந்தது. நானும் பிறந்தேன். எனக்கும் அவள் தாய்ப்பால் ஊட்டினாள். நானும் வளர்ந்தேன். எனக்கு முதல் புன்னை வளர்ந்ததால் அது எனக்கு மூத்த சகோதரி. என்னையும் இவளையும் என் தாய்தான் வளர்த்தாள்' என்று கூறுகிறாள்.

உயிர்களையும், மற்றைய தாவரங்களையும் நம் முன்னோர்கள் எப்படி நேசித்தார்கள் என்பதற்கு இதைவிட ஒரு அருமையான பாடலை நாம் எங்கும் பார்க்கமுடியாது.

5. ஜெயா தொலைக்காட்சியில் தினந்தோறும் காலையில் பேசுகின்றீர்கள். இதற்காக எப்படி உங்களைத் தயார் செய்து கொள்கிறீர்கள்?

ஆமாம். கடந்த பத்து ஆண்டுகளாக ஜெயா தொலைக்காட்சியில் பேசிவருகிறேன். ஒருமுறை நான் அங்கு பேசச் சென்றால் 15 நாட்களுக்குரியவற்றை தயார் செய்துகொள்வேன். நாட்காட்டியின் உதவியுடன் அறிஞர்கள், சான்றோர்கள், அரசியல்வாதிகள், உலகப் புகழ்பெற்றவர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் இவர்களுடைய பிறந்த நாள், நினைவுநாள் இவற்றை எல்லாம் குறித்து வைத்துக்கொள்வேன். நான் படித்த புத்தகங்கள், பார்த்த இடங்கள், சந்தித்த நண்பர்கள், வியத்தகு கோயில்கள், மேடையனுபவங்கள் இவை எல்லாவற்றையும் கலந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயார் செய்வேன். 15 நாட்களுக்கு வேண்டிய செய்திகளை ஒரேமுறையில் தயாரித்துவிடுவேன். இச்செய்திகள் உலகம் முழுவதும் போய்ச் சேருகின்றன. என்னுடைய இத்தொகுப்புகளை எல்லாம் நான் எழுதிவைத்திருக்கிறேன். அவற்றைத் தொகுத்து ஒரு நூலாக ஏற்கனவே வெளியிட்டிருக்கிறேன். 'இன்றைய சிந்தனை' என்ற பெயரில் அந்நூல் வெளிவந்தது. இன்னும் 50 தொகுதிகள் வெளியிடுவதற்குத் தேவையான செய்திகள் என்னிடம் சேகரித்து வைத்திருக்கிறேன்.

தஞ்சாவூர் அருகில் முத்துப்பேட்டைக்கு பக்கத்தில் ஒரு கோவில் இருக்கிறது. அங்கு ஒரு ஆச்சரியம். நள்ளிரவு 12 மணிக்குத்தான் அந்தக் கோயிலைத் திறப்பார்கள். அதுவும் வெள்ளிக்கிழமை மட்டும்தான் அது திறந்திருக்கும். மற்றைய நாட்களில் திறப்பதில்லை. அங்கே சிலைகளோ, சிற்பங்களோ எதுவுமே கிடையாது. ஒரு ஆலமரத்தினுடைய அடிவேரை மட்டுமே வைத்துக்கொண்டு அவர்கள் வழிபடுகிறார்கள். 'மத்தியநிதீஸ்வரர்' என்று அந்தத் தெய்வத்திற்குப் பெயர். சிவபெருமான் இரண்டு முனிவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை நீதிபதியாக இருந்து தீர்த்து வைத்தாராம். அதனால்தான் அந்த இறைவனுக்கு அப்படிப் பெயர்.

இந்தச் செய்தியை நான் தொலைக்காட்சியில் குறிப்பிட்டபோது அந்த ஊரின் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கூட அந்த ஆலயத்தைப் பற்றித் தெரியாது. தேபோல்,

சென்னையில் 'பாடி' என்ற இடத்தில் இருக்கின்ற 'திருவடியநாயகர்' என்று ஒரு கோயில் இருக்கிறது. இது பல்லவர் கால கோயில். வட்டவடிவமான கருவறையைக் கொண்டது. 'யதுபிரதிஷ்டம்' என்று இதைச் சொல்லுவார்கள். அதாவது யானையினுடைய பின்பகுதி மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சம்மந்தர் தேவாரம் பாடியிருக்கிறார். இக்கோயில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பிற்காலத்தில் வள்ளுவர் பெருமான் அங்கு வந்து வாழ்ந்திருக்கிறார். இக்கோயிலைப் பற்றிய செய்தியை நான் சொன்னபோது அந்தக் கோயிலுக்கு அருகே இருந்தவர்கள் கூட இவ்வளவு நாளும் தமக்கு அக்கோயிலைப் பற்றி எதுவுமே தெரியாது என்று கூறினார்கள். இவையெல்லாவற்றையும் செய்வதற்கு இந்த நிகழ்ச்சி எனக்கு துணையாக இருக்கிறது.

6. நீங்கள் எழுதிய நூல்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த நூல் எது?

நான் இதுவரை பத்து நூல்கள் எழுதியிருக்கிறேன். 'பேசும்கலை' என்னும் நூலில் என்னுடைய முப்பது ஆண்டுகால மேடை அனுபவத்தை சேர்த்து எழுதியிருக்கிறேன். இது மதுரை மீனாட்சி கல்லூரி, மதுரைக் கல்லூரி, தியாகராசர் கல்லூரி உள்ளிட்ட இன்னும் சில கல்லூரிகளிலும் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. மேடைப் பேச்சுப் பற்றிய அனுபவங்களை வரிசைப்படுத்திச் சொல்லியிருக்கிறேன். எங்கெல்லாம் தோற்றேன், எங்கெல்லாம் ஜெயித்தேன் என்பதையெல்லாம் அதில் நான் எழுதியிருக்கிறேன். பாடப்புத்தகமாக அது சேர்க்கப்பட்டிருப்பதால் அதை நான் நல்ல புத்தகமாகக் கருதுகிறேன். அதுதவிர எல்லாப் புத்தகங்களுமே நல்ல புத்தகங்கள் தான். 'சினிமாவுக்கு போகலாம் வாங்க' – அது கல்கியில் தொடராக வந்தது. அப்போது கல்கியாசிரியர் 'என்ன எழுதப்போறீங்க?' என்று ஆவலாகக் கேட்டார். நான், 'கடைசி சீட்டுல உட்கார்ந்திருந்த நான் கதைக்குள்ள எப்படி வந்தேன்னு எழுதப்போகிறேன்' என்று சொன்னேன். அதே மாதிரி எழுதிமுடித்தேன். 'இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்' என்று ஒரு நூல் எழுதியிருக்கிறேன். அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் பயணப்படுகின்றபோது ஏற்பட்ட அனுபவத்தை சங்க இலக்கியப் பாடல்கள், கண்ணதாசன் பாடல்கள், நற்றிணைப் பாடல்களோடும், வைரமுத்து வரிகளோடும், புதுக்கவிதைகளோடும் சேர்த்துச் சொல்லியிருக்கிறேன். அதுவும் ஒரு அருமையான புத்தகம்.

7. பேச்சாளர் - எழுத்தாளர் இந்த இரண்டில் எது எளிது?

இரண்டுமே மிகக் கடுமையானவை. எதுவுமே எளிது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஒன்று, எழுதும்போது நூறுமுறை திருத்தி எழுதலாம். மேடைப்பேச்சில் அப்படிச் செய்யமுடியாது. ஒருமுறை பேசிவிட்டால், அதை திரும்ப வாங்கமுடியாது. உட்கார்ந்து எழுதுவது ஒருவகையில் கடினம்தான். நல்லபடியாக எழுதினோம் என்றால் எழுத்து வரலாற்றில் நிற்கும். மேடைப்பேச்சுத்தான் எழுத்தைவிட மிகக் கடினம் என்று நினைக்கிறேன்.

8. சில எழுத்தாளர்கள் தாம் எழுதும்போது ஒரே மூச்சில் எழுதிவிடுகிறோம். பிறகு அதை திருத்துவதில்லை என்று சொல்கிறார்கள். இது பற்றி....

எதை எழுதவேண்டும், எதை எழுதக்கூடாது என்பதை சிந்தித்து எழுதினோம் என்றால் எழுதி அழிக்க வேண்டிய அவசியம் இருக்காது. எழுதி முடித்தபிறகு ஒரு தடவை வாசித்துப் பார்த்தோம் என்றால் அது வாசிப்புக்கு ஏற்ற தன்மையில் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சிறுபிழைகள் இருந்தால் அதில் திருத்தம் செய்யலாம். கவிதை எழுதும்போது, அதனைத் திரும்பத் திரும்ப வாசித்து அதில் இருக்கும் வார்த்தைகளுக்குப் பதிலாக வேறு வார்த்தைகளைப் போட்டு திருத்தம் செய்யலாம். ஆனால் உரைநடை என்னும்போது, அதாவது சிறுகதை, கட்டுரை, எழுதும்போது அதை திரும்பத் திரும்ப வாசித்து திருத்தி எழுதத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் சிந்தனையில் நாம் என்ன எழுதப்போகிறோம் என்பது விழுந்துவிடுவதால் அதை எழுதித் திருத்த வேண்டிய அவசியம் இருக்காது.

9. தங்களுடைய இனிய நண்பர் உலகநாயகன் கமலஹாசன் பற்றி...

வழக்கமாக மனிதர்கள்; சிலர் நடிகர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் நடிகர்களிடம் நல்ல மனிதர் என்று நான் நினைப்பது கமலஹாசன் அவர்களைத்தான். எப்படி என்றால், ஒரு மாணவனுக்குரிய ஆர்வத்தோடு இன்றைக்கும் கற்றுக்கொண்டு இருக்கிறார். புதியவிடயங்களை தேடித் தெரிந்துகொள்கிறார். ஒரு செயலை எடுத்துக்கொண்டால் அதை நன்கு ஆராய்ந்து செயலாற்றுகிறார். அவருடைய மருதநாயகம் படத்தை எடுத்துக்கொண்டால் அந்தப் படம் வெளிவர முன்னர் அதை எடுப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பற்றி என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். எங்கெல்லாம் மருதநாயகம் குறித்த தகவல்கள் இருக்கிறதோ அதையெல்லாம் தேடி செய்திகளைத் திரட்டி இருக்கிறார்.

தசாவதாரம் திரைப்படத்தில் அதன்; முக்கியமான காட்சி பன்னிரண்டு நிமிடங்கள் திரையில் வரும், அவர் வைஷ;ணவராகத் தோன்றும்; காட்சிதான். அது பதினைந்தாம் நூற்றாண்டுக்கதை. அந்தக் காட்சிக்காக அவர் உழைத்த உழைப்பு இருக்கிறதே அது இரண்டு பேருடைய உழைப்பு. அந்தக் காட்சிதான் படத்தில் வருகின்ற ஏனைய ஏழுகாட்சிகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொடுக்கின்ற காட்சி.

அப்படித்தான் அவர் ஒரு காட்சியை எடுக்கும்போதும் அது சம்மந்தப்பட்ட அறிஞர்களைத் தேர்ந்தெடுப்பார். அவர்களோடு கலந்துரையாடுவார். எப்போதுமே அவர் நல்ல செய்திகளைத் தேடிப்படிப்பார். மிகுந்த நினைவாற்றல் உடையவர். பத்து நாட்களுக்கு முன் நான் ஒரு சங்க இலக்கியப் பாடலை அவருக்குக் கூறினால், பத்துநாட்கள் கழித்து அந்தப் பாடலை அவர் என்னிடம் திரும்பச் சொல்லுவார். என்னுடைய நல்ல மாணவர்களில் இவர் ஒரு சிறந்த மாணவர்;. திரைப்படத்துறையில் அவர் இருந்தாலும் அவரை அணுகுவது எளிது. எளிமையானவர். புதுமையை விரும்பும் ஆற்றல் உடையவர். இன்றைக்கு அமெரிக்காவில் என்ன ஒரு செய்தி புதிதாக அச்சாகி வெளிவருகிறதோ உடனேயே அதை வாங்கி தன்னுடைய நூலகத்தில் வைத்துவிடுவார். மிகப் பிரம்மாண்டமான நூலகம் ஒன்றையும் அவர் வைத்திருக்கிறார். பொறாமைப்படத்தக்க நூலகம் அது. இவையெல்லாம் தான் அவர் குறித்து என்னை வியப்பில் ஆழ்த்தியது.

10. திரைப்படத்தில் நீங்கள் நடித்த அனுபவம் பற்றி....

விருமாண்டி படத்தில் கதையின் கலந்துரையாடலுக்கு என் இனிய நண்பர் கமலஹாசன் என்னை அழைத்திருந்தார். பின் ஒரு நேரத்தில் இந்தப் படத்தில் நடிக்க முடியுமா என்று அவர் கேட்டார். நான் கொஞ்சம் அச்சப்பட்டேன். ஏனென்றால் நான் வேறுதுறை சார்ந்தவன். ஒரு பேராசிரியராக ஆராய்ச்சி, தொலைக்காடசி என்ற துறைகளைச் சார்ந்தவனாக இருந்த என்னை நடிக்க முடியுமா என்று கேட்டதும் தயக்கமாக இருந்தது. 'நான் கூடவே இருக்கிறேன். தைரியமாக நடியுங்கள்' என்று அவரே கூறினார். பிறகு நடிக்க ஒப்புக்கொண்டேன். அதுதான் நான்; திரைப்படத்தில் நடிக்கும் முதல் சந்தர்ப்பம். முதல்காட்சியே இரண்டாயிரம்பேர் இருக்கக்கூடிய ஒரு ஜல்லிக்கட்டுக் காட்சி. மாடு ஓடிவருகிறது நான் மேல மேடையடில் நின்று மைக்கைப் பிடித்துக்கொண்டு இருக்கிறேன். கமலஹாசன் கீழே நின்று மாட்டை அடக்குகிறார்.
Start Camera என்றதும் எனக்கு வேர்த்து விறுத்துப் போனது. எத்தனையோ மேடைகளைப் பார்த்த எனக்கு திரைப்படம் என்னும்போது அதில் கிடைக்கின்ற அனுபவம் என்பது ஏதோ மிகப்பெரிய விஷயமாகத்தான் எனக்குத் தெரிந்தது.

அதேபோல் நமக்கு நாமே டப்பிங் பேசுவதும் மிகப்பெரிய கலை. முன்னர் என்றால் நடிகர்களே நேரடியாக பேசிக்கொள்வார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி, நம்பியார் போன்றவர்கள் அப்படித்தான். மேற்கத்திய நாடுகளில் கூட இப்படித்தான். ஆனால் இப்போதைய தொழில்;நுட்பம் அந்தமாதிரி இல்லை. படம் நடிச்ச பிறகு டயலொக் பேசவேண்டும். அந்த டப்பிங் பேசும் கலையை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் கமலஹாசன்தான். இயக்குனர் பாண்டியராஜன் அவர்களுடைய கைவந்த கலை படத்தில் நடித்திருக்கிறேன். இயக்குனர் சரண் அவர்களுடைய இதயத் திருடன் படத்தில் நடித்திருக்கிறேன். ஆயுதம் செய்வோம் திரைப்படத்தில நீதிபதியாக நடித்திருக்கிறேன். சிவா மனசில சக்தி, புகைப்படம் போன்ற படங்களில் எனக்கு அந்த வாய்ப்புக் கிட்டியது.


11. உங்களுக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் யார்? எழுத்தாளர் யார்?

பேச்சாளர்கள் என்கின்றபோது,... கிருபானந்தவாரியார், திருக்குறள் முனுசாமி, திருச்சி ராதாகிருஷ;ணன், தமிழருவி மணியன் தொடங்கி இன்றைக்கு இருக்கின்ற பெரியபெரிய தமிழ் அறிஞர்கள் வரை பலரைக் குறிப்பிடலாம்.

புதிய பேச்சாளர்கள் அனைவருமே எனக்குப் பிடித்தவர்கள் தான். ஏனென்றால் அவர்கள் அந்தத் துறைக்கு ஆர்வத்தோடு வருகிறார்கள்.

எழுத்தாளர்கள் என்னும்போது கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பதுபோல நான் எல்லா எழுத்தாளர்களுடைய படைப்புக்களையும் படிப்பேன். மறைந்த எழுத்தாளர் சுஜாதா என்னுடைய நண்பர். அவருடைய 'கற்றதும் பெற்றதும்' என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்த நூல். அவருடைய எல்லா நூல்களையும் நான் விரும்பிப் படித்திருக்கிறேன்.

12. வளரும் பேச்சாளர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

பேச்சாளன் என்பவன் நிறைய படிக்க வேண்டும். முன்னொரு காலத்தில் ஒருவர் நான் படித்தவற்றையெல்லாம் ஊர் ஊராகச் சென்று சொல்லிக்கொண்டு வந்தாராம். தான் அறிந்த செய்திகளை மற்றவர்களும் அறியச்செய்தார். இன்றைக்கு ஒருவர் தொலைக்காட்சியில் பேசினார் என்றால் அந்தச் செய்தி உலகத்தில் இருக்கின்ற எல்லாத் தமிழ் மக்களுக்கும் போய்ச் சேருகிறது. அந்தளவுக்கு இன்றைக்கு தொழிநுட்பம் வளர்ச்சியடைந்து இருக்கிறது. பயிற்சி, முயற்சி, படித்தல் இவைதான் ஒரு மேடைப்பேச்சாளனுக்குரிய முக்கிய படிகள். பேச்சுக்கலை என்பது சாதாரண விடயமல்ல. பேச்சாளன் தனக்குக் கிடைத்த இந்தப் பாதையை மற்றவர்களை உயர்த்த, மற்றவர்களை மகிழ்விக்க, மற்றவர்களை நன்நிலைக்குக் கொண்டுவர பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்களுக்கு நான் வழங்கும் அறிவுரை. 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.