எழுத்தாளர் ரா.ப.அரூஸ் அவர்களுடன் நேர்காணல்:

க.கோகிலவாணி
 
தனது 21வது வயதில் ஏழே மாதங்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என 21நூல்களை எழுதி முடித்திருக்கும் இலங்கை இளைஞர் ரா.ப.அரூஸ், தனது 'தீப்பிடித்த பூக்கள்' எனும் கட்டுரைத் தொகுதியினை அண்மையில் வெளியிட்டிருந்தார். அவருடனான நேர்காணலின் போது அவரிடமிருந்து கிடைத்த சில பதிவுகள்...


01. உங்களைப் பற்றிய அறிமுகம்...?

கிழக்கிலங்கையின் கிண்ணியா மண்ணிலே ராசிக் பரீட் - ஹிதாயா ஆகியோருக்கு மகனாக 1988.05.04 அன்று பிறந்தேன். ஆறாந் தரத்தில் கற்கும் போதே கவிதையில் கலந்துவிட்டேன். எட்டாந் தரத்தில் கற்கும் போதே 'சுவடு' எனும் கவிதைத் தொகுப்பினை எனது பாடசாலையில் வெளியிட்டேன். திஃ கிண்ணியா மத்திய கல்லூரியே என்னை செதுக்கிய கூடம். எனது பாடசாலைக் காலத்தில் கல்வி - இணைப்பாடவிதானம் என இரண்டிலும் இறைவனருளால் அதி ஆளுமை கொண்டவனாகத் திகழ்ந்தேன், அல்ஹம்துலில்லாஹ்! இதன் விளைவு - க.பொ.த (சா/தர)ப் பரீட்சையில்
8A, 2B எனும் பெறுபேற்றினை என்னால் பெறமுடிந்தது.

மற்றும் நான் பத்தாம் தரத்தில் கற்ற போது 2003ம் ஆண்டு அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டியில் பங்கு பற்றி கவிதை ஆக்கத்தில் தங்கப்பதக்கத்தினைப் பெற்று எனது பாடசாலையினதும் ஊரினதும் நாமத்தினை நாடறியச் செய்தேன். இது எமது கல்வி வலயத்திற்கே கிடைத்த முதல் வெற்றியாகக் கணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2004 ம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிக்குத் தெரிவாகி சிறுகதை ஆக்கத்தில் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டேன். எழுத்து மாத்திரமன்றி விவாதம், பேச்சு, ஆங்கில தினப் போட்டிகள் மற்றும் இவை போன்ற இன்னோரன்ன பல தேசிய, மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றி இருநூறுக்கும் மேற்பட்ட வெற்றிச் சான்றிதழ்களுக்குச் சொந்தக்காரனாயிருக்கிறேன்.

02. முதல் கவிதைத் தொகுப்பின் போது கிடைத்த அனுபவம்....

தனது எழுத்தினை அச்சில் பார்ப்பது அதுவும் நூல் வடிவில் பார்ப்பது உண்மையிலேயே ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் கிடைக்கும் உச்சகட்ட மகிழ்ச்சியான அனுபவம்தான். இதே மாதிரியானதொரு புளகாங்கித அனுபவம்தான் எனக்கும் கிடைத்தது. எத்தனையோ வயது முதிர்ந்த எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை அச்சில் பார்க்க வேண்டுமென்ற பேரவாவுடன் இருக்கிறார்கள். நிறையப் பேருக்கு இறுதி வரை அந்த வாய்ப்புக்கள் கிடைப்பதேயில்லை. அப்படியிருக்கையில் எனது பதின்மூன்றாவது வயதிலேயே அந்த வாய்ப்பெனக்குக் கிடைத்தது இறைவனின் பேரருள்தான்.

பட்டாம் பூச்சி பிடித்து விளையாடும் வயதுடைய ஒருத்தனுக்கு கவிஞன் எனும் பட்டம் கிடைத்த அந்தத் தருணத்தை எப்படித்தான் மறக்க முடியும்...? 'சுவடு' வெளியீட்டு விழாவுக்கு நிறையப்பேர் வந்திருந்தார்கள். நான் அறியாத, என்னைப் பற்றி நன்றாக அறியாத எத்தனையோ சான்றோர்கள் அரங்கிலே எனது கவிதைகளைப் பற்றிப் புகழ்ந்து பேசிய அந்த நிமிசங்களில், இன்னும் எழுது..., இன்னும் எழுது... என எங்கிருந்தோ ஒரு அசரீரி கட்டளையிட்டுக் கொண்டிருப்பதைப் போன்றதொரு உணர்வு என்னுள் எழுந்துகொண்டேயிருந்தது.

விழாவின் முடிவுத் தருணத்தில், வந்தவர்கள் அனைவரும் என்னைத் தலை தடாவி, கட்டியணைத்து வாழ்த்திச் சென்றதனை இப்போது நினைத்தாலும் இதயம் ஆனந்தத்தைக் கண்களுக்கு ஏற்றுமதி செய்கிறது.

03. இளம் வயதிலேயே கவிதைத் தொகுதியினை வெளியிட ஊக்குவித்தவர்கள்...

இது நான் எதிர்பார்த்த வினாத்தான். நான் சொல்லப்போவது நீங்கள் கேட்காவிடினும் நான் சொல்லியேயாக வேண்டிய விடைதான்.

எனது வாழ்வில் என்னால் என்றுமே மறக்கமுடியாத இரண்டு மனிதர்களிருக்கிறார்கள்.
அமைதியையும் அடக்கத்தினையும் முகத்தில் அள்ளிப்பூசி புன்னகையால் தேன்வார்க்கும் மனிதர்கள்.
என்னைப் பற்றி எவர், எங்கு விசாரித்தாலும் இவர்களிருவரும் எனது பேச்சில் அமர்ந்துவிடுவார்கள்.

ஒருத்தர் எனக்கு நடைவண்டி தந்தவர்.
மற்றவர் நானதில் பயணிக்கப் பாதையைக் காட்டியவர்.

முதலாமவர் எனது தாய் வழிப்பாட்டன் முஹம்மது புஹாரி அவர்கள். இரண்டாமவர் எனது கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.எம். சரீப் அவர்கள். முதலாமவர்தான் எனக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் கரம்பிடித்துத்தந்தவர். அவரது மடிதான் எனது நேர்சரிப் பாடசாலை. இரண்டாமவர் நான் கரம் பிடித்த மொழிகளின் பிரயோகத்திற்கு வழி வகுத்தவர்.

பாடசாலையில் நான் ஏழாம் தரத்தில் கற்றுக்கொண்டிருந்தபோது சரீப் ஆசிரியர் அவர்களே எனக்கு தமிழ் பாட ஆசானாக இருந்தார். எனது கவிதைகளை அவரிடம் காட்டிய போது அவைகளைப் பாடசாலை முழுக்க விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டார். அக்காலப்பகுதியில் ஒவ்வொரு காலை ஆராதனை உரையிலும் அவரது நாவில் நான் உதாரணமாக அமர்ந்துகொள்வது தவிர்க்கமுடியாததொன்றாகிவிட்ட நிலையில் எனது கவிதைகளை நூலுருப் படுத்தும் முயற்சியில் இறங்கி வெற்றிகண்டார்.

மேற்சொன்ன இருவரையும் எனது இதயத்தில் நன்றியெனும் நாற்காலிகளிட்டு மரியாதையுடன் அமர்த்தியிருக்கிறேன்.


04. 21வது வயதில் 21 நூல்களை எழுதியமைக்கான நோக்கம்...

நல்லதொரு வினா. எனது முயற்சி பற்றி அறிந்த நிறைய நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் ஒரு வினா. நிறைய நோக்கங்கள் இருக்கின்றன. கடலளவு நோக்கத்தினைக் கடைத்தெருவில் வைத்து கதைத்துவிட முடியாது என்பதற்காக நான் அவர்களிடம் நிறையப் பேசுவதில்லை. அனைவருக்கும் ஒரே தடவையில் பதில் கூற இதுவே தக்க தருணம் என எண்ணுகிறேன். இவ்வாய்ப்பினை வழங்கிய உங்களுக்கும் உலகத் தமிழர்களின் குரலான வீரகேசரிக்கும் முதல் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்த இன்றைய உலகில் எவற்றையாவது சாதிப்பதென்றால் ஏகப்பட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எண்ணற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் நிறையச் சாதிக்க வேண்டும், அதிலும் இள வயதில் சாதிக்க வேண்டும் எனும் வேட்கையினைச் சுமந்து கொண்டிருக்கும் நான் யாவரும் பயணிக்கும் வழமையான பாதையில் பயணிக்க மனங்கொள்ளவில்லை. ஒரு புதுமையான தலைப்புடனும் அதிர்வுடனும் நான் உலகத்தவரைச் சென்றடைய வேண்டுமென்று எண்ணினேன். அதிலும் மானுடத்திற்கு நல்ல பல விடயங்களை எனது நூட்களினூடாக வழங்கி என்னை அடையாளப்படுத்திய பின்னர் எனது இலக்குகளை நோக்கிப் பயணித்தால் அவைகளை இலகுவாக எட்டிவிடலாம் எனக்கருதினேன். எனவே ஏழே மாதங்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், சில பாடநூல்கள் என 21 நூல்களையும் எழுதி கணனி மயப்படுத்திவிட்டு '21வது வயதில் 21 நூல்கள்' (21in21) எனும் செய்தியினை உலகத்திற்கு வழங்கினேன்.

எனது இந்த முயற்சிக்கு நமது நாட்டில் நான் எதிர்பார்த்த அளவு வரவேற்புக் கிடைக்காவிடினும் வெளிநாடுகளில் நான் எதிர்பார்த்ததை விடவும் அமோக வரவேற்புக்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.

இந்தியா, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா என தமிழ் மணக்கும் அனைத்து தேசத்திலிருந்தும் கை தட்டல்கள் மின்னஞ்சலினூடாகக் கிடைத்த வண்ணமிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து எனது '21in21' எனும் முயற்சியறிந்த இந்திய நண்பர்களின் வேண்டுகோளுக்கினங்க எனது 21 படைப்புக்களினதும் மாதிரி நூல் வடிவங்களுடன் தமிழகத்திற்குச் சென்றேன். அங்கு கிடைத்த வரவேற்புக்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. எனது 21 நூல்களில் பலவற்றிற்கு கவிக்கோ அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, நா.முத்துக்குமார், யுகபாரதி, பேராசிரியர். இராமச்சந்திரன், பேராசிரியர். கந்தசாமி, லேனா.தமிழ்வாணன் போன்ற பிரபலங்களின் அணிந்துரைகளும் பாராட்டுதல்களும் கிடைத்தன.

அங்குள்ள சில பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. பேராசிரியர்கள் நிறையப்பேர் என்னைத் தலை தடாவி வாழ்த்தினார்கள். மேலும் குங்குமம், தங்கம், நந்தவனம், மக்கள் குரல் போன்ற இதழ்களில் என்னைப் பற்றி, எனது முயற்சிகள் பற்றி
நிறையவே எழுதினார்கள். மேலும் சந்திராயன் விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் என்னை வாழ்த்திப்பேசினார்.

இவற்றின் விளைவாக தமிழகத்தில் நிறையத் தொடர்புகளையும் நண்பர்களையுளும் எனது எழுத்து, முயற்சி என்பன ஒருங்கே எனக்குப் பெற்றுத்தந்திருக்கின்றன.
வெளிநாட்டில் உள்ள நிறையப்போர் எனது எழுத்தில், கொள்கையில் பிடிப்புக்கொண்டிருக்கிறார்கள். எனது நூல்களைப் படித்து அணிந்துரை தந்த சுவிட்ஸர்லாந்து கல்லாறு சதீஷ், அவுஸ்திரேலியா சிறீ கந்தராசா, லட்சுமனன் முருகபூபதி ஆகிய பிரபலங்கள் கூட என் எழுத்தின் மீதும் என் முயற்சி மீதும் பற்றுக்கொண்டு தொலைபேசி வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறானதொரு சூழல் குறுகிய காலத்தினுள் ஏற்பட்டமைக்குக் காரணம் இறைவன் எனக்கருளிய படைப்பாற்றலும் '21in21' எனும் மகுடம் தாங்கிய முயற்சியும்தான்.

05. இரண்டாவது தொகுப்பானது வாழ்க்கைக்குத் தேவையான அறிவுசார் கட்டுரைகளாக அமைந்துள்ளது. கட்டுரைத் தொகுதிகளை வெளியிடும் போது அது நல்லதொரு வரவேற்பைப் பெறுமென்று எண்ணுகிறீர்களா?

உண்மைதான். மனிதன் இன்று நேரமின்மைகளின் சாபத்தினுள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நிறைய பந்தி பந்திகளாய் வாசிப்பதற்கு அவர்களுக்கு நேரம் போதுமானதாக இருப்பதில்லை. 'கவிதையென்றால் பரவாயில்லை.... ஐயோ! கட்டுரையா...? ' என பயந்து போகும் வாசகர்களைத்தான் அதிகம் தரிசிக்க முடிகிறது.

என்னைப் பொறுத்த வரைக்கும் எழுதுபவர்கள் அனைவரும் எழுத்தாளர்களாகிவிட முடியாது. நான் எழுதுபவர்களை இரு ரகமாகப் பார்க்கிறேன். ஒன்று எழுத்தாளர்கள் (எழுத்தை ஆள்பவர்கள்). மற்றையது எழுத்தார்வமுள்ளவர்கள். இன்று எழுத்தாளர்கள் அருகியும் எழுத்தார்வமுள்ளவர்கள் பெருகியும் வரும் நிலை தோன்றியிருக்கிறது. ஆகவே எல்லாம் கவிதைகள்தான் என்றோ எல்லாம் கட்டுரைகள்தான் என்றோ கூறிவிடமுடியாதுள்ளது. இதனால்தான் வாசகர்களுக்கு சில விடயங்கள் சலிப்புத்தட்டி விடுகின்றன. ஆக்கபூர்வமான எழுத்தென்றால் அது, மானுடச் செழுமைக்கான பயனுள்ள விடயங்களை சுவாரசியமாகச் சொல்லவேண்டும். அது எவ்வடிவிலானாலும் சரி, வாசகர்ளால் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும்.
வேம்பு கசப்பாயிருக்கிறது. இருப்பினும் அதில் மருந்திருக்கிறது எனும் விடயத்தினை மனித மனங்கள் உணர்ந்து கொள்வதைப் போல கட்டுரை வடிவத்தில் பெரிதாக இருப்பினும் அதனுள் வாழ்;க்கைக்குத் தேவையான விடயங்கள் நிரம்பிக் கிடந்தால் வாசக மனங்கள் அதனை வரவேற்பார்கள் என்பது எனது நம்பிக்கை.

06. பொதுவாக வாசக வாசிப்பு மட்டமானது கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றிலேயே அதிகமாய் வேரூன்றி நிற்கிறது. இப்படியிருக்கையில் நீங்கள் கட்டுரைத் தொகுதியினை வெளியிடுவதினூடாக வாசகர்கள் மனதில் நின்று நிலைக்கலாம் என்று எண்ணுகிறீர்களா?

இவ்வினாவைப் பொறுத்தமட்டில் படைப்பின் அளவு கருதித்தான் கட்டுரையை வாசிக்காமல் விடுகிறார்கள் என்று சொல்ல முடியாதுள்ளது. ஏனெனில் சிறுகதை, நாவல் என்பனவும் கட்டுரை மாதிரி அளவில் பெரியவைதான். எனவே கட்டுரையை வாசிப்பதில்லை, சிறுகதை, நாவல் என்பவற்றை வாசிக்கிறார்கள் என்றால் அது கட்டுரையாசிரியர்களிலுள்ள குறைபாடு என்றுதான் நான் கருதுகிறேன். எனவே வாசகர்கள் வாசிக்கும் படியான கட்டுரைகள் குறைந்து வருவதுதான் இந்நிலைக்குக் காரணமாயிருக்க முடியும்.

நான் முன்னர் சொன்னது போன்று எவ்வடிவில் எழுதினாலும் மானுடத்திற்குத் தேவையான யதார்த்தமாகவும், சுவாரசியமானதாகவும், கனதியாகவும் இருந்தால் அது நிச்சயம் வாசகர் மனதில் இடம்பிடிக்கும். உலகிலேயே அதிகம் விற்றுத் தீர்ந்த தமிழ் நூல் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் எனது மரியாதைக்குரிய எழுத்தாளர் கவியரசு கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்து மதம்' எனும் நூல் அவரெழுதிய கட்டுரைகளின் தொகுப்புத்தான் என்பதனை யாரும் மறந்துவிட முடியாது.

எனவே வெறுமனே எழுத்தார்வத்தினால் கண்டதையெல்லாம் எழுதி வாசகர்களை வெருண்டோட வைக்காமல் எழுத்தாளராயிருந்து வாசகர்கள் வாசிக்கும் படியாகப் படைக்கும் போது நிச்சயம் கட்டுரைகளினூடாகவும் வாசகர்களின் மனதில் நின்று நிலைக்கலாம்.

07. உங்களுடைய வாசிப்புச் சூழல் தற்போது எப்படியிருக்கிறது?

வாசிப்பு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனது சிறு வயது முதல் இன்று வரைக்கும் புத்தகங்களைத்தான் இவ்வுலகில் அதிகம் நேசித்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரைக்கும் உலகில் எதையுமே ஒளிவு மறைவின்றி எமக்குக் கற்றுத்தரும் ஆசான்கள் நூல்கள் மட்டுந்தான்.
கறை படிந்த மனித மனங்களையும் விடவும் கரையான் அரித்த ஒரு புத்தகம் மேலானது.

கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் நாவல் என எல்லா வடிவங்களிலுமாக மானுடத்திற்கு வழி காட்டும் தமிழ் நூல்கள் மற்றும் வியாபாரம் சம்பந்தமான ஆங்கில நூல்களையும் வாசிக்கிறேன். எனது இலக்கின் முதற் படியாக நான் ஆரம்பித்துள்ள கம்பனிகளின் வேலைகள் மற்றும் மேற்படிப்பு சம்பந்தமான தேடல்கள் என்கின்ற நேர நெரிசல்களுக்குள்ளும் நாளில் ஒரு பகுதியை வாசிப்பதற்கென்று ஒதுக்குகிறேன். இது வரைக்கும் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய்க்கும் மேலாக சொந்தமாய் நூல்கள் வாங்கியிருக்கிறேன். எனது அலுவலக அறைக்குள் என்னைச் சூழ எனது நூல் அலுமாரிகள் கம்பீரமாய் நிற்கின்றன.

08. அடுத்த கட்ட செயற்பாடுகள்...?

எழுதி முடித்துள்ள இருபத்தியொரு நூல்களில் ஒன்றான 'தீப்பிடித்த பூக்கள்' எனும் கட்டுரைத் தொகுதியை அண்மையில் வெளியிட்டு வைத்ததனைத் தொடர்ந்து இத்தொகுதிக்கு நமது நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நிறைய வரவேற்புக்கள் கிடைத்த வண்ணமிருக்கின்றன. இதன் முதற் பிரதியினை கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம். பாயிஸ் அவர்கள் ரூபா ஐம்பதாயிரம் வழங்கிப் பெற்றுக்கொண்டார்.
எனது எழுத்துக்கள் எனக்குத் தேடித்தந்த இந்திய நண்பர்களின்; வேண்டுகோளுக்கிணங்கு இத்தொகுப்பின் அறிமுக விழாவினை தமிழகத்திலும் திருச்சியிலும் நடாத்தும் பொருட்டு வருகிற ஏப்ரல் மாதம் அங்கு செல்லவுள்ளேன். இதற்கான சகல ஏற்பாடுகளையும் அங்குள்ள எனது நண்பரான நவநீத கிருஷ்ணன் (மூவிலேன்ட் ஆங்கில சினிமா இதழுக்கான சென்னை நிருபர்) தலைமையில் மேற்கொண்டு வருகிறார்கள்.

இவற்றுக்கிடையில் 'முற்று வைத்தும் மூடப்படாத பேனா' எனும் கவிதைத் தொகுப்பினையும் 'கடலோடு கரைந்த காதல்' எனும் நாவலினையும் மார்ச் மாதம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறேன்.


09. இளம் வயதில் இத்தனை திறமையுடன் மிளிரும் நீங்கள் எதிர்காலத்தில் சாதிக்கப்போவது என்ன?

இக்கேள்விக்கு நான் வழங்கவிருக்கும் விடை சிலருக்கு செயற்கைத் தன்மையாகவோ மிதமிஞ்சியதாகவோ இருக்கலாம். இருப்பினும் முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதிலும் நல்லது நினைத்தால் யாவும் நல்லது நடக்கும் என்பதிலும் எனக்கு அபரிமித நம்பிக்கையிருக்கிறது.
நான் நிறைய இலக்குகளுக்கும் கனவுகளுக்கும் சொந்தக்காரனாயிருக்கிறேன். அவற்றினைத் தனித்துநின்று அடைவதில் நிறையவே நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. எனவே எனது சிந்தனையில் பிடிப்புக்கொண்டு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் என்னுடன் சில நண்பர்கள் ஒன்று சேரவேண்டியிருந்தது. இது எனது '21in21' முயற்சியினூடாக தற்போது அரங்கேறி வருகிறது. இந்நிலைமையினை எனது எதிர்கால இலக்குகள் சம்பந்தமாக நான் எழுதிய 'எனது சாம்ராஜ்யம்' எனும் நாவலில் கற்பனை செய்திருந்தேன். அது இறைவனருளால் தற்போது சாத்தியமாகி வருகிறது.

வயதைத் திண்ணும் எமது பல்கலைக் கழகங்களுக்கூடாக நான் சாதிக்க விரும்பவில்லை. ஏனெனில், காலதாமத வெற்றியில் வேகமிருக்க முடியாது! ஆனால் எது எனது இலக்கினை அடைந்துகொள்வதற்கான பிரயோகத்திற்குத் தேவையோ அவற்றினைக் கற்றுக் கொண்டுதானிருக்கிறேன். எனது உயர் கல்வியையும் இவைசார் விடயமாகவே அமைத்துக்கொண்டுள்ளேன்.

எனது இலக்கு - சிறந்த பொருளாதாரத்தினூடாக மானுடச் செழுமையினை உண்டு பண்ணலும் எனது ஊராகிய கிண்ணியாவை தன்னிறைவானதோர் இடமாக மாற்றிக் காட்டுதலும்.

இங்கு அரசியலிருக்கிறது; நாங்கள் அநாதைகளாகவே கிடக்கிறோம்!
எனதூருக்கு யானைப்பசியிருக்கிறது. இவர்களால் சோளப்பொரிதான் போட முடிகிறது.

ஊராரின் எல்லாப் பிரச்சினைக்குமான ஒட்டு மொத்தக் காரணமாக பொருளாதாரமே முதலிடம் வகிக்கிறது. எனவே முதலில் இவ்விடயத்தினைப் படிப்படியாகச் சீர் செய்யும் பொருட்டு

Entrepreneurs Association of Kinniya, Kinniyan International (Pvt) Ltd. ஆகிய இரு கம்பனிகளை அண்மையில் ஆரம்பித்துள்ளேன். என்னோடு சேர்ந்துழைக்க திடகாத்திரமான நிறைய நண்பர்கள் என்னுடன் இணைந்துள்ளார்கள். மற்றும் எமது வர்த்தக நடவடிக்கைகளில் பங்காளர்களாக இணைந்துகொள்ள '21in21' இனூடாகக் கிடைத்த நிறைய வெளிநாட்டு நண்பர்கள் தயாராயிருக்கிறார்கள். அடுத்த ஓரிரு மாதங்களில் இரு கம்பனிகளினதும் செயற்பாடுகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
இறைவனருளால் இவற்றினூடாக நிச்சயம் எனது இலக்கினை அடைந்துகொள்ள முடியும் என நான் அலாதியாய் நம்புகிறேன்.


10. வாசகர்கள் உங்களை எப்படித் தொடர்பு கொள்ளலாம்?

நிறையப் பேர் தொலைபேசி, மின்னஞ்சல், தபால் போன்றவற்றினூடாக தொடர்புகொண்டு என்னை வாழ்த்தியும், எனது படைப்புக்களைப் படித்தவண்ணமும் இருக்கிறார்கள்.

Tel:  0094 772305760, 0094 774328525

E-mail: raapa.arooz@gmail.com

 Postal Address: R.F.Arooz

                            Maharoof Nagar, Kinniya - 03,

                            Sri Lanka.


 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.