தமிழ்த்தேனி முனைவர் இரா.மோகன் அவர்களுடன் நேர்காணல்:

அகில்

1. பேராசிரியர், எழுத்தாளர், பட்டிமன்ற நடுவர் என்ற பலமுகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த முகம் எது?

அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன். அந்த எழுத்தாளன் என்ற முகம்தான் எனக்குப் பிடித்தது.

2. பட்டிமன்றத்திற்கான தலைப்புக்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

பட்டிமன்றத் தலைப்பு எப்போதுமே வித்தியாசமான ஒரு தலைப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அது செய்திப் பத்திரிகையில் நாம் படிக்கின்ற ஒரு செய்தியாகக் கூட இருக்கலாம். விளையாட்டுத்துறை சம்மந்தமாக ஒரு செய்தி படிக்கிறேன். மறுநாள் ஒரு விளையாட்டுப் போட்டி நடைபெறப்போகிறது என்ற செய்தி அது. 'திறமையா அதிஸ்டமா என்று தெரியும்' இதுதான் அதன் தலைப்புச்செய்தியாக கொடுக்கப்பட்டிருந்தது. அதை வாசித்ததும், 'வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் அதற்குப் பெரிதும் தேவைப்படுவது திறமையா? அதிஷ்டமா?' என்று ஒரு தலைப்பு என் மனதுள் உருவாகிறது.

பின்பொருநாள் நடைப்பயிற்சி செய்துகொண்டிருக்கும் பொழுது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுடைய பாடலொன்றைக் கேட்டேன்.

'முன்னேறப் படிப்பு தேவை
அதோடு உழைப்பும் தேவை'
என்கிறது அந்தப் பாடல். அதைக்கேட்டதும் மனதுள் ஒரு பட்டிமன்றத் தலைப்பு உருவானது. 'வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பெரிதும் தேவைப்படுவது படிப்பா, உழைப்பா' என்று ஒரு தலைப்பை உருவாக்கினேன்.

என்னைப் பொறுத்தவரை எப்போதும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு தலைப்பைக் கொடுக்க வேண்டும் என்று கருதுவேன். வெறுமனே ஒரு பொழுதுபோக்காக மட்டுமல்லாது ஆங்கிலத்தில்
Entertainment
என்று சொல்வார்களே அப்படியில்லாமல் Entertainment + information இரண்டும் கலந்ததாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தலைப்புக்களையே நான் தெரிவு செய்கிறேன்.

3. பட்டிமன்ற நடுவராக இருப்பவர் தன்னை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

எப்போதுமே தீர்ப்புச் சொல்கின்றபோது அது மக்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும். பொதுவாக ஒரு குடும்பத்திற்கோ, ஒரு வீட்டிற்கோ அல்லது ஒரு இளைய தலைமுறையினருக்கோ ஒரு செய்தியைச் சொல்லும்விதமாக தீர்ப்பு அமைய வேண்டும் என்பதை நடுவர் கவனத்தில் கொள்ளவேண்டும். கணவன் மனைவி சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தால் ஒருவருக்கு எதிராக தீர்ப்புச் சொல்லக்கூடாது. அதாவது இரு அணியினருடைய வாதங்களையும் பெற்றுக்கொண்டு, அந்த வாதங்களின் அடிப்படையில் அவர்களுக்கு என்ன செய்தியைச் சொல்லலாம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். நடுவர் அந்தச் சமயத்தில் ரொம்ப விளிப்பாக இருக்கவேண்டும். இரண்டு அணியினருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ளும் அதேநேரம் மக்களுக்கு எந்தச் செய்தியை சொல்லவேண்டுமோ அந்தச் செய்தியைச் சொல்லும் விதமாக தனது தீர்ப்பை அமைக்கவேண்டும்.

4. பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியத்திற்கு நேரம் எப்படி ஒதுக்குகிறீர்கள்?

நமது பழைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் இது பற்றி ஒரு சமயம் சொல்லியிருக்கிறார். அதாவது அவரிடம், நீங்கள் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கும் போது எப்படி உங்களால் புத்தகம் படிக்கமுடிகிறது என்று ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், நான் தூக்கத்தில் இருக்கின்ற நேரத்தை திருடுகிறேன் என்று பதில் கூறினார். அதுபோலத்தான். நேரத்தை நாம் திட்டமிட்டுச் செலவிட வேண்டும்.
Time management என்று சொல்வார்களே அது நமது கைகளில் தான் இருக்கிறது. நேரத்தை திட்டமிட்டுச் செயல்ப்பட்டால் எவ்வளவோ காரியங்களைச் செய்வதற்கு நமக்கு நேரம் போதுமானதாக இருக்கும்.

5. சங்க இலக்கியங்கள் பற்றி மேடையில் சொன்னால் ரசிக்கிறார்களா?

எதையும் சொல்லுகிற விதத்தில் சொன்னால் மக்கள் நன்றாகக் கேட்டு ரசிப்பார்கள். சங்க இலக்கியமாக இருந்தாலும் சரி, கைக்கூ, புதுக்கவிதையாக இருந்தாலும் சரி அதை சொல்லுகிற விதத்தில் சொல்லவேண்டும். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர்,

'நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்'
என்று சொல்லியிருக்கிறார். இச்செய்தி புறநானூற்றுப் பாடலில் என்றோ கூறப்பட்டுள்ளது. நல்லது செய்ய முடியாவிட்டாலும் மற்றவர்களுக்கு கெடுதி செய்யாமல் இரு என்பது மேற்சொன்ன குறளின் பொருள். அந்தச் செய்தியை இப்படி எளிமைப்படுத்தி விளங்கப்படுத்தும்போது அது எளிமையாக மக்களை போய்ச் சேர்கிறது. அத்தோடு சங்க இலக்கியத்தில் எளிமையான தெளிவான பல இடங்களும் உண்டு. புதுக்கவிதைகளில் பல புரியாத இடங்களும் உள்ளன. எந்த விடயமென்றாலும் அதை எல்லோரும் புரியக்கூடிய விதத்தில் சொல்லும்போது அந்தச் செய்தி இலகுவில் மக்களைப் போய்ச்சேரும்.

6. தமிழ்மொழியை வளர்க்கத் தாங்கள் கூறும் ஆலோசனை என்ன?

தமிழ்மொழி செம்மொழி. நீண்டகால பாரம்பரியமும் தொடர்ச்சியும் உடைய ஒரு மொழி. இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறு, அல்லது மூவாயிரம் ஆண்டுகால பழமை உடைய தொன்மையான மொழி. அந்த தொன்மையையும், தூய்மையையும் இன்றைய தலைமுறைக்கும் சென்று சேரும்விதத்தில் எளிமைப்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது. பாரதிதாசன் சொன்னதைப்போல, செந்தமிழை செழுந்தமிழாக ஆக்க வேண்டும். கணனியுகத்திற்கு ஏற்றாற்போல, இளைய தலைமுறை புரிந்துகொள்ளக் கூடிய விதத்தில் அவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

7. மலேசியத் தமிழர்களுக்கு பயிற்சி தந்த அனுபவம் பற்றி...?

ஆமாம் முப்பத்தைந்து பேர் அந்தப் பயிற்சிக்கு வந்திருந்தார்கள். பள்ளிகளில் தலைமையாசிரியராக, உதவி ஆசிரியராக, தமிழ் ஆசிரியராக இருந்தவர்கள் என்று இப்படிப்பட்டவர்கள் வந்திருந்தார்கள். நவீன தமிழ் இலக்கியத்தை, தமிழ்மொழியை எப்படி மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது? மாணவர்களுக்கு விளங்கக்கூடிய விதத்தில், அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் எப்படி தமிழைக் கற்றுக்கொடுப்பது? என்பது பற்றிய பயிற்சியாக அது அமைந்திருந்தது.

கற்றல் அனுபவம் என்பது 'சாந்துணையும் கல்லாவாம்..' என்று வள்ளுவர் சொன்னதைப் போல ஒருவருடைய கடைசி மணித்துளி வரைக்கும் கற்றல் அனுபவம் இருக்க வேண்டும். கற்பித்தல் என்பது தொல்காப்பியர் சொன்னதைப் போல நன்றாகப் படிக்கின்ற ஒரு மாணவனுக்கு மட்டுமல்ல, கடைநிலையில் இருக்கின்ற மாணவனுக்கும் இலகுவில் புரிந்துகொள்ளத்தக்க வகையில் கற்பித்தல் வேண்டும். நல்ல உதாரணங்கள் காட்டி, அவசரமில்லாமல், தெளிவாகச் சொல்லிக்கொடுக்க வேண்டும். கற்பிக்கும் விடயத்தை ஆசிரியர் முதலில் நன்றாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் இந்த பயிற்சி மறக்க முடியாததாக இருந்தது. கற்றுக்கொள்ள வந்திருந்த அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் நிறைய இருக்கிறது. அப்படி வித்தியாசமான ஒரு அனுபவமாக அது அமைந்திருந்தது.

8.  நீங்கள் 75  நூல்கள் எழுதி உள்ளீர்கள். வளரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

ஆய்வு, பதிப்பு, தொகுப்பு எல்லாம் சேர்த்து தான் அந்த எழுபத்தைந்து நூல்களுக்குள் அடங்குகின்றன.

எழுத்து என்பது பயிற்சிதான். அதாவது பயிற்சியும் நல்ல முயற்சியும் இருக்குமானால் நாம் எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் வெளியிடலாம். பாரதியார்,

'காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
மாலை முழுவதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா'
என்று பாடினார். என்னைப் பொருத்தவரை தினமும் ஐந்து பக்கமாவது எழுத வேண்டும். பத்துப் பக்கங்களாவது படிக்க வேண்டும். எழுத்தாளர் சுஜாதா அடிக்கடி சொல்லுவார். மூன்று பக்கத்தை எப்படி ஒரு பக்கத்திற்குள் கொண்டு வருவது என்பது ஒரு பயிற்சி என்பார். அது உண்மைதான். எப்படி எழுதவேண்டும் என்பது பயிற்சியின் மூலமே கிடைக்கும். இடைவிடாத பயிற்சியும், முயற்சியும் இருந்தால் எதை எப்படி எழுதவேண்டும் என்பதைத் தெரிந்து எழுதலாம்..

9. 'தமிழ்த்தேனி' என்ற பட்டம் தங்களுக்கு எப்போது யாரால் வழங்கப்பட்டது?

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பேராசிரியர் தமிழன்பன் அவர்கள் ஒரு கூட்டத்தில் எனக்கு வழங்கிய பட்டம் அது. மு.வ அவர்கள் என் எழுத்துக்கு வழிகாட்டி. தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்னுடைய பேச்சுக்கு வழிகாட்டி. நாம் பேசுவதென்றால் சிந்தித்த பிறகுதான் பேசுவோம். அல்லது பேசிவிட்டு சிந்திப்போம். ஆனால் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேசுகின்றபோதே சிந்திப்பார். அது அவருடைய ஒரு தனித்தன்மை. காரைக்குடி தமிழன்பன் அவர்கள் என்னுடைய ஆய்வுக்கு வழிகாட்டி. நான் படிக்கின்ற காலத்திலிருந்து கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக என்மீது அவருக்கு ஈடுபாடு உண்டு. நான் ஒரு கூட்டத்தில் பேசச் சென்றிருந்தபோது பேராசிரியர் தமிழன்பன் தான் எனக்கு இந்தப் பட்டத்தை வழங்கினார்.

10. தங்களை 'மு.வ.வின் செல்லப்பிள்ளை' என்று அழைக்கக் காரணம் என்ன?

கோவைப் பேராசிரியர் ம.ரா.பொ.குருசாமி மு.வ அவர்களுடைய முதல்நிலை மாணவர்களில் ஒருவர். அவர்தான் என்னை முதன்முதலில் அவ்வாறு அழைத்திருந்தார்.

மு.வ அவர்களுடைய நூல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. அது என்னவென்றால், தன் நூல்களுக்கு தன் முதல்நிலை மாணவர்களைக் கொண்டு முன்னுரை எழுதச் செய்வார். அவரது பெரும்பான்மையான நூல்களுக்கு தமிழ்த் தென்றல் திரு வி.க அவர்கள் முன்னுரை எழுதியிருப்பார். மு.வவினுடைய நான்கு நாவல்களுக்கும் அவரது மாணவர்களான ம.ரா.பொ.குருசாமி, ரகுநாதையர், வேங்கடசாமி போன்றவர்கள் தான் உரை எழுதினார்கள். அந்தக் காலப்பகுதியில் மு.வவைப் பற்றி யாருமே நூல் எழுதவில்லை. நான்தான் முதன்முதலில் 1972 இல் அவரைப் பற்றி நூல் எழுதினேன். மு.வவின் நாவல்கள் என்ற எனது முதல்நூல் அவரைப்பற்றிய நூல். யாருமே அவரைப்பற்றி எழுத நினைக்காத நேரத்தில் வரிசையாக ஐந்து நூல்கள் நான் அவரைப் பற்றி எழுதினேன். அதனால் பேராசிரியர் ம.ரா.பொ அவர்கள் மு.வவினுடைய மணிவிழாவின் போது மு.வவின் நூல்களில் உள்ள அணிந்துரைகளை எல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார். மு.வ முப்பால் என்ற தன்னுடைய அந்த நூலை ம.ரா.பொ. வெளியிட்டு எனக்கு அன்பளிப்பாக வழங்கும்போது அந்தப் புத்தகத்தில் 'மு.வவின் செல்லப்பிள்ளை மோகனுக்கு' என்று எழுதி கையொப்பமிட்டுத் தந்தார். அந்த நூலை ஒரு பொக்கிசமாகக் கருதி இன்றுவரை பேணிப்பாதுகாத்து வருகிறேன்.

11. நீங்கள் எழுதிய நூல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நூல் எது?

முதல் முத்தம், முதல் காதல் எப்போதும் இனிக்கும் என்பார்கள். என் முதல்நூல் நான் 1972 இல் எழுதிய மு.வவின் நாவல்கள் என்ற நூல். நான் அதை எனது முனைவர்பட்ட ஆய்வுக்காக எடுத்துக்கொள்ள நினைத்தேன். ஆனால் அதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு நமக்காகத் திறக்கப்படும் இல்லையா? உடனேயே அதை நான் நூலாக வெளியிட்டேன். டாக்டர் மு.வவின் நாவல்கள் என்ற அந்த நூல்தான் இன்றும் எனக்கு ஒரு மனநிறைவைத் தரக்கூடிய நூலாக இருக்கிறது. அந்த நூலை பார்க்கிறபோது நான் அடைகிற மகிழ்ச்சி ஒரு மனநிறைவைத் தருவதாக, ஒரு சுகமான அனுபவமாக இருக்கிறது.

12. தங்களுடைய ஆசான் மூதறிஞர் தமிழண்ணல் பற்றி...?

மூதறிஞர் தமிழண்ணல் எப்போதும் முயற்சி உடையவர். பழைய மூதுரைகளை எப்போதுமே மாற்றித்தான் சொல்லுவார். உதாரணமாக 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்பதை 'முயற்சி உடையார் உயர்ச்சி அடைவார்' என்றுதான் சொல்லுவார். எதிர்மறையாகச் சொல்வதை அவர் விரும்பமாட்டார்.

தன் தனிப்பட்ட முயற்சியால் உயர்நிலை அடைந்தவர் அவர். ஆரம்பத்தில் தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்த அவர் தன் தனிப்பட்ட முயற்சியில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகி, பின்னர் தியாகராசக் கல்லூரி, அதன்பின் மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் என்று உயர்நிலையை அடைந்தார். ஒரு சமயம் அவருடைய ஒரு நூலுக்கு என்னிடம் தலைப்புக் கூட கேட்டிருந்தார். அப்படிப்பட்ட நட்பு எங்களுடையது. தன்னுடைய 81 ஆவது வயதில் இப்போதும் தானே தன் முயற்சியில் பேனாவைப் பிடித்து எழுதிக்கொண்டிருக்கிறார். என்றைக்குமே அவரை நான் என்னுடைய இலக்கிய ஆசானாக, வழிகாட்டியாகக் கருதுகிறேன்.

13. உலகப்பொதுமறையான திருக்குறளை இன்னும் தேசிய நூலாக அறிவிக்காதது பற்றி...?

ரொம்பக் காலமாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் அதற்கு குரல்கொடுத்து வருகிறார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளார்; 'திருக்குறள் ஒரு வழிபாட்டு நூல் அல்ல. அது வழிகாட்டும் நூல்' என்று அடிக்கடி குறிப்பிடுவார். அப்படிப்பட்ட திருக்குறள் இன்று உலகப் பொதுமறையாக உலக அரங்கில் உலா வந்துகொண்டிருக்கிறது. தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டதைப் போல திருக்குறளும் தேசிய நூலாக விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்கிறார்கள். அதற்கு நேரம் வரவேண்டும். அந்த நாள் மிக விரைவில் வரவேண்டும் என்றுதான் நானும் எதிர்பார்க்கிறேன்.

14. உங்களைக் கவர்ந்த பட்டிமன்ற நடுவர் யார்?

என்னைக் கவர்ந்த பட்டிமன்ற நடுவர் குன்றக்குடி அடிகளார் தான். ஏனென்றால், அவர் இரண்டு அணிகளுடைய கருத்துக்களையும் வரிசைப்படுத்தி அந்தக் கருத்துக்களின் மீது பயணித்து இறுதியில் உரிய தீர்ப்பை வழங்குவார்.; பட்டிமன்றம் என்ற வடிவத்திற்கு ஒரு முழுமையான வடிவம் கொடுத்தவர் அவர். ஆர்மோனியப் பெட்டிக்கு அழகுத் தமிழை அறிமுகம் செய்தவர் என்று கண்ணதாசனைச் சொல்லுவார்கள். கண்ணதாசன் எப்படி திரையிசைப் பாடலுக்குள் இலக்கியப் பாடல்களைக் கொடுத்தாரோ அதைப்போல, தவத்திரு குன்றக்குடி அடிகளார் நல்லதொரு தலைப்பை எடுத்துக்கொண்டு சமூகத்திற்கு தேவைப்படுகின்ற முற்போக்கான, மறுமலர்ச்சிக் கருத்துக்களை எல்லாம் பட்டிமன்றங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.

15. உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்?

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் என்னும்போது புதுமைப்பித்தனையும், ஜெயக்காந்தனையும்; குறிப்பிடலாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அதாவது தற்போது அவர்களுக்கு இருக்கின்ற வசதி வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரச்சொன்னால் வரக்கூடியவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் என்று நான் கருதுவது பாரதியார், மு.வ, புதுமைப்பித்தன், ஜெயக்காந்தன் இவர்கள் தான். தேவாரம் பாடிய மூவரையும், மாணிக்கவாசகரையும் சேர்த்து பக்தி மார்க்கத்தில் நால்வர் என்று குறிப்பிடுவதைப்போல, எழுத்துலகில் இந்த நால்வரும் குறிப்பிடத்தக்கவர்கள். புனைகதை உலகம் எனும்போது ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம். ஆய்வுலகம், தமிழுலகம் என்று சொன்னால் அது டாக்டர் மு.வ அவர்கள். அதேபோல கவியுலகம் என்று சொன்னால் அது பாரதியார்தான். 39 ஆண்டுகளுக்குள் ஒரு புதுநெறி காட்டிய புலவர் பாரதி. அவருடைய,

'நல்லதோர் வீணை செய்தே....'

என்ற பாடலை புலர்காலைப் பொழுதில் அல்லது இரவின் மடியில் பொருளுணர்ந்து ஒருமுறை படித்தால் போதும் ஊக்கமும், உற்சாகமும் தன்னால் பிறக்கும். இந்தப் பாடல் பாரதியினுடைய முத்திரைப் பாடல். இருபத்திநான்கு மணி நேரமும் என்னை இயக்குகின்ற பாடலாக அதைத்தான் நான் நினைப்பது.

16. படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் பற்றி...?

ஆமாம் அது உண்மைதான். எழுத்தாளர் இறையன்பு கூட ஒரு இடத்தில் அழகாகச் சொல்கிறார். 'எப்பவுமே பிரபலம் என்பது தவறான முகவரிகளைச் சென்று சேர்கிற கடதாசியாகவே இருக்கிறது' என்றார். அதாவது எழுத்தாளன் என்கிற அங்கீகாரம் சரியான நபர்களுக்கு கிடைப்பதில்லை. அல்லது காலம் தவறிய நேரத்தில் கிடைக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு சாபக்கேடுதான். அண்மையில் ஒரு மலையாள எழுத்தாளருக்கு விருது கொடுக்க அழைத்தபோது அவர் எனக்கு விருது தேவையில்லை என்று கூறிவிட்டார். ஏனென்றால் ஏற்றத்தாழ்வுகளை, வேறுபாடுகளை இந்த விருதுகள் வளர்க்கின்றன. அதனால் இந்த விருது எனக்கு தேவையில்லை என்று மறுத்துவிட்டார் அவர். விருது, பரிசு, அங்கீகாரம், ஏற்புகள் எல்லாமே சரியான ஒரு எழுத்தாளனுக்குக் காலம் தாழ்த்தி வருகின்றன. அல்லது வராமலே போகின்றன. இருந்தாலும் புதுமைப்பித்தன் சொன்னதைப் போல தமிழ் எழுத்து என்பது எல்லாவற்றையும் தாண்டி உரிய ஸ்தானத்தை அடைந்தே தீரும்.

17. ஊடகங்களில் பண்பாட்டுச் சீரழிவு நடைபெற்றுவருவது பற்றி உங்கள் கருத்து....?

கட்டாயம் இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் நாட்டில் இது இன்னமும் மோசமாக இருக்கிறது. நேரத்தைக் கொல்வது மட்டுமன்றி நமது மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை குழிதோண்டிப் புதைப்பதாகவும் இருக்கிறது. நான் நண்பர்களிடம் நகைச்சுவையாக ஒரு தொலைக்காட்சித் தொடர்பற்றி குறிப்பிடுவதுண்டு.
அதில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தொல்காப்பியன். என்ன அருமையான தமிழ்ப்பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பிறகு அந்தப் பெயரைச் சுருக்கி 'தொல்ஸ், தொல்ஸ்' என்று அழைக்கிறார்கள். கேட்பதற்கு காது கூசுகிறது. தமிழ் மொழியை ஏன் இப்படிச் சிதைக்க வேண்டும். தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் எப்படி எமது மக்களுடைய நேரத்தைப் பாழடிக்கின்றன? நம் பண்பாட்டு, கலாச்சார சீரழிவுகளுக்கு காரணமாக அமைகின்றன? என்பதைப் பார்க்கும்போது பெரியார் அவர்கள் சொன்னதுபோல ஒருசில ஆண்டுகளுக்கு இந்த திரையரங்குகளை மூடிவைத்தால்கூட ஒன்றும் கெட்டுப்போய் விடாது என்று தோன்றுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது 'நெஞ்சு பொறுக்குதில்லையே.....' என்ற பாடலைத்தான் பாடத் தோன்றுகிறது.

18. உங்களுக்கு மிகவும் பிடித்த பட்டிமன்றத் தலைப்பு என்ன?

'ஒளி படைத்த நாடு அல்லது ஒளி படைத்த பாரதநாடு உருவாக பெரிதும் தேவைப்படுவது படிப்பா? உழைப்பா?' என்ற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு. இரண்டுமே நமக்கு அடிப்படையாகத் தேவை. ஒரு நல்ல நாடு உருவாவதற்கு இந்த இரண்டுமே மிகவும் அவசியம். உழைப்பாளிகளுக்கு படிப்பின் அருமை தெரியவேண்டும். படிப்பாளிகளும் வெறுமனே மூளை உழைப்போடு நின்றுவிடாது உடல் உழைப்புக்கு மதிப்பைத் தருபவனாக இருக்க வேண்டும். ஆகவேதான் இந்தச் செய்தியைப் பரப்புகின்ற அந்தத் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்த தலைப்பாக இருக்கிறது.

19. வாழ்க்கைத் துணையாக மட்டுமன்றி உங்கள் இலக்கியப் பயணத்தில் வழித்துணையாகவும் முத்திரை பதித்துவரும் தங்கள் துணைவியார் நிர்மலா மோகன் பற்றி...?

முனைவர் நிர்மலா செந்தமிழ்க் கல்லூரியிலே பேராசிரியராக இருக்கிறார். எங்களுடைய திருமணம் காதல் திருமணம். எங்கள் திருமணம் ஒரு ஆண்டாள் கோயிலில் நடந்தது. பிறப்பும் நம் கையில் இல்லை. அதுபோல் வாழ்க்கையின் முடிவும் நம் விருப்பப்படி இல்லை. இடையில் நடக்கக்கூடிய ஒரு நல்ல நிகழ்வு திருமணம். அந்தத் திருமணம் நம் விருப்பப்படி இருக்கவேண்டும் என்று நான் படிக்கும் காலத்திலேயே முடிவு செய்திருந்தேன்.

'காதலன் ஒருவனைக் கைப்பிடித்து
அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து'
என்று பாரதியார் சொன்னதைப்போல் உற்றதுணையாக முனைவர் நிர்மலா எனக்குக் கிடைத்தது நான் வாழ்க்கையில் செய்த பெரும் பேறாகக் கருதுகிறேன்.

20. சொல்லில் வடிக்க முடியாத சோகத்தை அடைந்த இலங்கைத் தமிழர் பற்றி...?

நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் போது அண்மையில் ஒரு மாணவன் எழுதிய சிறுகவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது.

'தமிழுக்கு அமுதென்று பெயர்
தமிழனுக்கு அகதி என்று பெயர்'


உண்மையில் ஈழத்தமிழர்களுடைய சோகம் சொல்லில் வடிக்க முடியாத சோகம்தான். திபெத்திய பெண்கள் படும் துயரை பாரதி எப்படி தன் கவிதையில்

'விம்மிவிம்மி விம்மியழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே! துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ? அவர் விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர்.....'

என்று மிக அற்புதமாக அந்த சோகத்தை வடித்திருக்கிறார். அந்த சோகத்தை ஒத்தது ஈழத்தமிழர்களது சோகம். அவர்களுடைய துன்பங்கள் விரைவிலே நீங்க வேண்டும். தமிழீழம் விரைவில் மலர வேண்டும். 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.