எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

அகில்


(எழுத்தாளர் குரு அரவிந்தன் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார். புலம்பெயர் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். சிறுகதை, நாவல் எழுதுவதோடு மட்டுமல்லாது கனடாவில் வெளிவந்த சில திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். தற்போது நாடகத் துறையிலும் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். இவரது பல சிறுகதைகளுக்கு பரிசுகளும் கிடைத்துள்ளன.)

.       1) நீங்கள எழுத்துலகுக்கு வந்த பின்புலம் என்ன? 

பெரிதாக எதுவுமில்லை. என்னை மறைமுகமாக எழுதத் தூண்டியவர், காங்கேயன்துறை நடேஸ்வராக் கல்லூரி கனிஷ்ட பாடசாலை அதிபராக இருந்த எனது தந்தையார் அருணாசலம் குருநாதபிள்ளை அவர்கள்தான். எங்கள் வீட்டு அலுமாரியில் ஆங்கிலம் - தமிழ் அகராதிகள், பழைய பஞ்சாங்கங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை என்று அவர் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்தபோது அவரிடம் நிறையத் தேடல் இருந்தது என்பதை நான் புரிந்து கொண்டேன். எங்களுக்காக சின்ன வயதில் அம்புலிமாமா, கண்ணன் போன்ற சிறுவர்களுக்கான புத்தகங்களை வாங்கித்தருவார். தங்களுக்காக ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், கலைமகள், மஞ்சரி, கல்கண்டு, வீரகேசரி, தினகரன், ஈழநாடு என்று நிறையவே புத்தகங்களையும், பத்திரிகைகளையும் அவர்கள் வாங்கி வாசிப்பார்கள். அதனால் எனக்கும் நிறையவே வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. நீங்கள் நம்பமாட்டீர்கள், தொடக்கத்தில் ஜெயராஜின் ஓவியங்களைப் பார்த்துத்தான் நான் வாசிக்கவேண்டிய கதைகளைத் தெரிவுசெய்தேன். அந்தப் படத்திற்கும் அந்தக் கதைக்கும் எங்கே தொடர்பு இருக்கிறது என்பதை அறிவதில் உள்ள ஆர்வம் காரணமாகக் கதைகளை வாசித்தேன். அந்தவயதில் ஜெயராஜின் ஓவியங்கள்தான் என்னைக் கவர்ந்திருந்தன. பின்நாளில் எனது பல கதைகளுக்கு அவரே ஓவியம் வரைவார் என்று அப்போது நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

2.     2) உங்கள் முதற்படைப்பு எப்போது, எந்தப் பத்திரிகையில் வெளியானது? 

மாணவனாக இருந்த காலத்தில் எனது மூத்த சகோதரி கௌரி, திருச்சியில் படித்துக் கொண்டிருந்தார். அவரது கையெழுத்து மிகவும் அழகானதாகையால், அவர் விடுமுறையில் வந்து நின்றபோது, அவரைக் கொண்டே எனது முதற்கதையைக் கையெழுத்துப்பிரதி எடுத்து அனுப்பினேன். அப்போதே அவர் கதையை வாசித்துவிட்டு நிச்சயமாகப் பத்திரிகையில் வெளிவருவதற்குரிய தரம் இருக்கிறது என்று வாழ்த்தி நம்பிக்கையூட்டினார். அதுபோலவே ஈழநாடு வார இதழில் 'அணையாததீபம்' என்ற தலைப்பில் எனது முதலாவது கதை வெளிவந்தது. எனது இலக்கிய உலகில், துணிவோடு முதலடி எடுத்து வைக்க அன்று ஈழநாடு பத்திரிகை செய்த சேவையை என்னால் மறக்கமுடியாது. பிரபல எழுத்தாளர் குறமகள் அவர்கள் அப்பொழுதே எனது கதையை வாசித்துவிட்டு என்னை வாழ்த்தியது மட்டுமல்ல, என்னை மேலும் எழுதும்படி தூண்டுதல் தந்தார். அதனால் யாழ்மாணவர் வட்டம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பங்குபற்றினேன், அதிலும் பரிசு கிடைத்தது. மல்லாகம் இந்துக் கல்லூரியில் நடந்த பாராட்டுவிழாவில் அதற்காக ஒரு பாராட்டுப்பத்திரமும் திருக்குறள், பாரதியார்பாடல், பாரதிதாசன்பாடல் போன்ற பெறுமதி மிக்க புத்தகங்கள் சில பரிசாகவும் கிடைத்தன. அப்போது மாவை நித்தியானந்தன், அமரர் இராஜேஸ்வரன் (சிலோன் விஜேந்திரன்) ஆகியோர் இந்த அமைப்பில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருந்தார்கள். வீடு தேடிவந்து என்னிடம் கதையை வாங்கிச் சென்றார்கள். அப்போது படிப்பில் அதிக கவனம் செலுத்தியதால், இலக்கியத்தில் அதிகம் ஈடுபட முடியவில்லை. ஆனாலும் நேரம் கிடைத்தபோதெல்லாம் நிறையக் கதைகளை கொப்பியில் எழுதிவைத்திருந்தேன். கனடாவிலிருந்து வெளிவரும் ஆர். என். லோகேந்திரலிங்கத்தைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட உதயன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைக்கவே, இலக்கிய ஆர்வலரும் எழுத்தாளருமான மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் எனது கதைகளை வாசித்துப் பார்த்து விட்டு ஆனந்தவிகடன் கதைகளின் தரத்தில் எனது கதைகள் இருப்பதாகவும், அவற்றை ஆனந்தவிகடனுக்கு அனுப்பிப் பார்க்கும்படியும் குறிப்பிட்டார். மற்ற மாணவர்களைப்போல, ஒரு அதிபரின் பார்வையில் அப்போதே என்னிடம் ஏதோ திறமை இருப்பதை அவர் கணித்திருக்கவேண்டும். அவரது தூண்டுதல்தான் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச வாசகர்களையும் இலட்சக்கணக்கில் விற்பனையாகும் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்கள் எனக்குத் தேடித்தந்தன. அதன் பலன்தான் ஆனந்தவிகடன் பவளவிழா மலர், தீபாவளி மலர் போன்றவற்றில் தொடர்ந்தும் எழுதுவதற்கு எனக்குச் சந்தர்ப்பத்தைத் தேடித்தந்தன

3.     3) நீங்கள் நேசிக்கும் அல்லது குருவாக நினைக்கும் எழுத்தாளர் யார்? 

ஓவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் நேசித்தேன். பருவமாற்றங்களும், அனுபவங்களும் அப்படி ஒவ்வொருவரையும் நேசிக்க வைத்தன. ஏதோ ஒரு வகையில் அவர்களின் ஏதாவது ஒரு கதையாவது அவ்வப்போது மனதிலே பாதிப்பை ஏற்படுத்தின. அப்படி மனதிலே பாதிப்பை ஏற்படுத்திய கதைகள், இப்பொழுதும் அப்படியே மனதில் தேங்கி நிற்கிறன. சின்ன வயதில் அம்புலிமாமா, கண்ணன் போன்ற பத்திரிகைகளில் இருந்த ஆர்வம் பின் துப்பறியும் நாவல்களுக்குமாறி, காதல் கதைகளுக்குச் சென்று, ஜனரஞ்சக கதைகளாக, அறிவியல் கதைகளாக மாறி, அப்படியே காலத்திற்கு ஏற்றமாதிரி எழுத்துக்களை நேசிக்கும் தன்மையும் மாறிக் கொண்டே போகிறது.

ஏனைய எழுத்தாளர்கள் சிலர் அடிக்கடி குறிப்பிடுவதுபோல, நான் வாசித்த, அல்லது என்னைக் கவர்ந்த தமிழ், ஆங்கில, அல்லது பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புக்கள்  என்று நீண்டதொரு பட்டியலே போடலாம். அதற்காக அவர்களின் எல்லாக் கதைகளுமோ, அல்லது நாவல்களுமோ சிறந்தது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் எனது தேடலுக்கு அவை தீனி போடுகின்றன. ஒரு காலகட்டத்தில் புதுமைப்பித்தன், ஜானகிராமன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், மௌனி என்று பழம்பெரும் எழுத்தாளர்களின் படைப்புக்களை எல்லாம் எடுத்து வாசித்தேன்.

எந்தக் காலத்திலும் என்னைக் கவர்ந்த எழுத்துக்கள் அமரர் சுஜாதாவினுடையதாகவே இருந்தன. வெறும் கற்பனை உலகில் வாழாமல் காலத்தோடு சேர்ந்து மக்களுக்கு அறிவியலைப் புகுத்த முனைந்தவர். தாங்கள் என்ன எழுதுகிறோம் என்று புரியாமல் தங்களையும் குழப்பி, மற்றவர்களையும் குழப்பி, மாயாஜால வித்தை காட்டும் சிலருக்கு மத்தியிலே எல்லோருக்கும் புரியக்கூடியதாக எழுதியவர். அதற்காகவே புத்திஜீவிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளும் சிலரால் வேண்டும் என்றே நிராகரிக்கப்பட்டவர். ஒரு இலக்கியக் கலந்துரையாடலின்போது சுஜாதாவின் ஆக்கங்களை இலக்கியம் என்று எடுப்பதில்லை, பெரிதாகப் பேசப்படும் அளவிற்கு அவர் ஒன்றும் பிரபல்யமான எழுத்தாளர் இல்லை என்று சிற்றிலக்கியப் பத்திரிகையோடு தொடர்புடைய ஒருவர் குறிப்பிட்டபோது, அதை உடனே மறுத்த இலக்கிய ஆர்வலர் அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள், பிரபல்யம் என்பது என்ன? அதிக வாசகர்களையோ அல்லது அதிக ரசிகர்களையோ கொண்டிருப்பதுதான். முந்நூறு பேர் வாசிக்கும் கதையை எழுதுபவர் பிரபல்யமானவரா அல்லது மூன்று லட்சம் பேர் வாசிக்கும் கதைகளை எழுதுபவர் பிரபல்யமானவரா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொன்னபோது அவர் வாயடைத்துப் போய்விட்டார்.

4.     4) உங்கள் சாதனை என்று எதைக் கருதுகிறீர்கள்? 

கற்றது கை மண் அளவு என்பதுபோல சாதனை என்று நான் எதையும் அலட்டிக் கொள்ளவில்லை. பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் பின்னூட்டு மூலம் தரும் ஆக்கபூர்வமான ஆதரவுதான் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகிறது. அதுவே சில சமயங்களில் சாதனையாகிறது. ஆனந்தவிகடனில் வெளிவந்த பெரிய்ய கதை எனக்குச் சர்வதேசரீதியாக நிறைய வாசகர்களை உருவாக்கித் தந்தது. எந்த ஒரு தனிப்பட்ட எழுத்தாளருக்கும் இதுவரை ஆனந்தவிகடன் இத்தனை பக்கங்களை ஒதுக்கிக் கொடுக்கவில்லை என்றும், தமிழகத்தின் ஐந்து பிரபல ஓவியர்கள் அந்த ஒரே கதைக்கு ஓவியம் வரைந்திருந்ததையும் அவுஸ்ரேலியாவில் இருந்து வாசகர்கடிதத்தில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். 'அந்தப் பெரிய கதையை எழுதியது யார்?' என்று விடை எழுதும்படி அடுத்த விகடன் இதழில் அவர்கள் தங்கப்பதக்கப் பரிசுக்காக ஒரு போட்டி வைத்திருந்தார்கள். குரு அரவிந்தன் என்று 45,261 வாசகர்கள் சரியான விடையை எழுதியிருந்தார்கள் என்பதையும் அடுத்தவார விகடனில் பதிவு செய்திருந்தனர். ஆனந்தவிகடன் தனது மிலேனியம் இதழுக்காகப் பல்வேறு நாடுகளில் இருந்தும் கதைகளைத் தெரிவு செய்தபோது கனடாவில் இருந்து எனது சிறுகதை ஒன்றைத் தெரிந்தெடுத்துப் பிரசுரித்திருந்தார்கள். இதைவிட காதலர் தினத்திற்காக எழுதிய வெவ்வேறு காதலர் தினக்கதைகள் ஒரே சமயத்தில் நான்கு நாடுகளில் இருந்து வெளிவரும் ஆறுபத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. வேறு எந்த மொழி பேசும் எழுத்தாளர்களின் கதைகளும் இப்படி வெளிவந்ததாகத் தெரியவில்லை என்று அதைப்பற்றி ஜெர்மனியில் இருந்து வாசகர் ஒருவர் அதைப் பாராட்டி மகிழ்ச்சியோடு எழுதியிருந்தார். சமீபத்தில்கூட தமிழக சிறைச்சாலையில் இருந்து சில அரசியற்கைதிகள் எனது நாவலான 'உறங்குமோ காதல் நெஞ்சம்', சிறுகதைத் தொகுப்பான 'நின்னையே நிழல் என்று...' போன்ற நூல்களை அங்கேயுள்ள நூலகத்தில் எடுத்து வாசித்து விட்டு, அவற்றைப் பற்றிய மீள்தரவைத் தந்திருந்தது மட்டுமல்ல, இதுபோன்ற சிறந்த ஆக்கங்களை இன்னும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். எனது ஆக்கங்கள் ஆங்கிலத்திலும் தென்னிந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால், எங்கேயோ ஒரு மூலையில் முகம் தெரியாத பல வாசகர்கள் எனது ஆக்கங்களைத் தொடர்ந்தும்  வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதில் எனக்கும் பெருமையாகத்தான் இருக்கிறது.

5.     5) உங்களைப் பாதித்த நூல்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

வாசிப்பில் எனக்கு விருப்பு வெறுப்புக் கிடையாது. கையிலே எது கிடைத்தாலும் எடுத்து வாசிப்பேன். அப்படி வாசித்தவற்றில் தற்சமயம் நினைவில் நிற்கும் நாவல், சிறுகதை, ஆசிரியர்களின் பெயர்களை மட்டுமே சொல்கின்றேன். ஆரம்பத்தில் தமிழ்வாணனின் துப்பறியும் கதைகளை வாசித்தேன், 'மணிமொழி நீ என்னை மறந்துவிடு' என்ற தொடர் இப்பொழுதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. சாண்டிலியனின் சரித்திரக்கதைகளில் வரும் வர்ணனைகளை எல்லாம் அந்த வயதில் ரசித்து வாசித்தேன். குறிப்பாக கடற்புறா, அதன்பின் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபெயர்ப்பில் வந்த காண்டேகரின் நாவல்கள் குறிப்பாக யயாதி, தகழி சிவசங்கரபிள்ளையின் செம்மீன், படம் பார்த்த பின்புதான் நாவலை வாசித்தேன். எனது மூத்த சகோதரி இந்தியாவில் இருந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம் நிறையவே இப்படியான கதைப்புத்தகங்களைக் கொண்டு வருவார். கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலையோசை, அகிலனின் வேங்கையின் மைந்தன், நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர், அதில் கதாநாயகனும் அரவிந்தன் என்ற எனது பெயரையே கொண்டிருந்ததால் அந்தநாட்களில் பாடசாலையில் பலரின் பார்வையும் என்பக்கம் திரும்பியிருந்தது. ரா.சு. நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம், ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள், கவியரசு வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் இப்படியே செங்கையாழியன், ராமகிருஸ்ணன், ஜெயமோகன், பிரபஞ்சன், மாலன், சங்கரநாராயணன், லட்சுமி, அனுராதாரமணன், தமயந்தி, கலைவாணி, குறமகள், விஜயாராமன், கோகிலாமகேந்திரன், .முத்துலிங்கம், வி.கந்தவனம், இரா.சம்பந்தன், தேவகாந்தன், ..கிரிதரன், பொன் குலேந்திரன், மனுவல் ஜேசுதாசன், வித்துவான் .செபரத்தினம், பி.விக்னேஸ்வரன், வீணைமைந்தன், சிறிசுக்கந்தராசா, கதிர் துரைசிங்கம், சா.வே.பஞ்சாட்சரம், நா.கணேசன், அகில் என்று எனக்குக் கிடைத்த, அல்லது அவர்கள் அனுப்பிவைத்த அவர்களின் புத்தகங்களை எல்லாம் வாசித்தேன். இதேபோல புலம்பெயர் நாடுகளில் இருந்து எனக்குக் கிடைத்த கலாநிதி காந்தராஜா, கருணாகரமூர்த்தி, நகுலா சிவநாதன், சபேசன், நடேசன், முல்லைஅமுதன், சிவகுமாரன் போன்றவர்களின் புத்தகங்களையும் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. இப்படி இன்னும் பலர் சிறுகதைகள், நாவல்கள் எழுதியிருந்தாலும் எல்லாவற்றையும் வாசிப்பதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. விமர்சனத்திற்காகவோ, அறிமுகத்திற்காகவோ பலரும் தங்கள் புத்தகங்களை எனக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். முடிந்தவரையில் அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருகின்றேன். தமிழ் இலக்கிய வளர்ச்சிப்பாதையில் இவர்களின் படைப்புக்கள் எல்லாம் சமுதாயத்திற்கு ஏதோ ஒரு செய்தியை எடுத்துச் சொல்கின்றன என்பதையிட்டு நாம் பெருமைப்பட வேண்டும். இன்று பேசப்படுபவர்கள், புகழ் பெற்றவர்கள் எல்லாம் அன்று முதல் அடி எடுத்துவைத்து, நடைபயின்றுதான் இந்த நிலைக்கு வந்தார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.   

நான் சுஜாதாவின் கதைகளை எப்பொழுதுமே விரும்பிப்படிப்பேன். கடைசியாக நான் வாசித்து முடித்த புத்தகம் டேவிட் பிங்கிலின் குட் சோல்யேஸ், 2009ம் ஆண்டு வெளிவந்த புத்தகங்களில் சிறந்த முதல் பத்துப் புத்தகங்களில் ஒன்றாக இது தெரிவு செய்யப்பட்டது. தற்சமயம் சமீபத்தில் வெளிவந்த கே. எஸ். பாலச்சந்திரனின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் என்ற நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். வெறும் மீனவரின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நாவல் என்று ஒதுக்கிவிடாமல் இவையெல்லாம் ஈழத்தமிழரின் இருப்பைப் பதிவு செய்யும் ஆவணமாக இருப்பதால் நான் முக்கியமாக அவற்றுக்கு மதிப்புக் கொடுத்து வாசிக்கின்றேன்.

6.     6) தாய்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து பல ஆண்டுகளாக கனடாவில் வசித்து வருகிறீர்கள். அந்தவகையில் புலம்பெயர் இலக்கியங்கள் பற்றிக்கூறுங்கள்?

இலக்கியம் என்பது பெரியதொரு கடல். உண்மையிலே இலக்கிய ஆர்வலர்கள்தான் புலம் பெயர்ந்தார்களே தவிர இலக்கியம் புலம் பெயரவில்லை. எழுத்தாளர்களை எடுத்துக் கொண்டால், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பல ஈழத்து எழுத்தாளர்கள் இப்பொழுதும் தாயகக் கனவுகளோடுதான் வாழ்கிறார்கள். அவர்களது எழுத்துக்கள், சிந்தனைகள் எல்லாம் அதைப்பற்றியதாகவே இருக்கின்றன. ஆனால், ஒருசிலர் மட்டும் விதிவிலக்காக, சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து தங்களைத் தாங்களே சுற்றி ஒரு குறுகிய வட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய எழுச்சியில் கவனத்தைச் செலுத்துவதை விட்டுவிட்டு மற்றவர்களின் வீழ்ச்சியிலேயே அதிககவனம் செலுத்துகிறார்கள் போலத் தெரிகிறது. ஏனோ, பொதுவாக ஒருவர்மீது மற்றவருக்கு ஏற்படும் பொறாமை உணர்வுதான் இதற்கெல்லாம் காரணமோ தெரியவில்லை. மனம்திறந்து மற்றவர்களை இவர்களால் பாராட்டக்கூட முடியாமல் இருக்கிறது. என்னதான் திறமை இருந்தாலும், பிரித்தானியர் காலத்து அடிமை உணர்வும், பிரித்தாளும் சிந்தனையும் புலம்பெயர்ந்த மண்ணில் உள்ள இவர்களிடம் இருக்கும்வரை எமது புலம்பெயர்ந்த சமுதாயம் முன்னேற வழியேயில்லை. இப்படியான குறுகிய மனப்பான்மை உள்ள சூழ்நிலையில், புலம்பெயர் இலக்கியம் என்று பெரிதாக எதையுமே இவர்கள் சாதித்து விடப்போவதில்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை இவர்கள் மனதில் கொண்டால் நிறையவே சாதிக்கமுடியும். புலம்பெயர்ந்த எமது அடுத்த தலைமுறையினரிடம் இருந்தும் தமிழ் இலக்கியத்திற்குப் பெரிதாக எதுவும் இதுவரை வந்து சேர்ந்து விடவில்லை. காலப்போக்கில் பிறமொழி இலக்கியத்திற்கு, அடுத்த தலைமுறையினரின் பங்களிப்பு நிறையவே கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எனவே எமது அடுத்த தலைமுறையினரால் பிறமொழி இலக்கியம் மேன்மை பெறவாய்ப்புண்டு.

7.     7) உங்கள ஜனரஞ்சக எழுத்தாளர் என்று கூறுகிறார்களே. அது பற்றி..?

கதைகளோ, நாவல்களோ, கட்டுரைகளோ இலக்கியம் என்று வந்தால் அது எந்த வடிவத்தில் மக்களைச் சென்றடைந்தாலும் அது சமுதாயத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர சீரழிப்பதாக இருக்கக்கூடாது. யதார்த்தத்தை எடுத்துச் சொல்கிறேன் என்ற மாயையோடு சமுதாயத்தை தமது எழுத்துக்களால் சீரழிக்க முனைந்தவர்கள் எல்லாம் முகவரி இல்லாமலே போய்விட்டார்கள். அந்தவிதத்தில், இவர்களை இனம் கண்டு ஒதுக்குவதில் வாசகர்கள் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள்.

எனது நாவல்கள் எல்லாம் ஜனரஞ்சக நாவல்களாகவே இருக்கின்றன என்று வாசகர்கள் சொல்கிறார்கள். விகடன் ஆசிரியர் தனது குறிப்பில் குறிப்பிட்டது போல தியாகம், காதல், பாசம், சோகம், துரோகம் என்று அத்தனையும் விகடனில் வெளிவந்த அறிவியல் கதையானநீர்மூழ்கி நீரில்மூழ்கி’யில்  நிறைந்து இருந்ததால்தான் பல்லாயிரக் கணக்கான வாசகர்களின்  மனதை என்னால் தொடமுடிந்தது. இன்றும் அதன் தாக்கம் அவர்கள் மனதில் நிலைத்து நிற்பதால்தான் அதைப்பற்றி விமர்சிக்கிறார்கள். அதேபோல, காதலர் தினக்கதையான அவளுக்கொரு கடிதம் விகடனில் வந்தபோது தமிழ் நாட்டுக் கல்லூரி மாணவிகளிடம் இருந்து நிறையக் கடிதங்கள் வந்து குவிந்திருந்ததில் இருந்தே அப்படியான கதைகளை இளைய தலைமுறையினர் ஆர்வத்தோடு படிக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. நாகரிகம் கருதி, காதல் உணர்வுள்ள கதைகளைச் சிலர் வெறுப்பதுபோலக் காட்டிக் கொண்டாலும் அவர்களின் அடிமனதில் இந்த இனிய உணர்வுகள் உறைந்து இருக்கத்தான் செய்கின்றன. குறைந்த பட்சம் ஒருதலைக் காதல் அனுபவமாவது அவர்களிடம் இருந்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். அடுத்த தலைமுறையினருக்காக எனது சிலகதைகளை ஒலிப்புத்தங்களாக வெளியிட்டிருக்கிறேன். வண்டியில் பயணிக்கும்போது கேட்டுக் கொண்டே செல்லலாம் என்பதால், பின்னனி இசையோடு கூடிய இந்த ஒலிப்புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

8.     8) ஒர கதையை, நாவலை எத்தனை முறை செப்பனிடுவீர்கள்? ஒரே தடவையில் கதைகளை எழுதிவிடுவீர்களா? நாவல்களை எப்படித் திட்டமிடுகிறீர்கள்?

எண்ணக் கருவுக்கு ஏற்ப, மனவோட்டம் தடைப்படாமல் சிறுகதைகளை ஒரே தடவையில் எழுதி விடுகின்றேன். அவை நிறையவே பாதிப்பை ஏற்படுத்துவதால், அதில் வரும் பாத்திரங்களின் பெயர்களில் மட்டும், குறிப்பாக முகம்தெரிந்த நண்பர்களின் அல்லது உறவினர்களின் பெயர்களாக இருக்கக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றேன். அப்படி இருந்தும் அவ்வப்போது ஒருசில மிரட்டல்கள் வரத்தான் செய்யும். எங்கேயோ அந்தக் கதை அவர்களின் மனதைத் தொட்டிருக்கிறது, அதன் பாதிப்புத்தான் இது என்று நான் எடுத்துக் கொள்வதுண்டு. கோயிற்சிலையோ என்ற கதையில் மட்டும் நான் எதிர்பார்த்தபடி முடிவு கிடைக்காததால் அதை நிறைவு செய்யாது வைத்திருந்தேன். சமீபத்தில் தூறல் இதழுக்காக ஒரு சிறுகதை தேவைப்பட்டபோது, எனக்கு இளமைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தையே அந்தக் கதையின் முடிவாக மாற்றியிருந்தேன். அதனாலோ என்னவோ சமீபத்தில் இலக்கிய ஆர்வலர்கள் பலராலும் பேசப்பட்ட ஒரு சிறுகதையாக அது மாறியிருந்தது.

சிறுகதைகள் எழுதுவதைவிட நாவல் எழுதுவது இலகுவானது என்றே நான் நினைக்கின்றேன். சிறுகதையில் குறிக்கப்பட்ட வார்த்தைகளுக்குள் பாத்திரங்களின் உணர்வுகளைச் சொல்லியே ஆகவேண்டும். இதற்கு நல்ல உதாரணமாக உயிர்நிழலில் வந்த எனது சிறுகதையான யார் குழந்தையைக் குறிப்பிடலாம். யார் குழந்தை? என்ற அந்தக் கதையின் வெற்றிக்கு அப்போ பிரியா..! என்ற கடைசி இரண்டு வார்த்தைகள்தான் அப்படியே வாசகர்களை அதிரவைத்தாகக் குறிப்பிடுவார்கள். பிரபல எழுத்தாளர் அனுராதாரமணன்கூட தன்னை அது பாதித்தாக அதைப்பற்றி விமசித்திருந்தார். அதேபோல கல்கியில் வெளிவந்த போதிமரத்தில் நிழல் நிஜமாக, நிஜம் நிழலானது என்ற கடைசி வார்த்தைகளின் திருப்பம் வாசகர்கள் மனதைத் தொட்டதையும் குறிப்பிடலாம். நாவல் அப்படியல்ல, அங்கே மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் உணர்வுகளை உணரவைக்க முடியும். முக்கிய பாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, அப்படி ஒருவர் இருந்தால் அவர் எப்படி நடந்து கொள்வார் என்ற உணர்வோடு நாவலை நகர்த்திச் செல்கின்றேன். பாத்திரப் படைப்புக்கள் மட்டுமல்ல, கதையோட்டமும் மிகவும் முக்கியமானது. நாடகத்தில் ஒரு நடிகர் அல்லது நடிகை எப்படி அந்தப் பாத்திரமாக மாறுகிறார்களோ அதே போல படைப்பாளியும் எழுதும்போது அந்தப் பாத்திரமாக மாறவேண்டும். பிறருடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு என்னுடைய அனுபவங்களாகவோ அல்லது என்னுடைய அனுபவங்களைப் பிறருடைய அனுபவங்களாகவோ எழுதும்போதுதான் உயிர்த் துடிப்போடு ஒவ்வொரு வார்த்தைகளும் வெளிவரும். அப்படி எழுதுக்கள் வெளிவரும் போதுதான் எனது வாசகர்களும் என்னோடு சேர்ந்து ஒன்றாக நடைபோடுவதாக நான் உணர்கின்றேன். எனது நாவல்கள் இலக்கிய ஆர்வலர்களால் பேசப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

9.     9) சிறுகத, நாவல் எழுதுவதோடு மட்டும் நின்றுவிடாது சிறுவர்களுக்கான பாடப்புத்தங்கள், சிறுவர் பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள். புலம் பெயர் நாடுகளில் சிறுவர் இலக்கிய முயற்சி எப்படி இருக்கிறது?

சிறுவர் இலக்கிய முயற்சியைப்  பொறுத்தவரையில் நான் கனடாவில் காலடி எடுத்து வைத்தபோது தமிழ் குழந்தைகளை எல்லாம் ஆங்கிலத் தொலைக்காட்சிகள் அடிமைப்படுத்தி வைத்திருந்தன. அப்போது 'பாணி' என்ற சிறுவர் நிகழ்ச்சி பிரபல்யமாக இருந்தது. இது பற்றிப் பல பெற்றோர்கள் என்னிடம்; முறையிட்டார்கள். இப்படித்தான் கயானா நாட்டில் குடியேறிய தமிழர்கள் தங்கள் தாய் மொழியை மறந்து போனதற்கு, தமிழ் கற்பதற்கு அங்கே அவர்களுக்கு வசதி இல்லாது போனதும் ஒரு காரணமாய் இருந்தது அடுத்த தலைமுறைதான் எங்கள் தாய் மொழியை இந்த மண்ணில் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதால், சிறுவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதே வழியில் அவர்களைக் கொண்டு செல்ல நினைத்தேன். எனவேதான் தமிழ் ஆரம் என்ற தொடரைச் சிறுவர்களுக்கான வீடியோ குறும் தட்டாகத் தயாரித்து வெளியிட்டேன். ஆங்கிலத்தில் எதைப்பார்த்து மகிழ்ந்தார்களோ அதைப்போலவே அறிவு வளர்ச்சிக்கு உகந்ததாக ஆடல் பாடல்களோடு தமிழில் பார்த்து மகிழும்படியாக அந்த வீடியோ அமைந்திருந்தது. பல பெற்றோர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து தாங்களும் பார்த்து மகிழ்ந்ததாகக் கூறியபோது, இதுபோல இன்னும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் எற்பட்டது. அதன் பலனாகத்தான் தமிழ் ஆரம் ஒன்று இரண்டு, மூன்று, நான்கு என்று பயிற்சிப் புத்தகங்களும், சிறுவர் பாடல்களும் தொடர்ந்து வெளிவந்து சிறுவர்களின் தமிழ் கற்கும் ஆர்வத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது மட்டுமல்ல, இன்று சர்வதேசமொழித் திட்டத்தின் கீழ், பாடசாலைகளிலும் தமிழ் கற்பிப்பதற்கு இந்த முயற்சி முன்னோடியாக அமைந்தது. மிகவும் ஆர்வத்தோடு தமிழ் குழந்தைகள் தமிழ் கற்பதற்குப் பாடசாலைக்கு வருவதைப் பார்க்கும்போது அடுத்த தலைமுறையிலும் தமிழ் நிலைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. பிரபல எழுத்தாளரான . முத்துலிங்கம் அவர்கள்கூட மூன்று குருட்டு எலி என்ற தலைப்பில் இந்த பாடல்களைப் பற்றி விரிவாக எழுதிப் பாராட்டியது மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் அமெரிக்காவில் இருந்து எனக்குக் கடிதம் எழுதி, வருங்காலத் தலைமுறையினருக்குச் செய்த எனது சேவையைப் பாராட்டியிருந்தார். தனது பேர்த்தியார் இசையோடு கூடிய இந்தச் சிறுவர் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு மிகவும் மகிழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த அரிய முயற்சியில், இதன் வெற்றிக்கு என்னோடு துணை நின்ற குழந்தைகளையும், பெற்றோரையும், அதிபர் பொ.கனகசபாபதி, கலாநிதி .பாலசுந்தரம், வள்ளிநாயகி இராமலிங்கம், கவிநாயகர் வி.கந்தவனம், .சே.அலெக்சாந்தர் ஆகியோரையும், படப்பிடிப்பைச் சிறந்தமுறையில் ஒளிப்பதிவு செய்த நேரு, இசை அமைத்துக் கொடுத்த முல்லையூர் பாஸ்கரன் ஆகியோரையும், எல்லா வகையிலும் என்னோடு ஒத்துழைத்த எனது குடும்பத்தினரையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

இப்பொழுது சிறுவர் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்ல கனடாவில் மட்டுமல்ல, புலம் பெயர்ந்த நாடுகள் பலவற்றில் இருந்தும் பலர் முன்வந்திருக்கிறார்கள். சிறுவர்களுக்கான ஒலித்தட்டுக்கள், ஒளித்தட்டுக்கள், பயிற்சிப் புத்தகங்கள் என்று நிறையவே பாவனைக்கு வரத்தொடங்கிவிட்டன. கணனி யுகத்தில் ஏற்பட்ட விரைவான மாற்றமும் இதற்கொரு காரணமாகும். யார் ஊட்டினால் என்ன, புலம்பெயந்த நாட்டுக் குழந்தைகளின் தமிழ் அறிவுப்பசி தீர்ந்தால் அதுவே போதும்!

10.  10) நீங்கள் படித்த மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களிடையே சிறுகதைப் போட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி உதயமானது?

மகாஜனாவின் நூற்றாண்டு நினைவாக இலக்கியத்தில் ஈடுபாடுள்ள பழைய மாணவர்கள் ஏதாவது வெளியீடுகளை மகாஜனமாதாவிற்குச் சமர்ப்பணம் செய்யலாம் என்று ஒரு ஆலோசனையை முன்வைத்தார்கள். என் பங்கிற்கு நான் ஒரு நாவலையும், எனது சிறுகதைகள் அடங்கிய ஒலிப்புத்தகத்தையும் சமர்ப்பணம் செய்தேன். நான் மகாஜனக்கல்லூரி;யின் தமிழ் மன்றத்து செயலாளராக இருந்தபோது தமிழ்ஒளி .சண்முகசுந்தரம் அவர்கள்தான் பொறுப்பாசிரியராக இருந்தார். மாணவர்களிடையே சிறுகதைப்போட்டி ஒன்று வைக்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும், தவிர்க்க முடியாத காரணத்தால் அப்போது அது சாத்தியமாகவில்லை. .நா.கந்தசாமி, மகாகவி உருத்திரமூர்த்தி, முருகானந்தம் போன்ற மகாஜனாவின் முன்னோடி எழுத்தாளர்களை மகாஜனாவின் மும்மணிகள் என்று எனது தமிழ் ஆசான் வித்துவான் சிவபாதசுந்தரம் அவர்கள் வகுப்பிலே அடிக்கடி குறிப்பிடுவார்கள். பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகையால் அந்தப் பாடசாலை காலமெல்லாம் இலக்கியமணம் பரப்பிக் கொண்டேயிருந்தது. எனவேதான் மாணவர்களுக்கு ஆகக்கமும், ஊக்கமும் தரவேண்டியது என்னைப் போன்றவர்களின் கடமை என்பதால், எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த நினைத்தேன். இந்தச் சிறுகதைப் போட்டிக்கு நான் எதிர்பார்த்ததைவிட அதிக அளவிலான ஆதரவு மாணவர்களிடம் இருந்து கிடைத்திருக்கிறது. இத்தகைய இலக்கிய ஆர்வம் கொண்ட, தங்களாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு கலந்து கொண்டு, மொழியாற்றலை வெளிப்படுத்திய   மாணவர்களுடைய திறமையை முன் எடுத்துச் செல்வதற்கு வெற்றிமணி ஆசிரியர் சிவகுமாரன், தற்போதைய மகாஜனா அதிபர் திருமதி. எஸ்.அனந்தசயனன், வலன்ரீனா இளங்கோவன் ஆகியோர் என்னோடு தோள் நின்று ஒத்துழைத்தமைக்காக இச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன்.

11.  11) திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள் வந்தபின் நாடகங்கள் மீதான மக்களின் ரசனை குறைந்திருக்கிறது. இந்நிலையில் நீங்கள் வாழும் கனடா நாட்டில் நாடகங்களின் போக்கு எப்படி இருக்கிறது? இத்துறைகளில் உங்கள் அனுபவம் என்ன?

நாடகக்குழுக்களாக, ஊர் ஒன்றியங்களாக, கல்லூரிப் பழையமாணவர் சங்கங்களாகப் பலவிதத்திலும் நாடகத்துறை இங்கே வளர்ச்சி அடைந்து வருகிறது. நாடக ஆர்வலர்களால் எப்பொழுதும் அரங்கம் நிறைந்திருக்கிறது. ரொறன்ரோவில் மட்டும் குறைந்தது இரண்டு நாடகங்களையாவது சிறந்த முறையில் நெறியாள்கை செய்தவர்களின் பட்டியலில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் இருக்கின்றன. இதைவிடச் சிறந்த நடிகர், நடிகைகளும் இங்கே நிறைய இருக்கிறார்கள். அதேபோல மொன்றியல், ஒட்டாவா, வாட்டலூ போன்ற இடங்களில் வசிக்கும் தமிழர்களும் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில், மிகவும் சிறந்த அனுபவம் மிக்க அவர்களின் பெயர்களை இங்கே குறிப்பிட முடியவில்லை. இவர்களில் இங்கே உள்ள மகாஜனக்கல்லூரிப் பழைய மாணவர்களான சாந்திநாதன், புராந்தகன், கதிர்துரைசிங்கம், கேதீஸ்வரன், சிவதாசன் போன்ற சிறந்த அனுபவம்மிக்க சில நாடகநெறியாளர்கள் தற்போது கல்லூரியின் நூற்றாண்டு விழாவிற்கான நாடகங்களை மேடையேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேடையேற்றவிருக்கும் மனசுக்குள் மனசு, எங்களை  விடுங்கோ ஆகிய இரண்டு நாடகங்களுக்குக் கதைவசனம் எழுதும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருப்பதால்தான் முக்கியமாக இதைப்பற்றிக் குறிப்பிடுகின்றேன். இங்கே உள்ள அடுத்த தலைமுறையினரின் நாடகம் பற்றிய பார்வை வித்தியாசமாக இருக்கிறது. அவர்கள் இத்தகைய நாடகங்களில் ஈடுபாடு கொள்வார்களா என்பது சந்தேகத்திற்குரியதே. இனிவரும் காலங்களில் நாடகங்களின் இடத்தை ஓரளவு குறும் திரைப்படங்கள் நிவர்த்தி செய்யக்கூடும் என நம்புகின்றேன்.

எனது நாடக அனுபவம் என்று பார்த்தால், நடேஸ்வராக்கல்லூரியில் படிக்கும்போது பிரபல நாடக ஆசிரியரான .ரி. பொன்னுத்துரை, மகாஜனாவில் மதிப்புக்குரிய நாடக ஆசிரியர்களான .சண்முகசுந்தரம், கதிரேசம்பிள்ளை, செல்லத்துரை ஆசிரியர் போன்றவர்களின் நல்லாசி கிடைத்ததாலோ என்னவோ, சித்தங்கேணி ஒன்றியத்தின் தலைவராக இருந்த எனது நண்பர் உமாசுதன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 2001ம் ஆண்டு அன்னைக்கொரு வடிவம் என்ற எனது நாடகத்தை முதன் முதலாக மேடையேற்றினேன். பலரின் பாராட்டையும் அந்த நாடகம் பெற்றுத்தந்தது. சிறந்த ஒரு படைப்பைத் தரவேண்டுமானால், நிறைய நேரத்தையும், கவனத்தையும் நாடகத்திற்காகச் செலவிட வேண்டி இருக்கிறது. கனடா போன்ற இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் இருந்து கொண்டு இத்தகைய முயற்சிகளுக்காக நேரத்தை ஒதுக்குவது என்பது மிகவும் கடினமானதாகவே இருக்கிறது. பொருளாதார நிலை கருதிச் சிலர் இரண்டு வேலைகூடச் செய்வதால், எல்லா நடிகர்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பயிற்சி எடுப்பதற்கு தகுந்த நேரம் கிடைப்பதில்லை. ஒழுங்கான சிறந்த பயிற்சி இல்லாவிட்டால் ஏனோதானோ என்று நாடகத்தை மேடை ஏற்றுவதில் பலனில்லை. பல தடவைகளில் இத்தகைய கஷ்டமான சூழ்நிலையை எதிர்கொண்டதால்தான், எனது கவனம் திரைப்படத் துறையை நோக்கித் திரும்பியது.

12.  12) நீங்கள எழுத்துத் துறையில்மட்டுமல்லாது திரைப்படத்துறையிலும் ஈடுபட்டு வருபவர். புலம்பெயர் நாடுகளில் பல திரைப்படங்கள் அவ்வப்போது வந்துகொண்டு இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்டுக் கூறக்கூடியதாக எவையும் இருப்பதாகத் தெரியவில்லை. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

முதலில் நாங்கள் நூறுவருடத்திற்கும் மேற்பட்ட அனுபவம் மிக்க தமிழகத் திரையுலகத்தோடு புலம் பெயர் நாடுகளின் திரைப்படங்களை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். அடுத்ததாக எங்களுடைய குறிக்கோள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெறவேண்டுமா அல்லது சிறந்த படத்திற்கான பாராட்டுப் பரிசுகளைக் குவிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எது முக்கியமோ அதை நோக்கிப் பயணிக்க வேண்டும். திரைப்படத்தைப் பொறுத்தவரையில் முதலில் திரைப்படத்திற்கு ஏற்ற கதையைத் தெரிந்தெடுக்க வேண்டும். அடுத்து கதைக்கேற்ற வசனம் அமையவேண்டும். ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு இவை இரண்டும்தான் முக்கிய காரணங்கள். மூன்றாவது சிறந்த நெறியாளர் வேண்டும். மற்றதெல்லாம் தொழில் நுட்பத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் ஒவ்வொரு துறையிலும் அனுபவம் மிக்கவர்கள் கனடாவில் நிறையவே இருக்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்போடு குழுவாக இயங்கினால், தொழில்நுட்ப வசதிகள் நிறையவே இங்கே இருப்பதால் நிச்சயமாக வெற்றிப் படங்களைக் கொடுக்கமுடியும். தமிழ்ப்படங்களைத் தயாரித்து வெளியிடும் நாடுகளில் தென்னிந்தியாவிற்கு அடுத்ததாக, இலங்கைதான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வெகுவிரைவில் அந்த இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும் சாத்தியம் கனடிய தமிழ் திரைப்படத் துறையினருக்கு இருக்கிறது.

திரையுலகைப் பொறுத்த வரையில் எனது சிறுகதையான முள்வேலி, 'வேலி' என்ற தலைப்பில் கனடாவில் திரைப்படமாக்கப்பட்டது. சொல்லடி உன் மனம் கல்லடி..! என்ற எனது நாவல் 'சிவரஞ்சனி' என்ற தலைப்பில் திரைப்படமாக வெளிவந்திருக்கின்றது. பாரதி ஆட்ஸ் மதிவாசனின் தயாரிப்பில் வேலி கனடாவிலும், ஸ்ரீமுருகனின் தயாரிப்பில், எனது கதைவசனத்தில் வெளிவந்த சுகம் சுகமே..!, சிவரஞ்சனி ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்தியாவிலும் திரைப்படமாக்கப்பட்டன. இதுவரை திரைப்படமாக்கப்பட்ட தமிழ் நாவல்களின் வரிசையில் எனது சொல்லடி உன் மனம் கல்லடி..! என்ற நாவலும் இடம் பெற்றிருப்பதில் எனக்கும் பெருமையே! கனடாவில் உள்ள தொழில் நுட்பவசதிகளைக் கருத்தில் கொண்டு எம்மவர்கள் குறும் திரைப்படத்துறையில் அதிக கவனம் செலுத்தினால், எதிர்வரும் காலங்களில் சிறந்த வெற்றிப்படங்களை இங்கே உருவாக்கிப் பாராட்டும் பரிசுகளும் பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.